Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பின் அரசி அபிராமி
 
பக்தி கதைகள்
அன்பின் அரசி அபிராமி


அபிராமி... அபிராமி... அபிராமி... இந்த திருப்பெயர் தருகின்ற வாத்சல்யம், பனிக்குட நீரின் குளுமை, தாய்மையின் நீர்மை இதையெல்லாம் அனுபவிப்பதற்கும் உணர்வதற்குமான பக்குவம் வாய்த்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். எழுத்துக்களின் கூட்டமைப்பு தான் வார்த்தைகள். ஆனாலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பண்பு உண்டு. ஒரு தன்மை உண்டு. ஒரு தகைமை உண்டு. ஒரு தத்துவம் உண்டு. ஒரு தனித்துவம் உண்டு. அப்படித்தான் உணரப்படுவது அபிராமி. உணர்வதற்கும் உணர்த்தப்படுவதற்கும் மேலானது. புரிவதற்கும், புரிய வைப்பதற்கும் மேலானது. அறிவதற்கும், அறிய வைப்பதற்கும் மேலானது.
அபிராமி திருக்கடையூர் அபிராமி தாயாகி நிற்கும் உயிர்களுக்கெல்லாம் ஆதித்தாய். வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி. ஊனாகி, உயிராகி, கருவாகி, உருவாகி, உண்மையாகி, இன்மையாகி, உயர்வாகி, உன்னதமாகி அருளின் விஸ்வரூபமாகி நிற்பவள் அபிராமி.
திருக்கடையூர் அபிராமிக்கு ஆயிரம் ஆயிரம் திருப்பெயர்கள். அபிராமி தேவி, அபிராமி சுந்தரி, அபிராம நாயகி, அபிராம வல்லி, அபிநய சரசநாயகி, அபிநய சுந்தரி, அமுதகடேஸ்வரி, அமுத நாயகி, அமுதா தேவி, அழகிய முலைநாயகி, இடையழகு சுந்தரி, அஞ்சுக மொழியாள், ரத்ன தோடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகுணாம்பிகை, சந்திர ஜோதி, சந்திர ஆர்த்தி, சந்திர சேகரி, ஞான சொரூபினி, கனி மொழியாள் என்பதான பெயர்ப்பட்டியல் புலப்படுத்துவது ஒன்றே ஒன்று தான்.அம்மை நிறைகுடம். நாம் குறைகுடம் என்பதே. அவரவர் புரிதலுக்கும், நெகிழ்தலுக்கும் ஏற்ப பெயரிட்டழைத்தாலும் அப்பெயர் அம்மையின் விஸ்வரூபத்தின் ஒரு துளியைக் காட்டுவதாகவே இருக்கிறது. இன்னமும் இன்னமும் சொல்லாத திருப்பெயர்கள் பலகோடி இருக்கலாம். ஆனால் அம்மை, தாய், அம்மா என்ற ஒற்றைச் சொல் நிறைகுடமான அபிராமிக்குப் பொருந்துவதான நிறைகுடச் சொல்.  
‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
 பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவிஅடங்கக்
 காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
 சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே’’
இப்படி ‘ஆத்தாளை’ என்றே அபிராமி அந்தாதி அழைக்கிறது. அவள் அண்டமாக இருக்கலாம். புவியாக இருக்கலாம். புவனமாக இருக்கலாம். ஆனால் கருவறைத் தாயாக, உயிர்த்துளிகளின் கருவறையாக அம்மை இருப்பது தான் உன்னதத்தின் உச்சம். மற்றெல்லாமே உன்னதத்தின் மிச்சம். காரணம் எல்லோராலும் மற்றவையாகி விட முடியும். அபிராமி அம்மையால் மட்டும் தான் ஆத்தாளாக முடியும். அம்மையை வழிபட்டால் இன்ன பலன் கிடைக்கும் என்று பட்டியல் இடலாம். எல்லாவற்றையும் விட அம்மையை வழிபடுதல் என்ற பாக்கியம் தானே எதனினும் சிறப்பானது.
திருக்கடையூர் அபிராமி திருக்கோயிலின் நுழைவு வாயில், ராஜ கோபுர அமைப்பு, மூலவர் விமானம், நீளமான பிரகாரங்கள் பார்க்கப் பார்க்க நமக்கு இரண்டு கண்கள் தானே இருக்கின்றன. இன்னமும் நுாறு கண்கள் இருந்தால் எல்லாப் பேரழகையும் ஒன்றாக உணர முடியுமே என்ற ஏக்கம் பொங்கும். சிற்ப நேர்த்தியும், கட்டட வடிவமைப்பும், நம் முன்னோர்களின் ஞானத்தை, அழகியலை, கலைத்திறனை, சிற்பம் வடிப்பதன் செய்நேர்த்தியைப் புடம் போட்டுக் காட்டுகின்றன.
ஒரு முகூர்த்தத்துக்குள் முளைவிட்ட வில்வத்தின் விதையால் வில்வ வனம் என்று இந்தத் தலம் பெயர் பெறுகிறது. அமுதக்குடம் வேர் விட்ட இடம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு முகூர்த்தத்துக்குள் முளைவிடும் அளவுக்கு மண்ணும், பூமியும் செழிப்பாக உயிர்ப்பாக இருக்க வேண்டும். இந்தத் தத்துவம் உணர்த்துவது வெறும் துகளால் ஆன மண்ணை மட்டுமா? சிந்தனைத் துகளால் ஆன மனதைக் குறிப்பதாக உணர வேண்டும். அன்பென்னும் வில்வம், பண்பெனும் வில்வம், பரிவெனும் வில்வம், கருணையெனும் வில்வம் விஸ்வரூபமாக வளர்ந்து மனம் வில்வ வனம் ஆகிட வேண்டும்.
அமுதக்குடம் என்பது சுவைக்கும் போது இனிக்கும் பானம், உயிர் வளர்க்கும் பானம் என்பது தானா? இனிய சிந்தனை, இனிய சொல், இனிய செயல், இனிய பார்வை, இனிய எண்ணம் எல்லாமே நம்முள் வேர் விட வேண்டும். நகர்த்த முடியாத அளவுக்கு, அசைக்க முடியாத அளவுக்கு, யாராலும், எக்கணத்திலும் மாற்ற முடியாத அளவுக்கு நம்முள் வேர் விட வேண்டும். நம் குருதியில், நம் இதயத்தில், நம் சிந்தனைச் சுரங்கத்தில் வேர் விட வேண்டும். இதுதானே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி திருக்கோயில் சொல்லும் மவுனத் தத்துவமாக இருக்க முடியும்?
இந்த இரண்டு உயர்நிலையும், உய்வதற்கு நமக்கு அறுபதாண்டு ஆகலாம். எண்பதாண்டு ஆகலாம். அதனால் தான் – அறுபது வயது அடையும் போது ஆத்தாளை வழிபட்டு ‘என் மனம் வில்வ வனமாகி இருக்கிறது தாயே’ ‘நானே அமுதக் குடமாகி நிற்கிறேன் தாயே’ என்பதாகச் சத்திய பிரமாணம் செய்கிறோம்.
எமனை எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலம் என்பது புராணம் சொல்லும் படிமம். எந்தெந்த எமனை நாம் சம்ஹாரம் செய்ய வேண்டும் எனப் பட்டியல் போட்டால் மலைப்பாக இருக்கும். காமம், குரோதம், ரவுத்திரம், வெறுப்பு, அகங்காரம், அலட்சியம், சந்தேகம், கோபம், தாபம், மோகம், வேகம், வம்பு, வழக்கு என்பதாக வாழ்வில் நாம் தினம் தினம் சம்ஹாரம் செய்ய வேண்டிய தீவினை எமன்கள் ஏராளம். ஏராளம்.
அத்தனை சம்ஹாரமும் செய்த பின்பு வாழ்வின் மேடு, பள்ளம், உயர்வு, தாழ்வு, மகிழ்ச்சி, இகழ்ச்சி, விருப்பு, வெறுப்பு எல்லாம் தாங்கி நீண்ட நெருப்பிலும் கருகாத மலர் போன்ற மனதுடன் ஆத்தாளின் கரிசனத்தோடு உக்ர ரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிேஷக வைபவம் எல்லாம் நிறைவேற்றுதலே வாழ்வின் முழுமை எனலாம்.
சும்மா இருந்தாலே நாட்கள் நகரும். ஆண்டுகள் ஓடும். அறுபது வயதும் வந்து சேரும். அதில் நமது சாதனை என்ன இருக்கிறது? வயது என்பது இயற்கையுடன் சுழற்சி. வயதுக்கேற்ற பக்குவம் என்பது ஆத்தாளிடம் நாம் பெற வேண்டிய வரம் அன்றைக்கு முகூர்த்தநாள் என்பதால் தம்பதிகளும், உறவினர்களும் புடைசூழ ஆத்தாளை, அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளைத் தரிசிக்க கூட்டம் அலைமோதியது. அம்மையைக் கற்பக விருட்சம் என்றும், காமதேனு என்றும் உணரலாம். கருமையான தை அமாவாசையை ஜொலிக்கும் பவுர்ணமியாக்கிய அன்னை என்று  உணரலாம். அம்மையின் திருச்செவி ஆபரணங்களின் வெளிச்சம் ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசம் கொண்டு பொலிகிறது. காரணம் ஆத்தாளின் தாய்மை வெளிச்சத்தை உள்ளீடாக்கி மின்னுவதால் என்பதை அம்மை உணர்த்துகிறாள்.
அன்னை அபிராமி அழகி, பேரழகி, உலகப் பேரழகி, பிரபஞ்சப் பேரழகி, புவிப் பேரழகி, பூமிப் பேரழகி என்பதாக உணர்ந்து கொண்டே, கண் சிமிட்டாமல் தரிசித்தேன். அம்மையின் திருமுகத்தைத் தீண்டிப் பார்க்க வேண்டும். அம்மையின் கருணைக் கரங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். அம்மையின் மங்கலப் பிரசன்னத்தை அருகிருந்து பார்க்க வேண்டும். அம்மையின் பட்டு வஸ்திரம், நீண்ட நெடிய மாலைகள், தோரணங்கள் எல்லாவற்றையும் நெருங்கிப் பார்க்க வேண்டும். இப்படியெல்லாம் உருகியது மனசு. அம்மையின் அருகாமை என்பது ஆயிரம் கோடி மின்னல் கண்ணிகள் என் மனதிற்குத் தெரியுமா? அம்மையின் அருகாமை என்பது ஆயிரம் கோடிப் பவுர்ணமிகளின் ஆதிவெளிச்சம் என்பது மனதிற்குத் தெரியுமா?
அம்மையைப் பார்த்தேன். நேற்று பார்த்தேன். இன்று பார்த்தேன். இப்போதும் பார்த்தேன். எப்போதும் பார்த்தேன் எனச் சொல்லுமளவுக்கு நிலைத்து நின்றாள் அம்மை. அமுதக் குடமாகி இருந்தாள். அமுதக் கலசமாகி இருந்தாள். ஆத்தாளைப் பார்த்த பரவசத்தில் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் உப்புக் கரிக்கவில்லை. இனிப்பின் வழிவந்ததாக இருந்ததன் மாயமும் ஆத்தாளின் மாய விளையாட்டு மட்டுமே...
‘இனிக்கிறதா மகளே?’
‘ஆமாம் தாயே. உன் தரிசனம் இனிக்கிறது. உன் திருமுகம் இனிக்கிறது. உன் கருணை இனிக்கிறது. உன் காருண்யம் இனிக்கிறது. உன் தாய்மை இனிக்கிறது தாயே...அமுதக்கலசம் நீயே’
கைகூப்பி வணங்கினேன். அம்மையின் திருச்செவி அணிகலன்கள் இரண்டும் இரட்டைப் பவுர்ணமி நிலவாக மின்னின. அம்மையைப் பார்த்தால் போதும். அம்மையை மட்டுமே பார்த்தால் போதும் என்பதான மாயமனோ நிலையில் தான் அமாவாசை, பவுர்ணமி என்று மனம் கிறங்குகிறது. அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டுவது என்பது என்ன? வாழ்வைச் சரிக்கும், எரிக்கும் அக்னி குண்டங்கள் தினம் தினம் நம்மைச் சுற்றி எரியும். மனசெல்லாம் இருள். விடியலும் இருள். வானமும் இருள். மோனமும் இருள் என எல்லாத் திசையிலும் இருள் சூழலாம். ஆத்தாளை நினைத்து ‘அம்மா’ என அழைத்தால் போதும். திருத்தோடுகளின் இரட்டை நிலவாக ஆத்தாளே  வெளிச்சமாக வருவாள். மனசிற்குள் நிலாவாக உலா வருவாள்.
திரும்பிய பக்கமெல்லாம் ஆத்தாளின் திருமுக தரிசனமாக உணர்ந்து பிரகாரம் முழுக்க நகர்ந்தேன். காலசம்கார மூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், கள்ளவாரணப் பிள்ளையார் என்று சன்னதிகள் இருந்தாலும், ஆத்தாளே திருக்கடையூரின் சங்கநிதி, பதுமநிதி, ஒளிநிதி, உண்மைநிதி.
ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி பட்டுப் பாவாடை சரசரக்க ஓடி வந்தாள்.
‘‘அத்தை... என்னைத் துாக்குங்க...’’
கை நீட்டினாள். துாக்கிக் கொண்டேன். கன்னத்தில் சிலீரென்று இனிப்பாக ஒரு முத்தம் தந்தாள். அவளின் முகம், கைவிரல்கள், பட்டுப்பாதம் எல்லாமே தேவதை வாசம்... ஆத்தாளின் வாசம்.
‘அபிராமி இப்படித்தான். யாரையாவது பிடிச்சிருச்சுன்னா துாக்கச் சொல்லுவா. முத்தம் குடுப்பா...வாடி செல்லம்..’’  என்னிடம் ஓடி வந்த அம்மா குழந்தையைத் துாக்கிக் கொண்டாள்.
எல்லா அபிராமிகளும் அன்பின் அரசிகள் தானே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar