Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அசுரன் தாரகன் அழிந்தான்
 
பக்தி கதைகள்
அசுரன் தாரகன் அழிந்தான்

பூத கணங்களும், தம்பியரான நவ வீரர்களும், லட்சம் பேரும் புடைசூழ வெற்றிவேலை ஏறந்தி முருகப்பெருமான் கம்பீரமாகப் போருக்குப் புறப்பட்டார்.
வெற்றி வடிவேலன் – அவனுடைய
வீரத்தினைப் புகழ்வோம்!
சுற்றி நில்லாதே – போ பகையே
துள்ளி வருகுது வேல்!
அப்போது பெரிய மலை ஒன்று பெயர்ந்து வருவது போல எதிர்ப்பட்டது. ‘இது  என்ன பேரதிசயமாக இருக்கிறதே! அசையாது நிலைத்து நிற்கும் மலையே ஆடி நம் அருகே வருகிறதே’ என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அச்சம் கொண்டனர்.
அச்சமயம் முருகப்பெருமானை நாரதர் சந்தித்தார். ‘‘வேலவனே! இந்த மலையின் பெயர் கிரவுஞ்சகிரி. இந்த வழியே வருபவர்களை தன் குகைவாசலைத் திறந்து காட்டி தவறான வழிசெல்ல வைத்து அவர்களை விழுங்கி விடும் இந்த மாயமலை! சூரபத்மனின் கடைசித் தம்பியான தாரகாசுரனுக்கு உற்ற துணைவனாக இந்த கிரவுஞ்சமலை உள்ளது. மலையின் பக்கத்தில் உள்ள மாயாமாபுரம் தான் தாரகாசுரனின் இருப்பிடம். அவன் யானை முகத்தை உடையவன். திருமாலோடு போர் செய்து அவரின் சக்ராயுதத்தையே பறித்து பதக்கமாகத் தன் மார்பில் அணிந்தவன்.
தாரகனைக் கொன்றதால் மட்டுமே சூரனை வதம் செய்வது சுலபமாகும்.  
‘‘நாரதரே! அவ்வாறே செய்வோம்’ என்றார் ஆறுமுகன். வீரவாகுத்தேவர் வணங்கி, ‘சூரனின் தம்பியைத் தீர்த்துக் கட்ட உங்கள் தம்பியான என்னை அனுப்புங்கள். தங்களின் ஆணையை ஏற்று அடியேன் சென்று அசுரனைக் கொன்று போரில் வெற்றியை உங்கள் முன்னே வைக்கிறேன்’’ என்றார்.
முருகப்பெருமானிடம் அனுமதி பெற்று மாயமாபுரிக்குச் சேனைகளுடன் முன்னே சென்றார் வீரவாகுத் தேவர்.
மாயமாபுரியின் மன்னனான தாரகாசுரனிடம் அவனின் துாதர்கள் கூறினார்கள்.
‘‘வேந்தர் பெருமானே! முக்கியமான செய்தி! தங்கள் அண்ணனிடமிருந்து தேவர்களை மீட்க பெரும்படை ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நம் குலத்தை அடியோடு அழித்து தேவர்களை வாழ வைப்பதற்காக சிவகுமாரர் ஒருவர் அவதாரம் செய்துள்ளார் என்று ஆகாய மார்க்கமாக செல்லும் தேவர்கள் சிலர் கூறியதை முன்னமே கேட்டோம். அச்செய்தியை பொருட்படுத்தாமல் இருந்தோம். மன்னரே! அது உண்மை தான் என்பதை இப்போது உணர்ந்து கொண்டோம். இரண்டாயிரம் வெள்ளம் பூதங்கள் சூழ சிவனின் புதல்வரான கந்த சுவாமி புதிய ஆயுதம் ஒன்றைத் தாங்கிப் போர் புரிய வந்துள்ளார். விபரங்களைக் கேட்ட தாரகாசுரன் விழிகளில் நெருப்பு பொங்க ஆவேசத்துடன் கொந்தளித்தான்.
‘‘துாதர்களே! திரட்டுங்கள் நம் படைகளை! நொடி நேரத்தில் அனைவரையும் மடிய வைப்போம்! அசுர சேனையும், யானை, குதிரைகளும் சூழ தேரில் ஏறினான் தாரகாசுரன். பேரிடி ஓசையும், தோற்கும் வண்ணம் பெரும் கர்ஜனை செய்தான். பூதகணங்களையும், வீரவாகு முதலான ஒன்பது வீரர்களையும் நோக்கிக் கேலியாகச் சிரித்தான்!
என் ஆயுதங்களுக்கெல்லாம் ஆகாரமாக லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளீர்களே! அவற்றின் அகோரப்பசி இதோ ஒரு வினாடியில் தீரப் போகிறது.
தாரகனின் படைகளும், பூதகணங்களும் மோதின. சூலம், தண்டம், கணை, சக்கரம் முதலான ஆயுதங்கள் இருபுறத்தில் இருந்தும் எடுத்து எறியப்பட்டன. உடலங்கள் சரிந்தன. உதிர நதிகள் ஓடின. அண்டங்கள் குலுங்கும் வண்ணம் யுத்தம் தொடர்ந்தது. சிரங்களும், கரங்களும், தோள்களும் துண்டுபட்டு துள்ளின.  
வீரவாகு தேவர் பதினான்கு பாணங்களை விடுத்து தாரகனுடைய வில்லினை ஒடித்தார். தீராத சினத்துடன், ‘தீர்ந்தாய் நீ! எமனிடம் சேர்ந்தாய் நீ’ என்று ஆர்ப்பரித்து வீரவாகு மார்பை நோக்கி சூலத்தை விடுத்தான் தாரகன்.  
போர் கடுமை ஆயிற்று.  
வீரவாகுவை நோக்கி ‘என் மார்பைப் பார். விஷ்ணுவின் சக்ராயுதம் என் மார்பில் பதக்கமாகத் தொங்குவதை விழிகளைத் திறந்து பார்! சிங்கமாகிய என்னைக் கொல்ல சிறுநரி உன்னால் முடியுமா? என்றான் தாரகாசுரன்.  
மாயன் தனை வென்று அவன் நேமியை மாசில் கண்டத்து
ஏயும் படியே புனைந்தேன் வலி எண்ணுறாதே
நீ இங்கு அடுவாம் எனக் கூறினை! நீடு மாற்றம்
சீயம் தனையும் நரி வெல்வது திண்ணம் ஆமோ!
பிரம்மாஸ்திரம், சரபாஸ்திரம் என மாறி மாறி இருவரும் கணைவிட தாரகன், ‘இனி ஆயுதங்களால் பயனில்லை. மாயத்தால் வீரவாகுவை மாயச் செய்யலாம்’ என எண்ணி கிரவுஞ்ச மலையில் இருந்த குகைக்குள் ஓடி மறைந்தான். அதைக் கண்ட வீரவாகுவும், படை வீரர்களும் தாரகனைப் பிடிக்க குகைக்குள் புகுந்தனர்.
அடுத்த வினாடியே கிரவுஞ்ச மலை தன் குகை வாசலை மூடிக் கொள்ள இருள் சூழ்ந்தது. தாரகன் ஓடிச் சென்ற வழி தெரியாமல் அனைவரும் மலைக்குள் சிக்கிக் கொண்டனர். காற்றும் இல்லாமல், வெளிச்சமும் தெரியாமல் இருந்து மலைக்குகைக்குள் அனைவரும் மயங்கி வீழ்ந்தனர்.
படைகளின் பின்புறத்தில் இருந்த முருகப் பெருமானிடம் ஓடிய  நாரதர் நடந்ததை விவரித்தார். பின்னர் தாரகாசுரனிடமும் விரைந்து சென்று, ‘சிவன் புதல்வன் முருகன் இப்போது தனியாக இருக்கிறான். வெல்வதற்குச் சரியான தருணம்’ என்றார் நாரதர்.
களத்திற்கு வந்த தாரகன் கந்தப்பெருமானை நேரடியாகக் கண்டான்.
பவுர்ணமி நிலவுகளைப் போன்ற ஆறு திருமுகங்களையும், அருளொழுகும் பன்னிரண்டு திருக்கண்களையும், ஞானசக்தி ஆகிய வேலாயுதம், அம்பு, அங்குசம் என அஸ்திரங்கள் ஏந்திய பன்னிரு திருக்கரங்களையும், தண்டை, சதங்கை ஒலிக்கும் திருவடிகளையும் பார்த்துப் பரவசம் கொண்டான்.
கந்த புராண ஆசிரியர் கச்சியப்பர் கூறுகிறார்.  
அடியவர்களை விட கொடியவர்களே பாக்கியசாலிகள்! கடவுளை நேரடியாகப் பார்த்து விடுகிறார்களே! அவர்கள் செய்த அதிசயமான தவம் என்னவோ! அறிய முடியவில்லையே!
முழுமதி அன்ன ஆறுமுகங்களும் முந்நான்கு ஆகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலர் அடியும் கண்டான்! அவன் தவம் செப்பற் பாற்றோ!
கற்பனைக்கும் எட்டாத கடவுளே தன்னோடு போர் புரிய வந்துள்ளான் என்று தாரகன் ஒரு கணம் வியப்பும், விம்மிதமும் அடைந்தான்.
‘சிவகுமாரனே! நீ எனக்கு பகைவன் இல்லையே! பிறை சூடிய சிவபிரான் எங்களுக்கு மிகவும் உகந்தவர் ஆயிற்றே! அவரின் புதல்வன் நீ போர்க்கோலம் புனைந்து வந்துள்ளது ஏன் என்று புரியவில்லையே! இந்திரன், பிரமன், திருமால் ஆகியவர்கள் தானே எங்களுக்கு வேண்டாதவர்கள்.
வீரம் பொங்கும் விழிகளால் தாரகாசுரனை வேலவன் பார்த்தான். அறச்செயல்கள் புரிகின்ற அனைவருக்கும் அருள்புரிகின்றவர் பரமேஸ்வரர். அல்லாதவர்களுக்கு தண்டனை அளிக்கின்றவரும் அவர் தானே!
தேவர்களை நீங்கள் அடிமைகளாக்கி சிறையில் அடைத்துள்ளீர்கள். எனவே உங்கள் ஆற்றலை அழித்து அமரர்களைச் சிறை மீட்கவே என்னை அனுப்பி வைத்தார் என் தந்தை. உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப அனுகிரஹமும், தண்டனையும் அளிக்கும் சிவபெருமான், நீயும் உன் சகோதரர்களும் நிகழ்த்திய தவத்தின் பயனாக உங்களுக்கு அளவற்ற ஆற்றலை அளித்தார். பெற்ற வரபலத்தைத் தீயவழிகளில் திருப்பி அமரர்களுக்கு தீமை புரிந்ததால் அத்தீவினைகளின் பயனையும் தற்போது தர உள்ளார். அதன் காரணமாகவே எனக்கு வேலாயுதம் வழங்கி நீதியை நிலைநிறுத்த அனுப்பி உள்ளார்.
அசுரன் தாரகன் ஆர்ப்பட்டத்துடன் குடல் குலுங்க சிரித்தான். ‘கருடன் மீது வந்து என்னை எதிர்த்த பெருமாள் தன் சக்கரத்தை இழந்து தோல்வியுற்று திரும்பிய கதை தெரியாதா? போருக்கு அனுப்பிய வீரவாகுவும், பூதகணங்களும் கிரவுஞ்ச மலையில் அடைபட்டுக் கிடப்பதை அறிய மாட்டாயா நீ!
ஆராயாமல் என்னோடு போரிட முடிவு செய்யாதே! போய்விடு!
‘தாரகனே! கிரவுஞ்ச மலையையும், உன்னையும், படைகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கதிகலங்க வைத்து தீயவர்களின் கொட்டத்தைத் தீர்த்துக் கட்டும் வெற்றிவேலை என் கரம் பற்றியிருப்பதைப் பார்!
சிவகுமாரன் கூறியதைக் கேட்ட தாரகன் படைகளோடு சீறி எழுந்தான். பெரும்போர் மூண்டது. முருகனின் பாணங்கள் அவன் உடல் முழுவதும் பாய்ந்ததால் தாரகன் முள்ளம்பன்றி போல காட்சியளித்தான்.
‘வீரத்தால் வேலவனை வீழ்த்த முடியாது. மாயத்தால் தான் மாய்க்க முடியும்’ எனக் கருதிய தாரகன் கிரவுஞ்ச மலையில் புகுந்தான்.
‘தாரகனையும், கிரவுஞ்சத்தையும் தவிடுபொடி ஆக்கு! வீரவாகுவையும், பூதகணங்களையும் மீட்டு வா என்று வேலுக்குக் கட்டளையிட்டு விரைவாகச் செலுத்தினார் முருகப்பெருமான்.
‘மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த அதிதீரா!’’
மலையையும், அசுரனின் மார்பையும் பிளந்தது வேல்!
வேலுண்டு வினையில்லை! குகன் உண்டு குறைவில்லை! கந்தன் உண்டு கவலை இல்லை என நவவீரர்கள் உள்ளிட்ட படை முருகப்பெருமானின் பராக்கிரமத்திற்குப் பல்லாண்டு பாடியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar