Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மேல்மருவத்துார் சித்தர் ரகசியம்
 
பக்தி கதைகள்
மேல்மருவத்துார் சித்தர் ரகசியம்

அம்மை அங்கே இருக்கிறாள். நமக்காக எழுந்தருளி இருக்கிறாள். அவளின் இருப்புக்காகவே அவளைத் தரிசித்து விட்டு வரலாமே... அதைச் செய்கிறோமா நாம்?  நமக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளுக்காக நன்றி சொல்லி விட்டு வரலாமே...அதைச் செய்கிறோமா நாம்? எப்போதும் ஏக்கம் கொப்பளிக்கும் மனசு, ஏமாற்றம் கொப்பளிக்கும் மனோபாவம், எதனாலும் இட்டு நிரப்ப முடியாத நிம்மதி இன்மை என்பதான மனசுடன் தானே அம்மை தரிசனத்துக்குச் செல்கிறோம்? மாதா மாதம் எழுதுகின்ற மளிகைச் சாமான் பட்டியலாக வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.
பதவி உயர்வுக் கவலை 5 கிலோ, சொந்த வீட்டுக் கவலை ஐம்பது கிலோ, மகள் திருமணக் கவலை ஐம்பது கிலோ, மகன் வெளிநாட்டுப் பயணக் கவலை முப்பது கிலோ, வீட்டுப் பணிப்பெண் வராத கவலை பத்து கிலோ, கார் வாங்க முடியாத கவலை, பட்டுப் புடவை வாங்க முடியாத கவலை அது இது என்பதாகக் கவலைப் பட்டியல் தயாரித்து வாழ்க்கை என்று பெயர் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அதற்கு அம்மையைச் சாட்சிக்காரி ஆக்குகிறோம். நிறைவேற்றித் தா... நிறைவேற்றித் தந்தால் எட்டணாவுக்குப் பழம், ஒரு ரூபாய்க்குப் பூ என்பதாக அம்மையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறோம்.
இந்தப் பிரபஞ்சம், பூமி, உலகம், இயற்கை, ஐம்பூதங்கள் எல்லாமே சக்தி தான். எங்கெங்கு காணினும் சக்தியடா... அந்த ஏழுகடல் அவள் வண்ணமடா  என்பதான ஆகிருதி சக்தி. அவளை ஒரு புரோக்கர் அளவுக்கு மாற்றுகிறோம் என்பது நியாயமா? அவளுக்கே இதைத் தருகிறோம் அதைத் தருகிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமா?
மேல்மருவத்துார் அம்மையிடம் கதைப்பதற்கு எனக்கு ஒரு நுாறு விஷயம் உண்டு. அவளோடு கொஞ்ச, அவளோடு கெஞ்ச, அவளோடு கோபித்துக் கொள்ள, அவளோடு வியாபித்துக் கொள்ள எனப் பலப்பல தளங்களில் அவளோடு உருகுவேன். பெருகுவேன். மருகுவேன். அவளுக்குள் நானாக, எனக்குள் அவளாக நிறைந்து ததும்பும் மவுனப் பொழுதுகள் நிறைந்தது என் வாழ்வியல்.
அம்மை எனக்கு மட்டுமா நெருக்கமானவள்? பிரபஞ்சத்தின் எல்லா திசையிலிருந்தும், அம்மையின் கருவறை தரிசனத்துக்காக வருபவர்கள் பலரும் நன்றிக்கடன் செலுத்தவே வருகிறார்கள். வாழ்வில் வசதிகள், வாய்ப்புகள் எல்லாமே வரும் போகும். கூடும். குறையும். உயரும். தாழும். எது நிஜமானது? எது நிச்சயமானது? நமது மூச்சுக்காற்று மட்டுமே உண்மையானது. கருவான நொடியில், அம்மாவின் கருவறையில் சிறு அணுவாக உருவான நொடியில் இருந்து அகத்துக்கும், புறத்துக்குமான ஒற்றை நுாலிழை பந்தம் இந்த மூச்சுக் காற்று மட்டும் தான்.
வாழ்க்கை எதனால் ஆனது? செல்வத்தாலா? பகட்டாலா? பணத்தாலா? வாழ்க்கை வசதிகளலா? நிச்சயமாக இல்லை. நமது மூச்சுக் காற்றால் மட்டுமே உருவானது. சுவாசம் தீர்ந்த அடுத்த நொடியே இல்லாதவர்கள் ஆகி விடுகிறோம். எனவே சுவாசம் இருக்கும் போது – பொல்லாதவர்கள் ஆகி விடாமல் இருப்பதே அம்மையின் குழந்தைகளாக இருப்பதே நாம் செய்யக் கூடியது. செய்ய வேண்டியது.
சித்தர் பீடம் என உலகமே கொண்டாடும் சுயம்பு அவள். செவ்வாடைப் பேரழகி. அவளைப் பற்றிய கதைகளில் ஒன்று புயலில் சாய்ந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த மண் புற்று கரைந்தது. சுயம்பு நிறைந்தது என்பதாகும். இது மேல்மருவத்துார் அம்மைக்கு மட்டுமா பொருந்தும்?
நம் வாழ்விலும் புயல்கள் வீசும் போது வாழ்வாதாரங்கள் குடை சாய்கின்றன. மனசுக்குள் நம்மை இயக்கிய நம்பிக்கை என்னும் புற்று கரைந்து போகிறது. எல்லா இடங்களிலும் ஆலகால விஷத்தின் இருட்டு வியாபித்து நம் காலடி மண்ணைப் பறிக்கும். அப்போது பாலை வனத்தில் விழும் ஒற்றை மழைத்துளியாக நம்பிக்கை என்னும் துளியைப் பற்றிக் கொண்டு மீண்டும் துளிர்ப்போம். சுயம்புவாக உயிர்ப்போம். இதைத்தான் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சித்து விளையாட்டாகச் செய்து காட்டும்.
கோயில் பிரகாரம் சுற்றும் போது சப்த கன்னிகளாக வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, கவுமாரி வானமே கூரையாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் சித்து ரகசியம் என்ன தெரியுமா? அன்பு, ஆற்றல், இலக்கு, ஈகை, உழைப்பு, ஊக்கம், எளிமை, ஏற்றம் போன்ற நற்குணங்களுக்கு எல்லை கிடையாது.  முடிவில்லாத வானமாக நம் மனம் விரிய வேண்டும். நல்ல குணங்கள் வானமளவுக்கு எப்போதும் கருவாக வேண்டும். இதுதான் சப்த கன்னியர் பீடம் சொல்லும் ரகசியம்.
அம்மையின் தலமரமான வேப்ப மரம் இன்சுவைப் பால் தருவது ஆச்சரியமான விஷயம். கசப்பின் உச்சமான வேப்ப மரத்தில், சுவையான பால் சுரப்பது என்கிற படிம ரகசியம் உணர்த்துவது ஒன்று தான்.  
வாழ்வில் வருத்தம், கவலை, தோல்வி, துயரம், வலிகள் எல்லாம் கசக்கலாம். இத்தனையும் சகித்துச் சகித்து ரத்தமும், சதையுமாக உருவாகி இருக்கும் நாம் – கசப்பின் ஆளுமையாக இருக்கக் கூடாது. கசப்பில் இருந்து சுரந்தாலும், இனிக்கும் பாலாக நம் எண்ணம், சொற்கள், செயல்கள் இனிக்க வேண்டும். அப்போது தான் வாழ்வு இனிக்கும். ஓங்கி உயர்ந்து நின்ற வேப்ப மரம் சொல்லும் சித்த ரகசியம் இதுவே.
கருவறை பீடத்தில் தாமரையைக் கையில் தாங்கியபடி அம்மை அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு எந்த உடல்நிலைப் பெண்களும்  வழிபாடு செய்யலாம் என்பதும், பெண்களே சகல வழிபாட்டு முறைகளையும் செய்கிறார்கள் என்பதும் நமக்குச் சொல்லும் சூட்சுமம் என்ன? எல்லாச் சடங்கும், சம்பிரதாயமும் நாம் உருவாக்கியவை தான். பெண்களைத் தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகத்தில் பெண்களே வழிபாடு செய்யலாம் என்பது இங்கு தத்துவமாக மாறியிருக்கிறது. அவரவர் விருப்பப்படி பராசக்தியை கொண்டாடலாம். எதுவுமே முடிவான முடிவு கிடையாது.
மனக் கருவறை துாய்மையானதாக இருந்தால் திருத்தலக் கருவறையும் துாய்மையாக இருக்கும் என்பதை  இத்தலம் காட்டுகிறது. ஆயிரமாயிரம் பக்தர்களுக்கான தொடர் அன்னதானம் தான் உன்னதத்தின் உச்சம். உயிரினங்களின் பிறப்பின் படிமநிலை வேறுபடும். மாறுபடும். ஆனால் பசியும், தாகமும் அனைவருக்கும் ஒன்று தான். உயிர்ப்பசியை  போக்குவதே உன்னத பக்தி என உரக்கச் சொல்கிறாள் அம்மை.
கண் கொட்டாமல் அம்மையின் அழகை ரசித்தேன்.
‘போதுமா மகளே...’
‘எப்படி போதும் தாயே...உன் தரிசனம் எனக்கு யுகாந்திர தாகம் தாயே.. தீராப்பசி தாயே...’
சிரித்தாள்.
‘இங்கு உன் கருவறை சமூகநீதி, சமநீதி சொல்லுவதாக இருக்கிறது தாயே’     
‘எல்லாக் கருவறைக்கும் ஒரே நீதி தான் மகளே...ஏற்றத் தாழ்வை உண்டாக்குவது நீங்கள் தான்’
அம்மை உண்மையை உரைத்தாள்.
‘வெளியே சிதறு தேங்காய் உடைக்கிறார்களே ஏன் தாயே?’
‘சிதறு தேங்காயாக வெறுப்பை உடைத்து நொறுக்குங்கள். அதையெல்லாம் செய்யாமல் என்னை வழிபட்டால் அது வெற்றுச் சடங்கு தான்’’
சித்தர் பீட ரகசியம் என்னுள் நிறைந்தது. இனிய வேப்பம்பூக்களை மனசில் சுமந்து சிதறு தேங்காயை உடைத்தேன். சிதறி நொறுங்கியது வெறுப்பும், கவலைப் பட்டியல் மனமும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar