Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வலியில்லாத வாழ்க்கை
 
பக்தி கதைகள்
வலியில்லாத வாழ்க்கை

‘‘இந்த அநியாயத்தப் பாத்துக்கிட்டுப் பச்சைப்புடவைக்காரி சும்மா இருக்கலாமாய்யா? இப்படியே நடந்தா இந்த உலகமே அழிஞ்சிரும்யா.’’
பெருங்குரலில் புலம்பிய அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி விவரம் கேட்டேன்.
‘‘பூங்குடிங்கற கிராமத்துலருந்து வரேன்யா. எங்க ஊர்ல நாகராஜ்னு ஒரு பண்ணையார் இருக்கான்யா. அவன் செய்யற கொடுமையைத் தாங்க முடியலை.’’
அப்படி என்ன செய்தான்?
‘‘என்னோட பத்து வயசுப் பையன் ஒரு நாள் அவன் தோப்புல மாங்காய் திருடும்போது மாட்டிக்கிட்டான்யா. திருடுறது தப்புதான். வெவரம் இல்லாத வயசு. அவன நாலு திட்டு திட்டலாம். இல்ல, ரெண்டு அடி கூட போடலாம். என்ன விட்டுடுங்கன்னு என் பையன் அவன் கால்ல விழுந்து கெஞ்சிருக்கான்.
‘‘என் கண் முன்னால நிக்காம ஓடிப்போயிருன்னு சொல்லிட்டு பையன் ஓட ஆரம்பிச்சவுடன நாய அவுத்துவிட்டிருக்கான்யா. என் பையன் பயத்துல அலறித் தோட்டம் பூராச் சுத்திச் சுத்தி ஓடியிருக்கான். கீழ விழுந்தபோது நாய் அவனைக் கடிச்சி வச்சிருச்சி. நாய்க்கடிக்கு ஊசி போட்டாச்சு. அதுல பயந்து போன பிள்ளை அப்பறம் பேசவேயில்லைங்கய்யா.’’
ஆறுதல் சொல்லி அவளை அனுப்பிவைத்தேன்.
அவள் சென்றவுடன் அந்த நாகராஜைப் பற்றி விசாரித்தேன். அடுத்தவர்களுக்கு விதம் விதமாக வலியைக் கொடுத்துச் சித்திரவதை செய்வதுதான் அவன் பொழுதுபோக்காம். பசியின் கொடுமையால் அவனுடைய காட்டில் ஒரு சோளக்கருதைத் திருடிய பெண்மணியைக் காலில் செருப்பில்லாமல் நெருஞ்சி முட்கள் பரப்பியிருந்த தரை மேல் நடக்கவிட்டானாம். அவளுடைய கால்கள் ரணமாகி நடுவில் நிற்கமுடியாமல் கீழே விழுந்து அதனால் அவளது உடல் முழுவதும் ரத்தக்களறியாகிவிட்டதாம். சே! என்ன கொடுமை இது!
‘‘தாயே! அந்தப் பையனுக்குப் பேச்சு வரவேண்டும். நாகராஜுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரவேண்டும்.’’ போகப் போக இரண்டாவது பிரார்த்தனை வலுப்பெற்றது.
இரண்டு மாதம் கடந்தது. பச்சைப்புடவைக்காரி தோன்றவேயில்லை.  ஞாயிறன்று காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. அந்தச் சிறுவன் பேசவேண்டும் என்பதற்காக இன்று முழுவதும் பேசாமல் இருப்பது என முடிவு செய்தேன். அலைபேசியை அமைதி நிலையில் வைத்தேன். வீட்டில் தனியாகத் தான் இருந்தேன்.
‘‘வாழைக்காய், புடலங்காய், கத்திரிக்காய்...’’ வாசலில் குரல் கேட்டு ஓடினேன். கதவைத் திறக்காமலேயே எதுவும் வேண்டாம் என்று சைகை காட்டினேன்.
‘‘வேண்டாம் என்றால் போவேனா? அந்தப் பையனுக்குப் பேச்சு வர வேண்டாமா? நீ உன் பேசாநோன்பை முறித்துக்கொண்டால்தான் அந்தப் பையன் பேசுவான். வசதி எப்படி?’’
கதவைத் திறந்து அவள் கால்களில் விழுந்து வணங்கினேன். உள்ளே வந்து அமர்ந்தாள் உலகாளும் உமா மகேஸ்வரி. அவளின் அழகான முகத்தைப் பார்த்தபடி காலடியில் அமர்ந்தேன். ‘ஏன் தாயே என்னை இத்தனை நாளாகத் தவிக்க விட்டீர்கள்?’ என்ற நினைப்பு விம்மலாக வெளிப்பட்டது.
‘‘ சிறுவனுக்குப் பேச்சு வரவேண்டும் என்பது மட்டும் பிரார்த்தனையாக இருந்தால் உடனே வந்திருப்பேன். அந்தக் கொடுமைக்காரனைத் தண்டிக்க வேண்டும் என்பதே  உன் முக்கிய பிரார்த்தனையாகிவிட்டது. அது உன் மனதிலிருந்த அன்பைக் குறைத்து விட்டது.’’
மீண்டும் அவள் கால்களில் விழுந்து வணங்கினேன்.
‘‘தவறு செய்துவிட்டேன், தாயே! அந்த நாகராஜின் மனமும் அன்பால் நிறையவேண்டும் என பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். மன்னியுங்கள், தாயே!’’
அன்னையின் பேரருள் ஒரு அழகான புன்னகையாக மலர்ந்தது.
‘‘அந்தப் பையன் இன்னும் மூன்று மாதம் துன்பப்படுவான். பின் திருக்கடையூரில் இருக்கும் ஒரு துறவியிடம் அவனை அழைத்துச் செல்வார்கள். அங்கே பேசத் தொடங்குவான்.’’
‘‘நாகராஜின் மனம் அன்பால் நிறையவேண்டும். அப்போதுதான் பிறரைத் துன்புறுத்தமாட்டான்.’’
அன்னை கலகலவென்று சிரித்தாள்.
‘‘அங்கே நடப்பதைப் பார்.’’
அது ஒரு மருத்துவமனை. ஒரு அழகான பெண்மணி அப்போதுதான் ஒரு ஆண் குழந்தையை பெற்றிருந்தாள். குழந்தை லட்சணமாக இருந்தது. குழந்தையின் தந்தை ஆனந்தக் கூத்தாடினான்.
‘‘அவன்தான் நாகராஜ்.’’
‘‘நல்லபடியாக குழந்தை பிறந்தால் அவனது மனதில் அன்பு வந்துவிடுமா, தாயே?’’
‘‘வராது. அடுத்து நடப்பதைப் பார்.’’
குழந்தை பிறந்து ஒன்பது மாதம் ஆன நிலையில் நாகராஜ் குழந்தைக்கு முடியிறக்க கிராமத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு வந்திருந்தான். அன்று விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
தீபாராதனையின் போது நாகராஜ் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். அன்னையின் அருளால் அவன் செய்யும் பிரார்த்தனையை என்னால் அறிய முடிந்தது.
‘‘தாயே! என் மகனின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் நான் விழா எடுக்கிறேன். என் மகனுக்கு வலியே இல்லாத வாழ்க்கையைத் தரவேண்டும்.’’
காட்சி முடிந்தது. அன்னை பேசினாள்.
‘‘அவன் கேட்டதை அவனுக்குத் தரப் போகிறேன்.’’
‘‘தாயே’’ கத்திவிட்டேன். பிறருக்கு வலியைத் தருவதையே தொழிலாகக் கொண்ட ஒருவனின் மகனுக்கு வலியில்லாத வாழ்க்கையா? என்ன கொடுமை!
‘‘நீ கூட என் மனதைப் புரிந்துகொள்ளவில்லையே!’’
அன்னையைப் பார்த்துக் கண்ணீர் மல்கக் கைகூப்பினேன்.
‘‘அவன் மகனுக்கு மூன்று வயதாகும் போது என்ன நடக்கப் போகிறது என்று காட்டுகிறேன் பார்.’’
நாகராஜின் அரண்மனை போன்ற வீட்டின் முன்கட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. நாகராஜ் பண்ணையாட்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனது மனைவி சமையல்கட்டில் இருந்தாள்.
‘‘ஐயா குழந்தையப் பாருங்கய்யா’’ வீறிட்டான் ஒரு பண்ணையாள்.
சத்தம் கேட்டு அவன் மனைவியும் ஓடி வந்தாள். குழந்தை ஏதோ கூர்மையான ஆணியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. ஆணியால் தனது கன்னத்தில், நெற்றியில் கீறிக்கொண்டுவிட்டது. முகமெல்லாம் ரத்தம்.
வழிந்த ரத்தத்தையும் அறுபட்டுத் தொங்கிய சதையைவும்விட பயங்கரமான ஒன்றைப் பார்த்தான் நாகராஜ். குழந்தை எந்த வலியையும் வேதனையும் உணராமல் சிரித்தது.
குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். காயத்திற்குக் கட்டுப் போட்டார்கள். ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்றார் மருத்துவர்.  
‘‘அந்த வலியிலும் ரத்தத்திலும் குழந்தை ஏன் அழாமல் சிரித்தது?’’ என்று நாகராஜ் கேட்ட கேள்விக்கு மருத்துவரிடம் பதில் இல்லை. குழந்தையை சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
பலவிதமான பரிசோதனைகள். நாகராஜும் அவன் மனைவியும்தான் அழுதுகொண்டிருந்தார்கள். ரத்தம் எடுக்கத் தன் கையில் ஊசி குத்தப்பட்டபோதும் குழந்தை சிரித்தது. கடைசியில் மருத்துவர் ஒரு குண்டைத் துாக்கிப்போட்டார்.
‘‘உங்க மகனுக்கு இருக்கறது ரொம்பவும் அபூர்வமான நோய்.  பேமிலியல் டிஸட்டாநோமியா (familial dysautonomia) இவனுக்கு வலியே தெரியாது. வெட்டிப்போட்டாக்கூட சிரிச்சிக்கிட்டே இருப்பான்.  சாதாரணமா நமக்கு ஏற்படற தலைவலி, பல்வலி, தொண்டைவலியக்கூட உங்க மகனால உணர முடியாது. அதனால தினமும் பரிசோதனை பண்ணிக்கிட்டேயிருக்கணும். இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாயிரும்.
‘‘வலி நமக்குக் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வலி வந்தாத்தான் ஆபத்து வந்திருக்குன்னு தெரிஞ்சி உடனே சிகிச்சை எடுத்துப்போம். நம்ம எல்லாருக்கும் பாதுகாப்பு கவசமா இருக்கற வலி உங்க மகனுக்கு இல்லாமப் போயிருச்சி.
‘‘பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கங்க. மேலைநாடுகள்ல இதுக்கு சிகிச்சை இருக்கான்னு பாக்கறேன்.’’
‘‘என்ன கொடுமையான தண்டனை தாயே!’’
‘‘கர்மக்கணக்கு. அதைவிடு.  உனக்கு ஏதாவது வேண்டுமா?’’
‘‘இரண்டு வரங்கள் வேண்டும், தாயே!’’
‘‘தந்தேன்.’’
‘‘ஒன்று நாகராஜின் மனம் அன்பால் நிரம்பி வழியவேண்டும். செய்த தவறுகளை உணர்ந்து அவன் குழந்தை இந்தக் கொடிய நோயிலிருந்து விடுபட வேண்டும். அடுத்தவர்களின் வலியை உணரும் வல்லமையை எனக்குத் தாருங்கள், தாயே! என்னால் யாருக்கும் எந்த வலியும் வேதனையும் வரக்கூடாது என்ற வரத்தையும் யாசிக்கிறேன்.’’
‘‘இரண்டு என்று சொல்லிவிட்டு நிறையக் கேட்டுவிட்டாயே! இருந்தாலும் தந்தேன்.’’


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar