Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பச்சை நாயகி என்னும் இச்சைநாயகி
 
பக்தி கதைகள்
பச்சை நாயகி என்னும் இச்சைநாயகி

அந்தத் திருத்தலத்தின் வண்ண ஓவியங்கள், அழகுச் சிற்பங்கள், துாண்களின் கம்பீரம் எதைச் சொல்ல? எதை விட? கருங்கல் பாவிய தரை எப்போதும் சுடுவதேயில்லை. வெளியே கோடை வெப்பம் கொதிக்கலாம். கோயிலுக்குள் காலடி வைத்தால்  சிலீரென்ற ஜில்லிப்பு. குளிர்வது பாதம் மட்டுமல்ல. நமது உடல், மனம், உயிர், உயிரின் மூலம், ஆன்மா என நம்மைச் சார்ந்த எல்லாமே குளுமையாகிறது.  
அதற்குக் காரணி பச்சை நாயகி அம்மை. பச்சை என்பது பசுமை, மென்மை, மேன்மை, தன்மை, தாய்மை, தகைமை என்பதான வகைமைகளின் குறியீடு தானே? கோயம்புத்துார் பேரூர் கோயிலின் பிறவாப்புளி, இறவாப்பனை என்ற காலாதீத தத்துவம் நமக்கான ஞானதீபம்.
பிறப்பும், இறப்பும் அற்ற விடுதலை நிலை என்பதே உயிரினங்களின் உச்சபட்ச நோக்கமாக இருக்க முடியும். கோயில் வாசலில் உள்ள புளியமரம் தான் பிறவாத் தன்மை அருளுவது. இந்த மரத்தின் கொட்டைகளை வேறெங்கு விதைத்தாலும் முளைக்காது. இந்தப் புளிய மரம் மட்டும் காய்க்கும். பூக்கும். செழிக்கும். ஆனால் எங்கும் முளைக்காது என்பது ஆச்சரியங்களின் உச்சம் இல்லையா? இறவாப்பனை காலம் காலமாக உயிர்ப்புடன் இருக்கிறது என்பதும் ஆச்சர்யங்களின் உச்சம் இல்லையா?
பச்சை, பச்சைநாயகி, பச்சையம்மாள், பச்சைப் பொண்ணு என்பதாக அம்மையின் பெயர்கள் எங்கும் காணப்படும் பிரதேசம் பேரூர். பச்சை நாயகித் தாயின் இன்னொரு பெயரான மரகதவல்லி என்பதிலும் தமிழ் வாசனை, தாய்மை வாசனை வீசும்.   
திருக்கோயிலின் வாசலில் நுழையும் போதே கண்கள் விரியும். ஆச்சரியமாக நெஞ்சம் விரியும். அதிசயித்து அதிசயித்து மனசு விரியும். காரணம் – இந்தப் பச்சை நாயகி சமதோ பட்டீஸ்வரர்  திருத்தலம் கலைகளின் சங்கப்பலகை. நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் கலைகளின் பொங்குமாங்கடல். சிற்ப நேர்த்தி,
நிர்மாண நேர்த்தி, வண்ண ஓவியங்களின் நேர்த்தி என்பதாக  முழுக்க நிறைவின் அடையாளம் தான் பச்சைநாயகி என்னும் சக்தி.
நேரே சன்னதிக்குச் சென்று குறைகளின் பட்டியல் இடுவதே நமது வழக்கம். ஆனால் கொஞ்சம் விதான ஓவியங்களில், துாண்களின் பிரம்மாண்டத்தில். தீபங்களின், துாபங்களின் வடிவழகில். நாட்டியச் சிற்பங்களில், முருகன் சன்னதிக்கு அருகே பல்லாண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் முப்பது அடி கதவின் செய்நேர்த்திக் கலையில் மனதைச் செலுத்துங்கள். கருங்கல் பாளங்களில் கால் பதித்துக் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வாருங்கள். திருநீற்று வாசனையோடு நம்மை வருடிச் செல்லும் காற்றை அனுபவித்தபடி வலம் வந்தால் – சூட்சுமம் சொல்லும் புதிர் நாயகியாகப் பச்சை நாயகி புன்முறுவல் செய்வது புரியும்.
பச்சை நாயகி கருவறை. தாயின் கருவறையில் பத்து மாதம் கருக் கொண்டது நமக்குத் தெரியாது. பனிக்குட நீரில் நீந்தி வளர்ந்தது நமக்குத் தெரியாது. முலைப்பாலை அருந்தி உயிரும், உடலும் வளர்ந்தது நமக்குத் தெரியாது. காரணம் அந்தப் பருவம் நமது அறியாப் பருவம். புரியாப் பருவம். அத்தனை உணர்வும், எழுச்சியும் இப்போதும் தருகின்ற ஆதித்தாய் பச்சை நாயகி அம்மை.
‘‘எல்லாமே பிரம்மாண்டம் தாயே...நீ பிரம்மாண்டம். உனது ஆற்றல் பிரம்மாண்டம். உனது பெருங்கருணை பிரம்மாண்டம். உனது விஸ்வரூபத்தின் முன் நாங்கள் துாசு. துாசின் துகள். துகளின் துளி. துளியின் முனை. முனையின் ஒரு சிறுபுள்ளி. நீ விஸ்வரூபம். நாங்கள் அற்ப ரூபம். நீ பெருந்தேவி. நாங்கள் பெரும்பாவி. நீ சத்தியம். நாங்கள் அசத்தியம். நீ நிசம். நாங்கள் பொய்மையின் வசம். நீ வாசம். நாங்கள் வெறும் வேஷம். நீ நிறை. நாங்கள் குறை. இதைத் தான் உணர்த்துகிறாயா தாயே’’
மவுனமாகிச் சிரித்தாள் அம்மை.
‘‘நீ மட்டும் பச்சை நாயகி. நாங்கள் இச்சை நாயகி.  உறவுகள், உணர்வுகள், ஜிகினாக்கள்,  பளபளப்புகள் என எல்லாவற்றின் மீதும் இச்சை. இச்சை ஜெயிப்பது எப்போது தாயே? மீண்டும் மீண்டும் சுழலில் உழலத்தான் பிறப்பா தாயே? நெருப்பாக நிமர்ந்து நின்றாலும் சாக்கடைகள் கெக்கலிக்கின்றன. நேர்மைப் பொறுப்பாக உயர்ந்து நின்றாலும் பொய்மைக் காளான்கள் கெக்கலிக்கின்றன. நியாயம் அருகுகிறது. அநியாயம் பெருகுகிறது. நீதி அருகுகிறது. அநீதி பெருகுகிறது. அன்பு அருகுகிறது. வெறுப்பு பெருகுகிறது. நீ எல்லாவற்றுக்குச் சத்திய சாட்சியாக நிற்கிறாய். அவதாரம் எடுத்து துஷ்டர்களை வேரறுக்க மறந்து விட்டாயா?’’
கோபம், தாபம், வெறுப்பு, வேதனை எல்லாமே அம்மாவிடம் தானே கொட்ட முடியும்? மனம் நிதானமானது. கேள்விகளால் ஒரு வேள்வியைச் செய்த பின்பு பிரகாரங்களைச் சுற்றி வந்தேன்.  அநாதி காலத்தில் நான் இங்கே நடந்திருந்த ஞாபகம். இரண்டாம் நுாற்றாண்டில் கரிகால்சோழன் கோயிலை நிர்மாணித்தபோது நானும் கல் சுமந்திருக்கலாம். ஓவியம் தீட்ட வண்ணக்கலவை சுமந்திருக்கலாம். மடைப்பள்ளிக்காக மளிகை சுமந்திருக்கலாம். பச்சை நாயகிக்காக மாலைகள் சுமந்திருக்கலாம். அம்மைக்காக  பட்டாடைகள் சுமந்திருக்கலாம். இந்தத் தொப்புள்கொடி உறவைச் சுமப்பதால் தான் இப்போதும் கூட அம்மையை நெஞ்சில் சுமந்தபடி அவளின் காலடியில் உழல்கிறேன். இந்த உணர்வுகள் உந்தித் தள்ளவே  நேற்றில் இருந்து இன்றைக்கு, இன்றில் இருந்து நாளைக்கு என்பதான உணர்வலைகளின் ஊசலாட்டத்தில் கிடந்தேன். முக்காலத்திலும் இருந்தும், இல்லாமலும் நடந்தேன்.
பளீரென மின்னல் வெட்டியது இறவாப்பனை. பிறவாப்புளி இருக்கின்ற திருத்தலத்தில் நேற்று எப்படி பிறந்தேன்? இன்று எப்படி இருக்கிறேன்? நாளை எப்படி இருப்பேன்? என்ன சூட்சுமம் சொல்கிறாள் பச்சை நாயகி அம்மை? நடந்தேன். கேள்விகளுக்குள் கிடந்தேன்.
கையில் பச்சிளம் குழந்தையோடு தாய்மை தளதளக்க வந்தாள் ஓர் இளம்தாய். உன் குடும்பத்தாரும். ‘‘பேரக் குழந்தை சாமி. ஒரு மாசம் ஆச்சு. பச்சை நாயகித் தாய்கிட்ட ஆசி வாங்க வந்தோம்’’   
‘‘நல்ல படியா இருக்கட்டும் குழந்தை’’
‘‘பேரன் அச்சு அசலு அவங்க தாத்தா ஜாடை...ரெண்டு வருஷம் முன்னாடி சாமிட்ட போன தாத்தா மறுபடியும் பொறந்துட்டாரு...  எங்கே போயிடும் ஜென்மாந்திர பந்தம்?’’
அடடா... இது தானே இறவாப்பனை? ஒற்றைப் பனையாக ஒவ்வோர் உயிரும். பனை மரங்கள் கூட்டமாக இருப்பதில்லையே... தனித்தனியாகத் தானே வளர்கின்றன. ஒவ்வொரு உயிரும் தனித்த பனை தானே? குடும்பம் என்ற கூட்டமைப்பிலும் – ஒவ்வோர் உயிரும் தனி்த்தனி பனை தானே? அவரவர் உயிர்  அவரவருக்கு. பனைமரம் தலைமுறை தலைமுறையான நீட்சி தரும் என்பதே இறவாப்பனை என்னும் தத்துவமாகிறது.
‘‘உன் தங்கச்சி கல்யாணம் என்னாச்சுப்பா? நல்ல வரன் வந்துச்சே’’
‘‘வேண்டாம்னுட்டா... நல்ல வரன்  எதுவா இருந்தா என்ன? மனசுக்குப் புடிக்கல... அவ விரும்பற பையனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமாச் சொல்லிட்டா... சரின்னு ஒத்துக்கிட்டோம். அவ சந்தோஷமாக இருக்கணுமில்ல?’’
அது தானே நிஜம்.
சந்தோஷம் இல்லாமல் ஒட்டுறவு இல்லாமல் உயிர்ப்பு இல்லாமல் எங்கும் வேர் விட முடியாதே...உயிர்ப்போடு இருந்தால் திரிசங்கு சொர்க்கத்திலும் ஆணிவேரோடு அசுர வளர்ச்சி காட்டலாம். எனவே இந்த பிறவியில் ஒற்றைப் பனை மரமாய் நாம் வித்தாகி இருக்கிறோம். இந்த மண்ணில், இந்தப் பிறப்பில், இந்தப் பூமியில், இந்த ஜென்மத்தில், இந்த இருப்பில் நமக்கும் விருப்பும், நெகிழ்ச்சியும், நிறைவும் நிறைந்திருக்க வேண்டும். அதை விடுத்து வாழ்வின் மீது வெறுப்பு. சூழலின் மீது வெறுப்பு. சக உயிர்கள் மீது வெறுப்பு என்றிருந்தால் உயிர் எப்படி முளைக்கும்? இந்த இருப்பை நேசிப்போம். இன்னும் நல்லவற்றால் நம்மை நிறைத்துக் கொள்வோம்.
நம்மிடமே ஓட்டைக் குடமாய் ஆயிரம் குறைபாடுகளை வைத்துக் கொண்டு நிறைவில்லாத பட்டியல், குறைகளின் பட்டியல், குற்றச்சாட்டுகளின் பட்டியல் என்பதாக விருப்பற்ற வாழ்க்கை வாழ்வது பச்சை நாயகிக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம்.
மறுபடியும் அம்மை கருவறை போனேன். கைகூப்பி நின்றேன். ‘‘சூட்சுமக்காரி நீ...புதிர் நாயகி....’’
மவுனமாகச் சிரித்தாள். ஓவியர் ஒருவர் பச்சை நாயகி அம்மையை வரைந்து கருவறையில் வைத்து வழிபட்டார்.
‘‘அம்மாவின் கருணையினால் வரைந்தேன். எல்லாமே அம்மைக்குச் சமர்ப்பணம்.’’ எளிமையாகச் சொல்லி நகர்ந்தார்.
இந்த திருக்கோயில் வண்ண வண்ண விதானத்து ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாமே கலைஞர்களாக இருக்கும் மனிதர்களின் படைப்புகள் தானே? அப்படியானால் – தனது விஸ்வரூபத்தை பிரம்மாண்டத்தைக் குறுக்கிக் கொண்டு இந்தக் கலைஞர்களின் கைவிரலுக்குள் குறுகிக் குந்துகிறாள் தாய். அவர்களின் படைப்புகள் மூலம் விஸ்வரூபமெடுத்து பச்சை நாயகி அம்மையா? இல்லையே... அந்தக் கலைஞர்களின் விஸ்வரூபம், அந்த கலைஞர்களின் ஞான எழுச்சி, இதற்கான சத்திய காட்சியாகத் தன்னைத் தந்தருள்கிறாள் அம்மை.
‘‘எல்லாம் நீயே தாயே... என் கோடுகள் நீ. என் வண்ணம் நீ.. என் எண்ணம் நீ...’’
கண்ணீர் வழிந்தது ஓவியருக்கு. கருவறையில் சிரித்தாள்.
பச்சை நாயகி அம்மை தன் குழந்தைகள் விஸ்வரூபமெடுக்க அவர்களின் கைப்பொம்மையாகத் தன்னை உருக்கிக் கொள்வது தாய்மாருக்கே உரிய தெய்வீகம். பச்சை நாயகி எனக்கு உணர்த்திய சூட்சுமம் இது. இப்போது ஆகி நின்றாள் பச்சை நாயகி –  இச்சை நாயகியாய் –  தன் படைப்புகள் குழந்தைகள். உயிர்கள் இச்சை கொண்ட நாயகியாய்...


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar