Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » என்னவென்று வேண்டிக் கொள்வது?
 
பக்தி கதைகள்
என்னவென்று வேண்டிக் கொள்வது?

என்னைப் பார்க்க வந்த தணிக்கையாளர் மூர்த்திக்கு முப்பத்தி ஐந்து வயதிருக்கும். அவரிடம் தொழில் முறையில் ஓரிரு முறை பேசியிருக்கிறேன். மற்றபடி பழக்கமில்லை என்றாலும் கலங்கியிருந்த அவரது முகம் இதயத்தைப் பிசைந்தது.
‘‘நானும் என் மனைவியும் தினமும் அழுதுக்கிட்டு இருக்கோம், சார். எனக்குப் பைத்தியம் பிடிக்கும்போல இருக்கு. ஒரு வழிகாட்டுதல்..’’
‘‘உங்க பிரச்னை என்ன?
‘‘மூன்றாண்டுக்கு முன்பு எங்களுக்கு ரெட்டைக் குழந்தைங்க பொறந்துச்சி. ரெண்டும் பொண்ணு.’’
‘‘அதுவா பிரச்னை?
‘‘ஒரு குழந்தை சாதாரணமா, ஏன் நல்லாவே இருக்கு. இன்னொரு குழந்தைதான் பொறந்ததுலருந்து கண்ணை முழிச்சிக்கூடப் பார்க்கல.  மூளையில பிரச்னைன்னு சொன்னாங்க.  சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம்னு கூட்டிக்கிட்டுப் போய்ப் பெரிய ஆஸ்பத்திரிகள்ல காட்டிட்டோம். மூளையில் நீர் கோர்த்திருக்காம். அத தினமும் வெளியே எடுக்கணுமாம். அதுக்காக அந்தப் பச்சைக்குழந்தை தலையில ஓட்டை போட்டு அதுக்குள்ள குழாயப் போட்டு..  என்னுடைய எதிரிக்குக்கூட இந்த நிலை வரக் கூடாது…’’
அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை. விம்மி விம்மி அழுதார். சுவரில் மாட்டியிருந்த மீனாட்சி படத்தைக் கண்ணீர்த் திரையினுாடே பார்த்தேன்.
‘‘இருபது லட்சம் செலவழிச்சிட்டேன் சார். எங்க பரம்பரை வீடு கடன்ல மூழ்கப்போகுது. அது போனாப் போகுது. என் குழந்தையோட நோய் சரியாகணும். கொஞ்சம் எனக்காக அம்மாக்கிட்ட கேளுங்க, சார்.’’
‘‘நம்மால முடிஞ்சது பிரார்த்தனைதான்... நீங்களும் வேண்டிக்கங்க.’’
‘‘அதுக்குமேல ஏதாவது...’’
‘‘அந்த அம்பிகை மனசு வச்சாத்தான் உண்டு.’’
அவர் முகம் தொங்கிவிட்டது.  
‘‘உங்க குழந்தையோட மெடிக்கல் ரெக்கார்ட்ஸ அனுப்பி வைக்கமுடியுமா?’’
‘‘நிச்சயமா, சார். நான் கிளம்பறேன்.’’
மூர்த்தி அனுப்பிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு நண்பரான நரம்பியல் நிபுணர் சுந்தரத்தைப் பார்க்க அவர் பணிபுரியும்  மருத்துவமனைக்குச் சென்றேன்.
‘‘ஒரு பெரிய அற்புதம் நடத்திக்காட்டணும்னு  உங்க பச்சைப்புடவைக்காரி நெனைச்சாத்தான் இந்த நோய் குணமாகும். இல்லேன்னா பிரச்னைதான்.’’
சில நிமிடங்கள் பேசிவிட்டு எழுந்து செல்லும்போது சுந்தரம் மென்மையாகச் சொன்னார்.
‘‘அப்படியே குணமானாலும் இந்தக் குழந்தையோட வாழ்க்கை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது.’’
மருத்துவர் நம்பிக்கை கொடுக்காவிட்டால் என்ன? எனக்கென்று மகா மருத்துவச்சி இருக்கிறாளே! அவள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அவளிடமே கேட்டால்....சரி, என்னவென்று கேட்பது?  ஒரு அற்புதத்தை நடத்திக்காட்டி குழந்தையைக் குணப்படுத்துங்கள் என்பதா? அடுத்தவரின் கர்மக்கணக்கில் குறுக்கிட வேண்டாமென்று  என்னைப் பல முறை எச்சரித்திருக்கிறாள் அன்னை. அதையும் மீறி அவளிடம் கேட்பது ஒரு கொத்தடிமைக்கு அழகாகுமா?
மருத்துவரின் காத்திருப்பு அறையில் இருந்த மீனாட்சி படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மனம் வெறுமையாக இருந்தது.  பிரார்த்தனை செய்கிறேன் என மூர்த்திக்கு வாக்குக் கொடுத்தபின் சும்மா இருப்பது தவறல்லவா?
குழந்தை நல்லபடியாக குணமாகிப் பிறகு அதனால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் போனால்? மீண்டும் ஒரு அற்புதம் வேண்டும் என்று கேட்பதா? அதுவும் கர்மக்கணக்கில் குறுக்கிடுவது தானே!
ஒரு கம்பீரமான நர்ஸ் என்னிடம் வந்தாள்
‘‘டாக்டர் உங்களப் பாக்கணும்னாரு. என்கூட வாங்க.’’ அவளது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஓடினேன்.
முன்னால் இருக்கும் மருத்துவருடைய அறைக்குச் செல்லாமல் வெளியில் ஏன் போகிறாள்?
அவள் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
‘‘அந்த மருத்துவரையேதான் பார்க்க வேண்டுமா? இந்த மருத்துவச்சியைப் பார்த்தால் ஆகாதோ? உன்னுடைய பிரச்னைக்குத் தீர்வு வேண்டாமா?’’
 காலில் விழுந்து வணங்கினேன்.
‘‘உங்களிடம் என்ன கேட்பது என்று கூடத் தெரியாத பாவியாகி விட்டேனே!’’
 ‘‘நான் சொல்லிக் கொடுத்ததை மறந்து விட்டாயே!’’
புரியாமல் அவளைப் பார்த்தேன்.
‘‘எந்தச் சூழலிலும் செல்லுபடியாகும் பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுத்தேனே!’’
மென்மையாக என் தலையில் குட்டினாள். ஞாபகம் வந்துவிட்டது
‘‘அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்.’’
‘‘மூர்த்தியின் குடும்பத்திற்கும் அதே பிரார்த்தனையைச் செய். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.’’
ஒரு வாரம் இரவு உணவைத் தவிர்த்தேன். மனதிற்குள் அதே வார்த்தைகளைச் சொல்லியபடி தினமும் கோயிலுக்கு நடந்து போனேன். அங்கேயும் அதே வேண்டுதல்தான்.
ஏழாவது நாள் கோயிலிருந்து திரும்பிய போது மூர்த்தியிடமிருந்து அழைப்பு.  ‘‘இதுதான் பச்சைப்புடவைக்காரி காப்பாத்தற லட்சணமா?’’  
‘‘ஏன் என்னாச்சு?’’
‘‘இறந்துட்டா. ‘‘
வயிற்றைப் பிசைந்தது. கால்கள் தள்ளாடின. சாலையிலேயே அமர்ந்தேன்.
‘‘அவ உருவம் மட்டும் கல்லு இல்ல, சார். அவ இதயமும் கல்லுதான்.’’  கோபமாகப் பேசினார் மூர்த்தி.  நான் பேசவில்லை.
பச்சைப்புடவைக்காரி என்னைக் கைவிடலாம். நான் அவளுடைய கொத்தடிமைதானே! என்னைப் போல் கோடிக்கணக்கான அடிமைகள் அவளுக்கு இருக்கிறார்கள். எனக்கு அவளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கண்ணீருடன் கோயிலை நோக்கி மீண்டும் நடந்தேன்.
பாலத்தில் நடந்தபோது யாரோ முதுகில் ஓங்கி அறைந்தார்கள். திடுக்கிட்டுத் திரும்பினேன். ஒரு பிச்சைக்காரி.
‘‘ஓடு. உடனே அவன் வீட்டுக்குப் போ.  உன் மூலம் அவனுக்குச் சில உண்மைகளைப் புரிய வைக்கப் போகிறேன்.’’
அன்னையை வணங்கிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து மூர்த்தியின் வீட்டுக்கு ஓடினேன்.  இரவு ஒன்பது மணி.
மூர்த்தி வீட்டில் தனியாக இருந்தார். மனைவியும் இன்னொரு மகளும் மனைவியின் வீட்டில் இருந்தனர்.
‘‘உங்க பச்சைப்புடவைக்காரி என்னை கைவிட்டுட்டாளே? அநியாயம் நடந்துருச்சே! அவ மனசு இரங்கலையே! கல்மனசுக்காரி..’’
திடீரென எனக்கு ஆவேசம் வந்தது.
‘‘அறிவு கெட்டத்தனமாப் பேசினா... அடிச்சே கொன்னுருவேன். அவதான்யா உன்னைக் காப்பாத்தியிருக்கா.’’
‘‘என்ன உளறுறீங்க?’’
‘‘இறந்த குழந்தை தனி ஜீவன். அது மூணு வருஷம் வேதனைப்படணும்னு அதோட கர்மக்கணக்கு. அத உன்கிட்ட கொடுத்து உன் கணக்கையும் நேர் பண்ணிட்டா....யோச்சிப்பாருய்யா இன்னும் ரெண்டு வருஷம் குழந்தை உசிரோட இருந்தா நீ தெருவுக்கு வந்திருப்ப. நீயும் உன் பொண்டாட்டியும் அந்த நோயாளிக் குழந்தையையே கவனிச்சிக்கிட்டு இருந்தீங்க. இதனால நல்லா இருக்கற இன்னொரு மக அன்புக்கு ஏங்கிக்கிட்டு இருக்கா.  அந்தக் குழந்தை உயிரோட இருந்திருந்தா உன்னுடைய இன்னொரு குழந்தைக்கு மனநோய் வரும். வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
பச்சைப்புடவைக்காரி ஒரு அற்புதம் செஞ்சி உன் குழந்தையோட நோய் குணமானாலும் கடைசிவரைக்கும் இயல்பா வாழ முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு.  எல்லாத்தையும் மனசுல வச்சிக்கிட்டுத்தான்  குழந்தையை உன்கிட்டருந்து வாங்கிக்கிட்டா. அந்த ஜீவன் இப்போ அவ மடியில இருக்கு. அவளோட குழந்தையை  நல்லாப் பாத்துக்கிட்டதுனால அவ உனக்கு வாரி வாரிக் கொடுக்கப் போறா.  பெரிய வேலை, நல்ல சம்பாத்தியம், பிரச்னையில்லாத வாழ்க்கை. உன்னோட இன்னொரு மகளை நீ ராணி மாதிரி வளர்க்கப்போறய்யா. அவளப் போய் கல்மனசுக்காரின்னு சொல்றியே...நல்லா இருய்யா..’’
காலில் விழுந்து கதறினார் மூர்த்தி. சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினேன்.
எனக்காகக் காத்திருந்த ஆட்டோவைக் காணவில்லை. கொஞ்சம் துாரம் நடந்து ஒரு ஆட்டோவைப் பிடித்தேன். பெண் ஓட்டுனர்.
வீட்டிற்கு விரிவாக வழி சொல்லத் தொடங்கினேன்.
‘‘மகன் வீட்டுக்குப் போக தாய்க்குத் தெரியாதா?’’
‘‘தாயே!’’
‘‘நன்றாகப் பேசி விட்டாயே! இனி என்ன பிரார்த்தனை செய்தாலும் அதை உடனே கொடுத்துவிடத் தீர்மானித்து விட்டேன். இப்போது சொல். உன்னுடைய அடுத்த பிரார்த்தனை என்ன?’’
‘‘அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்.’’


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar