Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மீனாட்சி அம்மை எனும் பூர்ணிமை
 
பக்தி கதைகள்
மீனாட்சி அம்மை எனும் பூர்ணிமை

பொற்றாமரைக் குளத்தருகே அமர்ந்திருந்தேன். சிலுசிலுவென்ற தென்றல். நீரின் குளுமை, கோயிலின் புனித வாசனை. அண்ணாந்து பார்த்தால் விஸ்வரூபமாகி நிற்கும் நீலவானம். கையருகே ஆழம் காண முடியாத நீளக்குளம். நீர்த்திவலைகள் மீது மென்மையாக வருடிச் செல்லும் காற்று. ஆழக்குளத்தின் உள்ளங்கையாகத் தாங்கி நிற்கும் மண். அங்குமுள்ள, இங்குமுள்ள, எங்குமுள்ள பிறவிகளின் சுவாசமாகத் துடிக்கும் உயிர் நெருப்பு. ஐம்பூதமாகி நிற்கிறாள் மதுரை மீனாட்சித்தாய். கருவறையில் தரிசித்தால் நெக்குருகிப் போவது போலவே இங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் தரிசனத்திலும் அம்மையை உணரலாம்.
மீனாட்சி அம்மை முக்காலத்துக்கும் அனாதியானவள். இந்தப் பிரபஞ்சத்தை விடவும் ஆதியானவள். இனி வரும் காலத்தை விடவும் அந்தமானவள். நேற்றானவள். இன்றானவள். நாளையுமானவள். காற்றானவள். கதிரானவள். புதிருமானவள். ஊற்றானவள். உயிரானவள். உயிர்ப்புமானவள். பயிரானவள். பச்சையானவள். இச்சையுமானவள். மதுரை மீனாட்சி திருக்கோயிலின் எந்த வாசல் வழியாக நுழைந்தாலும் சர்க்கரைக் கட்டியை இழுத்துப் போகும் எறும்புக் கூட்டமாக மனசை அம்மை இழுத்து விடுவாள். நம் உயிரை அவளுக்குள் நுழைத்து விடுவாள். நம் விடியலில் அவளையே இழைத்தும் விடுவாள்.
உலகின் கடைக்கோடியில் இருந்தாலும் – கடைக்கண் அருளால் நமது கவசமாவாள் மீனாட்சி. பேசாமல் நினைத்துப் பார்க்கலாம். பேசியே நிறைத்தும் பார்க்கலாம். நமது வார்த்தையாக்கலாம். நமது மவுனமாக்கலாம். நமது வண்ணமாக்கலாம். நமது எண்ணமாக்கலாம். நமது தாயாக்கலாம். நமது சேயாக்கலாம். நமது உறவாக்கலாம். நமது துறவாக்கலாம். மீனாட்சி அம்மை எல்லாமுமானவள். மீனாட்சியம்மை எல்லாமும் கடந்தவள்.
அவளை நினைத்ததும் உயிரில் ஆனந்தக் கண்ணீர் பெருகும். அவளைத் தரிசித்ததும் மனசில் நிறைவுப் பன்னீர் பெருகும். அப்படித்தான் அங்கே அமர்ந்து பொற்றாமரைக் குளத்து நீரில் தெரிந்து முழுநிலவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் அசைவில் அலைகள் மெலிதாக நகர்ந்தன. மூவாயிரம் ஆண்டுகள் முன்பு  நிர்மாணிக்கப்பட்ட இந்தத் திருக்கோயில் எத்தனை பகல், இரவு, மழை, நிலவு, சூரியன் எல்லாம் பார்த்திருக்கும்? எத்தனை அன்பர்களின் வேண்டுதலும் வழிபாடும் சேர்ந்திருக்கும்?
அன்பர்கள் கூட்டம் வந்து வந்து போனாலும், மீனாட்சி அம்மை நிரந்தரம். அம்மை நிரந்தரம் என்பதனால் பழமை ஆகிறாளா என்ன? நித்தம் நித்தம் முன்னம் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இந்த நிகழ்நொடி என்னும் வழமையாய் வேறு யாரால் இருக்க முடியும் அம்மையைத் தவிர?
திருக்கோயிலில் ஆறுகால் மண்டபம் உண்டு. நுாறுகால் மண்டபம் உண்டு. முக்குறுணி விநாயகர் கோபுரம் உண்டு. தேரடி மண்டபம் உண்டு. ஊஞ்சல் மண்டபம், அம்பாள் மண்டபம், கொலு மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், கம்பத்தடி மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம் இப்படியாக ஆயிரக்கணக்கான மண்டபங்கள் இருக்கலாம். இவை எல்லாம் நீர்த்திவலைகளின் சுகம். மீனாட்சி அம்மை கருவறை தான் கருணை அருவிப் பொங்கு மாங்கடல் தரும் சுகானுபவம்.
அம்மையைப் பார்க்கும் பரவசம் வாய்ப்பவர்களுக்குக் கோடி ஆண்டுகளும் நொடிகளாக உணரலாம். நகரும் நொடி இன்னும் இன்னும் உறையாதா என்று திணறலாம். இன்னும் இன்னும் நீளாதா என்றும் உருகலாம். மீனாட்சி தாய். மீனாட்சி மகள். மீனாட்சி சகோதரி. மீனாட்சி குரு. மீனாட்சி ஞான கங்கை. பச்சை மரகத மாணிக்க மரகதவல்லி  மீனாட்சி கோயில் பதினான்கு கோபுரங்களைக் கொண்டதாக இருக்கலாம். கோயில் 15 ஏக்கர் பரப்பு கொண்டதாக இருக்கலாம். பன்னிரு கோபுரங்களின் சிற்பங்களும் மானுடக் கற்பனைக்கு எட்டாததாக இருக்கலாம். ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணிமூல வீதி, மாசி வீதி என்பதான நகர நிர்மாண மேலாண்மை கொண்டதாக இருக்கலாம். தடாதகைப் பிராட்டி, கற்பூர வல்லி, சுந்தர வல்லி, அபிராம வல்லி, அபிடேகவல்லி, அங்கயற்கண்ணி, கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரித்தலைவி, முதுமலைத் திருவழுதி, திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்று பல திருநாமங்கள் இருக்கலாம்.
பிரமிப்பின் எல்லை தாண்டி விடும் அளவுக்குச் சிற்பக்கலை, கட்டிடக்கலை, ஆபரணக்கலை, கைவினைக்கலை என்பதாகப் புராதனமான ‘கிழக்கின் ஏதென்ஸ் நகரம்’ எனப் பெயர் பெற்றதாக இருக்கலாம்.
சித்திரைத் திருவிழா, முடிசூட்டு விழா, திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பதாக நாள்தோறும், மாதம் தோறும், ஆண்டு தோறும், காலம் தோறும் பண்டிகைகளும், திருவிழாக்களும் இருக்கும் திருத்தலமாகவும் இருக்கலாம்.
அதெல்லாம் வாழ்க்கைக்கான பரபரப்பு சுவாரஸ்யம். மனசுக்குப் பரபரப்பு தேவையில்லை. மனசுக்கு ஆரவாரம் தேவையில்லை. உயிருக்குப் பளபளப்பு தேவையில்லை. மனசு ஏங்குவது மீனாட்சியம்மை தரிசனம் தருகின்ற ஆத்ம சுகத்துக்காக. மீனாட்சியம்மை கரிசனம் தருகின்ற ஆத்ம சுகத்துக்காக. கண்களால் அம்மையைக் கண்டால் போதும். அந்த ஒற்றை நொடி தரிசனம் போதும். கண் சிமிட்டாமல் அந்தத் திருமுகத்தை உணர்ந்தால் போதும். அதுதான் உயிரை ஆசுவாசப்படுத்தும். அதுதான் மனசின் கொதிநிலையை ஆசுவாசப்படுத்தும். அதுதான் வாழ்வின் அனல்நிலையை ஆசுவாசப்படுத்தும்.
மீனாட்சியம்மை மந்திர ஜால வித்தைக்காரி. நாம் நேர்மையானவர்கள், நியாயமானவர்கள், துாய்மையானவர்கள். ஆனாலும் நம் மீதும் சாணி உருண்டைகள், கற்கள், கடும் சொற்கள் வீசப்படும். அந்தச் சுமையோடு அம்மையைத் தரிசிப்போம். பனிக்குடம் உடைந்து  குழந்தை பிறந்ததும், பத்து மாதம் வயிற்றில் இருந்த சுமையும், அழுத்தமும் ஒற்றை நொடியில் காணாமல் போகுமல்லவா? அதுபோன்று இதயத்தை நொறுக்கிய இமயமலை பொடிப்பொடியாகி நம் மீது பன்னீர்ப்பூவாகச் சொரியும் மாயாஜாலம் மீனாட்சியம்மை மகாத்மியம்.
அவளின் கருவறையில் இருந்து ஒவ்வொரு தரிசனத்துக்குப் பின்னும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். அப்படிப் பிறந்து தான் பொற்றாமரைக் குளத்தருகே அமர்ந்தேன். நீரில் நெளிந்த நிலவு பகலின் வெளிச்சம் தந்தது. பவுர்ணமியின் பூர்ணிமையும் தந்தது. ஒரே நேரத்தில் எப்படிப் பகல் வெப்பமும், இரவுத் தட்பமும் இணைத்திருக்கிறது பொற்றாமரைக் குளத்து நிலவில்? பார்க்கப் பார்க்கப் புல்லரித்தது. சட்டென்று பொற்றாமரைக் குளத்தருகே கருவறை வாசனை கமழ்ந்தது. ஏதோ ஒரு மாயாஜாலம்
நிகழ்ந்தது.
காற்றைப் போல எடையற்றதாக, சுவாசம் போல உருவற்றதாக உணர்ந்தேன். கால் கொலுசு சப்திக்கப் பச்சைப் பட்டுப் பாவாடை சிலுசிலுக்க, விழிகளில் கண்மை பளபளக்க, உதட்டில் புன்னகை நிறைந்திருக்க வந்த சிறுமி எங்கேயிருந்து வந்தாள்? என்னை நோக்கி ஏன் வந்தாள்?
‘‘அம்மா...’’ கைகளைத் தொட்டு அழைத்தாள்.
‘‘சொல்லு கண்ணம்மா...’’
அவளின் கன்னத்தை வருடினேன். ஆயிரம் பனிக்குடங்களைத் தொட்டது மாதிரி ஜில்லென்றிருந்தாள்.
‘‘இந்தாங்க... அம்மா தரச் சொன்னாங்க’’
தங்கத் தாம்பாளமாகத் தனது உள்ளங்கையை நீட்டினாள். மீனாட்சி தாழம்பூ குங்குமம் வைத்திருந்தாள். துாரத்தே கைகாட்டினாள். அவளின் அம்மா சிரித்தாள். கையெடுத்துக் கும்பிட்டாள். சிறுமியோடு அம்மா அருகில் போனேன்.
‘‘என் புருஷன் கிராதகன். வம்பன். என்னை அடிச்சு மிதிக்கலேன்னா ஜென்ம சாபல்யமே கிடையாதுங்கற மாதிரி தெனமும் அடிச்சு நொறுக்கறது குடிச்சு நொறுக்கறது தான் வேலை. துவம்சம் பண்றதுதான் வேலை. என்னைத் தப்பாப் பேசி திட்டி கேவலப்படுத்தலேன்னா சோறு இறங்காது. நெதமும் மீனாட்சி அம்மை கிட்ட தான் வந்து அழுவேன். இந்தக் குளத்துத் தண்ணீரிலே என் கண்ணீரும் நிரம்பியிருக்கு. பாலைவன வெப்பமாயிருந்த என் வாழக்கைல இப்பதான் குளிர்ச்சி வந்திருக்கு. அதான் குங்குமப் பிரார்த்தனை செய்யறேன்’’
எல்லோருக்கும் தாழம்பூ குங்குமம் தந்தாள் அந்தப் பெண்.
‘‘மீனாட்சி அம்மை கண் தொறந்து பார்த்துட்டா... எனக்கு வெளிநாட்டுல வேலை கெடைச்சிருக்கு. என் புருஷனுக்கு விசா கெடைக்கல. நிறைய போலீஸ் கேஸ் இருக்குன்னு... நானும் எம் பொண்ணு மீனாட்சியும் வெளிநாடு போறோம். என்னைப் பிரிஞ்சா தான் என் அருமை புரியும் என் புருஷனுக்கு...’’ மகளை அணைத்தபடி நகர்ந்தாள் அந்தப் பெண்.
 மதுரை மீனாட்சியிடம் அவரவர் வீட்டு விசேஷத்துக்கு, திருமணத்துக்கு, குழந்தை பிறப்புக்கு, புதுமனை புகுதலுக்கு, படிப்புக்கு, வேலைக்கு, செல்வத்துக்கு, ஆரோக்கியத்துக்கு என்று வாழ்வின் சகல நகர்வுக்கும் ஆசிகள் பெறுவது வாழ்வியல். சிலபல பொழுதுகளில் குளிர்மைக்குப் பதிலாக வெப்பமே வாழ்வாக உருமாறும் போது – அவளின் காலடியில் கண்ணீரைச் சேர்ப்பதும் வாழ்வியல்.
சிக்கலுக்கான தீர்வை, தீர்ப்பை எப்படித் தர வேண்டும்? வெப்பத்தைத் தட்பமாகவும், தட்பத்தை வெப்பமாகவும் எப்படித் தர வேண்டும்? இல்லறத்தின் வெப்பத்தைப் பிரிவின் தட்பத்தால் சமன் செய்வது மீனாட்சி இயல்பு. நம் மீது எறியப்படும் சாணி உருண்டையோடு நெருப்பாற்றில் இறங்கினால் சாணி பஸ்பமாகித் திருநீறாகிப் புனிதமாக்கும் வாழ்வியலும் அவளின் மாயமே. இது புரிந்த போது பவுர்ணமி நிலவில் சிரித்தாள் மீனாட்சியம்மை.
....................


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar