Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனசுக்கு மருந்து பிரத்யங்கிரா தேவி
 
பக்தி கதைகள்
மனசுக்கு மருந்து பிரத்யங்கிரா தேவி

நாம் எதனால் ஆனவர்கள்? உயிரால் என்று சொல்லலாம். அப்படி என்றால் எல்லா உயிரினங்களும் நாமும் ஒன்றா? பறவை, பூச்சி, விலங்கு, காடு, வயல் எல்லாமே உயிரினம் தான். நாமும் உயிரினம் தான். அந்த எல்லாமும் நாமும் ஒன்றா? இல்லை. அப்படியானால் நாம் எதனால் ஆனவர்கள்? மனிதர்கள் மட்டும் தான் மனசு என்ற அதிசயத்துக்குச் சொந்தக்காரர்கள்.  
கண், காது, மூக்கு, கை, கால், விரல், நாக்கு எல்லாம் இங்கே இருக்கிறது என்று உடம்பில் அவற்றின் இருப்பிடத்தைச் சொல்லி விடலாம். எங்கே இருக்கிறது எனத் துல்லியமாகப் புள்ளி குத்திச் சொல்ல முடியாத ஒன்று தான் மனசு. இதயத்தில் இருக்கிறதா? இருக்கலாம். மூளையில் இருக்கிறதா? இருக்கலாம். மனசு சரியில்லாத நேரத்தில் உடல், சிந்தனை, செயல்பாடு எல்லாமே சோர்ந்து விடுகிறதே...உருவமே இல்லாத ஒன்று நம்மை ஆட்டிப் படைக்கும் அதிசயம் தான். பிற உயிரினத்துக்கும், மனிதர்களுக்குமான வேறுபாடு இது.
நாம் என்பது நம் மனசு. நம்மை இயக்கும் உயிர் இல்லாமல் போனால் தான் மனசும் இல்லாமல் போகிறது அல்லவா? அது வாழ்க்கைப் பயணத்தின் கடைசி நிலை.
ஆனால் வாழ்க்கைப் பயணத்திலேயே இடையிடையே மனசு நோதல், மனசு மரணமடைதல், மனசு கண்ணீர் விடுதல், மனசு கதறுதல், மனசு துடித்தல், மனசு வெடித்தல் ஆகியன எல்லாம் நிகழும். உடம்பு வலியை அளவீடு செய்யக் கருவிகள் உண்டு. தொழில் நுட்பம் உண்டு. ஆனால் மனதின் வலியை அளக்கும் கருவி  கண்டறியப்படவில்லை. ஆனால் மனசு வெடிக்கும் வலியைச் சுமந்து கொண்டு அலை பாய்பவர்கள் மருந்தாக நாடும் அம்மை ஒருத்தி இருக்கிறாள். அவள் ஆக்ரோஷமானவள். நெருப்பானவள். காரமானவள். வீரமானவள்.
அவளுடைய திருத்தலத்தில் காலடி வைத்ததும் நம் பாதம் வழியாக உடம்புக்குள் மின்னல் பாய்கிறது. தலையோடு காலாக ஒரு புதிய விசை, அளவிட முடியாத, இனம் புரியாத உணர்வும் பாய்கிறது. மனம் துள்ளிக்கொண்டு பரபரக்கிறது அம்மையைத் தரிசிக்க வேண்டுமென்று.
சோழிங்கநல்லுார் பிரத்யங்கிரா தேவி கோயில். வித்தியாசமான கட்டுமானத்தோடு காணப்படுகிறது. அம்மையும் கூட வித்தியாசமானவள் தானே? வெளியே வெப்பம், கொதிப்பு எத்தனை இருந்தாலும், திருத்தலத்தில் காலடி வைத்ததும், இமயத்தின் உச்சியில் காலடி வைத்த சிலிர்ப்பும், குளிர்ச்சியும் நமகக்குள் ஊடுருவுகிறது.
சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் கோயில் உள்ளது என்பதில் ஒரு செய்தி தருகிறது. சமுத்திரம் போன்றதொரு பிரம்மாண்டமான இந்த வாழ்வில் நாம் சிறிய கால்வாய் என நிதர்சனம் சொல்கிறது அல்லது கண்ணீர் அலை வீசும், கவலை அலை, தோல்வி அலை, துயரம் அலை வீசும். வாழ்க்கையில் பிரத்யங்கிரா அம்மையின் அருள் நங்கூரமிடும் போது – சந்தோஷம் சிற்றாறாகப் பெருகும். நம்பிக்கைக் களிப்பு – கால்வாயாகப் பெருகும் என்னும் சேதியே அது.
ஆயிரம் சிங்க முகமும், ஈராயிரம் கரமும் உடையவளானாலும் நம் தேவைக்காக, புரிதலுக்காக அம்மை ஒரு முகமும், நான்கு கைகளுமாகக் காட்சியளிக்கிறாள். உடுக்கை, சூலம், வேல், வாளினைச் சுமந்திருக்கிறாள். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் உதித்த உக்கிர காளி பிரத்யங்கிரா தேவி. கபாலமாலை, போர் புரியும் துடிப்பு, மிளகாய் வற்றல், காரத்தின் வெடிப்பு என அம்மை எதை நோக்கி ஆயுதம் ஏந்துகிறாள்?
 சிவந்த நாக்கு, கூரிய பற்கள், செந்தழல் போன்ற கருவிழிகள் என்ற எரிமலைக் கோளமான தோற்றம் பார்க்கும் போது தரும் சிலிர்ப்பு  உயிரின் சிலிர்ப்பு. உணர்வின் சிலிர்ப்பு. அவள் அரக்கமும், தாய்மையும் கலந்த பேருருவம். சிங்கமும், மயிலும் கலந்த தாயுருவம். வல்லமையின் சீற்றம். சினத்தின் வீர்யம். அருளின் ஆழம். கருணையின் உயரம். அன்பின் விசாலம். காருண்யத்தின் விலாசம். வாழ்வின் தொல்லைகளை இல்லை என்றாக்கும் சத்திய சாட்சி பிரத்யங்கிரா தேவி.
இந்தத் தலத்தின் சிறப்பு  எங்கும் அமைதி, பேராற்றல், துாய்மைநிலை கொலுவிருக்கும் நிலையில் மனசு நிதானமாகிறது. கொந்தளிப்பு கட்டுக்குள் வருகிறது. கோபமும், தாபமும், வேகமும், மூக்கணாங்கயிறு போட்டதாகத் தெளிந்த நீரோடையாகிறது.
அங்கே வரும் முன் பதைபதைத்த மனசு அம்மையைப் பக்கத்தில் தரிசித்ததும் துடைத்த கண்ணாடி போலாகிறது. வலியும், வேதனையும் எங்கே போயிற்று? கவலையும், கண்ணீரும் எங்கே போயிற்று?
அட... இதெப்படி மனசுக்குள் தெளிவு கூடு கட்டுகிறது? இதெப்படி மனசுக்குள் பாரமின்மை கூடுகட்டுகிறது? இப்படியாகப் பலப்பல எப்படிகள் நமக்குள் எட்டிப் பார்க்கின்றன.
எதனாலும், யாராலும், எப்போதும் என்னைத் தோற்கடிக்க முடியாது என சூழ்ச்சிக்காரர்களை சறுக்க வைக்கிறாள் அம்மை. துரோகம் செய்து பிழைப்பு நடத்துவோரின் கறை முகத்தையும், குறை அறிவையும் திரை நீக்கிக் காட்டுகிறாள் அம்மை. அவளின் ரவுத்திரம் துரோகங்களை சுட்டுப் பொசுக்குகிறது. மிளகாய் வற்றலின் காரமாகப் பற்றி எரிந்தாலும் நம் மனசையும், அடிவயிறையும் குளிரச் செய்கிறாள். நிம்மதியில் மிளரச் செய்கிறாள். அம்மையின் அருள் முகத்தை அகத்தில் நிறைத்து அமாவாசை இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் சுற்றிச் சுற்றி வந்தேன். கேள்விகளுக்கான  பதில் தேடி வந்தேன். அம்மை பேசுவாள் என்ற நம்பிக்கையுடன்  வந்தேன்.
நல்லவர்கள் வீழ்வதும்,  தீயவர்கள் ஜெயிப்பதும் சரியா தாயே? சூழ்ச்சிக்காரர்கள் தலை நிமிர, நேர்மையாளர்கள் தலை கவிழ இந்த விதியின் விளையாட்டை  நீ தானே ஒழிக்க முடியும்? ஏன் தாயே! அநீதிக்கு  துணை போகிறாய்?  நல்லவர்களின் கண்ணீர் உனக்கு இனிக்கிறதா? தீயவர்களின் கெக்கலிப்பு உனக்கு சிலிர்க்கிறதா?
பிரகாரம் சுற்றி வந்த பக்தர்களின் மனதிலும் பல கேள்விகள் ஊடாடியதை  உணர்த்தியது. அந்த அமாவாசை  மிளகாய் வற்றல் யாகப் பொழுது. அவரவர் வேண்டுதல், அவரவர் மனசு வலியையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சுமந்த மிளகாய் வற்றல்களின் சிவந்த நிறம். அம்மையின் செந்நாக்காக, அம்மையின் நீதிப் பிழம்பாகவே தெரிந்தது.
‘‘மனசு நொதிச்சுப் போயித்தான் யாகத்துக்கு வந்திருக்கேன். என் மனசு நெருப்பா எரியுது. ராத்திரியெல்லாம் துாக்கம் போச்சு.  நிம்மதி போச்சு. நல்லா இருங்கன்னு சொல்ற எனக்கே துரோகம் பண்ண முடியுதுன்னா அவனுங்களால எத்தனை பெரிய துரோகமும் செய்ய முடியும்.  அவனுங்களுக்கு ஒரு பாடம் குடுக்கணும் தாயே... வேண்டினேன். அம்மா தான் இந்த யாகம் பண்ணனும்னு கனவுல சொன்னா. இன்னிக்கு வந்துட்டேன். அவனுங்களுக்குத் தண்டனை கொடுத்தாத்தான் வேற யாருக்கும் துரோகம் பண்ண மாட்டாங்க’’  தான் கொண்டு வந்திருந்த மிளகாய் வற்றலை யாகத்தில் சேர்த்த அந்தப் பெண் கண்ணீர் மல்கியபடி நெகிழ்ந்து போயிருந்தார்.
‘‘பெண்பாவம் பொல்லாததுன்னு நிரூபிக்கணும்...நீ தான் வழிகாட்டணும் தாயே’’
மிளகாய் வற்றல் திகுதிகுவென எரிந்தது. அத்தனை மனசின் கோபம், வலி, வேதனை எல்லாமே மிளகாய் வற்றலில் சேர்ந்து ஆகுதியாக்க – அம்மை எல்லாவற்றையும் ஏற்றாள். ஒரு நெடியோ, காரலோ, காந்தலோ இல்லை. கண் எரிச்சல் இல்லை என்பது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்ட மெய்ஞானம், தொழில் நுட்பத்துக்கும் அப்பாற்பட்ட ஆன்மிக நுட்பம்.
‘‘மனசு நிம்மதியாச்சு தாயே... மனசு நிம்மதியாச்சு தாயே...’’ மந்திர உச்சாடனமாகச் சொன்னார்கள் சூழ்ந்திருந்த பக்தர்கள். நெருப்பாக, விஸ்வரூபமாக, நேர்மையாக,  நீதியாக நின்றாள் பிரத்யங்கிராதேவி. அவள் நிகும்பலை. அவள் அக்கினி. அவள் மிளகாய் வற்றலும் தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar