Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அசுரர் ஆட்சியும் தேவர் வீழ்ச்சியும்
 
பக்தி கதைகள்
அசுரர் ஆட்சியும் தேவர் வீழ்ச்சியும்

தாய் தந்தையரையும், குருநாதரையும் வணங்கி வாழ்த்துக்கள் பெற்றனர் சூரபத்மனும், அவனது சகோதரர்களும்! ஆனந்தம் மேலிட மாயையும், சுக்கிராச்சாரியாரும் ஆசியளித்தனர். அசுரகுரு மொழிந்தார். ‘‘சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் நீங்கள் இனிமேல் பொருட்படுத்த வேண்டாம். பாவ, புண்ணியம் என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்காதீர்கள். மனம் விரும்பியதைச் செய்து தேவர்களை அடிமையாக்கி உங்கள் சொற்படி அவர்களைச் சேவகம் செய்ய வையுங்கள். அளவற்ற வல்லமையும், ஆயுதங்களும், ஆள்பலமும், ஆட்சி அதிகாரமும் பெற்ற நீங்கள் ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள அனைத்தையும் அடைந்து மகிழுங்கள்’’
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் அக்னி குண்டத்தில் குடம் குடமாய் எண்ணெய்யைக் கொட்டியது போலிருந்தது அவரின் அறிவுரை. அசுர சேனைகளுடன் சூரபத்மனின் திக்கு விஜயம் ஆரம்பம் ஆயிற்று. திக்குகள் எட்டும் திக்குமுக்காடின. ஆசைகள் எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அடிப்படையாய் விளங்குவது அளவற்ற செல்வம் தானே! எனவே சூரபத்மனின் முதல் விஜயம் குபேரனின் அளகாபுரி நகரமாக ஆனது. அளகாபுரியை மேலும், கீழுமாக அளப்பது போல் ஆக்கி செல்வ வளம் அனைத்தையும் கொள்ளை அடித்தது சூரனின்படை. குபேரன் குசேலன் ஆனான்.
‘குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற வாசகம் உண்மையாயிற்று!
மேற்கு திசையில் சென்று அளகாபுரி வளங்களை அடியோடு கவர்ந்து கொண்ட சூரபத்மன் தன் இந்திர ஞாலத்தேரை கிழக்கு திசையில் உள்ள இந்திரலோகத்தின் தலைநகரான அமராவதியை நோக்கிச் செலுத்தினான். சூரப்படைகள் சூறையாட வருவது அறிந்து இந்திரன் ஓடி ஒளிந்து கொண்டான். கோபம் மேலிட அமராவதியைத் தீயிட்டுக் கொளுத்திய பின் அக்னி பகவானுடைய நகரத்திற்குச் சென்றான். அக்னி பகவான் பெரும் சீற்றத்துடன் அசுர கணங்களோடு போர் புரியவே தாரகாசுரன் வெகுண்டு சிவ அஸ்திரத்தை ஏவத் துணிந்தான்.
மறுவினாடியே தாரகனைப் பணிந்து, ‘‘என்னை மன்னித்து விடு. இனி நான் உன் அடிமை. சிவ அஸ்திரத்தைத் தயை செய்து பிரயோகிக்காதே! அனைத்தும் சாம்பலாகி விடும்’’ என அக்னி வணங்கினான்.
‘‘அக்னி தேவனே! நீ என் அடிமை ஆனதால் உயிர்ப்பிச்சை தந்தோம்’’ எனக்கூறிய சூரன் படைகளோடு தென் திசை நோக்கிப் புறப்பட்டான்.
தெற்கில் உள்ள எமலோகத்தையும், பின்பு நாக லோகத்தையும், அதன் பின்னர் பாற்கடலுக்கும் சென்று அனைத்தையும் வெற்றி கொண்டு ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’’ என எக்காளமிட்டது. அசுர மும்மூர்த்திகள் அரசோச்ச விண்ணுலகக் கட்டிடக் கலைஞன். விசுவகர்மாவைக் கொண்டு மூன்று நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன. தென்கடலின் நடுவில் சூரபத்மனுக்கு வீர மகேந்திரபுரம். வடகடலின் மையத்தில் சிங்கமுகனுக்கு ஆசுரமாநகர். மேற்கில் ஏமகூடமலை அருகில் தாரகனுக்கு மாயமாபுரம். மூவருக்கும் முறையே முடிசூட்டுவிழாவை பவத்தை பிரம்மதேவர் நடத்தி வைத்தார்.
பணமும், பதவியும் வந்தால் போதுமா?
பரவசமாக அனைத்தையும் அனுபவிக்க வாழ்க்கைத்துணையும் அமைந்தால் தானே வசந்தம் வீ்சும்?  
விசுவகர்மாவின் பத்தினி பதுமகோளையை சூரனும், எமனின் செல்வியான விபுதையை சிங்கமுகனும், நிருதியின் மகளான சவுரியை தாரகனும் மணம் புரிந்து கொண்டனர்  
‘‘கட்டழகானதோர் அற்புத மாளிகை
கட்டி முடிந்ததடா! –இன்பக்
கட்டில் அமைந்ததடா – அங்கு
சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை
இன்பச் சக்கரம் சுற்றுதடா – அதில்
நாங்கள் சக்கரவரத்தியடா!
முறையற்ற ஆட்சியையே முறையாகக் கொண்டு மூவரும் அரசு புரிந்தனர். நான்முகனை அழைத்து, ‘இனி நாங்கள் எழுதுவது தான் உன் தலைவிதி. நாள், நட்சத்திரம், திதி பார்த்து பஞ்சாங்கம் தினசரி படிக்க வேண்டும். அடுத்து எமனை அழைத்து, ‘‘எங்கள் உத்தரவு இல்லாமல் எவர் உயிரையும் பறி்க்கக் கூடாது. போய்வா’’ அடுத்து சூரியதேவனை அழைத்து, ‘‘சுடுகின்ற கிரணங்களை அடக்கிக் கொண்டு பதமாக, இதமாக, மிதமாகச் கதிர்களை வீசு! வாயுதேவா! நீ குப்பைகளைக் கூட்டி துாய்மை செய். வருணனே! நீ துாய்மையான இடங்களில் தண்ணீர் தெளி! தேவர்களே! எங்கள் உணவுக்கான மீன்களைத் தினசரி கடலில் இருந்து பிடித்து வந்து தர வேண்டியது உங்கள் கடமை. இந்திரனும், பிரம்மாவும், திருமாலும் அரக்கர்களின் ஆணைக்கேற்ப இயங்கினார்கள்.  மீனவர்களாய் ஆனார்கள் வானவர்கள். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதை முழுவதுமாக உணர்ந்து கொண்டார்கள் தேவர்கள். சிவபெருமானையே ஒதுக்கி வைத்து, தானே தலைவன் என செருக்கு கொண்டு தக்கன் செய்த தகாத வேள்வியில் கலந்து கொண்ட பாவம் எவ்வளவு கொடியது என்பதைச் சூரனின் கொடுங்கோல் ஆட்சியில் தெரிந்து கொண்டார்கள் தேவர்கள். அமராவதி நகரம் மீதும் ‘அமரும் விதி!’ என்பதை அறிந்து கொண்டார்கள்.
அசுரர்களின் ஆட்சியையும், தேவர்களின் வீழ்ச்சியையும் அருணகிரிநாதர் பாடுகின்றார்.
நெறி தவறி அலரி, மதி, நடுவண், மகபதி, முளரி
நிருதி, நிதிபதி, கரிய வனமாலி
நிலவு மறையவன் இவர்கள் அலைய
அரசு உரிமை புரி நிருதர்.
(அலரி – சூரியன், மதி – சந்திரன், நடுவண் – எமன், மகபதி – இந்திரன், முளரி – அக்கினி, நிருதி – திசைத்தலைவன், நிதிபதி – குபேரன், கரியவனமாலி – திருமால்)
இணைந்த இல்லற வாழ்வில் சூரபத்மனுக்கு புதல்வர்கள் நால்வர் பிறந்தனர்.
பானுகோபன், அக்கினிமுகன், இரணியன், வச்சிரவாகு
சிங்கமுகனுக்கு அதிசூரன் என்ற செல்வனும், தாரகனுக்கு அசுரேந்திரன் என்ற புதல்வனும் பிறந்தார்கள். சூரபத்மனின் சகோதரியாகிய அஜமுகி துர்வாச முனிவரை மயக்கி வில்வலன், வாதாபி என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்.
‘அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளான்’ என்று அனைவரும் பாராட்டி மகிழும் வண்ணம் சூரபத்மனின் முதற்பிள்ளை தொட்டிலில் தவழும் போதே செயற்கரிய ஒரு செயலைச் செய்தான். எல்லோரும் திகைத்துப் போனார்கள்.
படுத்திருந்த பச்சைக் குழந்தையின் மீது பகலவனின் ஒளிக்கிரணம் பட்டது. ‘சூரியனே என்னையா சுடுகின்றாய்’ என்று கோபம் மேலிட வீரியத்துடன் குழந்தை விண்ணில் பாய்ந்தது. கதிரவனை ஒரு பந்து போல் பற்றி வந்து தன் தொட்டிலோடு கட்டிப் போட்டது. பதும கோமளையும், சூரபத்மனும் வீரக் கொழுந்தாக விளங்கிய பாலகனை உச்சி முகர்ந்து மெச்சினர். வானில் சூரியன் வலம் வராததால் வெளிச்சம் இன்றி அண்டங்கள் எல்லாம் அந்தகாரத்தில் தடுமாறியது. பிரம்மதேவர் வந்து வேண்ட பிறகு ஒருவாறாக தொட்டிலோடு கட்டப்பட்டிருந்த சூரியனுக்கு விடுதலை தந்தனர். பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல அசுரர்கள் கொட்டத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போயிற்று.
   
 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar