Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கருவின் மாரி கருமாரி
 
பக்தி கதைகள்
கருவின் மாரி கருமாரி

என்னவொரு சந்தோஷம் என்றால் வாரத்தின் முதல்நாளை  ஞாயிறைத் தனதாக வரித்துக் கொண்டிருக்கிறாள் அம்மை. பெண் சூரியனாக அம்மை ஜொலிக்கின்ற தலம் அது. அம்மைக்கு இரவல் ஒளி தேவையில்லை. அவள் சுயம்புவாக மிளிர்பவள். சுயமாக ஒளிர்பவள். இதன் சத்திய சாட்சியாகப் பொலிவோடு பூரிக்கும் தலம் திருவேற்காடு.
புனிதமான வேர்கள் நிறையும் வனம் காடு எனப்படுகிறது. வேர்க்காடு எனலாம். வேல்காடு எனலாம். அவரவர் புரிதலும் அறிதுலும் தரும் அடர்த்தி தானே வார்த்தைகளின் அர்த்தமாகிறது. பூமிக்குள் இருக்கும் வேர் அல்லது பூமிக்கு மேல் இருக்கும் வேல் இரண்டும் தான் நமது வாழ்க்கைப் பயணத்தின் பாதைகள்.
கோயிலுக்குள் முன்பாக இருக்கும் பாம்புப் பற்று – காலகாலமாக நமது முன்னோர்கள் கொண்டிருக்கும் வாழ்வியல் நம்பிக்கையால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மண்புற்று...அதில் ஊற்றப்படும் பால் என்பது எளிய நம்பிக்கையின் அடையாளம். தன்னம்பிக்கைப் பேச்சாளர் தனது வார்த்தை ஜாலத்தால் தைரிய வார்த்தைகளை அடுக்கி  அடுக்கிப் பேசி, இதைச் செய்தால் ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கைப் பால் ஊற்றுகிறார். மூன்றாம் மனிதர்களிடம் நம் மன உளைச்சலை, மன வருத்தங்களைக் கொட்டுவதற்குப் பதிலாக நம்மைப் படைத்தவளிடம், நம்மைப் பாலுாட்டிக் காத்தவளிடம், இன்னல்களில் இருந்து விடுவிப்பவளிடம் சொல்லலாம். அந்த மவுன உரையாடல் ரகசியமாக  மனசோடு மட்டுமே இருக்கும். அப்படி காலம் காலமாக நம் முன்னோர்கள் பேசிய மவுன உரையாடல்கள் தான் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுப் புற்றாக வளர்ந்திருக்கிறது. புற்றில் ஊற்றுகின்ற பால் போல மனம் துாய்மை பெறும். முட்டை உடைவது போல் துயர் உடையும். தெளிவும், புனிதமும் புத்துயிர் ஆரோக்கியமும் போல அவரவர் துன்பம் தீர ஒரு நம்பிக்கை தான் அம்மையின் புற்று.

பளிச்சிடும் மஞ்சள், குங்குமம், வெண்மையாக வழிந்தோடும் பால், திரிசூலத்தில் குத்தியிருக்கும் எலுமிச்சை என்பதான திருவேற்காடு கருமாரியம்மன் புற்று. ஒரு புதிரான விதிர்விதிர்ப்பை உண்டாக்கும். நாம் கடவுளோடு நேரடியாகப் பேசும் சுகானுபவம் அது. பிள்ளைக்கும், அம்மைக்கும் இடையே இடைத்தரகர் இல்லாத நெருக்கம் எத்தனை அலாதியானது. அந்தச் சூழலை உருவாக்கும் அம்மன் புற்று தரும் சுகந்தம். முதலில் மனசை வருடும். பின் முதுகுத்தண்டை வருடும். பின் கண்ணீரில் கரையும் கண்களை வருடும். நம் வாழ்வை வருடும். நம் விடியலை வருடும். நம் முற்பிறவி, இப்பிறவி, வரும் பிறவி எல்லாவற்றையும் வருடும்.
ஒரு காலத்தில் வேப்பங்காடு, வேப்ப வனம், வேம்பு தேசம் என்றிருந்த பகுதி தான் இது. காலப்போக்கில் வேம்புகள் அருகி, கட்டிடங்கள் பெருகி அடையாளம் மாறியது. ஆனால் கருமாரியம்மனின் அருளாட்சியும், கருணையும் நாளுக்கு நாள் பொலிகிறது. திருவேற்காடு அம்மனின் உடல் மறைத்து, தலை காட்டிக் கடைக்கண் பார்வையால் உலகாளும் தன்மை ஆச்சரியம், பேரதிசயம், அம்மையின் முகம், கண்ணுமே நமக்கு ஆறுதலும், ஆனந்தமும் தரக்கூடியவை. பாம்பென்றாமல் படையும் நடுங்கும். ஆனால் அம்மை தானே பாம்பையும் உருவாக்கினாள். பாம்பும் அம்மைக்கு விளையாட்டுப் பொம்மைதான். வேம்பின் கசப்பாக இருக்கின்ற வாழ்க்கையில் அம்மையின் கருணை வேப்பம்பழமாக இனிக்கிறது.
கருக்கொண்ட மேகமாக அருள் பொழிபவள். காலம் காலமாக வற்றாத தாய்மையும், பனிக்குட நீரும், தாய்ப்பாலும் ஜீவநதியாகத் தானே ஆகிப் பொலிபவள். அம்மை கலைகளின் ஆதி. ஆற்றலின் சோதி. ‘க’ என்று கலைமகளாகி நிற்கிறாள். ‘ரு’ என்று ருத்ரனின் பெண் வடிவமாக. பெண்பாலாக ருத்ரி ஆகி நிற்கிறாள். ‘மா’  என்று நாம் வாயார அழைக்கும் திருமகளாகி நிற்கிறாள். ‘ரி’ என்று உயிரின் இசை வடிவாகி, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் ஒழுங்கு வடிவாகி காற்றில் அசையும் இலையின் நாத வடிவாகி எல்லாமாகி நிற்கும் கருமாரி திருத்தலம் திரும்பிய திசையெங்கும் பூவாசம். அம்மைக்கான மலர் மாலைகளும், பூக்களும், அம்மையின் தோள் சேரத் தவமிருக்கின்றன.
அவரவர் தேவையும் அவரவர் நிலையும் கொண்டு அம்மையை வழிபடும் சுதந்திரம் சிலிர்ப்பைத் தருகிறது. திருவிளக்கு பூஜை செய்ய வேண்டுதலா? செய்யலாம். வேப்பஞ்சேலை அணிய வேண்டுதலா? செய்யலாம். தேர் இழுக்கவா? குங்கும அபிேஷகம் செய்யவா? உப்பு காணிக்கை செய்யவா? மாலை தரவா பூக்கள் தரவா சங்கு அபிேஷகமா கலச அபிேஷகமா அக்கினிச் சட்டி எடுக்க வேண்டுதலா அங்கப் பிரதட்சணம் வேண்டுதலா எதுவானாலும் அம்மை ஏற்றுக் கொள்ளும் தாய்மைக் குழைவோடு இருக்கிறாள்.
கருவறை அம்மனின் திருமுகம் காட்டும் சாந்தம், பொலிவு, நிறைவு, பேரழகு, காருண்யம்,  தீர்க்கும் இதையெல்லாம் கண்டுணர்தல் என்பது மொழிக்கும் கவிதைக்கும், எழுத்துக்கும் வசப்படாத மாயாஜாலம். அவள் தந்த மொழியே கூடப் போதாமல் தத்தளிக்கும் படி காட்சி தருகிறாள். எல்லோரும் கருவறையில் குடியிருந்து தான் பிறக்கிறோம். ஆனால் யாருமே பார்க்காதது தாயின் கருவறை.
தாயின் கருவறை எப்படி இருக்கும்? அந்தப் பனிக்குட நீரின் குளுமையும், நீர்மையும் எப்படி இருக்கும்?  திருவேற்காடு கருமாரியம்மன் கருவறை போல இருக்கும். கருவறை முன் நிற்கையில் நாசி தொடும் மஞ்சள் குங்கும வாசனை போலத்தான் தாயின் கருவறை மணக்குமா? உயிரைச் சிலிர்க்க வைக்கும் குளுமை போலத்தான் பனிக்குட நீரின் சிலிர்ப்பு இருக்குமா? மனசு அலை பாய்கிறது. பரிதவிக்கிறது. பரபரக்கிறது. உயிர்க்கிறது.
கண் சிமிட்டாமல் அந்தக் கருணை அரசியைப் பார்க்கும் போதெல்லாம் உயிரை நீவிச் செல்கிறது. ஒரு மாய மின்னல். அம்மையின் கோல விழிகளின் தீட்சண்யம் பார்க்கவே ஒரு நுாறு பிறப்பு வேண்டும். அம்மையின் ஞால இதழ்களின் புன்னகை பார்க்கவே இன்னுமொரு நுாறு பிறப்பு வேண்டும். அம்மை சிரசை அலங்கரிக்கும் நாகங்கள் பார்க்கவே இன்னுமொரு நுாறு பிறப்பு வேண்டும். இந்த ஒற்றைப் பிறப்பில், கண் சிமிட்டுவது போலக் கரைகிற இப்பிறப்பில் மனசை ஒருநிலைப்படுத்தி கண்ணகலத் தரிசித்து கண்ணுக்குள் அம்மையை நிலைநிறுத்தி, நெஞ்சுக்குள் அம்மையை நிலைநிறுத்தி, நம் பிறப்பில் நம்மை நிலைநிறுத்துவது என்பது பெரும் பிரயத்தனம்.
அம்மை திருமுகத்தின் பின்புறம் செக்கச் சேவேலென்ற செவ்வாடைக்காரியாக நெருப்பும், நாகமும் சூடிய வல்லமைக்காரியாக, சூலம், கத்தி, டமருகம், கபாலமோடு உக்கிரக்காரியாக ஆனந்த, அதிசய ரூபிணியாக அம்மையைப் பார்த்துக் கொண்டே பசி மறந்து, ருசி மறந்து, உறக்கம் மறந்து, வாழ்வியல் கிறக்கம் மறந்து, அம்மையின் காலடியில் புற்றாகச் சமைந்து விடலாமா என்கிற ஏக்கம் கொப்பளிக்கிறது.
பிரகாரம் சுற்றும் குடும்பங்கள் முகத்தில் நிறைவும் பொலிவும் அம்மை அருள்வது. தன்னை மறைத்தும், தானே நிறைத்தும், படைத்தும், காத்தும், அழித்தும் சகலகலாவல்லியான கருமாரி ஊஞ்சல் அம்மன், மரச்சிலை அம்மன் என வடிவாகி நிற்பது அவரவர் புரிதலுக்கேற்ப, மனசுக்கு ஏற்ப உள்ளத்தில் நிறைத்துக் கொள்ளவே.
நிறைமாத கர்ப்பிணியாக ஒரு பெண் மெதுவாக பிரகாரம் சுற்றினாள். கைகளில் வளைகாப்பு நிறைவு காட்டும் வண்ண வளையல்கள், முகத்தில் தாய்மையின் பொலிவும் தளதளப்பும்.
‘மெதுவா பார்த்து நட தாயே... வயித்துப் புள்ளைக்காரி...
‘வயித்தைச் சாய்ச்சுக்கிட்டு நடந்தே ஆகணுமா? அம்மா கோவிச்சுக்கவா போறா?
ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொன்னார்கள் அவளிடம். புன்னகையோடு மெல்லிய குரலில் சொன்னாள் அந்தப் பெண்.
‘‘அம்மன் கோவிச்சுக்க மாட்டா...ஆனா வயித்துல இருக்கிற குழந்தை கோவிச்சுக்குதே...’’
‘‘வயித்துக் குழந்தை கோபிக்குதா? உளறாதே’’
‘‘உங்களுக்குப் புரியாது... பதினைஞ்சு வருஷமா பண்ணாத சிகிச்சை இல்ல... ஒருநாள் எல்லா மருந்து மாத்திரையைத் துாக்கிப் போட்டு நீயே கதி இனிமே மருந்து பக்கமே போக மாட்டேன்னு...அம்மாவோட வேப்பிலைய முழுங்க ஆரம்பிச்சேன். அப்புறம்  கரு தங்கி வளைகாப்பும் முடிஞ்சாச்சு... கோயிலுக்கு வந்து அம்மாவைப் பார்த்தா வயித்துக்குள்ளே குழந்தை குதியாட்டம் போடறதும் வளையறதும் நெளியறதும் அம்மா திருவிளையாடல். அதனால கரு தந்த கருமாரியம்மன் கோயில்லயே காலைலேர்ந்து இருக்கேன். வயித்துக் குழந்தையும் சந்தோஷமா இருக்கு’’
கருவின் ஆதியே கருமாரி தானே... அவள் அருளிய வயிற்றுக் கருவுக்கும் தரிசனமும் தாய்மை அருளும் தருவது கருமாரிக்கு இயல்பு தானே...
அவள் நித்திய சூலி... நித்திய அம்மை... நித்தியத் தாய்மை. நித்தியத் தாய்ப்பால்காரி. நித்திய தாய்முலைக்காரி கருமாரி...        


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar