Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இடம் பெயர்ந்தான் இந்திரன்
 
பக்தி கதைகள்
இடம் பெயர்ந்தான் இந்திரன்

மனம் விரும்பிய அண்டத்திற்கு மறுவினாடியே சென்று விடக்கூடிய இந்திர ஞாலத்தேரில் ஏறி வலம் வருவதும், மாலை ஆனதும் தன் வீரமகேந்திர புரியை அடைவதுமாக இருந்தான் சூரபத்மன். ‘தன்னைத் தட்டிக் கேட்க யாருமில்லை’ என்ற தலைக்கனத்தில் அவனது செயல்கள் அளவே இல்லாமல் அத்துமீறிப் போயின. பக்கத்தில் மனைவி பதுமகோமளை இருந்தும் அவனது இதயம் இந்திராணியை அடைய விரும்பியது.
‘இழுத்து வாருங்கள் இந்திரனையும், அவன் மனைவியையும்’ எனக் கட்டளையிட்டான். ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த இந்திரனின் தலையில் இடி இறங்கியது. அடுத்த நொடியே இந்திரன் தன் மனைவியுடன் விண்ணுலகை விட்டு விலகினான். பூவுலகம் செல்வோம்! மாறுவேடம் புனைவோம்! அப்போது தான் மனைவியை சூரன் வசம் சிக்காமல் காக்க முடியும் என்றெண்ணிய இந்திரன் சீர்காழியை அடைந்தான். மூங்கில் மரமாக மாறி ஒளித்து வாழ்ந்தனர்.
காமதேனுவும், சி்ந்தாமணியும், கற்பக மரமும் விளங்கிய அமராவதியின் அதிபன் அனைத்தையும் இழந்து மாற்றுருவில் வாழ வேண்டிய நிலை வந்ததே என வருந்தினான். கவலை உள்ளத்தை அலைக்கழிக்கும் போது தானே பலருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனையே வரும்! சிவனை வழிபடுவோம் என்ற எண்ணம் இந்திரனுக்கு வந்தது.
‘‘நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடிச்
சங்கரா ஜய போற்றி போற்றி என்றும்
அனல் புனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும் மூலமான இருப்பிடமாய் சிவபிரானை உணர்ந்து வழிபடுவதற்கு உற்ற அடையாளமாய்க் குறியாய் விளங்கும் சிவலிங்கம் அமைத்தான்.
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
தினசரி மல்லிகை, முல்லை, செண்பகம் என மலர் வழிபாடு செய்ய திருநந்தவனம் அமைத்தான்.
‘புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு! நீருண்டு! என்னும் முறையில் சிவபெருமானை சீர்காழியில் மறைவிடத்தில் மனைவியுடன் இணைந்து வழிபடுவதும், பின் சூரனின் ஒற்றர்கள் பார்த்து விடப் போகிறார்களே என்ற அச்சத்தில் மூங்கில் வடிவில் ஒளித்து இருப்பதுமாக இந்திரனின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
அன்னையும், தந்தையும் எங்கே போனார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் இந்திரனின் புதல்வன் ஜயந்தன் மிகவும் சோகம் உற்றான். தேவர்களுக்கும் தம் தலைவன் நிலை என்னாயிற்று...ஒருவேளை சூரனின் சூழ்ச்சியாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணி வருந்தினர்.
ஜயந்தன் நாரத முனிவரைச் சந்தித்தான்.
‘ஜயந்தனே! வருந்தாதே! சூரனின் கை இப்போது ஓங்கி இருக்கிறது. அவ்வளவு தான். விரைவில் நிலைமை மாறும்.
வறியவர் செல்வர் ஆவர்! செல்வர் பின் வறியர் ஆவர்
சிறியவர் உயர்ந்தோர் ஆவர்! உயர்ந்துளோர் சிறியர் ஆவர்
முறைமுறை நிகழும் ஈது முன்னை ஊழ்வினையே கண்டாய்
எரிகதிர் வழங்கும் ஞாலத்து இயற்கையும் இனைய தன்றோ.
பின்னர் நாரதர் சீர்காழிக்குச் சென்று இந்திரனைச் சந்தித்தார். ‘என்ன இந்திரா! முகவாட்டத்தோடு காணப்படுகின்றாயே! தேவராஜனாகத் திகழும் நிலை மீண்டும் எப்போது வரும் என்று ஏங்குகின்றாயா?’’
‘‘அதெல்லாம் இல்லை முனிவரே! செல்வம், அரசபோகம் எல்லாம் நீர்க்குமிழிக்கு நிகர் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டு விட்டேன் அனுதினமும் நந்தவனப் பூக்களால் எம்பெருமானை வழிபாடு செய்து வந்தேன். ஆனால் இப்போது அதுவும் முடியாமல் போனதால் அல்லல்படுகின்றேன். வறட்சி மிகுதியால் வாடி விட்டது சோலை. வருண தேவனின் கருணையே இல்லாமல் நந்தவனம் கருகிக் கிடக்கிறது’’
‘‘வருந்தாதே. இந்திரா!’’ என்ற நாரதர் ‘முக்கியமான ஒரு செய்தி சொல்கிறேன். கேள். தவமுனிவர் அகத்தியர் தன் கமண்டலத்தில் காவிரி ஆற்றையே அடக்கி வைத்துள்ளார். தற்போது இப்பக்கமாக அவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நீ கனிந்து உருகி கணபதியை வேண்டிக் கொள்! விக்கினங்களைக் களையும் விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை இங்கே பாயச் செய்வார்.
சுரகுலாதின் துாய்மலர் நந்தனம்
பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்
கரக நீரைக் கவிழ்த்த மதகரி
சரணம் நாளும் தலைக்கணி ஆக்குவாம்!
இந்திரனுக்காக மனம் இரங்கிய விநாயகர் காக வடிவம் எடுத்து அகத்தியரின் கமண்டலத்தில் அமர்ந்தார். அகத்தியர் விரட்ட கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டு காகம் பறந்தது. காகத்தைக் கோல் கொண்டு தாக்கப் போன போது அகத்தியர் முன் காக்கை சிறுவன் போல் மாறியது. சிறுவன் தலையில் குட்ட முற்பட்டார் அகத்தியர். சிறுவன் கணபதியாகக் காட்சி தந்தான்.
‘‘விநாயகா! உன்னைப் போய் குட்டப் போனேனே! சிற்றறிவு கொண்டு எனக்கல்லவா குட்டு விழ வேண்டும்’’ என்று சொல்லி தனக்குத் தானே குட்டு போட்டுக் கொண்டார்! அகத்தியர் ஆரம்பித்து வைத்தது இன்று ஆனைமுகன் வழிபாடுகளில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனசபரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே
 என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
பொங்கிய காவிரியால் பூத்துக் குலுங்கியது இந்திரனின் சீர்காழி நந்தவனம். மலர்களாலேயே தினசரி மகாதேவனுக்கு
அபிேஷகம் நிகழ்த்தினர் இந்திரனும் இந்திராணியும்.
‘எங்கே சென்றார் நம் தலைவர் இந்திரன்?’ எனத் தேடிய அமரர்களுக்கு எப்படியோ சீர்காழியில் சிவபூஜை நிகழ்த்துகிறார் எனத் தெரிந்து விட்டது. தேவேந்திரனைப் பார்த்த இமையவர்கள் ‘நாங்கள் மீன்களைச் சுமந்தும். அரக்கன் இடும் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு கஷ்டப்படும் போது தாங்கள் மட்டும் இங்கு சவுகரியமாய் இருக்கிறீர்களே! இது சரிதானா? என்றனர்.
இந்திராணியை அபகரிக்க சூரன் முயல்வதால் இங்கே மாற்றுருவில் மூங்கில் வடிவில் உள்ளோம். சிவபூஜை நிகழ்த்துவதற்கு மட்டும் வெளியில் வருவோம்.
பல யுகங்களாக அடிமைகளாக இப்படி வாழ்வதில் அர்த்தம் இல்லை. நாம் அனைவரும் சென்று கயிலாயத்தில் முறையிடுவோம் வாருங்கள். அப்போது இந்திராணி வந்து, ‘நாயகரே! ஆபத்தான சூழ்நிலையில் தனியாக நான் எப்படி இருப்பேன்.
சூரன் தங்கை அஜமுகி தன் கூட்டாளிகளுடன் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறாள் என்னும் செய்தியும் தாங்கள் அறிந்தது தானே’’ எனக் கேட்டாள்.
‘‘அயிராணியே! தகுந்த ஏற்பாடு செய்யாமல் உன்னைத் தனியே விடுப்பேனா? நமக்குக் காவல் தெய்வமாக ஐயனார் இருக்கிறார். அவரைத் தியானித்து இங்கே எழுந்தருளச் செய்கின்றேன். சிவபெருமானுக்கும், நாராயணருக்கும் பிறந்த புதல்வரான ஐயப்பன் உனக்கு உற்ற துணையாக இங்கு இருப்பார் வருந்தாதே!  இந்திரன் சொன்னதைக் கேட்ட அயிராணி அமைதி அடைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar