Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காளியாக மாறிய காரிகை
 
பக்தி கதைகள்
காளியாக மாறிய காரிகை

முப்பது வயதான ஒரு பெண்ணும் அறுபது வயதான ஒருவரும் பரிதாபமான முகத்தோடு என் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள்.
‘‘ராமமூர்த்திதான் எங்களை இங்க அனுப்பி வச்சாரு. நீங்க வெளியே போறீங்கன்னா அப்புறமா வர்றோம்.’’
‘‘உள்ளே வாங்க. கோயிலுக்குத்தான் கிளம்பிக்கிட்டிருந்தேன். பரவாயில்ல நாளைக்குப் போய்க்கிறேன்’’
‘‘நாங்க நாளைக்குக் காலையில வரோம்.’’ என்றார் முதியவர்.
அந்தப் பெண் பளிச்சென்று சொன்னாள்:
‘‘சார், எங்களுக்காக ஒரு பத்து நிமிஷம் தாமதமாக் கோயிலுக்குக் கெளம்புங்க. அதுக்குள்ள பிரச்னையை சுருக்கமாச் சொல்லிடறோம். நாங்க பக்கத்துல போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி வர்றோம். யாரு கண்டா...அதுக்குள்ள பச்சைப்புடவைக்காரி உங்ககிட்ட ஏதாவது சொல்லலாம் இல்லையா?’’
அவள் பெயர் ஷாலினி. கூட வந்தது அவளது அப்பா.  ஷாலினி அமெரிக்காவில் கணவனுடன் வசிக்கிறாள். மணமாகி ஏழாண்டு ஆகி விட்டது. குழந்தையில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோரைக் காண இந்தியா வந்திருக்கிறாள். நான்கு நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஷாலினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் இந்தியப் பெண்ணிடமிருந்து போன் வந்தது.
‘‘உன் கணவன் யாரோ ஒரு வெள்ளைக்காரியுடன் வீட்டில் கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறான்.’’
பயந்து போன ஷாலினி கணவனின் தந்தையிடம் ஓடினாள். அவர் விசாரிக்கிறேன் பேர்வழி என்று அங்கும் இங்கும் அலைந்தது போல் போக்குக் காட்டியிருக்கிறார். பின் ஷாலினியின் பாஸ்போர்ட்டை ஏதோ சாக்கு சொல்லி வாங்கிக் கொண்டு அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்.
ஷாலினியின் பாஸ்போர்ட்டிற்குள்தான் அவளது அமெரிக்க விசாவும் இருந்தது. இதனால் ஷாலினியால் அமெரிக்காவும் போகமுடியாது, இந்தியாவிலும் வாழ முடியாது என்ற நிலை.
கோயிலில் அம்மன் சன்னதியில் நின்றபோதுகூட மனதின் ஓரத்தில் ஷாலினியின் கவலை தோய்ந்த முகம்தான் தெரிந்தது.
யாரோ என் முதுகில் பலமாக அடித்தார்கள். திரும்பிப் பார்த்தேன். தலைவிரிகோலமாக ஒரு இளம் பெண்.  
‘‘நான் சாதுவா இருந்தா என்னை ஏமாளின்னு நினைச்சிட்டியாடா? நான்தாண்டா பத்ரகாளி. என்கிட்ட விளையாடினாத் தொலைச்சிருவேண்டா.  அடையாளம் தெரியாம அழிச்சிருவேண்டா.’’
நான் நடுங்கினேன்.
‘‘மன்னிச்சிருங்கய்யா, என் மனைவிக்கு சாமி வந்திருச்சி. அப்போ என்ன பேசறான்னு அவளுக்கே தெரியாது, நீங்க போங்கய்யா.’’ பெண்ணின் கணவர் விளக்கினார்..
அவளைப் பார்த்தபடியே மெதுவாக  நகர்ந்தேன். வெளிப்பிரகாரத்தில் ஒரு பெண் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து போக முயற்சித்தேன்.
‘‘ஷாலினியின் பிரச்னைக்குப் பிரமாதமான தீர்வு சொல்லியிருக்கிறேன். நன்றிகூடச் சொல்லாமல் போகிறாயே!’’
அவளை விழுந்து வணங்கினேன்.
‘‘என்ன தீர்வு, தாயே?’’
‘‘என் சன்னதியில் ஒருத்தி உன்னை முதுகில் அறைந்தாள் அல்லவா? அதுதான் தீர்வு.’’
‘‘புரியவில்லையே!’’
‘‘நான் எப்போதும் கிளியைக் கையில் ஏந்தி மென்மையாகத் தோன்றுவேன். ஆனால் அநியாயம் நடந்தால் மாகாளியாகி விடுவேன். அநியாயக்காரர்களை அழித்து விடுவேன்..’’
‘‘அதைப் போல்…’’
‘‘ஷாலினி காளியின் உக்கிரத்துடன் போராடட்டும். நிச்சயம் வெற்றி பெறுவாள்.’’
நான் வீட்டிற்குத் திரும்பிய போது ஷாலினியும்  அவள் தந்தையும் வாசலில் காத்திருந்தனர்.
‘‘என்ன பரிகாரம் செய்யலாம், சார்? விரதம் இருக்கட்டுமா? மண் சோறு சாப்பிடட்டுமா? அங்கப்பிரதட்சணம் செய்யட்டுமா?’’
திடீரென எனக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு.
‘‘நீ படிச்சவதானே! அறிவில்லை உனக்கு? உன் புருஷன் எவளோடையோ கூத்தடிச்சிக்கிட்டிருக்கான்,  நீ பால் குடம் எடுக்கவா, பாவக்காய் சாப்பிடவான்னு பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்க?’’
ஷாலினி அதிர்ந்தாள்.
‘‘உனக்கு இங்க என்ன வேலை? அமெரிக்கா போ. அந்தக் கேடு கேட்டவனின் சட்டையப் பிடிச்சி உலுக்கு. அவனோட வாழ வேண்டாம். ஆனா உனக்குத் துரோகம் செஞ்சவன நீ வாழவிடக் கூடாது. அவன விவாகரத்து செய். அவன் சொத்தையே ஜீவனாம்சமா கேளு. அமெரிக்க சட்டத்துல அதுக்கு இடம் இருக்கு.  அத வச்சி அங்கேயே உன் புது வாழ்க்கையைத் தொடங்கு.  போராட வேண்டிய  நேரம் இது. சிம்மவாஹினியான துர்கா பரமேஸ்வரி உனக்கு சக்தியைத் தருவா.’’
ஷாலினின் உடல் சிலிர்த்தது.
‘‘ஏன் தம்பி, ஷாலினி பாஸ்போர்ட், விசா இல்லாம எப்படி அமெரிக்கா...’’
ஷாலினி பொங்கினாள்.
‘‘அத எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும்ப்பா. நீங்க வாங்க. அவன முழுசா சம்ஹாரம் பண்ணாம நான் ஓயமாட்டேன். வரேன், சார்.’’
பத்து நிமிடம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்பினேன். பயமாக இருந்தது. இந்தப் பெண்ணால் தனியாகத் தன் கணவனை எதிர்த்துப் போராட முடியுமா?  அதுவும் அந்நிய நாட்டில்? உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ?
மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினேன்.
‘‘சாமி பழம் வாங்கிட்டுப் போங்க.’’  தெருவில் பழ வண்டியோடு நின்றவள் என்னை அழைத்தாள்.
திரும்பிப் பார்த்தேன்.
‘‘ஷாலினியை வீறுகொண்டு எழச் செய்து விட்டாயே!’’
‘‘தாயே நீங்களா? பயமாக இருக்கிறது. ஷாலினியால் போராட.. ’’
‘‘அவள் என் கையில் இருக்கும் சூலாயுதமடா. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று காட்டுகிறேன் பார்.’’
ஷாலினி நேராகக் காவல் நிலையம் சென்றாள். தன் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தர மறுக்கிறார் என்று மாமனார் மீது  புகார் கொடுத்தாள். பின் மற்றொரு பிரதிக்கு விண்ணப்பித்தாள். அது வரப் பல மாதங்களாகும் என்றனர். ஒரு தன்னார்வ அமைப்பு மூலம் மத்திய அமைச்சரிடம் பேசினாள் ஷாலினி. இரண்டே நாளில் பாஸ்போர்ட் பிரதி கைக்கு வந்தது.
அமைச்சகத்தின் பரிந்துரையுடன் அமெரிக்கத் துாதரக அதிகாரியைப் பார்த்தாள் ஷாலினி. அவர் மனம் இரங்கினார். ஷாலினிக்கு ஏற்கனவே அமெரிக்க விசா இருப்பதை உறுதி செய்து கொண்டு அந்த விசாவின் பிரதியை வழங்கினார் அதிகாரி.
இரண்டே வாரத்தில் தனியாக அமெரிக்கா சென்றாள், பக்கத்துவீட்டுக்காரி துணையுடன் ஒரு முரட்டுப் பெண் வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டு விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாள். வழக்கு நிலுவையில் இருக்கும்வரை அவளுக்கு மாதச் செலவிற்கு அவள் கணவன் சில ஆயிரம் டாலர்கள் தர வேண்டுமென நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது.
ஓராண்டு நடந்தது விவாகரத்து வழக்கு. கணவன் பெயரில் இருந்த பெரிய வீடு, அவனது கார், வங்கியிலிருந்த தொகையில் பாதி எல்லாம் ஷாலினிக்குக் கிடைத்தது.
ஷாலினி மறுமணம் செய்ய வில்லை. வாழ்வில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் எனத் துடித்தாள். வீட்டையே குழந்தைகள் காப்பகமாக மாற்றினாள்.  லாப நோக்கமின்றி செயல்பட்டாள். பலரும் தங்கள் குழந்தைகளை ஷாலினியின் காப்பகத்தில் விட்டனர். தொழில் பெருகியது. விரைவில் ஒரு ஏக்கர் வாங்கி புதிய காப்பகத்தை நிர்மாணித்தாள். ஒரு குழந்தையைக்கூடப் பெறாத ஷாலினி பல நுாறு குழந்தைகளைத் தாயன்புடன் பார்த்துக் கொண்டாள்.
ஐந்து ஆண்டுகள் கழித்து...
ஷாலினியின் நிறுவனத்தின் ஆண்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அமெரிக்காவின் பிரபலங்கள் பலர் ஷாலினியைப் பாராட்டிப் பேசினர். குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கைதட்டிக் கொண்டேயிருந்தனர். ஷாலினி இப்போது அடையாளம் தெரியாமல் மாறியிருந்தாள். பேச்சில், நடையில், தோற்றத்தில் பெண்மையின் கம்பீரம் மிளிர்ந்தது.
‘‘அவள் கணவன் என்ன ஆனான் தாயே?’’
‘‘அவன் கையிலிருந்த பணம் போனவுடன் அந்த வெள்ளைக்காரி அவனை விட்டுப் போய்விட்டாள். குடிக்க ஆரம்பித்தான். வேலை போனது. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான்.’’
அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 ‘‘ஷாலினிக்கு வீரத்தைப் புகட்டிய உனக்கு நல்லோரைக் காக்கவும்,  தீயோரை அழிக்கவும் சக்தி தரப் போகிறேன்.’’
 ‘‘அதற்குப் பதிலாக வேறு வரம் கேட்கலாமா...
‘‘தாராளமாக.’’
‘‘ஷாலினியின் கணவன் பெண்ணாசையில் மயங்கித் தவறிழைத்து விட்டான். அவன் மனதிலும் அன்பு நிறையட்டும். திருந்தி வாழ அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள், தாயே!’’
அன்னை கலகலவென்று சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar