Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அக்னிப்பரீட்சை
 
பக்தி கதைகள்
அக்னிப்பரீட்சை


அது கனவா நனவா? அலுத்துப் போயிருந்த என் மனம் ஆடிய நாடகமா? கண்கட்டி வித்தையா? காட்சிப் பிழையா? எதுவும் புரியவில்லை. ஆனால் வந்த செய்தி தெள்ளத் தெளிவாக இருந்தது.
 ‘உனக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. பேரும் புகழும் உன்னைத் தேடி வரப்போகிறது. விழிப்புடன் இரு.’
காலை அலுவலக வேலைகளில் மூழ்கியவுடன் அதை மறந்தே போனேன். நண்பகல் ஒரு புதிய அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
‘‘உங்கள் வாழ்க்கையே அடியோடு மாறப்போகிறது. பச்சைப்புடவைக்காரியின் ஆணை. நாளை மாலை ஆறு மணியளவில் மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் சந்திப்போம்.’’
நான் பதில் சொல்வதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அதன்பின் எனக்கு வேலை ஓடவில்லை. முன்னால் இருந்த மீனாட்சியின் படத்தையே வெறித்துப்  பார்த்தபடி இருந்தேன்.
பொற்றாமரைக் குளத்தின் படிகளில் இறங்கியபோது மணி ஆறு. காவி உடை அணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் என்னைப் பார்த்துக் கையாட்டினார். என் கையில் ஒரு தாளைத் திணித்தார். படித்தேன்.
‘‘அன்னை  பராசக்தியின் பெயரில் நடக்கும் பெரிய ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். உங்களை எங்களின் தலைவராக நியமிக்கும்படிப் பராசக்தியே உத்தரவிட்டிருக்கிறாள்.  எங்கள் இயக்கம் உலகம் முழுவதும்  பரவியுள்ளது. ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு எங்களைப் பற்றித் தெரியாது.  நீங்கள் எங்கள் தலைவரானால் ராஜ வாழ்க்கை வாழலாம். தனி விமானத்தில் பறக்கலாம். எங்களிடம் சேர்வதால் உங்களைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம். உங்கள் பேச்சைக் கேட்க, உங்கள் எழுத்தைப் படிக்க எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு நிபந்தனை. இப்போது செய்வதைப் போல்  பச்சைப்புடவைக்காரியைப் பற்றி எல்லா இடங்களிலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்க முடியாது. எங்கள் இயக்கம் மூலமாகத்தான் எழுத வேண்டும், பேசவேண்டும்.
பதிலுக்குத் தலைவர் பதவி, ராஜ போகம், உலகப் புகழ், ஆயிரம் ஆயிரம் அடியவர்கள். என்ன சொல்கிறீர்கள்?’’
அதிர்ச்சியில் சில நிமிடங்கள் பேச முடியவில்லை. பின் மெல்லிய குரலில் சொன்னேன்.
‘‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். மீனாட்சி சன்னதியில் திரைபோடும் நேரம் இது. அன்னையைப் பார்த்துவிட்டு வருகிறேன்.’’  
இது அவளே கொடுக்கும் பணி. கொத்தடிமையான எனக்கு அதை மறுக்கும் அதிகாரம் இல்லை. மனதின் மூலையில் சிறிய நெருடலோடு மீனாட்சியின்முன் நின்றிருந்தேன்.
அர்ச்சகர் காட்டிய தீபத்தின் ஒளியில் ஜொலித்தது அன்னையின் அழகு முகம். அந்த ஜொலிப்பில் பல விஷயங்கள் புரிந்தன.  எனக்கு வழிகாட்டுதல் கிடைத்துவிட்டது.
பொற்றாமரைக் குளத்திற்கு ஓடினேன். காவியுடைக்காரர் அங்கேயேதான் இருந்தார்.
‘‘என்னை மன்னித்துவிடுங்கள்.  என்னால் உங்கள் இயக்கத்தில் சேர முடியாது.’’
‘‘இவ்வளவு பெரிய பதவியை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?’’
‘‘அதைவிடப் பெரிய பதவியில் இருப்பதால். இந்தப் பதவியால் அந்தப் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால்.’’
‘‘அப்படி என்ன பதவி?’’
‘‘பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை என்ற பதவி.’’
‘‘தலைவர் பதவிக்காக எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எப்படிப் போட்டி போடுகிறார்கள் தெரியுமா?’’
‘‘அவர்களில் தகுதியுள்ள ஒருவரைத் தலைவராக்குங்களேன்.’’
‘‘அப்படித்தான் முதலில் தீர்மானித்தோம். ஆனால் பச்சைப்புடவைக்காரி எங்களில் ஒருவரின் கனவில் வந்து உங்களைத் தலைவராக்கச் சொல்லியிருக்கிறாள். நீங்கள் மறுத்தால் அவளது கட்டளைக்குப் பணிய மறுத்த பாவத்திற்கு ஆளாவீர்கள்.’’
நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
‘‘உங்களிடம் உள்ள ஒளியைக் கொண்டு ஆன்மிகத்தில் இருண்டுபோயிருக்கும் இந்த உலகிற்கு நாங்கள் ஒளியூட்டலாம் என நினைக்கிறோம். இதில் என்ன தவறு?’’
 ‘‘ஒளி என்னுடையது என்றால் கொடுத்துவிடலாம். வேறு எங்கிருந்தோ வரும் ஒளியை, எனக்குக் கொஞ்சம்கூடச் சொந்தமில்லாத ஒளியை நான் எப்படிக் கொடுக்க முடியும்?’’
‘‘புரியவில்லையே!’’
எப்போதோ படித்த பாயலோ கொயல்ஹோ என்ற எழுத்தாளரின் வரிகள் மனதில் நிழலாடின.
‘‘நான் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருக்கிறேன். என் அன்னை எனக்கு வழிகாட்ட  வழியில் பல ஒளிவிளக்குகளை வைத்திருக்கிறாள். அந்த விளக்குகள் இருக்கும் இடம் தெரியாமல் என் பின்னால் வரும் பலரும் தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விளக்கு இங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதே என் பணி.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘அந்த விளக்குகளை எல்லாம் அள்ளிக்கொண்டுவந்து எங்கள் இயக்கத்தில் சேர்ந்துவிடுங்கள். நாம் அந்த விளக்குகளை வழிப்போக்கர்களுக்கு விற்று சம்பாதிக்கலாம்’ என்று ஆசை காட்டுகிறீர்கள். அதற்காக எனக்குத் தலைவர் பதவி, கோடி கோடியாகப் பணம், புகழ் எல்லாம் தரத் தயாராக இருக்கிறீர்கள். அன்னை என் வழியில் வைத்த விளக்குகளை நான் சொந்தம் கொண்டாடுவது பாவம் அல்லவா? அன்னையின் அன்பை வியாபாரம் ஆக்குவது குற்றமல்லவா?’’
‘‘அதற்காக எந்தத் தகுதியும் இல்லாத பாவிகளுக்குப் பச்சைப்புடவைக்காரியின் அன்பை அள்ளி அள்ளித் தரப் போகிறீர்களா? தகுதியில்லாதவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதும் பாவம் என்று உங்களுக்குத் தெரியாதா?’’
‘‘நான் தருவது ஞானத்தை அல்ல. அன்பை. தகுதி பார்த்து அன்பு வழங்கினால் அது அன்பாகாது. நீதியாகிவிடும். தகுதியில்லாதவர்கள் கழுத்தில்தான் அன்பு என்னும் வைர அட்டிகை இன்னும் அதிகமாக ஜொலிக்கிறது. நம் அன்னையும் தகுதி பார்த்து அன்பு காட்ட ஆரம்பித்தால் நாமெல்லாம் எப்போதோ அழிந்துபோயிருப்போம்.’’
‘‘மீனாட்சியின் கட்டளையை மீறினால் அவள் சாபத்திற்கு ஆளாவீர்கள்.’’
‘‘அன்பின் வழியில் நடக்க முயன்றதற்காக அன்பே வடிவானவள் எனக்குச் சாபம் தந்தால் அது எனக்கு வரமே’’
‘‘உங்கள் எழுத்துத் திறமையும் பேச்சுத் திறமையும் உங்களை விட்டுப் போய்விடும்.’’
‘‘போகட்டுமே! இந்தத் திறமை எல்லாம்  அவள்  எனக்கு இரவல் கொடுத்தது. உரியவள் கேட்டால் கொடுக்கத்தானே வேண்டும்? அவளைப் பற்றி என்னால் எழுதவோ பேசவோ  முடியாவிட்டாலும் நான் அவள் கொத்தடிமை என்ற நிலை மாறாதே! அது போதும் எனக்கு.’’
‘‘பச்சைப்புடவைக்காரியின் சாபம் உங்கள் மீது வரக்கடவதாக.’’ என்று என்னைப் பார்த்து உறுமிவிட்டுச் சென்றது காவியுடை.
அன்னையின் முகத்தை மீண்டும் பார்க்கவேண்டும் என மனம் ஏங்கியது. சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்க ஓடினேன்.
‘‘திரை போட்டுவிட்டார்களே! அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் பரவாயில்லையா?’’ – என் முன்னால் நிற்பவளை இனம் கண்டு கொண்டேன்.
‘‘அவளைப் பார்க்க ஆயிரம் யுகம் வேண்டுமானாலும் காத்துக்கிடக்கிறேன். அதை விட இந்தக் கேடு கெட்ட கொத்தடிமைக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்? பேச்சை வளர்த்தாமல் சீட்டைக் கொடுங்கள்.’’
‘‘யாரோ பதவி கொடுத்தார்கள். நீ மறுத்தாய். அதற்கு நான் என்னப்பா செய்வேன்?’’
‘‘என்னை அழித்துவிடுங்கள், தாயே! ஆனால் இப்படி அக்னிப் பரீட்சை வைக்காதீர்கள். ஒரு பலவீனமான தருணத்தில் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தால்... என் குலை நடுங்குகிறது, தாயே.’’
‘‘உன் மனதில் உலகப்புகழ்பெற வேண்டும், செல்வத்தின் சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தால் இதுவே சரியான தருணம். போய் அனுபவித்துவிட்டு வா. நீ வரும்வரை காத்திருக்கிறேன்.’’
‘‘வேண்டாம், தாயே! அந்தப் பதவி என்னைக் கெடுத்துவிடும். அவர்கள் ஆன்மிகத்தை அதிக விலைக்கு விற்கப் பார்க்கிறார்கள். நானோ பாவிகளுக்கும் உங்கள் அன்பை வாரி வழங்க நினைக்கிறேன். அந்த இயக்கம் எனக்கு ஒத்து வராது.’’
என் முகம் வாடியிருந்ததை அன்னை பார்த்துவிட்டாள்.
‘‘தேர்வில் தோற்றவர்கள் முகம் வாடினால் நியாயம் இருக்கிறது. அமோகமாக வெற்றி பெற்றவனின் முகத்தில் வாட்டம் ஏன்?’’
‘‘தாயே’’ என்று கதறியபடி அவள் கால்களில் விழுந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar