Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வீரவாகு துாது
 
பக்தி கதைகள்
வீரவாகு துாது

தேவர்களின் துயர் போக்கவும், அசுரர்களின் உயிர் நீக்கவும் அவதரித்த ஆறுமுகப் பெருமான் சூரபத்மனின் கொடுங்கோலாட்சிக்கு எடுத்த எடுப்பிலேயே முடிவு கட்டியிருக்கலாம். வீரப்போர் புரிந்து வேலாயுதத்தால் வினாடி நேரத்தில் பகைவர்களை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் கருணைக்குரிய தெய்வமான கந்தப்பெருமான் சூழ்ச்சியான வன்னெஞ்சம் கொண்ட சூரபத்மனுக்கும் திருந்துவதற்கு வாய்ப்பளித்தார். துாதுவன் ஒருவனை வீரமகேந்திரபுரத்துக்கு அனுப்பி சமாதானமா, சமரா என்று அறிந்தபின் யுத்தம் புரிவதே அறநெறி பாற்பட்ட அணுகுமுறை என்றார்.
தேவேந்திரன் சொன்னான்,‘’நாங்கள் அனைவரும் சூரபத்மனுக்குக் கைகட்டி சேவகம் செய்கிறோம். எனவே தங்களின் தம்பியான வீரவாகு தேவரையே துாதுவனாக அனுப்புங்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை துாது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று. பகைவனின் ஊருக்குள் அஞ்சாமல் சென்று, துாது உரைத்து மீண்டு வரும் ஆற்றல் உங்கள் தம்பிக்கே உண்டு. இந்திரனின் யோசனை முருகனுக்கு உகந்ததாக அமையவே, ‘‘வீரவாகு! வீரமகேந்திர புரத்துக்குச் சென்று சூரனை அணுகி தேவர்களையும், ஜயந்தனையும் உடனே விடுவிக்கச் சொல். அதற்கு அவன் இசையாவிட்டால் நாளையே போர் புரிந்து அசுரர் குலத்தை அடியோடு வீழ்த்த ஆறுமுகன் வருவார்’ என்று சொல்.   
‘அவ்வண்ணமே செய்கின்றேன்’ என்று புறப்பட்டார் வீரவாகு. அப்போது ஜயந்தனைப் பலகாலம் பார்க்காமல் பிள்ளைப்பாசத்தால்  பெரிதும் வருந்திய இந்திரன், வீரவாகுவைத் தனியே அழைத்தான்.
‘‘வீரவாகு! கந்தப்பெருமான் கட்டளையை நிறைவேற்றுவதற்கு முன் எனக்காக ஒரு காரியம் செய். வீரமகேந்திர புரத்தில் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளான் என் புதல்வன் ஜயந்தன் என்பதை அறிந்து அவனுக்கு ஆறுதல் மொழிகளை என் சார்பாகக் கூறு. பெற்றோரை விரைவில் சந்தித்து சந்தோஷம் பெறுவாய் என்னும் நல்ல செய்தியைச் சொல்லிவிட்டு பிறகு உன் துாதுவன் வேலையைச் செய். அலுவல் காரணமாக அயல்நாடு செல்கின்ற நண்பரிடம் ஊறுகாய் பாட்டிலை ஒப்படைத்து விட்டு, உன் வேலையைக் கவனி’ என்று இப்போது நம்மவர்கள் நடந்து கொள்வதைப் போலத்தான் இந்திரன் நடவடிக்கையும் அன்றிருந்தது.
தென்கடலின் நடுவே உள்ள வீரமகேந்திரபுரிக்குச் செல்வதற்குப் புறப்பட்ட வீரவாகு, முருகனருளைத் தியானித்தவாறே பேருருவம் எடுத்தார்.
கந்தமாதன மலைச்சிகரத்தில் ஏறினார். மாபெரும் உருவெடுத்து மலை மீதும் நின்று தன் விழிகளை அங்குமிங்கும் சுழல விட்டார். அவருடைய பாதங்கள் பாதாள லோகத்திலும், தலை ஆகாய முகட்டிலும் இருந்தது. அப்போது அவரின் கண்களுக்கு சூரபத்மன் அரண்மனையும், வீரமகேந்திரபுரியின் மாளிகைகளும், சாலைகளும் தெரிந்தன. கைகளை நீட்டி இங்கிருந்தபடியே அனைவரையும் அழித்து விடலாம் என ஆவேசம் கொண்டார். அடுத்த வினாடியே துாது செல்லவே நம்மை வேலவர் விடுத்துள்ளார் என்ற எண்ணம் எழுந்தது. திருவருளைச் சிந்தித்தார்.
‘‘ஆவதோர் காலை எந்தை ஆறிரு தடந்தோள் வாழ்க!
மூவிரு வதனம் வாழ்க! முழுதருள் விழிகள் வாழ்க!
துாவுடை நெடுவேல் வாழ்க! தொல்படை பிறவும் வாழ்க!
தேவர்கள் தேவன் சேயோன் திருவடி வாழ்க என்றான்!
கந்தப்பெருமான் வேலாயுதம் போல கடல் மீது தாவிச் சென்று மகேந்திரபுரியை அடைந்தார். கட்டுக்காவல் நிறைந்த வீரமகேந்திரபுரிக்குள் எட்டிப் பார்த்து விட முடியுமா? எத்தனையோ தடைகள். காவல் புரிந்த வீரசிங்கன், அதிவீரன், கயமுகன் என பலரோடு சண்டை செய்து வீழ்த்திய பிறகு நகருக்குள் புகுந்தார். யாரும் பார்த்து விடாதபடி பேருருவத்தை விடுத்து அணுவென சிற்றுருவம் கொண்டு இந்திரன் மகன் ஜயந்தனை தேட எண்ணினார்.  ஜயந்தனை எங்கே சிறை வைத்துள்ளனர்?  சூரபத்மன் அரசவை எங்கே உள்ளது? என ஆராய்ந்தார். வீரமகேந்திர புரியின் மாட மாளிகைகளையும், பூஞ்சோலைகளையும், அசுரர்களின் செல்வ செழிப்பினையும் கண்டு வீரவாகு ஆச்சரியம் அடைந்தார்.
‘அசுர சாதகம்’ என்று சொல்வார்களே! அப்படிப்பட்ட முறையில் தங்களையே ஆகுதி ஆக்கிக் கொண்டு சூரன் புரிந்த யாகத்தால் சிவனார் தந்த வரம் தானே... இப்படிப்பட்ட வாழ்வை அரக்கர்களுக்கு அளித்துள்ளது என எண்ணி வியந்தார். சூரனின் நகரில் முதியவர்களையும், நோய் உற்றவர்களையும், வறுமையால் வாடுகின்றவர்களையும் காண முடியவில்லை. அசுர மாதர்கள் மலர் மெத்தைகளில் அமர்ந்தபடி கள் குடித்துக் களித்தனர்.
தேவர்களுக்கு நேர்த்ந தீவினைதான் என்னே? வருணன் அரிசியைக் களைந்து கொடுக்க, அக்கினி தேவன் சமைக்க, அந்த உணவை தேவமகளிர் பரிமாற அசுரர்கள் வயிறு நிறைய உண்பதைக் கண்டார் வீரவாகு. சூரியனின் தேரையே நிறுத்தி எங்கள் புதல்வர்களை சற்று ஏற்றிச் செல் என அசுர மகளிர் ஆணையிடுவதையும் பார்த்தார். ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள அற்புதப் பொருள்களை எல்லாம் வீரமகேந்திர புரத்தில் கொண்டு குவித்திருந்தான் சூரபத்மன். அவற்றை எல்லாம் கண்டு அதிசயித்த வீரவாகுதேவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. சூரபத்மனின் மகன் பானுகோபன் அமராவதியை அனலில் கொளுத்தினான் இந்திரலோகம் எரியுண்டது என்பதெல்லாம் பொய். இந்த மகேந்திர புரியின் மாண்பினைக் கண்டு இதற்கு இணையாக என் வனப்பு இல்லையே என நினைத்து தன்னைத் தானே அழித்துக் கொண்டு விட்டது அமராவதி நகரம் என்பதே உண்மை.  வீரவாகுவுக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. அண்ட அண்டங்களின் அதிசயங்கள் அனைத்தும் சூரன் நகரில் இருந்தாலும் அறம், உண்மை, அருள் என்ற மூன்றும் அங்கு அறவே இல்லை என்பது.  
‘‘உரை செய் ஆயிரத்து எட்டெனும் அண்டத்தின் உளவாம்.
கரையில் சீர் எலாம் தொகுத்தனன்; ஈண்டு அவை கண்டாம்
தருமம் மெய் அளி கண்டிலம்’’
சூரன், பானுகோபன் அரண்மனையைப் பார்த்த வீரவாகு, இந்திரன் மகன் ஜயந்தன் எங்கே உள்ளான் எனத் தேடினார். கற்பக மரத்தின் நிழலில், செல்வச் செழிப்பில், ஐராவதம், காமதேனு அங்கிருக்க, தாய் தந்தையான அயிராணி, இந்திரனின் அரவணைப்பில் இருந்த ஜயந்தன் வீரமகேந்திரபுரியின் வெஞ்சிறையில் வேதனையில் உழன்று துடித்தான். மயங்கிய நிலையில் உறங்கினான்.
‘கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம்’ ஆறுமுகம் அல்லவா!
உறங்கும் ஜயந்தனின் கனவில் ஒரு ஒளி வட்டம்!
ஆறுமுகமும், அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நுாலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடர்ஒளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க
ஜயந்தன் கனவில் ஆறுதல் கூற ஆறுமுகன் தோன்றினார். சரவணப் பொய்கையில் கந்தப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததைப் பல காலமாகச் சிறைப்பட்டுள்ள ஜயந்தன் ஏதும் அறியாததால், ‘‘பிரம்மாவுக்கு நான்கு முகங்கள் தானே! நாராயணர் நீலநிறம் கொண்டவர் தானே! ஆறுமுகங்களுடன் சிவந்த நிறத்தில் தோன்றும் இவர் யார்?’’ என அறிய முடியாமல் கலங்கினான் ஜயந்தன்.
காட்சியும் தந்து, தான் யார் என்பதையும் அறிவித்து, ‘அசுரர்களின் கொட்டம் விரைவில் அடங்கப் போகிறது. இந்திரபுரியில் மீண்டும் அனைவரும் குடியேறப் போகிறீர்கள்! வருந்த வேண்டாம் ஜயந்தா!’ என்றார் வடிவேலன். கனவு கலைந்ததும் கண் விழித்த ஜயந்தன் முன் வீரவாகு வந்து நின்றார்.
‘‘ஜயந்தா! நான் ஆறுமுகப்பெருமான் அனுப்பிய துாதன்! சூரபத்மனைக் கண்டு சமாதானமா...சமரா... என்று அறிந்து வர என்னை அனுப்பியுள்ளார்கள். உன் தந்தை இந்திரன் உன்னைப் பார்த்து, ‘அஞ்சாதே. விரைவில் அனைவரும் சந்திப்போம்’ என்னும் நற்செய்தியை கூறச் சொன்னார்’’  என்றார் வீரவாகு.
அவதார வேலவனின் அன்புச்சகோதரர் தான் வீரவாகு என்று அறிந்து சிறைப்பட்டிருந்த தேவர்களும், ஜயந்தனும் அமைதியும் ஆனந்தமும் அடைந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar