Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் கொடுத்த அதிர்ச்சி
 
பக்தி கதைகள்
அவள் கொடுத்த அதிர்ச்சி

சாமியார்களைப் பார்க்க வரமாட்டேன் என்று எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் என்னை அந்த இளம் துறவியிடம் இழுத்துக்கொண்டு போனார் என் நண்பர்.
துறவியின் முகம் தவ வலிமையால் ஜொலித்தது. நண்பர் பேசத் தொடங்கியபோது அவரைக் கையமர்த்தினார் துறவி.
‘‘நான் இவருடன் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்.’’
தனிமை கிடைத்தவுடன் மெல்லிய குரலில் பேசினார் துறவி.
‘‘வரும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியுடன் உங்களின் ஆயுட்காலம் முடிகிறது.’’
அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
‘‘கவலை வேண்டாம். நாளை இங்கே வந்துவிடுங்கள். நான் நினைத்தால் உங்கள் முடிவைத் தள்ளிப்போட முடியும்.’’
‘‘நான் மடியவேண்டும் என்று அவள் நினைத்துவிட்டாள். அதன்பின் ஏன் தள்ளிப்போடவேண்டும்?’’
எழுந்து நின்றேன்.
‘‘எங்கே போகிறீர்கள்?’’
‘‘இப்போதும் சரி, வெள்ளிக்கிழமை மாலையும் சரி ஒரே இடத்திற்குத்தான் செல்லப்போகிறேன். பச்சைப்புடவைக்காரியிடம். எனக்கு ஒரே போக்கிடம் அவள்தான்.’’
‘‘உங்கள் வழி சரியில்லை. என் வழிக்கு வாருங்கள். நுாறாண்டு காலம் வாழ வைக்கிறேன்.’’
‘‘எனக்கு வழி, அடையும் இலக்கு எல்லாமே அவள்தான்.’’
வெளியே நண்பர் வழிமறித்தார்.
‘‘என்ன சொன்னார்?’’
‘‘எல்லாம் நல்ல விஷயம்தான். போகிற வழியைக் காட்டிக்கொடுத்தார். நான் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டும்.. ’’
நண்பரின் பதிலுக்காக காத்திருக்காமல் கோயிலுக்கு ஓடினேன்.. அன்னையின் அன்பைப்பற்றி இன்னும் பத்துப் புத்தகங்கள் எழுதும் அளவிற்குக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். சில புத்தகங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன. இப்போதே முடிவு வந்தால்..  
எனக்கு நம்பிக்கை இருந்தது. கோயில் வாசலில் பூக்காரியாகத் தோன்றி, ‘‘என்ன பயந்துவிட்டாயா?’ என கேட்கப்போகிறாள். நான் அவள் காலில் விழுந்து கதறப் போகிறேன்.
ஆனால் அன்று சோதனையாக பச்சைப்புடவைக்காரியின் தரிசனம் கிடைக்கவேயில்லை. மனதின் ஓரத்தில் ஒரு பிரார்த்தனை.
‘‘இரண்டு ஆண்டுகள் கொடுங்கள். கையில் இருக்கும் புத்தகங்களை முடித்து விடுகிறேன். அதன்பின் மரணத்திற்கு தயாராக இருப்பேன்.’’
என் வேண்டுதலுக்கு அவள் செவி சாய்க்கவில்லை என்பது புரிந்தது.  நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு..
‘‘சுவாமிகளுக்குப் பயங்கரமான சக்தி இருக்குப்பா. என் பொண்ணுக்கு இந்த வாரம் நிச்சயமாயிரும்னு சொன்னாரு.  திருச்சிலருந்து மாப்பிள்ளை வருவார்னு சொன்னாரு. சொன்னபடியே நடந்திருச்சிப்பா.’’
சாவு மணியாகவே ஒலித்தன நண்பரின் வார்த்தைகள்.  
வியாழக்கிழமை. என் வாழ்வின் கடைசி இரவைத் துாங்காமல் கழித்தேன். அதிகாலை நான்கு மணிக்கு என் அலைபேசியில் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்ப்பதுபோல் தோன்றியது. மனதில் ஒரு தெளிவு பிறந்தது.
‘‘தாயே என் மனதில் அகந்தைப்பாம்பு படம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது. உங்கள் அன்பைப் பற்றி என்னால் மட்டும்தான் எழுதமுடியும் என நினைத்துவிட்டேன். அது மாபெரும் தவறு, தாயே. நான் எழுத்தாளன் இல்லை. தபால்காரன். நீங்கள் கொடுக்கும் கடிதங்களை உங்கள் அடியவர்களிடம் சேர்ப்பிக்கும் கடைநிலை ஊழியன். தபால்காரன் எப்படிக் கடிதங்களுக்கு உரிமை கொண்டாட முடியும்?
மரணம் என்பது ஒரு வகையில் எனக்குப் பணிமாற்றம்தானே! இன்றுவரை மாசி வீதிகளில் தபால்களைக் கொடுத்துக் கொண்டிருந்த நீ நாளை முதல் வெளி வீதிகளில் கொடு என ஆணையிட்டிருக்கிறீர்கள். மாசி வீதியில் கொடுக்க வேண்டிய தபால்கள் நிறைய இருக்கின்றனவே என நான் கவலைப்படுவது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும்?
உங்களுக்குப் பணி செய்ய ஆயிரமாயிரம் தபால்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?’’
வெள்ளிக்கிழமை  நல்லபடியாக விடிந்தது. அதிசயமாக மனைவியுடன் ஒரு மணி நேரம் பேசினேன். தொலைதுாரத்தில் இருக்கும் மகள், மருமகனிடம் பேசினேன். என் தாயாரிடமும்,  உடன் பிறந்தோரிடமும் பேசினேன். அலுவலகம் சென்றபின். முக்கிய வாடிக்கையாளர்களிடம் ஏதோ ஒரு சாக்கில் பேசினேன். வாழ்வளித்தவர்களிடம் நான் விடைபெற வேண்டாமா?.
காலாகாலத்தில் வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டும். அபிராமி அந்தாதி சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும். அந்த நேரத்தில் என் முடிவு நிகழ வேண்டும்.  
அலைபேசி ஒலித்தது. என்னுடைய எண்பது வயது வாடிக்கையாளர்.
‘‘உங்களை உடனே பார்க்கணுமே!’’
‘‘என்னாச்சு?’’
‘‘என் பொண்ணு என்ன அவமானப்படுத்திட்டா சார். மாப்பிள்ளையும் கூடச் சேந்து கன்னா பின்னான்னு பேசிட்டாரு. மனசு உடைஞ்சி போயிருக்கேன். உங்க தோள்ல சாஞ்சி அழணும்னு தோணுது.’’
‘‘நாளைக்குக் காலையில் வாங்களேன்.’’
‘நாளை நான் இருந்தால்தானே!’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
‘‘நாளைக்கு நான் இருக்கமாட்டேன் சார். தாங்க முடியல. இன்னிக்கு ராத்திரி பத்து துாக்க மாத்திரையை சாப்பிட்டு ஒரேயடியாப் போயிடுவேன். அதுக்குள்ள உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிட்டுப் போகலாம்னு பாத்தாப் பெரிசா பிகு பண்றீங்களே!’’
‘‘சரி வாங்க.’’
வந்தார். அவரைப் புலம்பவிட்டேன். முடிந்தவரை ஆறுதல் சொன்னேன். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அவருக்கு ஏற்ற முதியோர் இல்லத்தை ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன்.
‘‘இன்னும் ஒரே ஒரு விஷயம். எனக்காக அபிராமி அந்தாதியில இரண்டாவது பாட்டைச்  சொல்லி அர்த்தம் சொல்லுங்களேன்.’’
மணியைப் பார்த்தேன். ஐந்தரை. வீட்டில் பூஜையறையில் சொன்னால் என்ன, இவர்முன் சொன்னால் என்ன?
அவர் சொன்னபடி செய்தேன். கண்ணில் நீர் வழிய என்னைப் பார்த்துக் கைகூப்பி விடைபெற்றார். மணி ஐந்தே முக்கால். இந்த நிலையில் அலுவலகத்தை விட்டுக் கிளம்புவது ஆபத்து. வழியில் ஏதாவது ஆகிவிட்டால் அனைவருக்கும் சிக்கல்.  
அபிராமி அந்தாதிப் பாடல் ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தேன். ‘மணியே! மணியின் ஒளியே!’ என்று தொடங்கி, ‘பிணிக்கு மருந்தே!’ என்று சொன்னபோது அழுதுவிட்டேன். என்னுடைய பிறவிப் பிணிக்கு மருந்தாக அவளே வரப் போகிறாளே!
கதவைத் திறந்து கொண்டு புயலென நுழைந்தாள் ஒரு பெண்.
‘‘என்ன பயந்து விட்டாயா?’’
‘‘இருந்தாலும் முடிந்தாலும் என் ஒரே போக்கிடம் நீங்கள்தான் என்று உணர்ந்தபின் பயமாவது பரங்கிக்காயாவது?’’
‘‘உன் மனதில் அகந்தை துளிர்விடத் தொடங்கிவிட்டது. என்னைப்பற்றி எழுத உன்னால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் உன் மனதில் தோன்றக்கூடும் என நினைத்தேன். அதை முளைப்பதற்குமுன் கிள்ளி எறிய வேண்டும் என்பதற்குத்தான் இந்த மரண நாடகம். எப்போது நீ எழுத்தாளன் இல்லை, தபால்காரன் என்பதை உணர்ந்தாயோ அப்போதே  பிழைத்துக் கொண்டாய்.
சாகும் நேரத்திலும் ஒரு முதியவருக்கு ஆறுதல் சொல்லி அவர் சாவைத் தடுத்தாய் பார் அதில் நான் குளிர்ந்துவிட்டேனடா.’’
‘‘நான் சாகமாட்டேனா?’’
‘‘நீ செத்துவிட்டாயடா. புரியவில்லை? உன் மனதில் ‘நான்’ என்ற எண்ணம் வரும் முன்பே  அடையாளம் தெரியாமல் அழித்து விட்டேன். இப்போது சொல், நீ இன்னும் எத்தனை புத்தகங்கள் எழுத வேண்டும்? உனக்கு இன்னும் ஒரு நுாறாண்டு ஆயுள் தரட்டுமா?’’
‘‘வேறு ஒரு வரம் கேட்கலாமா?’’
‘‘தாராளமாக.’’
‘‘அந்தத் துறவி ‘நீ சாகப்போகிறாய்’ என்றவுடன் துடித்துப்போய்விட்டேன். அது தவறல்லவா? ஒவ்வொரு கணமும் என் சாவிற்கு நான் தயாராக இருக்கவேண்டும். நீங்கள் எப்போது அழைத்தாலும் போட்டது போட்டபடி  ஓடிவர வேண்டும். அந்தப்  பக்குவத்தைக் கொடுங்கள் போதும்.’’
‘‘மரணத்திற்கு எப்போதும் தயாராக இருந்தால் நீ மகாஞானியாகி விடுவாய். அதன்பின் எனக்குக் கொத்தடிமையாக இருப்பாயா என்று தெரியாது. பரவாயில்லையா?’’
‘‘ஐயையோ! வேண்டாம் தாயே! எனக்கு மரண பயத்தைக் கொடுங்கள். நோயைக் கொடுங்கள். எதை வேண்டுமானாலும் கொடுங்கள். என்னிடம் இருப்பது எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கொத்தடிமை என்ற அந்தப் பதவியை மட்டும் பறித்துவிடாதீர்கள்.’’
பெரிதாகச் சிரித்தபடி காற்றில் கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar