Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கன்னியாகுமரி அம்மனே காவல் தெய்வம்
 
பக்தி கதைகள்
கன்னியாகுமரி அம்மனே காவல் தெய்வம்

அம்மையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். பசி வேண்டாம். தாகம் வேண்டாம். பரிதவிப்பு, பரபரப்பு, சலசலப்பு ஏதும் வேண்டாம். அவளின் காலடியில் கிடந்தால் போதும். நகரும் நொடிகள் நகர்ந்தபடியே இருக்கட்டும். விடியும் பொழுதுகள் விடிந்தபடியே இருக்கட்டும். நிறையும் இரவுகள் நிறைந்தபடியே இருக்கட்டும். அம்மையின் காலடியில் கிடந்தால் போதும். அம்மையின் கருணைக்கடல் விழிகளைத் தரிசித்தால் போதும்.
இப்படித்தான் தோன்றுகிறது அங்கே. அது முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி. இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல்,  வங்காள விரிகுடா மூன்று கடலும் அலையடிக்கிறது. அதன் சங்கமத்தில் எழுந்தருளி தரிசனம் தருகிறாள் கன்னியாகுமரி பகவதியம்மன். இந்தியாவின் தென்கோடி முனையின் காவல் தெய்வம் குமரியம்மன்.
அம்மை இளம்பெண். அப்போது தான் ருதுவான சிறுமியின் முழுநிலா தோற்றம் அவளுக்கு. மூன்றாம் பிறைக்கீற்று போலப் பேரழகு அவளுக்கு. அகல் விளக்கின் ஆதுரம், பெருநெருப்பின் ஆக்ரோஷம், தென்றலின் குளிர்மை, புயல் காற்றின் வீரியம், பசுந்தளிரின் இளமை, முதிர் இலையின் வாஞ்சனை, மொட்டுகளின் இளமை, மலர்களின் மந்தஹாசம் அவளுக்கு. இப்படி அதுவாகவும், இதுவாகவும், எதுவாகவும் இருப்பவள் அவளே. அவளாகவும், நாமாகவும் இருப்பவள் அவளே. பாணாசுரனை வதம் செய்ததும், பக்தர்களுக்கு இதம் செய்வதும் அவளே. அம்மே நாராயணா தேவி. நாராயணா லெட்சுமி நாராயணா பத்ரி நாராயணா என்று குரலெடுத்துப் பாடுவதன் மூலம் அந்தப் பாவாடைத் தாய் மூக்குத்தி நாயகியாக அருள் உருவம் கொள்கிறாள். ‘நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை’’  என்று பாரதியாரின் கவிஆளுமை அம்மையாக இருப்பவள் கன்னியாகுமரித் தாய்.
உள் பிரகாரம், வெளிப்பிரகாரம் என்று தேரோடும் அகலமுள்ள பிரகாரங்கள் சுற்றி வரும் போது அம்மையின் பிஞ்சுக்கரம் பிடித்து நடப்பதாகத் தோன்றுகிறது. ஆயிரம் கோடி சூரியனாக ஒளிரும் மூக்குத்தி மின்ன, பட்டுப் பீதாம்பரம் சரசரக்க நித்தியப் புன்னகையும், நிரந்தர சவுந்தர்யமுமாக தண்டை ஒலிக்க உடன் நடந்து வருவதாக மனம் உணர்வது சத்தியம். கருவறை உள்மண்டபம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக அம்மையின் பேராற்றலால் பெற்ற சாந்நித்யத்தோடு சிலிர்ப்பைத் தருகிறது. அம்மைக்கு அன்றைக்குச் சிறப்பு அலங்காரம். அவள் கட்டியிருந்த வஸ்திரம், தங்கக் கவசம், வைரக் கிரீடம், அணிகலன்கள் கண்ணைப் பறித்தன. அம்மையின் மூக்குத்தியைப் பார்க்கும் போது கண்கள் நிலைகுத்தி நிற்பதான பாவனை தோன்றியது. அம்மையின் தரிசனத்தோடு இருக்கும் இந்த நொடி நிஜமா? நமது இந்தப் பிறப்பு நிஜமா என்பதான ஊசலாட்டங்களுக்கு மனம் ஆட்படுவது நிச்சயம்.
காரணம் சின்னஞ்சிறு பெண் போல சித்தாடை இடையுடுத்தி  பகவதியம்மன் தரிசனம் என்பது பலரின் கனவுப் பட்டியலில் நீடித்துக் கிடப்பது. அந்தத் தரிசனம் வாய்க்கும் நொடியில் ‘இது நிஜம் தானா’ என்று மனம் அலை பாயும். இந்த நொடிகள் அப்படியே காலகாலத்திற்கும் நிலைத்து விடாதா என்றும் தோன்றும்.
ஒற்றைக் காலில் நின்று தவம் புரியும் அம்மை சொல்வது என்ன? அம்மையோடு மனம் விட்டுப் பேசினேன். ‘‘முக்கடல் அலைகள் புண்ணியம் செய்தவை தாயே. எல்லாப் பொழுதும், எல்லாக் காலமும் உன் திருவடி தரிசனம் பெறும் வாய்ப்பு  அவர்களுடையது. அந்தக் கரையின் கோடி மணற்துகளில் ஒரு மணற்துகளாகும் பாக்கியம் வாய்த்தாலும் வாழ்வு அர்த்தமுள்ளதாகும். கடலலைகள் போலவே இன்பத்தைத் தேடித் தேடி முன்னும் பின்னும் அலைந்து உழலும் வெற்று இயக்கமே வாழ்க்கையாகிறது’’
என் மவுனக் குரலைப் பொறுமையோடு கேட்டாள். நாகரத்தின மூக்குத்தி கோடி மின்னலாகக் கண்ணைப் பறிக்க, அதை விடவும் ஜொலிப்பாக அம்மை சிரித்தாள்.
தாயே... உன்னை என் இடுப்பில் உட்கார வைக்கவா?  என்னோடு ஆரத் தழுவி அணைத்துக் கொள்ளவா? உன் காட்டுமரச் சந்தன சுகானுபவத்தை மனதில் நிறைத்துக் கொள்ளவா?  பட்டாடை சுகந்தத்தை மூச்சுக்குள் நிறைத்துக் கொள்ளவா தாயே?  கலங்கரை விளக்கான உன் மூக்குத்தியின் வெளிச்சக் கீற்றுகளை என் இரவில் பிணைத்துக் கொள்ளவா? உன் வலக்கரத்தில் தாங்கியிருக்கும் இலுப்பை மாலையின் ஒற்றைக் கண்ணியாக என் உயிரை இணைத்துக் கொள்ளவா’’   
இப்படியான ஊசலாட்டத்தில் நான் மிதக்க, பிரபஞ்சத்தின் இதயமாக இருக்கும் அம்மையின் அருள் தேடி வரும் கூட்டம், அவர்களின் பரபரப்பு, தேடல், பிரார்த்தனை, கதம்பப் பூவாசனை, கோயிலின் பழமை என்பதான வாசனைகளால் சூழப்பட்டிருந்த நேரம் அது. மெதுவாகப் பிரகாரத்தில் நடந்தேன். மாலைச் சூரியன் வர்ணம், வானத்தின் நீலவர்ணம், தொலைவில் தெரிந்த கடல் அலைகளின் மந்திர ஓசை, கோயில் மணியோசை என புதிய அனுபவம் கிடைத்தது.
 பாவாடை தாவணியுடன், ஒற்றைக்கால் தவமிருக்கும் பெண் அவதாரமாக, எப்போதும் கடல் அலைகள் சூழ்ந்திருக்க, அலைகளை நிறைக்கும் உப்புத்தன்மை கோயில் கிணற்றில் கிஞ்சித்தும் இல்லாததாக்கியிருக்கும் அதிசய அவதாரமாக எப்படி உலகத்தை ரட்சிக்கிறாள்? பத்ம பீடத்தில் நிற்கும் கோலத்தில், பத்ர குண்டலங்கள் வீசியாட அரக்கு தாவணியும், பச்சைப் பட்டுப் பாவாடையும் அணிந்து என் கையைப் பிடித்து அம்மை நடப்பதான உணர்வு உந்தித் தள்ளியது.
மாலைநேர பூஜையில் அம்மை ஒளிக்கோளமாக விஸ்வரூபம் எடுக்கிறாள். பிரம்ம சந்திர தீபம், ஏழு அடுக்கு 107 தீபங்கள், புருஷாமிருக தீபம், கலை தீபம், நாக தீபம், அன்ன தீபம், மலர்த்தீபம், ஆமை தீபம், தட்டு தீபம், பர்வத தீபம், கும்ப தீபம் என்பதான தீப வரிசையில் நம் உயிர் புடம் போடப்படுகிறது.
அம்மை சிரித்தாள்.  
‘‘இத்தனை ஆராதனைகளை விடவும் எனக்கு எது பிடிக்கும் தெரியுமா மகளே?’’
‘‘ பதில்களை நீயே  அருள்வாய் தாயே...காத்திருக்கிறேன். உன் திருவிளையாடலுக்காக...’’
பிரகாரம் சுற்றி வரும் போது ஒரு பெண் ஒற்றை அகல் விளக்கை ஏந்தி அடிப்பிரதட்சணம் செய்தார். சுடர் அணையாதபடி ஒவ்வொரு அடியாக நடந்தார். ‘‘அம்மா...தாயே சரணம்... அம்மா தாயே சரணம் அம்மா தாயே சரணம்...’’
மனமுருகி கண்ணீர் வழிய நடந்தார். பின்னாலே தொடர்ந்த மூதாட்டி, ‘‘எம்மவ பெரிய போஸ்ட்டுல இருக்காம்மா... அவளுக்கு வேண்டாதவங்க எழுதிப்போட்ட புகார்னால அவளுக்கு நிம்மதி போச்சு... மகாராணி மாதிரி இருந்தவ ரொம்பவே ஒடிஞ்சு போயிட்டா... கன்னியாகுமரி அம்மனுக்கு வேண்டிக்கிட்டா. மத்தியானம் ஒருவேளைச் சோறு மட்டும் சாப்பிடுவா. மத்த நேரம் பட்டினிதான். இப்ப அந்த ஆளுங்க எழுதினது பொய்யின்னு அம்மன் காட்டிக் குடுத்துட்டா. தண்டனையும் கிடைச்சாச்சு. அதான் அம்மனுக்கு விளக்கு ஏத்தி அடிப்பிரதட்சணம் பண்றா. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை அம்மா தாயே சரணம் இதுதான்’’
அந்த மூதாட்டி வெள்ளந்தியாகப் பேசினாள்.  
‘‘கன்னியாகுமரி அம்மன் கிட்ட வந்துட்டேல்ல... உன் கேள்விக்கெல்லாம் பதில் அம்மனே குடுத்துருவா...’’ பக்கத்தில் யாரோ சொன்னார்கள். கருவறையில் மீண்டும் கன்னியாகுமரி அம்மனைத் தரிசித்தேன். அந்தக் குமிழ் சிரிப்பும், கடல் கண்களின் பூரிப்புமே அவளின் கேள்விக்கான பதிலானது. படாடோபமல்ல அம்மை கேட்பது. ஆத்மார்த்தம் ஒன்றே அம்மையின் விருப்பம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar