Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பேசாமல் பேச வைத்த பேரழகி
 
பக்தி கதைகள்
பேசாமல் பேச வைத்த பேரழகி

‘‘இதவிடப் பரிதாபமான கேசை நான் என் ஆயுசுல பார்த்ததில்ல சார். இந்தப் பொண்ணு ரெண்டு வருஷமா மெடிக்கல் காலேஜ்ல சேர முயற்சி பண்ணியிருக்கு. இப்போதான் சீட் கெடைச்சிருக்கு. அதுவும் சொந்த ஊர்ல இஷ்டப்பட்ட காலேஜ்லயே கெடைச்சிருக்கு.’’
முன்னால் இருந்த அழகிய மன நல மருத்துவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மென்மையான மனம் கொண்டவர். பச்சைப்புடவைக்காரியிடம் பக்தி கொண்டவர். என்னுடைய வாசகி.
‘‘பீஸ் எல்லாம் கட்டியாச்சு. காலேஜுக்குப் போக புதுத் துணியெல்லாம்கூட எடுத்துட்டாங்க. அந்தச் சமயத்துல.. . அந்தச் சமயத்துல.. ‘‘
மருத்துவரின் கண்கள் கலங்கிவிட்டன. கண்களைத் துடைத்துக்கொண்டு கரகரத்த குரலில் பேசினார்.
‘‘இந்தப் பொண்ணோட அப்பா, அம்மா, ஒரே தம்பி மூணுபேரும் ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க. மொத்தக் குடும்பத்தயும் தொலைச்சிட்டு பத்தொன்பது வயசுல தனிமரமா இருக்கா, சார். இவ தற்கொலைக்கு முயற்சி செஞ்சதுல ஆச்சரியமே இல்ல. எப்படியோ காப்பாத்திட்டோம். ஆனா மனசளவுல செத்துப் போயிட்டா. நீங்கதான் உயிர் கொடுக்கணும். அந்தப் பொண்ணப் பாத்துப் பேசுங்க. வாழணுங்கற ஆசைய, வாழ முடியுங்கற நம்பிக்கைய நீங்கதான் சார் அவ மனசுல வெதைக்கணும்.’’
‘‘என்னால நிச்சயமா முடியாது டாக்டர். வயசான அப்பா அம்மாவ இழந்துட்டா ஆறுதல் சொல்லலாம். நாற்பது வயசுல வாழ்க்கைத் துணைய இழந்துட்டாக்கூட எப்படியாவது ஆறுதல் சொல்லலாம். இந்தப் பொண்ணுகிட்ட என்ன பேசறது? எப்படிப் பேசறது? என்னால அந்தப் பொண்ணப் பாக்க முடியும்னுகூடத் தோணல.’’
‘‘இப்படி சொல்லித்தான் சார் எல்லாரும் நழுவிட்டாங்க. நீங்களுமா?’’
மருத்துவரைப் பார்த்துக் கைகூப்பிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
மனநல மருத்துவப் பிரிவின் வாசலில் ஒரு பெரிய அதிர்ச்சி. அப்படி ஒரு பேரழகியை நான் வாழ்க்கையில் சந்தித்ததேயில்லை. அவள் செவிலியர் உடையில் இருந்தாள். நான் அவளை கடந்து செல்ல முயன்றபோது குறுக்கே கையை நீட்டி என்னை வழிமறித்தாள்.
‘‘அரக்கர்களையெல்லாம் சுலபமாக அழித்துவிட்டேன். உன் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்கத்தான் படாதபாடு படுகிறேன்.’’
‘‘தாயே நீங்களா?’’ கதறியபடி அவள் காலில் விழுந்தேன்.
‘‘உன் பேச்சுத் திறமையாலா அந்தப் பெண்ணிற்கு வாழ்வு கொடுக்கப்போகிறாய்? உன் சொந்த அறிவால் அந்தப் பெண்ணைத் தேற்ற முடியும் என்று நம்புகிறாயா என்ன?’’
தலை குனிந்தேன்.
‘‘அதுதான் அகங்காரம்.’’
‘‘என்ன செய்யட்டும்?’’
‘‘திரும்பி அந்த மருத்துவரிடம் போ. அந்தப் பெண்ணிடம் தனியாக இருக்கவேண்டும் என்று மட்டும் சொல். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.’’
மனநல மருத்துவரின் அறைக்கு ஓடினேன். பச்சைப்புடவைக்காரி சொன்னதைப் போல் சொன்னேன்.
‘‘நான் கூட வருகிறேனே! நீங்கள் அந்தப் பெண்ணிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்க ஆசையாக இருக்கிறது.’’
‘‘வேண்டாம் டாக்டர். மேலிடத்து உத்தரவு. இதுக்குமேல எதுவும் கேக்காதீங்க..’’
‘‘உங்களை அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிடுகிறேன். இந்த பெல்லைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் உதவி தேவைப்பட்டால் இதை அழுத்துங்கள். அந்தப் பெண்ணைத் தொடாமல் பேசுங்கள்.’’
அஞ்சலி என்று அறிமுகப்படுத்த அந்தப் பெண் நறுங்கலாக இருந்தாள். முகம் திருத்தமாக இருந்தது.
மனநல மருத்துவர் வெளியேறினார்.
அந்தப் பெண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். கையில் உள்ள நரம்பு வழியாக ஏதோ ஒரு நிறமற்ற திரவம் அவள் உடலில் இறங்கிக்கொண்டிருந்தது.
‘‘அஞ்சலி’’ – அழைத்தேன்.
அவள் திடுக்கிட்ட மாதிரித் தெரிந்தது. அப்புறம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பொதுவாக இந்தச் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி என்னுள் வார்த்தை வெள்ளமாகப் பொங்கிவிடுவாளே! என்ன ஆயிற்று?
அஞ்சலியின் விழி ஓரத்தில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதை மென்மையாகத் துடைத்துவிட்டேன். தொட்டுப்பேச வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி அவள் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டேன். ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. என் மனம் நீவிவிட்டதைப் போல் சுத்தமாக இருந்தது. காலியான என் மனதில் காளியை அமர்த்தினேன். அவளை வழிபட்டேன். பூஜை பொருளாக பூ, பழம் தேங்காய் என்று எதையும் கொடுக்கவில்லை. என் உடல், பொருள் ஆவியையே கொடுத்தேன். தனியாகத் தவித்துக்கொண்டிருக்கும் இந்த அபலைக்கு உங்களைவிட்டால் வேறு துணை இல்லை தாயே என்று மவுனமாக மன்றாடினேன்.  
என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு தொடு உணர்வு. அஞ்சலி என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தைப் பார்த்தேன். கண்ணீரையும் தாண்டி புன்னகையின் ஒரு மெல்லிய கீற்று தென்பட்டதோ?
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அறையில் இருந்த மவுனம் கலைந்தது. செவிலியர் உடையில் பேரழகியாய் ஜொலித்துக்கொண்டிருந்த பச்சைப்புடவைக்காரி அறைக்குள் நுழைந்தாள்.
அஞ்சலியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அஞ்சலியின் உடல் சிலிர்த்தது. பின் பச்சைப்புடவைக்காரி தன் கையை அஞ்சலியின் தலையில் வைத்து அழுத்தினாள். அஞ்சலியின் உடல் குலுங்கியது. அதன்பின் அஞ்சலி அமைதியானாள். உறக்கத்தில்  ஆழ்ந்தாள்.
என்னை அறைக்கு வெளியே வருமாறு சைகை காட்டினாள் புவியேழுக்கும் அரசி.
‘‘வார்த்தைகள் எல்லா இடங்களிலும் பயன்படாது. உன்னுடைய வார்த்தைகள் இல்லா அன்பு இவளை வாழவைத்துவிட்டது, நீ பேசியிருந்தால்கூட இந்த அளவு முன்னேற்றம் தெரிந்திருக்காது. நோயைக் குணமாக்கும் சக்தி உனக்கு வந்துவிட்டதே!’’
‘‘யாரிடம் கதை அளக்கிறீர்கள்? அன்பே வடிவான நீங்கள் என் மனதில் இருக்கும் அன்பாக மலர்ந்தீர்கள். அதெல்லாம் போதாது என்று தெரிந்ததும் நீங்களே நேரில் வந்து அந்தப் பெண்ணின் நெற்றியைத் தொட்டு, தலையில் கை வைத்து உயிர்ச் சத்தை உள்ளே ஏற்றி அவளை வாழ வைத்தீர்கள். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.’’
‘‘உன் மனதில் இருந்த அன்புதான் என்னை அப்படியெல்லாம் செய்ய வைத்தது.’’
‘‘முடியாது என்று விலகி ஓடியவனை வழிமறித்து உள்ளே அனுப்பியது யாராம்?’’
அன்னை சிரித்தாள்.
 ‘‘இனிமேல் என்ன ஆகும், தாயே!’’
‘‘இன்று நடந்த அன்பின் பரிமாற்றத்தால் இறந்து போன இவளுடைய குடும்பத்தினரின் ஆன்மாக்களும் அமைதியடைந்து நற்கதியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டன. அவர்களுடைய அன்பு அஞ்சலியைக் காலமெல்லாம் பாதுகாக்கும். இவள் நிறைவாக வாழ்வாள். உனக்கு என்ன வேண்டும் என்று சொல்’’
‘‘இந்தப் பெண் என்னை அடியோடு மறந்துவிடவேண்டும்.’’
‘‘ஏனப்பா?’’
‘‘அப்படி மறக்காவிட்டால் இவள் குணமானவுடன் என்னைப் பார்க்க வருவாள். மருத்துவக்கல்வி முடித்துவிட்டு நீங்கள் சொன்ன மாதிரிப் பெரிய ஆளானவுடன் எல்லாம் என்னால்தான் நடந்ததென்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு திரிவாள். ஒரு பலவீனமான சமயத்தில் நான்தான் இவளைக் காபாற்றினேனோ என்று நம்ப ஆரம்பித்துவிடுவேன். மனதில் அகந்தை வந்துவிடும். உங்களுடைய கொத்தடிமை என்ற இந்த மகத்தான பதவி பறிபோய்விடும்.’’
அன்னை கலகலவென்று சிரித்தாள் பின் மறைந்தாள். நான் அஞ்சலியின் அறைக்குள் நுழைந்தேன். அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் தலையில் கைவைத்தேன்.
‘‘மூணு மணி நேரம் உள்ள இருந்திருக்கீங்க. என்ன நடந்தது?’’ என்று கேட்டபடி அறைக்குள் நுழைந்தார் மன நல மருத்துவர்.
அன்னை வந்ததையும் அஞ்சலிக்கு அருள் புரிந்ததையும் நான் எப்படி விளக்குவேன்?
‘‘ஏதோ வாய்க்கு வந்ததப் பேசி வச்சேன். வேற என்ன செய்யமுடியும்?’’
ஒரு வாரம் கழித்து மனநல மருத்துவர் என்னை அழைத்தார்.
‘‘என்ன மாயம் சார் செஞ்சீங்க? அஞ்சலி மெடிக்கல் காலேஜுக்குப் போகத் தயாரா இருக்கா. அவளுடைய சித்தி அவளப் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு விஷயம்தான் புரியமாட்டேங்குது.’’
‘‘என்ன?’’
‘‘அஞ்சலி உங்கள சுத்தமா மறந்துட்டா. நீங்க அவளப் பாத்தது,  பேசினது எதுவுமே அவளுக்கு ஞாபகம் இல்ல. ஏன்?’’
உண்மையான காரணத்தை அவரிடம் சொல்ல முடியுமா என்ன?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar