Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேப்பிலைநாயகி பெரியபாளையத்தம்மன்
 
பக்தி கதைகள்
வேப்பிலைநாயகி பெரியபாளையத்தம்மன்

வாசனைகள் பலவிதம் உண்டு. பூவாசனை, பழவாசனை, பட்டுப் பீதாம்பரம் வாசனை, கற்பூர வாசனை, குங்கும வாசனை, திருநீறு வாசனை, நீரின் வாசனை, பசுமைச் சோலையின் வாசனை, துளசி வாசனை, துாபதீப வாசனை என்பதாகப் பட்டியல் நீளும். இதெல்லாம் நாசியினால் நுகர்பவை.
ஜென்மாந்திர வாசனை, பூர்வ ஜென்ம வாசனை என்பதான வாசனைகளை மனசால் மட்டுமே உணரமுடியும்.
 முன்பொரு காலத்தில் நான் இங்கே இருந்தேன். ஏதோ ஒரு ஜென்மத்தில் இந்த இடத்தில் நான் நடந்தேன். இதோ இங்கே இங்கே இந்த இடத்தில்தான் நான் அம்மையை உணர்ந்தேன். இப்படியெல்லாம் மனசால் உணரக்கூடிய ஓர் இடம் இருக்கமுடியுமா? இந்த இடத்தில் இப்போது நான் உணரும் வாசனை புதிதானது அல்ல. நான் அறியாததும் அல்ல. முன்ஜென்மத்தில் அறிந்து, முகர்ந்து நுகர்ந்து இதோ இந்த நொடியும் மனசுக்குள் பொத்தி வைத்திருக்கும் வாசனைதான்.
இப்படி உணரக்கூடிய ஓர் இடம் உண்டு. இப்படி உணர்த்தக்கூடிய ஓர் அம்மையும் உண்டு. அந்தத் தலத்தில்தான் சுற்றிச்சுற்றி நடந்தேன். காற்றைப்போலக் கிடந்தேன். அது திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில்.
எந்தக் கோயிலுக்கு போனாலும் மனசு நிரம்பி வழிய வழியக் கவலையும், கண்கள் நிரம்பி வழிய வழியக் கண்ணீரும் கொண்டு செல்வோமில்லையா? அப்படி இல்லாமல் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குத் தாய் வீட்டுக்குப்போகும் சுகானுபவத்தோடு போகலாம்.
மனசில் ஆயிரம் பாறாங்கற்கள் அழுத்தினாலும், அம்மா மடியும், அம்மா வீடும் தரும் இதம் வேறெங்கும் கிடைக்காது. அது போலத்தான் பவானி அம்மன் கோயில். காலாற நடக்க, அம்மாவே கதி என்று கிடக்க ஓர் இடம் அந்தத் தலம். வேறு திருத்தலங்கள் போலன்றி, அம்மாவின் எளிமையும், அம்மாவின் நெருக்கமும் அம்மாவின் ஆதுரமும் ஒருசேர உணர வைக்கிறாள் பவானி அம்மன்.
அங்கே அரக்க பரக்கப் பல சன்னிதானங்களைக் கடக்க வேண்டாம். இயந்திரத்தனமாகச் சுற்றி வர வேண்டாம். பவானி அம்மன் எளியவள். அன்பில் இழைபவள். கருணையில் நிறைபவள். அங்கே சென்றாலே நம் பாரம் குறையும். அங்கே சென்றாலே நம் கண்ணீர் குறையும்.
பவானி அம்மன் எளியவர்களுக்கான இருப்பு. எளியவர்களுக்கான சிறப்பு. பூஜைகள், வழிபாடுகள், நியமங்கள் எல்லாமே மனசை நெகிழ்த்தும் இயல்பானவை. வேப்பிலை ஆடை உடுத்தலும், கரகம் எடுத்தலும், பொங்கல் படைத்தலும் எளியவர்களின் கைங்கர்யம் தானே... அதைத்தான் இந்தத தலத்தின் உயிர் நாடியாகக் காணலாம்.
சங்கு, சக்கரத்துடன், வாள் அமிர்த கலசத்துடன், புன்னகையும், பூரிப்புமாக மண்ணில் நிறையும் சூரியனாகக் கண்களை நிறைக்கிறாள் பவானி அம்மன்.
அவளுடைய கறுப்பு மின்னல் முகமும், சிகப்பு மின்னல் வஸ்திரமும் அம்மை நெருப்பின் அவதாரம் என்பதற்கான சாட்சியாகிறது. கம்சனின் வாளிலிருந்து தப்பித்து ரேணுகா தேவியாக, சுயம்புவாக, ஓங்காரியாக, சங்கு சக்கரதாரியாக பாதி திரு உருவினளாக ஜொலிப்பவளைக் கண் கொட்டாமல் பார்த்தேன்.
‘‘வா மகளே...’’
‘‘வந்தேன் தாயே...’’
‘‘எப்போதும் கேள்விகள் தருவாய். இன்றைக்கு மவுனத்தைத் தருகிறாயே...’’
‘‘வியக்கிறேன் தாயே. மவுனமாக வியக்கிறேன். கம்சனின் கொலை வாளுக்குத் தப்பினாய். சுயம்புவாக அவதாரம் செப்பினாய். எப்பேற்பட்ட வல்லமை தாயே...’’
‘‘ம்.. அப்புறம்..’’
‘‘அந்த சமிக்ஞைகள் சொல்லும் சேதி என்ன தாயே..’’
‘‘நீயே உணர்வதுதானே சிறப்பு...’’
சிரித்தாள் அந்தக் கருப்பு மின்னல் காரி. கரும்புக் கன்னல்காரி.
பிரகாரம் சுற்ற ஆரம்பித்தேன். அந்தத் தலத்தின் பழமை வாசனை, அந்தத் தலத்தின் பூர்வ ஜென்ம வாசனை, அந்தத் தலத்தின் யுகாந்திர வாசனை மறுபடியும் என்னுள் கிளர்ந்தெழுந்தன.
இவ்வளவுதான் என்றில்லாமல் ஏராளமான பெண்கள் குழையக் குழைய பொங்கல் படையல் செய்யும் வாசனை தாய் மகள் தொப்புள் கொடி வாசனையாகவே தோன்றியது.
 பாளையம் என்பது படைவீடு. தாய் – மகள் உறவைத் தாண்டிய பெரும்படை வேறேதும் இருக்க முடியுமா.. தாய் மகள் உறவைத் தாண்டிய பாதுகாப்பு வேறேதும் இருக்க முடியுமா.. அதனால்தான் அம்மையின் திருவடியில் இந்தப் பெண்கள் பாதுகாப்பாக, நெகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அம்மாவுக்காகப் பார்த்துப் பார்த்து அக்கறையாகச் சமைப்பது மாதிரி பொங்கல் வைக்கிறார்கள். அது வெறும் பொங்கல் இல்லை. பூர்வ ஜென்மத்து நினைவுகளை அரசி, வெல்லமாக நிரப்பி இந்த ஜென்மத்து நன்றிகளைப் பாலாக்கி, இனிவரும் பிறவிக்கான நல்விதைகளாக முந்திரியும், ஏலக்காயும் சேர்த்து அன்பினால் குழைத்துப் பொங்கலிட்டுக் குலவையிட்டார்கள்.
பட்டாடையும், உண்டியல் நிரப்பும் செல்வமுமாக இல்லாமல் விலை மதிப்பு எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட வேப்பிலை ஆடையோடு பல பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேர்மை நெஞ்சம் நெகிழ்த்துகிறது.
‘‘வேப்பிலைக்கு ஈடா வேறேது இருக்கு? வேப்பிலைதான் காத்து. வேப்பிலைதான் நிழல். வேப்பிலைதான் மருந்து. வேப்பிலைதான் பெரிய பாளையத்தம்மன்... அம்மை வேறெதையும் கேட்கல.. நம்ம அன்பைத்தானே கேக்கறா...’’
பெண்கள் பல அனுபவங்களைப் பேசியபடியே பொங்கல் கிளறிய போது மந்திரங்கள், அனுஷ்டானங்கள், புரியாத மொழியில் ஜபங்கள் என்றில்லாமல் பெரியபாளையத்து பவானி அம்மன் மக்கள் அம்மனாக, மக்கள் மொழி அம்மனாக இருக்கும் விஸ்வரூபம் புரிந்தது.
வேப்பங்குலையிலிருந்த வேப்பம்பழம் ஒன்றைச் சுவைத்தேன். காயாக இருக்கையில் கசப்பதும், கனிந்ததும் இனிப்பதுமான இந்தச் சிறுபழமும் வாழ்க்கையின் அடையாளம் தானே... முதலில் கசக்கிற வாழ்க்கை, அனுபவமும், பக்குவம் சேரச் சேர இனிக்கிறதே... அதனால்தான் தனக்கான விருப்பமாக வேப்பிலையை, வேப்ப மரத்தை உணர்த்துகிறாளோ அம்மை. அதன் மூலம் அவள் சொல்லும் சூட்சுமம் இன்னுமொன்றும் உண்டு. நாமும் வேப்பங்காய்க் கசப்பிலிருந்து கனிந்து வேப்பம்பழ இனிப்பாக மாற வேண்டும். வேப்பங்காயின் அதே கூடுதான். வேப்பங்காயின் அதே சதைப்பற்றுதான். கசப்பிலிருந்து இனிப்பாக ரசவாதம் போல மாறுகிறது. அதே உருவத்தோடு இருக்கும் நாம், நம் மனசைக் கனிய வைத்து இனிக்கவும் வைக்க வேண்டும் என்னும் சூட்சுமத்தை உணர்த்துகிறாள் அம்மை.
மனசுக்குள் பேசினேன் அம்மையிடம். ‘‘கம்சனிடமிருந்து தப்பித்து பாளையத்தம்மனாகக் குடிகொண்டு காத்திருக்கிறாய்... பல பெண்களுக்குக் கம்சனிடமிருந்து தப்பித்தலே இல்லையே தாயே. கம்சன் போலக் கருணையற்றவர்கள், கம்சன் போல இரக்கமற்றவர்கள், கம்சன் போலத் தன்னலம் மிக்கவர்கள், கம்சன் போலச் சிறுமைபடைத்தவர்கள் உருட்டி விளையாண்டு, வாளால் வெட்டி விடுகிற நிலையில்தானே பெண்கள் பலரும் இருக்கிறார்கள். கம்சனிடமிருந்து தற்காத்துக் கொள்ளப் பெண்ணுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறதே தாயே... இது நியாயமா...’’
மனசுக்குள் குமைந்தது இந்தக்கேள்வி. மனசுக்குள் குடைந்தது இந்தக்கேள்வி. பிரகாரம் முழுக்கப் பெண்கள். பொங்கல் பெண்கள், வேப்பிலைப் பெண்கள், கரகப் பெண்கள், அங்கப்பிரதட்சணப் பெண்கள், எரியும் அடுப்பு நெருப்பை சர்வ சகலுமாகக் கையால் சமாளிக்கும் பெண்கள்.
சட்டென்று பொறி தட்டியது. பெண்ணுக்கு, அவளின் கொதிநிலை மனசுக்கு இதெல்லாம்தானே ஆயுதங்கள்.. இதெல்லாம்தானே கவசங்கள்.. இதெல்லாம்தானே பெரிய பாளையத்தம்மனின் பாதுகாப்பு நீட்சிகள்...
மூன்றாம் மனிதர் மூலமாக அம்மையை அணுகுவதாக இல்லாமல், தன் சக்திக்கு ஏற்ற வகையில், எளிமையின் சீதனங்களால் தனக்கான பாதுகாப்பு வளையத்தைப் பெண்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். இதெல்லாம் பவானி அம்மனின் அருள் வடிவங்கள். அதையே என் காப்பாகக் கொள்கிறேன் என்கிற மகளின் எளிய நம்பிக்கைதானே கம்சனிடமிருந்து காப்பாற்றும் சுய ஆயுதம்.
மறுபடியும் கருவறையில் கருப்பு மின்னலைத் தரிசித்தேன். சிறு உருவம். ஆனால் பெரு வலிமை. வாமன அவதாரம் போல அம்மை. விஸ்வரூபம் போல அம்மை அருள்புரிந்தது.
‘‘கேள்விக்கு பதில் கிடைத்ததா மகளே...’’
‘‘நீயே பதிலாகியிருக்கிறாய் தாயே... இந்த நிறைவே போதும்’’ கைகூப்பினேன். சூட்சுமக்காரி அவள். சூத்திரக்காரியும் அவளே.. அவளைப் புரிந்து கொள்வதே நமக்கான சர்க்கரைப்பொங்கல்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar