Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மூண்டது முதல்நாள் போர்!
 
பக்தி கதைகள்
மூண்டது முதல்நாள் போர்!

ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அதிபதி என்றாலும் புதல்வனின் மறைவு யாரைத்தான் புலம்பி அழச்செய்யாது..
‘துாதன் வீரவாகுவால் என் அன்பு மகன் வச்சிரவாகு அழிந்து விட்டானே. காற்றும், கதிர் ஒளியும் நுழைய முடியாத வீர மகேந்திரபுரத்தில் தனி ஒருவன் புகுந்து நகரையும் நாசப்படுத்தி என் மகனையும் நமனுலகுக்கு அனுப்பிவிட்டானே!’
சின்னக்குழந்தை போல் குலுங்கி குலுங்கி அழுதான் சூரபத்மன். அமைச்சன் தருமகோபன் அருகில் வந்தான்.
‘முப்பத்து முக்கோடி தேவர்களும், அறுபத்தாறுகோடி அசுரர்களும் பணிந்து போற்றும் சூரபத்ம பேரரசரே! என்ன நடந்து விட்டது என்று இப்படி ஏங்கிப் புலம்புகிறீர்கள். உங்கள் தம்பி தாரகனை இழந்தபோது பொங்கி எழுந்து போர்புரியச் சென்றிருந்தால் தேவர்களின் வம்சம் அடியோடு தீர்ந்து போயிருக்கும்’
அப்போது பானுகோபன் எழுந்தான்.
‘தந்தையே.. நான் ஒருவன் இருப்பதை மறந்து விட்டீர்களா. குழந்தையாய் இருந்தபோதே ஆகாயத்திற்குத் தாவி அந்த ஆதவனையே பற்றி இழுத்து வந்தவன் என்று என்னைப் பாராட்டி மகிழ்ந்தீர்கள். இந்திரன், பிரம்மனையும் இரண்டாயிரம் வெள்ளம் சேனைகளையும் இமைக்கும் முன் நான் சென்று வீழ்த்தி வருகிறேன். தங்கள் கட்டளைக்காகத் தான் நான் காத்திருக்கின்றேன்’
அப்போது சூரனின் தம்பி சிங்கமுகன் கூறினான்.
‘அண்ணா.. நான் சொல்வதைச் சற்று பொறுமையாகக் கேளுங்கள். யாக நெருப்பில் உங்கள் தேகத்தையே ஆகுதியாக்கி பரமசிவனிடமிருந்து பெற்ற பல வரங்களை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட அபாக்கிய நிலையை அடைந்துள்ளீர்கள்.
என் தந்தையைப்போன்ற உங்களுக்குத் தலைவணங்குகின்றேன். மன்னிக்க வேண்டும். நீங்கள் செய்தது என்ன? வான்சுமந்த தேவர்களை மீன் சுமக்க வைத்தீர்கள். அண்ணி பதுமகோமளை அமுது துடிக்க, இந்திரன் மனைவியிடம் இதயத்தைப் பறிகொடுத்தீர்கள். வரம்தந்த கடவுளே வேறு வடிவில் வேலெடுத்து போர் புரிய வந்துள்ளார் என்று அறிந்தும் நன்றிமறந்து ‘பல் முளைக்காத பாலகன்’ என்று முருகப்பெருமானையே இகழ்ந்து பேசுகின்றீர்கள்.
நாமும் காசிப முனிவரின் புதல்வர்கள். தேவர்களுக்கும் அவரே தந்தை. அப்படியிருக்க சகோதரர்களைக் கொத்தடிமைகள் போல பயன்படுத்தி கொடுஞ்சிறையில் அடைத்து வைத்துள்ளது ஏற்புடைய செயலா என்று தாங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போதும் நேரம் கடந்துபோய் விடவில்லை. தேவர்களை சிறை நீக்கினால் போர்புரிய திருச்செந்துாருக்கு வந்துள்ள முருகப்பெருமான் நம்மை மன்னிப்பார். திரும்ப கைலாசத்திற்கே அவர் சென்று விடுவார்’.

அமரர்தம் பெரும் சிறையினை நீக்குதிஆயின்
குமர நாயகன் ஈண்டு போர் ஆற்றிடக் குறியான்
நமது குற்றமும் சிந்தையிற் கொள்ளலன்; நாளை
இமை ஒடுங்கு முன் கயிலையின் மீண்டிடும் எந்தாய்

சூரபத்மன் குடல் குலுங்கச்சிரித்தான்.
‘சிங்கமுகனே! நீ எனக்கு புத்திமதி கூறும் அளவுக்கு உயர்ந்து விட்டாயா! சின்னப்பிள்ளை என்னை வெல்வான் என்று நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா... கண்ணிரண்டும் இல்லாதவன் சூரியனைச் சுட்டிக்காட்டி அது ஒரு கனி என்றானாம். கையிரண்டும் இல்லாதவன் அதைப் பறித்துச் சாப்பிடலாம் என்றானாம். அர்த்தமற்ற இந்த பேச்சு கூட பலிக்கலாம். ஆனால் யுத்தத்தில் என்னைத் தோற்கடிக்க எவராலும் ஆகாது’

எண்ணிலாததோர் பாலகன் எனைவெல்வான் என்னக
விண்ணில் ஆதவன் தன்னை ஓர் கனி என வெஃகிக்
கண் இலாதவன் காட்டிடக் கைஇலாதவன் போய்
உள்நிலாதபேர் ஆசையால் பற்றுமாறு ஏக்கும்

(சிங்கமுகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த விவாதங்களில் கந்தபுராண நுாலாசிரியர் கச்சியப்பர் மேலான கவித்துவத்தோடு கடவுளின் தத்துவங்களை அருமையான பாடல்களாக்கித் தந்துள்ளார். மூலநுாலில் அச்செய்யுட்களை நாம் படித்து மகிழலாம்.)
அண்ணா! கடவுளை நாம் சிற்றறிவு கொண்டு அணுகமுடியுமா...

அருவம் ஆகுவன்! உருவமும் ஆகுவன்! அருவும்
உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன்! ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன்! கண்டாய்!
பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடப் பாலார்?    
வேதக் காட்சிக்கும் உபநிடதத்து உச்சியில் விரித்த
போதக் காட்சிக்கும் காணலன்; புதியரில் புதியன்
மூதக்கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக்கு ஆதிதாய் உயிர்க்குயிராய் கின்ற அமலன்.
பலவாறாக அறநெறிகளை எடுத்துக் கூறியும் சூரபத்மன் தான் கொண்டதே குறி என்றிருந்தான். அப்போது சிங்கமுகன் ‘அண்ணா.. நான் தங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுவேன் என்று எண்ணாதீர்கள். என் உணர்வுகளை உங்களிடம் கொட்டினேன். அவ்வளவுதான். கட்டளை இடுங்கள். களத்திற்குச் செல்கிறேன். வெற்றியை உங்கள் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன்’
‘நன்று கூறினாய் தம்பி’ என சூரபத்மன் வாழ்த்தி சிங்கமுகனை ஆரத்தழுவினான்.
........
வீரமகேந்திரபுரத்தின் வீதிகள் வழியே வீணை மீட்டியபடியே வந்த நாரதர் சூரன் அரண்மனைக்குள் நுழைந்தார். சிம்மாசனத்தில் கால்மேல் கால் போட்டபடி கம்பீரமாய் அமர்ந்திருந்த அசுர வேந்தனைக் கண்டார்.
மனத்திற்குள் ‘இவன் மகுடம் கவிழப்போகிறது’ என்று நினைத்தபடி நாரதர் பேருக்கு அவனுக்குஒரு பெரிய வணக்கம் போட்டு ‘வாழ்க! வாழ்க’ என்று ஆசி கூறினார்.
‘யார் நீ.. எங்கிருந்து வருகிறாய். யார் உனக்கு இங்குவர வழி காட்டியது.’ என கோபமாகக் கேட்டான் சூரபத்மன்.
‘சிவபெருமானின் வட கயிலாயத்திலிருந்து நான் வருகின்றேன். ஆசைகளை அறவே நீக்கி உலகநலன் கருதி வாழும் முனிவன்நான். உன் குரு சுக்கிராச்சாரியாரின் நண்பன்.
உன்தம்பி தாரகனை அழித்த சிவபாலன் முருகர் இப்போது உன் நகருக்குப் பக்கத்தில் ‘ஏமகூடம்’ எனும் புதுநகரை சிருஷ்டித்து அங்கே பாடிவீடு அமைத்து உன்னுடன் போர் புரிய பலகோடி பூதப்படைகளுடன் வந்துள்ளார். இச்செய்தியை உன்னிடம் தெரிவிக்கவே இங்கு வந்தேன். குமாரனோடு போர்புரிய உன் படைகளை உடனே அனுப்பு. நான் வருகிறேன்’ என்று சொன்னபடி நாரதர் திரும்பினார்.
நாரதர் தகவலை அடுத்து சூரனிடம் ஒற்றர்கள் வந்தார்கள்.
‘அரசே! முருகப்பெருமான் படைகளுடன் நம் நகரை நெருங்கி விட்டார். திருமால், பிரமன், இந்திரன், லட்சத்து ஒன்பது வீரர்கள், இரண்டாயிரம் வெள்ளம் பூத சேனைகளுடன் ஆறுமுகனின் படை ஆர்ப்பரித்து எல்லையை அடைந்து விட்டது’
பரபரப்போடும், விறுவிறுப்போடும் சூரபத்மன் ‘ஒற்றர்களே! உடனே போர்க்கோலத்துடன் பானுகோபனைப் புறப்பட்டு வரச்சொல்லுங்கள்’ என்று ஆணையிட்டான்.
பானுகோபன் வஜ்ர கவசம் அணிந்தான். அம்பறாத் துாணியும், பாணங்களும் எடுத்துக்கொண்டான். மருங்கில் வாட்படையைச் செருகியும் கால்களில் வீரக்கழல்கள் அணிந்தும், தும்பைப்பூ மாலை அணிந்தும், சதுரங்கச் சேனைகள் சூழ தேரில் ஏறினான்.
‘தந்தையே. விடைதாருங்கள். வெற்றி பெற ஆசி வழங்குங்கள்’ என்றான். சொல்லொணாத மகிழ்ச்சியில் சூரன் திளைத்தான்.
சூரனிடம் வந்த நாரதர் விரைவாக ஏமகூடம் சென்றார். அங்கு பாடிவீட்டில் சேனைகளுடன் இருந்த முருகப்பெருமானிடம் ‘சூரன்மகன் களம்காண புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறான்’ என்ற செய்தியைச் சொன்னார்.
உடனே முருகன் ‘பானுகோபனைப் போரில் வெற்றிகொள்ள வீரவாகுவே ஏற்றவன். முதல்நாள் போருக்கு அவனையே அனுப்புவோம்’ என்றார்.
வீரமகேந்திரபுரம் அருகே போர்ப்படைகளுடன் தங்குவதற்காக முருகப்பெருமான் ஏற்பாடு செய்து அமைத்த ஏமகூடமே தற்போது ‘கதிர்காமம்’ என அழைக்கப்படுகிறது.

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
 மரகத மயூரப் பெருமாள் காண்!
மணிதரளம் வீசி அணி அருவி சூழ
 மருவு கதிர்காம பெருமாள் காண்

என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகின்றார்.
முதல்நாள் போர் மூண்டது.
பானுகோபனும் வீரவாகுவும் ஒருவர்மேல் ஒருவர் பாய்ந்தும், பந்துகள் போல அங்கும் இங்கும் தாவியும் ஆயுதங்களை வீசியும், அம்புகளை ஏவியும் போர் புரிந்தனர்.
– தொடரும்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar