Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மருத்துவரின் மனவேதனை
 
பக்தி கதைகள்
மருத்துவரின் மனவேதனை

அன்று மாலை மருத்துவர் சுந்தரம் திடீரென்று என்னைப் பார்க்க வந்திருந்தார். உலகத்தில் இருந்த மொத்த சோகமும் அவர் முகத்தில் இருந்தது.
‘‘அஞ்சு கோடி சார். நானும் எங்க ஹாஸ்பிடலும் நஷ்ட ஈடு தரணுமாம். என்னுடைய பேஷண்ட் கேஸ் போட்டிருக்கார் சார்’’
‘‘என்னாச்சு?’’
‘‘அவருடைய மனைவிக்கு வலிப்பு நோய் ரொம்ப நாளா இருக்கு. நான் சரியா சிகிச்சை தராததாலதான் நோய் முத்திருச்சின்னு கேஸ் போட்டிருக்கார் சார்.’’
‘‘உங்க ஆஸ்பத்திரில பெரிய வக்கீலப் பிடிப்பாங்க. ஊதித் தள்ளிடலாம்.’’
‘‘எங்க ஆஸ்பத்திரில  என்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போறாங்களாம். அப்பத்தானே  அவங்க பணம் கொடுக்காமத் தப்பிக்க முடியும்? உயிரக் காப்ப்பாத்த வேண்டிய நான் வக்கீல் கோர்ட்டுன்னு அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். என் கேஸ் தோத்துருமாம்.’’
அதிர்ந்தேன். வழக்கில் தோற்றால் இவர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாரே!
‘‘ஆமாம். எல்லாம் போயிரும். போகட்டுமே! எல்லாமே அந்தப் பொம்பளை கொடுத்தது. அவளே திருப்பி எடுத்துக்கட்டுமே!’’
‘‘எந்தப் பொம்பளை?’’
‘‘வேற யாரு, பச்சைப்புடவைக்காரிதான்.  நான் சாப்பிடற ஒவ்வொரு கவளம் சோறும் அவ கொடுத்தது சார். அவ கொடுத்த சோத்த அவளே தட்டி விடறா. என்னப் பட்டினியாப் பாக்கணும்னு அவளுக்கு ஆசை வந்திருச்சி.’’
அவர் சிரித்துக்கொண்டேதான் சொன்னார் என்னால்தான் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுந்தரம் போன்ற நல்ல மனிதர்கள் மனம் வாடினால்  நாட்டுக்கு நல்லதில்லையே!
ஒரு வாரம் கடுமையான நோன்பிருந்தேன். ஒரு வேளை மட்டும்தான் உணவு. தினமும் அவள் கோயிலுக்கு நடந்து சென்றேன், அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடினேன்.
அந்த வெள்ளிக்கிழமை  பச்சைப்புடவைக்காரியின்  பிரசாதத்துடன் சுந்தரத்தைப் பார்க்கச் சென்றேன். அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார், நேரமாகும் என்று சொன்னார்கள். கனத்த மனதுடன் வெளியேறினேன்.
‘‘சுந்தரத்தையேதான் பார்க்கவேண்டுமா? என்னைப் பார்த்தால் ஆகாதோ?’’
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் பச்சை உடையில் ஜொலித்துக்கொண்டிருந்த பச்சைப்புடவைக்காரியை  விழுந்து வணங்கினேன்.
‘‘நீ ஏன் பட்டினி கிடந்து கோயிலுக்கு நடந்து உன் உடலை வருத்திக்கொள்கிறாய்? நான் உன் தாயடா. என்னிடம் வாய்விட்டுக் கேட்டால் போதுமே! நீ கேட்டதை என்று மறுத்திருக்கிறேன்?’’
அழுகை அழுகையாக வந்தது.
‘‘சுந்தரம் என் மனதிற்கினிய மகன். அவனுடைய அன்பில் திளைக்க வேண்டும் என்பதற்காக நான் ஏற்பாடு செய்த நாடகம் இது..’’
அப்படியென்றால் அவருக்கு விடிவு?
‘‘அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று காட்டுகிறேன் பார்.’’
சுந்தரத்தின் கண்காணிப்பில் இருந்த இரண்டு நோயாளிகள் ஒரே சமயத்தில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள்.  சுந்தரத்திடம் பல வருடங்களாக உதவியாளராக இருக்கும் மாலதிதான் அவர்கள் ஆவணங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தாள்.  வேலையின் நடுவே பல இடையூறுகள்.
அந்த இரண்டு நோயாளிகளில் ஒருவர் எண்பது வயதுப் பெண்மணி. இன்னொன்று நான்கு வயதுச் சிறுவன். அவர்களுடைய மருந்துச் சீட்டுக்கள்  மாறிவிட்டன. எண்பது வயது பெண்மணிக்குக் கொடுக்கப்பட்ட வீரியம் மிக்க மருந்துகளை சிறுவனுக்குக் கொடுத்துவிட்டார்கள். சிறுவன் மயங்கி விழுந்தான்,.
சிறுவனின் தந்தை சுந்தரத்தை அலைபேசியில் அழைத்து அலறினார்.  அன்று இரவே சிறுவனை மீண்டும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துத்  தீவிர சிகிச்சை செய்தார்கள்.  மருந்துச் சீட்டைப் பார்த்ததுமே நடந்த தவறைக் கண்டுபிடித்துவிட்டார் சுந்தரம். மாலதியைக் கூப்பிட்டுக் கேட்டார். அவள் அவர் காலைப் பற்றிக்கொண்டு கதறினாள்.
சிறுவனுக்கு உரிய மாற்றுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த எண்பது வயதுப் பெண்மணியை அழைத்து மருந்து எதையும் உட்கொள்ள வேண்டாம் என்று சொன்னார் சுந்தரம்.
நான்கு நாட்கள் மருத்துவமனையில் உள்– நோயாளியாக இருந்தான் சிறுவன். எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டான்.
‘‘ஒரு லட்சம் ரூபா பில் போட்டிருக்காங்கய்யா.  எப்படிக் கட்டப்போறேன்னு தெரியலங்கய்யா.’’ சிறுவனின் தந்தை சுந்தரத்திடம் அழுதார்.
சுந்தரம் நேராக பில்லிங் பிரிவுக்குச் சென்றார்.
‘‘அந்தச் சிறுவன் எனக்குச் சொந்தம். அவர்களிடம் பணம் வாங்க வேண்டாம். பில் தொகையை என் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுங்கள்.’’ என்று சொல்லிவிட்டு வந்தார்.
அன்று மாலையே மருத்துவமனையின் தலைவர் சுந்தரத்தை அழைத்தார்.
‘‘அந்தப் பையன் உங்களுக்குச் சொந்தம்னா முதல் தரம் பில் போட்டபோதே சொல்லியிருக்கலாமே!’’
சுந்தரம் அனுபவித்த தர்ம சங்கடம் அவருக்குத்தான் தெரியும். மாலதி செய்த தவறினால்தான் சிறுவனை இரண்டாம் முறை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வந்தது என்று ஒரு நிமிடத்தில் சொல்லிவிடலாம். மாலதியின் வேலை போய்விடும். ஏற்கனவே மாலதிக்கு ஆயிரம் பிரச்னைகள். அவள் கணவனுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவன் வேலைக்குச் செல்லவில்லை.  மாலதியின் வேலையும் போய்விட்டால்  அவள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடும். அவள் நன்றாக  வேலை செய்யக்கூடியவள்தான். அன்று இருந்த நெருக்கடியான சூழ்நிலை காரணமாக  அவளையும் மீறி அந்தத் தவறு நடந்துவிட்டது.
‘‘உங்களக் கையெடுத்துக் கும்பிடறேன். இதுக்கு மேல என்ன எதுவும் கேக்காதீங்க. நான் பதில் சொல்ற நிலையில  இல்ல. உங்களுக்கு பணம் அவசரமா வேணும்னா நான் கட்டறேன்.’’
அன்று இரவு சுந்தரம் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இரவு இரண்டு மணி வாக்கில் ஒரு நாற்பத்தியைந்து பெண்ணைத் துாக்கிக்கொண்டு  வந்தார்கள். பக்கவாதம். பேச்சு மூச்சு இல்லை. சுந்தரம்  ஓடினார். சின்ன  டாக்டர் வழிமறித்தார்.
‘‘டாக்டர் உங்கமேல அஞ்சு கோடிக்கு கேஸ் போட்டிருக்கறவர் பொண்டாட்டி இவங்க. என்ன செய்யப் போறீங்க?’’
‘‘யாரா இருந்தா என்ன? பச்சைப்புடவைக்காரி ஒரு உயிரக் காப்பாத்தற பொறுப்ப என்கிட்ட கொடுத்திருக்கா. ஒரு டாக்டரா நான் செய்ய வேண்டியதச்  செய்யப்போறேன்.‘‘
‘‘நம்ம தலைவருக்கு இது தெரிஞ்சா…’’
‘‘தெரியட்டுமே! என்னை வேலைய விட்டுத் துாக்குவாங்க. அதுக்காக என்னத் தேடி வந்த ஒரு நோயாளியச் சாகவிடமுடியுமா?’’
‘‘இருந்தாலும்…‘‘
‘‘நானே செத்தாலும் கவலையில்ல. இந்தம்மா உயிரக் காப்பாத்தப்போறேன். பேசிக்கிட்டு இருக்காம ஆகவேண்டிய வேலையப் பாருங்க..’’
அன்று இரவு முழுவதும் கண்விழித்து அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினார் சுந்தரம்.
அதிகாலை ஐந்து மணி. முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தையே பார்த்தபடி தன் அறையில்  அமர்ந்திருந்தார் சுந்தரம்.
பெரிய சத்தத்துடன் கதவு தட்டப்பட்டது. பதறிப்போய் கதவைத் திறந்தார் சுந்தரம். வெளியே நின்றுகொண்டிருந்தவர் சுந்தரத்தின் காலில் வேரறுந்த மரமாய் விழுந்து கதறினார்.
பக்கவாத நோயாளியின் கணவர் அவர்.
‘‘டாக்டர் ஐயா, நீங்க தெய்வம். நீங்க சொன்னத சின்ன டாக்டர் சொன்னாருங்க. நீங்க நெனச்சிருந்தா என் மனைவியச் சாக விட்டிருக்கலாம். ஆனா அவளக் காப்பாத்தி பெரிய ஆளாயிட்டீங்க. இப்பதான் என்னுடைய சின்னத்தனம் இன்னும் அசிங்கமாத் தெரியுது. உங்க மேல போட்ட கேச நான் வாபஸ் வாங்கிக்கறேன். ஆனா நீங்க ஒரு உதவி செய்யணும்..’’
சுந்தரம் தன் பார்வையையே கேள்விக்குறியாக்கினார்.
‘‘உங்க போட்டோ ஒண்ணக் கொடுங்கய்யா. எங்க வீட்டு பூஜை ரூம்ல வச்சி தெனமும் கும்பிடறேன். அப்படியாவது நான் நல்லவனாகறேனான்னு பார்க்கறேன்.’’
தலைவர் சுந்தரத்தை அழைப்பதாகச் சொன்னார்கள். ஓடினார்.
‘‘எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். மாலதி தன் தப்ப ஒத்துக்கிட்டு அழுதா. உங்களுக்காக அவள மன்னிச்சிட்டேன். உங்க மேல நடவடிக்கை எடுக்கறதா இருந்தேன். அதுக்கு வெக்கப்படறேன். இந்த ஆஸ்பத்திரியோட சொத்து இந்தக் கட்டடமோ உபகரணங்களோ இல்ல. உங்கள மாதிரி நல்ல மனசுள்ள டாக்டருங்கதான்.
உங்களை துறைத் தலைவர் ஆக்கியிருக்கேன். உங்க சம்பளத்த ரெட்டிப்பாக்கியிருக்கேன். சந்தோஷம்தானே?’’
தலைவர் இருக்கைக்கு மேலேயிருந்த மீனாட்சி படத்தைப் பார்த்தார் சுந்தரம். அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar