Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மீன்குளத்தி அம்மன் மகோன்னதம்
 
பக்தி கதைகள்
மீன்குளத்தி அம்மன் மகோன்னதம்

இதுதான் பூலோக சொர்க்கம். வாழ்நாள் முழுக்க இந்தத் தலத்திலேயே குடியிருந்து விடலாம். வேறெந்த மகிழ்ச்சியும் இந்த மண்ணின் மகிழ்ச்சிக்குச் சமமில்லை. வேறெந்த சாதனை தரும் நிறைவும் இந்த மண்ணின் நிறைவுக்குச் சமமில்லை. போதும். மூச்சுத் திணறல் போதும். மூச்சடைப்பு போதும். வெற்றியின் பின்னால் ஓட்டம் போதும். செல்வத்தின் பின்னால் ஓட்டம் போதும்.  இதுதான் என் உயிரின் பிடிமானம்.
இப்படியாக ஓர் இடத்தில் நின்று மெய்யுருக, நினைவுருக, கண்ணுருக, உயிர் உருக நினைக்க முடியுமா? ஆமாம் முடியும். அது அந்தத் தலத்தின் மகிமை. அந்த மீன்குளத்தி அம்மனின் மகிமை. அம்மையின் பேரன்பு வாய்க்குமானால், அம்மையின் கருணை வாய்க்குமானால் அதுவே நம் வாழ்வின் பேறு. நம் நம்பிக்கையின் பேறு. நம் இருப்பின் பேறு. நம் சுவாசத்தின் பேறு.
இயற்கையின் வர்ண ஜாலம் உச்சத்தில் செழிக்கின்ற புண்ணிய பூமி. பசுமை நிறம், நீல நிறம், மண்ணின் செந்நிறம், திருக்கோயிலின் வானவில் நிறம், அம்மைக்குச் சாத்தப்பட்டிருக்கும். மாலைகளின் மாயநிறம் இப்படியாக கேரளா பாலக்காடு பல்லசேனா என்ற சிறு கிராமத்தின் மாயாஜால நிறக்கோலம் பேரழகு. அந்தப் பேரழகின் ஆதியும் அந்தமுமாக இருப்பவள்தான் மீன்குளத்தி பகவதி அம்மன்.
 மதுரை மீனாட்சியின் அவதாரமே பகவதி அம்மன் என்னும் வழிவழி சேதி சொல்கிறது. கேரள பூமி கடவுளின் பூமி என்று கொண்டாடப்படுவதன் காரணிகளில் பிரதானமான ஒன்று கோயில்களில் நிலவும் சாந்தியும், சாந்நித்யமும், அனாவசிய அலப்பறைகள் இல்லாததும். மந்திரங்களின் ஒலி கேட்கும். எல்லோருக்குமே சிறிய துண்டு வாழை இலையில் சந்தனம், குங்குமம், பூக்கள் தருவது இன்னும் சில காரணிகள், தட்டில் தட்சணை போட்டால் குங்குமம் பூ கிடைக்கும். இல்லையென்றால் இறுகிய முகத்தோடு நகருங்க.. நகருங்க.. என்னும் கடுமைதான் கிடைக்கும் என்பதான சூழல் இல்லாததும்தான் கேரளத்திருத்தலங்களின் புனிதக்காற்றுக்கும், புனிதத்தன்மைக்கும் காரணிகள்.
மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில் அச்சொட்டாக மனநிம்மதியின் கோயில். வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய், நேற்றாகி, இன்றாகி, எல்லாமாகி இருப்பவளைத் தரிசிக்கும் பொழுது வரம் பெற்ற பொழுதுதான்.
வித்தியாசமான முறையில் மலர் அலங்காரம், நெகிழ வைக்கும் மாலை அலங்காரம் என்று மீன்குளத்தி அம்மனைத் தரிசிக்கையில் ‘‘ஹா..ஹா..ஹா..’’ என்று மனசு பரிதவிக்கிறது.
வேறென்ன கொடுத்துவிட முடியும் நம்மால்? அம்மையின் புனிதத்துக்குக் கலப்படம் இல்லாத அன்பும், கலப்படம் இல்லாத மலர்களும்தானே காணிக்கையாக்கிட முடியும் என்பதான புரிதல் அது.
முற்ற முழுக்கக் கலப்பட ஜீவிகள் நாம். எண்ணத்தில் கலப்படம். வார்த்தையில் கலப்படம். வாழ்க்கையில் கலப்படம். சிந்தனை சொல், செயல் என்றாகி நிற்கும் கலப்பட ஜீவிகளான நாம் புனித அம்மையை, புண்ணிய அம்மையை. தெய்வ அம்மையை, தெய்வீக அம்மையைத் தரிசிக்க வாய்ப்பது என்பது கொடுப்பினை. அழுக்கும், அழுக்காறும், பொறாமையும், பொச்சரிப்பும், கோபமும், தாபமும், வேகமும், வீறாப்பும் நமது உயரத்தில், உள்ளத்தில் கலந்திருக்கிறது. குருதியிலும் நிறைந்திருக்கிறது. ஆனால் அம்மை தரிசனத்தில் நாம் அங்கே காணாமல் போகிறோம். அம்மை தரிசனத்தில் நாம் அங்கே கரைந்து போகிறோம்.
பல்லசேனா என்னும் கிராமத்தின் வாசனை நம் பூர்வ ஜென்ம வாசனையாகத் தோன்றுகிறது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த வாசனையை சுவாசித்த நம் நாசி பல்லசேனா வாசனையை அறிந்து கொள்கிறது. காரணம் காலம் காலமாக நிறைந்திருக்கும் மீன் குளத்தி பகவதி அம்மனின் திருமலர் வாசனை அது.
மண் மாறியிருக்கும். காற்று மாறியிருக்கும். நீரும் மாறியிருக்கும். ஆனால் அம்மை எப்போதும் அதே அம்மைதானே. கிராமத்துக்கே உரியதான தென்னை மரங்கள். வயல் வெளிகள். நீர் நிலைகள், செம்மண் பாதைகள். வெள்ளந்தி மனிதர்கள் என்று திரும்பிய திசையெல்லாம் மனசுக்குள் குடியேறும் பேரழகு. ஊரின் நீர் நிலைகளே பேரழகு என்கையில் அம்மையின் திருக்குளத்தின் அகலமும், குளிர்மையும், நீர்மையும், செழுமையும் வார்த்தைக்கு வசப்படாது.
கேரள கோயில்களின் நிர்மாணம் மிக வித்தியாசமானதாக இருக்கும். கேரளக் குத்து விளக்குகளும், எண்ணெய் வாசமும், செண்டை மேளமும், ேஹாமப் புகை அழகும் புல்லரிக்க வைக்கின்றன.  செம்மை, செம்மை என்பதுதான் மீன்குளத்தி அம்மன் திருக்கோயிலின் அர்த்தம். அடையாளம். கொடிமரத்தின் கம்பீரமும், கோயிலின் துாய்மையும், வரவேற்கும் இரண்டு யானைகளின் திருமுகமும், பூக்களின் தோரணமும் கைகூப்பி வணங்கும் மக்களின் நெகிழ்ச்சியும், பூஜை செய்யும் பெரியவர்களின் அர்ப்பணிப்பும் பார்க்கவும் உணரவும் அலாதியானவை. வித்தியாசமான கலை நுணுக்கம், நிர்மாணம், வழிபாட்டு முறைகள் என்பதையெல்லாம் தாண்டி ஈர்க்கும் ஒரே சக்தி மீன்குளத்தி அம்மன்தான்.
பெருங்குளத்தில் நீந்தித் துள்ளும் மீன்கள் என் காதில் ரகசியம் சொல்லின. ‘‘அம்மாவைப் பார்க்கப் போறியா. நல்லபடியாப் போய்ப்பாரு... என்ன கேக்கப்போற அம்மாகிட்ட?’’
என்னிடம் பதில் இல்லை. கோயில் முகப்பில் வரவேற்கும் யானை முகபடாம்கள். எத்தனை கூட்டமிருந்தாலும் எந்தத் தள்ளுமுள்ளும் இல்லை. அவரவர் வேண்டுதலோடு எல்லோரின் தேடலும் மீன்குளத்தி அம்மனின் திருமுகமும், அருள் விழிகளும்தான். அம்மையின் திருமார்பு துவங்கி கிரீடம் வரைக்குமான பீடம். வானவில் வண்ணமாயைகளால் பிரம்மாண்டமானதாகத் தோன்றுகிறது.
அம்மையிடம் ஆயுதங்கள் இல்லை. அம்மையிடம் ஆக்ரோஷம் இல்லை. அம்மையிடம் சூரசம்ஹாரம் இல்லை. அம்மையிடம் போர் வியூகம் இல்லை. ‘‘நீ மிகமிகக் குளிர்மையானவள் தாயே.. உன் திருமுகத்தின் புனிதம் தரிசிக்கையில் உன் காலடியில் கரைந்தால் போதும் என்றாகிறது. உன் திருவிழியில் உறைந்தால் போதும் என்றாகிறது. நீ நின்று நிதானமாக ஒளிரும் குத்து விளக்கு. எளிமையாக ஒளிவீசும் தீபத்தின் கிழக்கு’’ என்றேன்.
‘‘ம் அப்புறம். வேறென்ன மகளே.’’
‘‘வேறொன்றுமில்லை தாயே..’’
‘‘எப்போதும் கேள்விகள் கேட்பாயே’’
‘‘மனசு நிச்சலனமாக இருக்கிறது. நிறைவாக இருக்கிறது. இந்தத் திருத்தலம் நிம்மதித் தலமாக இருக்கிறது. சந்தோஷத் தலமாக இருக்கிறது. மனசு தளும்பத் தளும்ப சுகானுபவமாக இருக்கிறது அம்மையே.’’
‘‘பிரகாரம் சுற்றி வந்தபின் சொல் மகளே..’’
நிதானமாக நடந்தேன். புதுமையின் சாயல்கள் தீண்டாத நுாற்றாண்டுப் பழமையும், மண் சார்ந்த வழமையும் கலந்த சாயல் திரும்பிய இடமெல்லாம் தோரணமாக வரவேற்கும் நெல் கதிர்கள், கணபதி, துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், சாஸ்தா, பிரம்ம ராட்சஸர்கள் என சந்நிதிகள் இருந்தாலும் மனசு மீன்குளத்தி அம்மனையே மறுபடியும் தேடுகிறது.
‘‘மீன் குளத்தி தேவி எல்லாம் பரிபாலிக்கும். விஷமிக்கேன்டா..’’ இதே ஆறுதல் குரலும், தேடுதல் கண்களுமாக மக்கள் கூப்பிய கரங்களோடு. என்னவொரு நம்பிக்கை அம்மையின் காலடி குறித்தும், திருவருள் குறித்தும், ‘‘எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பா..’’ என்று சொல்கையில் அம்மையிடம் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை என்றாகிறது. அம்மைதான் புயல்களை உருவாக்குகிறாள் என்றாகிறது. அம்மைதான் புயல்களை நீர்த்துப் போக வைக்கிறாள் என்றாகிறது. அம்மைதான் பிரளயங்களை உருவாக்குகிறாள் என்றாகிறது. அம்மைதான் பிரளய இடுக்குகளிடையே பூக்களையும் பூக்கச் செய்கிறாள் என்றாகிறது.
மறுபடியும் அம்மையிடம் நான்.
‘‘சொல் மகளே...’’
‘‘சொல்வதற்கு ஒன்றுமில்லை தாயே..’’
‘‘நிறைவாக உணர்கிறாயா..’’
‘‘குறையில்லாமல் உணர்கிறேன்’’
‘‘மகிழ்வாக உணர்கிறாயா..’’
‘‘வருத்தமில்லாமல் உணர்கிறேன்’’
‘‘கண்ணீரில்லாமல் உணர்கிறாயா..’’
‘‘கவலை இல்லாமல் உணர்கிறேன்’’
சிரித்தாள் அம்மை. வாழை இலைத்துண்டில் களபமும், பூவும், குங்குமமும் பெற்று குளத்தங்கரையில் நின்றேன். நீரின் அழுக்கைத்தின்றும் மீன்கள் மகிழ்ச்சியாகத் துள்ளி நீந்தின.
நம் அழுக்கை நாமே தின்று நம்மைச் சுத்தரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே மீன்குளத்தி அம்மனாகியிருக்கிறாள் அந்தத்தாய்...
– அடுத்த வாரம் நிறைவுபெறும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar