Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சொதப்பிய கணக்கு
 
பக்தி கதைகள்
சொதப்பிய கணக்கு

‘‘என்ன ஆடிட்டர் சார், கம்பெனிக் கணக்க  இப்படி சொதப்பி  வச்சிருக்கீங்க? பல லட்ச ரூபா அபராதம் கட்டச் சொல்லி அரசாங்கத்துலருந்து  நோட்டீஸ் வந்திருக்கு.
‘‘பைசா சுத்தமா பீஸ் வாங்கறீங்கள்ல? கணக்கச் சரியாப் பாக்க வேண்டாமா?, உங்கமேல நான் வச்சிருந்த மதிப்பையும் மரியாதையையும் மொத்தமாக் காலி பண்ணிட்டீங்களே! ‘‘
என்னைத் திட்டிய அந்தப் பெண் ஒரு தொழிலதிபரின் மனைவி. பத்து வருடங்களாக என் வாடிக்கையாளர்.
‘‘வாயத் திறந்து ஏதாவது பேசுங்க சார்.’’
முடிந்தால்தானே! மனமறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. என்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறையாகப் பார்த்துத்தான் அந்தக் கணக்குகளைத் தாக்கல் செய்திருந்தேன்.  என்னைப் பச்சைப்புடவைக்காரி கைவிட்டுவிட்டாளே!
 ‘‘கொஞ்சம் வெளிய இருங்க. கூட்டிட்டுப் போயிடறேன்.’’ - குப்பை கூட்ட வந்தவள் புதிதாக இருக்கிறாளே!
வாடிக்கையாளருடன் சேர்ந்து  நானும் போக முற்பட்டபோது என்னை வழி மறித்தாள் கூட்ட வந்தவள்.
‘‘இனிமேல் என் அடிமை என்று சொல்லிக்கொள்ளாதே! பஞ்சமா பாதகங்களைச் செய்பவர்களையே நான்  கைவிட்டதில்லை. ஒரு தவறும் செய்யாத உன்னைக் கைவிட்டுவிட்டேன் என்று நினைத்துவிட்டாயே!’’
பச்சைப்புடவைக்காரியை இனம் கண்டுகொண்டு அவள் காலில் விழுந்து கதறினேன்.
 ‘‘நான் என்ன செய்யவேண்டும், தாயே!?’’
‘‘மனதில் அன்பு குறையாமல் பார்த்துக்கொள். உன் தொழில் முறையில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய். கலங்காமல் இரு.’’
அறையை மட்டுமில்லாமல் என் மனதையும் கூட்டிப் பெருக்கிவிட்டுப் போய்விட்டாள் பச்சைப்புடவைக்காரி. வெளியே காத்திருந்த வாடிக்கையாளரை அழைத்தேன்.
‘‘அந்த அதிகாரிக்குச் சட்டம் சரியாத் தெரியாததால நோட்டீஸ் அனுப்பியிருக்கான். இப்பவே சூடா ஒரு பதில் போட்டுரலாம்.’’
ஒரு வாரம் கழித்து இன்னும் அதிகமான ஆவேசத்துடன் அந்தப் பெண் என்னைக் காணவந்திருந்தாள்.
‘‘உங்க பதில ஏத்துக்கமுடியாதாம். காட்டமா நோட்டீஸ் வந்திருக்கு.  இன்னும் ரெண்டு நாள்ல  அந்த அதிகாரிய நேர்ல பாக்கலேன்னா என்னையும் என் புருஷனையும் கைது செய்ய வாரண்ட் அனுப்பிச்சிருவாரம். என்ன சார் நடக்குது இங்க?’’
எனக்கும் புரியவில்லை.
நோட்டீஸ் அனுப்பிய அதிகாரியின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசினேன். ‘‘காசக் கொட்டிக் கொடுத்தாத்தான் அந்தாளு அடங்குவான்’’ என்று சொல்லிவிட்டார். என் வாடிக்கையாளரிடம் அப்படியே சொன்னேன்.
‘‘எவ்வளவு லட்சம் கேட்டாலும் கொடுத்திருங்க.  கைது பண்ணிட்டாங்கன்னா என்னால வெளிய தல காட்டமுடியாது. நானும் என் புருஷனும் நாண்டுக்கிட்டுச் செத்திருவோம்.’’
இவர்கள்மேல் எந்தத் தவறும் இல்லை. என்றாலும் இப்படி படுத்துகிறானே என்று மனம் அழுதது.
‘‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். யோசித்துச் சொல்கிறேன்.’’
இரண்டு நாட்கள் கழித்து அலைபேசியில் அழைத்தாள் அவள்.
‘‘நாளைக்கு நாங்க  வரலேன்னா நாளை மறுநாள் அரஸ்ட் வாரண்டு வந்திருமாம். எங்க உயிரும் மானமும் உங்க கையிலதான் சார் இருக்கு.’’
அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு நடந்தே பச்சைப்புடவைக்காரியின் கோயிலுக்குச் சென்றேன்.  நடுவே ஏதாவது ஒரு வடிவில் என்னைப் பார்த்து ஏற்ற தீர்வைச் சொல்வாள் என்று நம்பினேன். எதுவும் நடக்கவில்லை.
மறு நாள் காலை வாடிக்கையாளரிடமிருந்து அழைப்பு.  
‘‘கம்பெனி அக்கவுண்டண்ட பத்து லட்ச ரூபாயோட  கார்ல அனுப்பி வைக்கறேன். அதே கார்ல சென்னைக்குப் போய் கேச முடிச்சிட்டு வந்திருங்க.’’
அலைபேசி மீண்டும் ஒலித்தது. அரசுத் துறை அதிகாரியின் அலுவலகத்திலிருந்து எனக்குத் தெரிந்தவர் பேசினார்.
‘‘உங்க கிளையண்ட்டுக்கு அரஸ்ட் வாரண்ட் தயார் பண்ணிக்கிட்டு இருக்கோம்.’’
திகைப்புடன் முன்னால் இருந்த மீனாட்சியின் படத்தைப் பார்த்தேன். அவள் என்னை நிச்சயம் கைவிடமாட்டாள்.
‘‘இப்பவே பணத்தோட உங்கள வந்து பாக்கறேன். எப்படியாவது.. ’’
‘‘தேவையில்ல,  ஆடிட்டர் சார். அந்தாளுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருச்சி. வெள்ளிக்கிழமை கெளம்பிருவாரு. அவரு இடத்துக்கு நான்தான் வரப்போறேன். உங்க கேசப் படிச்சிப் பாத்தேன். நீங்க எல்லாம் சரியாத்தான் பண்ணியிருக்கீங்க. நான் ஒரு குறிப்பு எழுதி அந்த பைல க்ளோஸ் பண்ணிடறேன்.’’
‘‘அரஸ்ட் வாரண்ட்.. .. ‘‘
‘‘அது தபால்ல சேராம நான் பாத்துக்கறேன். எதுக்கும் உங்க கிளையண்ட நாலு நாள் வெளியூர் போகச் சொல்லிருங்க.’’
வாடிக்கையாளரிடம் சொன்னேன்.
‘‘ஏதானும் ஆச்சுன்னா எங்க உயிருக்கு நீங்கதான் பொறுப்பு,.’’ என்று பயமுறுத்தினார்.  கணவனுடன் உள்ளபடியே அன்று வெளியூர் போவதாகச் சொன்னார்.
வியாழக்கிழமை இரவு நான் துாங்கவில்லை. பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தபடி  கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தேன்.
வெள்ளிக்கிழமை பதினொரு மணி வாக்கில்  அரசுத் துறை அலுவலகத்திலிருந்து என்னைக் கூப்பிட்டார்கள்.
எனக்குத் தெரிந்தவர்.
‘‘ சார் காலையில கற்பகாம்பாள் கோயிலுக்குப் போனேன். அவளுடைய ஆசியோட இந்தப் பதவிய எடுத்துக்கிட்டேன். நான் போட்ட முதல் ஆர்டர் உங்க கிளையண்ட் மேல போட்ட கேச ரத்து செஞ்சதுதான். அரஸ்டு வாரண்டையும் ரத்து பண்ணிட்டேன். இனிமே எங்க பக்கத்திலிருந்து எந்தத் தொந்தரவும் இருக்காது ’’
வாடிக்கையாளரை அலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன். பெரிதாக அழுதுவிட்டார்.
‘‘உணர்ச்சி வேகத்துல உங்களத் தப்பாப் பேசிட்டேன், ஆடிட்டர் சார். உங்கக் கூடப் பொறந்தவளா நெனச்சி என்ன மன்னிச்சிருங்க. அந்தப் பத்து லட்சத்த அப்படியே உங்ககிட்ட கொண்டுவந்து தரச் சொல்றேன். எனக்காக வாங்கிக்கங்க.’’
‘‘வேண்டாம்மா. அத வச்சி ஏதாவது நல்ல காரியம் பண்ணுங்க.’’
‘‘ஏன் சார் வர லட்சுமிய வேண்டாங்கறீங்க?’’
‘‘இந்த விவகாரத்துல உங்களக் காப்பாத்தினது பச்சைப்புடவைக்காரி. அவளுக்குத்தான் நீங்க இந்தப் பத்து லட்சத்தக் கொடுக்கணும். அடுத்தவங்களுக்கு உதவி செஞ்சீங்கன்னா பணம் நேர அவகிட்டப் போய்ச் சேந்திரும்.’’
பேசி முடித்ததும் உதவியாளர் ஓடி வந்தார்.
‘‘டாக்டர் பார்வதின்னு ஒத்தங்க வந்திருக்காங்க. ‘‘
அறைக்குள் கம்பீரமாக நுழைந்தவளைப் பார்த்ததும். அவள் யாரென்று தெரிந்துவிட்டது.
என்னக் கொத்தடிமையாகக் கொண்டவளின் கால்களில் விழுந்து வணங்கினேன்.
‘‘இன்னும் ஆறு மாதம் கழித்து அந்த அதிகாரியின் நிலைமையைப் பார்.’’
அரசியலில் செல்வாக்குள்ள ஒரு தலைவரிடம் வழக்கமான தன் லஞ்ச நாடகத்தை அரங்கேற்றப் பார்த்திருக்கிறார் அந்த அதிகாரி. அவர் இவரைப் பற்றி போட வேண்டிய இடத்தில் போட்டுக்கொடுத்தார். சிபிஐ விசாரணையில் மாட்டிகொண்டு கடைசியில் வேறு வழி தோன்றாமல் தற்கொலை செய்துகொண்டார் அந்த அதிகாரி.
‘‘பஞ்சமா பாதங்களைச் செய்பவர்களையும் வாழ வைப்பேன் என்றீர்கள். இவரை அழித்துவிட்டீர்களே!’’
‘‘அழிக்கவில்லையப்பா. அவனைத் திருத்த நான் படாத பாடு பட்டேன். எதுவும் பலிக்கவில்லை. அவனை  மீண்டும் உருவாக்குவேன். அடுத்த பிறவியில் தேறுகிறானா பார்ப்போம். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவனும்  என்னிடம் ஒன்றும்வரை என் வேலை தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கும். முதலில்  ஜீவன்களின் மனதை மாற்றுவேன், வாழும் சூழ்நிலையை மாற்றுவேன். கடைசி முயற்சியாக உடலை மாற்றுவேன், பிறவியை மாற்றுவேன்.  ஆனால் யாரையும் அழிக்கமாட்டேன்.’’
நான் மவுனமாக இருந்தேன்.
 ‘‘ தீயவர்களை தண்டிக்கும் சக்தியை உனக்குத் தரலாம் என்று இருக்கிறேன்.’’
‘‘வேண்டாம் தாயே. அது பெரிய ஆபத்து. அந்தச் சக்தியைச் செயல்படுத்த யார் தீயவர் என்பதை உணரும் ஞானம் வேண்டும். தண்டனையின் அளவைப் பற்றிய ஞானம் வேண்டும்.’’
‘‘அதையும் கொடுக்கிறேன்.’’
‘‘அதற்குப் பதிலாக வேறு ஒன்றைக் கொடுங்கள்.’’
‘‘என்ன வேண்டும்?’’
‘‘அந்த அதிகாரியைப் போன்ற தீயவர்கள் என் வாழ்வில் குறுக்கிடும்போது நான் அவர்களை வெறுக்கக்கூடாது. அவர்கள் மனதில் அன்பு நிறைய வேண்டும் என்று உங்களிடம் பிரார்த்தனை செய்யும் மனதைக் கொடுங்கள். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொடுங்கள். அது போதும்.’’
கலகலவென்று சிரித்தபடி காற்றுடன் கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar