Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » என்னுள்ளிருக்கும் அம்மை
 
பக்தி கதைகள்
என்னுள்ளிருக்கும் அம்மை

‘எங்கெங்கும் காணினும் சக்தியடா அந்த ஏழுகடல் அவள் வண்ணமடா...’’
இது நிஜம்தானே? சிவம் என்பது அசைவற்றது. அதிர்வுகளற்றது. சக்தி என்பது அசைவின் உச்சம். அதிர்வுகளின் உச்சம். சக்தியின் ஆற்றலே இயக்கமாகிறது. இயக்கமற்ற உயிரிக்கு, உயிர்த்துளிக்கு அர்த்தமில்லை. இயங்குவதும், இயக்குவதும், படைப்பு அதிர்வை உண்டாக்குவதும் சக்திதான்.
சக்தி அரூபமாக இருக்கலாம். ரூபமாக இருக்கலாம். இசையாக இருக்கலாம். மவுளனமாக இருக்கலாம். அருவியின் இயக்கமும் சக்திதான். பனிக்கட்டியின் இறுக்கமும் சக்திதான். நதி ஓட்டமும் சக்திதான். குளமான நிரின் கூட்டமும் சக்திதான். பெருநெருப்பும் சக்திதான். நெருப்பு உறையும் தீக்குச்சி மருந்தும் சக்திதான். பசுமை இலையும் சக்திதான். சருகும் சக்திதான், வைரமும் சக்திதான், வைரம் மறைந்திருக்கும் மரக்கட்டையும் சக்திதான். ஆண்மையும் சக்திதான், பெண்மையும் சக்திதான்.
கடவுள் இருப்பை எற்கலாம். மறுக்கலாம். விவாதிக்கலாம். தர்க்கம் செய்யலாம். ஆத்திகமாக்கலாம். நாத்திகமாக்கலாம். ஆனால் சக்தியை மறுக்கும் விஞ்ஞானமும் கிடையாது. சக்தியை மறுக்கும் மெய்ஞானமும் கிடையாது. சக்தியை மறுக்கும் ஆறறிவும் சக்தியை மறுக்கும் பகுத்தறிவும் கிடையாது.
அதனால்தான் எங்கெங்கும் சக்தியை உணரும் ஞானம் வாய்க்கிறது.
சக்தி என்பவள் அரணம், மரணம் இரண்டுமானவள். சக்தி என்பவள் ஆசை, ஆசையின்மை இரண்டுமானவள். சக்தி என்பவள் நேயசக்தி, தீயசக்தி இரண்டுமானவள். சக்தி என்பவள் வியப்பு, மலைப்பு இரண்டுமானவள். சக்தி என்பவள் விண்ணும், மண்ணும் என இரண்டுமானவள். சக்தி என்பவள் தத்துவம், தத்துவமின்மை என இரண்டுமானவள். சக்தி என்பவள் அறிவியல், மெய்யியல் என இரண்டுமானவள்.
‘‘பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலை என்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை அகத்திலும் இருக்கிறது. பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள் பராசக்தி.’’
இது மகாகவி பாரதியின் அருள்வாக்கு. மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்து ருஷ்யாவில் ஆகாவென்றெழுந்தது யுகப்புரட்சி என்று நம்புகிறார். காணிநிலமும் பராசக்தி கொடுப்பாள் என்று நம்புகிறார்.
‘‘தீராத காலமெல்லாம் தானும் நிற்பாள் நீராகக் கனலாக வானாக் காற்றா நிலமாக வழவெடுத்தாள். படரும் செந்தீபாய்ந்திடுமோர் வழியுடையாள். பரமசக்தி ஆதாரமளித்திடுவாள் அறிவு தந்தாள். செழுந்தேன்போலே கவிதை கொல்வாள்’’ என்பதாக சக்தி வல்லமையை நீண்டதாகச் சொல்கிறார் பாரதியார்.
இயக்கசக்தி, ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி, வேதி சக்தி, மின் சக்தி, மண் சக்தி, விண் சக்தி எல்லாமே ஓர் உருக்கொண்டு நிற்பதே விஸ்வரூபமான பெண் சக்தி.
பெண் சக்தியே திருத்தலங்களில் சக்தி பீடமாகி  நிலைகொண்டுள்ளது. விஞ்ஞான சக்தி போலவே மெய்ஞான சக்திக்கும் ஓராயிரம் பெயர்கள் உண்டு. அறிவியல் சக்தி போலவே மெய்யியல் சக்திக்கும் ஓராயிரம் பெயர்கள் உண்டு.
அபிராமி, அம்மாள், அகிலாண்டநாயகி, அம்மிகை, அம்மை, இமயவதி, இலலிதை, ஈசுவரி, உடையாள், உமை, உமாதேவி, உமையாள், உலகமீன்றாள், ஏகை, ஐமவதி, கவுமாரி, கார்த்தியாயினி, காமகோட்டி, கோமதி, சகலமங்கலை, சடாட்சரி, சவுந்தரி, சாம்பவி, சாமளை, சிவபிரியை, சின்மயை, ஞானவல்லபி, துர்க்கை, நிரந்தரி, பகவதி, பஞ்சமி, பரமேசுவரி, பரமகலை,  பருவதர்த்தினி, பார்க்கவி, பிங்கலை, பைரவி, மகதி, மதங்கி, மனோன்மணி, மாதங்கி, முக்கண்ணி, வாகீசுவரி, வேதவல்லி, ஸ்கந்தமாதா என்பதாக பார்வதி சக்தியின் பெயர்கள் முடிவிலியாகத் தொடர்கிறது.
ஆதி சக்தியின் பெயர்களாக அகிலாண்டேஸ்வரி, அட்சர சுந்தரி, இந்திராட்சி, உலகநாயகி, கால பைரவி, காமாட்சி, சம்பூர்ணதேவி, மகாபைரவி, மீனாட்சி, ரூபிணி, விசாலாட்சி, வனதுர்க்கை என இன்னும் பலவாகி வடிவாகிறாள்.
அங்காள பரமேஸ்வரியாக, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையாக, வரலட்சுமியாக, வாராஹியாக, சமய புரத்தாளாக, மீனாட்சியாக, காந்திமதியாக, கன்னியாகுமாரி வாலைக் குமரியாக, காமாக்யா தேவியாக, காளியாக, நீலியாக, சூலியாக எல்லாமாக எங்கேயும் வியாபித்து நிற்பவள் சக்தி.
‘‘ஆனால் ஒன்று அம்மையே...’’
‘‘சொல் மகளே...’’
‘‘என் மனசுக்கு நெருக்கமான உனது திருப்பெயர் தெரியுமா தாயே... அம்மா... அம்மையே என்பதுதான்...’’
‘‘சொல் மகளே...’’
‘‘என் எண்ணமும் நீ, சொல்லும் நீ, செயலும் நீ, ஆனாலும் ஏதும் அறியாதவள் போல என்னிடம் கேட்கிறாயே... இந்தப் புதிர்நிலை என்னும் மாயாஜாலம்தான் நீ தாயே...’’
‘‘சொல் மகளே...’’
‘‘எல்லாமறிந்தவள் போல நான் எதோ பேசுகையில், கண்கள் மலர்த்தி, அறியாமையின் பாவனையோடு கேட்டுக்கொள்கிறாய். வாழ்வில் ஏதும் அறியாமல் உன் பாதம் பணிந்து உன் பாதம் கிடந்து கேட்கும் போது, எனக்கு ஞானத்தை அள்ளித் தருகிறாய். இந்தப் புதிர்நிலை என்னும் மாயாஜாலம் தான் நீ தாயே...’’
‘‘சொல் மகளே...’’
‘‘ஜனனமும் நீதான், அது கொண்டாட்டம், மரணமும் நீதான். அது ஏன் திண்டாட்டமாக உணர்கிறோம் தாயே? எங்களுக்கு ஏன் அந்தப் புரிதல் இல்லை தாயே?’’
‘‘சொல் மகளே...’’
‘‘வடிவும் நீதான், ஆனால் வடிவு மட்டுமே நீ இல்லையே... வழிபாடும் சடங்கும் நீதான் ஆனால் வழிபாடு, சடங்கு மட்டும் நீ இல்லையே... நீ இருக்கிறாய் அதை ஏற்பவர்கள் சரியானவர்கள், நீ இருக்கிறாய் அதை மறுப்பவர்கள் சரியில்லாதவர்கள் எனக் கழுவேற்றுவது தவறுதானே தாயே...?’’
‘‘சொல் மகளே...’’
‘‘திருத்தலங்களில் உன்னை உணர்வது ஒரு நிலை திருத்தலம் தாண்டியும் உன்னை உணர்வது பெருநிலை நிஜம்தானே தாயே?’’
‘‘சொல் மகளே...’’
‘‘உன்னை ஏற்பதும் உனக்கு இயல்பானது. உன்னை மறுப்பதும் இயல்பானதுதானே? அந்த உணர்வு உனக்கு விரோதமானதில்லை தானே தாயே...?’’
‘‘சொல் மகளே...’’
‘‘உன்னை எனக்குப் பிடிப்பதை விட என்னை உனக்குப் பிடித்தமாதிரி வாழ்வதுதானே சிறப்பானது தாயே?’’
‘‘இறை சக்தியாக உன்னை உணர்வது ஒரு பயணம், உன்னையே கடந்து, அரூபமான வெளியில் சஞ்சாரம் செல்லும் ஒரு பயணம் அப்போதைய மனநிலைக்கு வடிவங்கள் வேண்டாம். சடங்குகள் சம்பிரதாயங்கள் வேண்டாம். இந்த வழமைகள் துவக்கப் புள்ளி மட்டுமே முதல் காலடி மட்டுமே ஆனால் துவக்கப் புள்ளியிலும், முதல்  காலடியிலும் சிக்கிக் கிடத்தலே உன்னதம்மென்று நினைப்பது அறிவிலியின் அடையாளம் என்பது சரிதானே தாயே...’’
‘‘சொல் மகளே...’’
‘‘உன் ஆறுகரம், உன் எட்டுகரம், உன் பத்து கரம், உன் பன்னிரெண்டு கரம் எல்லாம், படிமம்தானே தாயே? ஒவ்வொரு உயிரினத்துக்கும் இத்தனை கரமும் இத்தனை வல்லமையும் இருக்கிறது எனக் குறிப்பால் உணர்த்துவது தானே தாயே...?’’
‘‘சொல் மகளே...’’
‘‘திருத்தலங்களில் உன்னைத் தரிசிக்கும் போதும், மனசைப் பனித்துளி ஆக்காமல், குப்பைகளின் கூடாரமாகவே வைக்கிறோம் என்பது தவறுதானே தாயே?’’
‘‘தாயே...’’
‘‘சொல் மகளே...’’
‘‘நான்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் தாயே... சொல்ல வேண்டியது நீதான் தாயே...’’
நான் பேசிக்கொண்டே இருந்தேன் அந்தத் தலம் குளுமையாக இருந்தது. ஆயிரம் பனிமலையும், ஆயிரம் பனிமழையும் ஒன்றாகப் பெய்தால் வரும் குளிர்ச்சி பீடமாக இருந்தது. ஆயிரம் சூர்யப் பிரகாசமாகவும் இருந்தது. ஆயிரம் சந்தனக் கடலின் வாசனை கமழ்வதாக இருந்தது. ஆயிரம் மின்னல்களால் விளக்கேற்றி அம்மையை ஆராதிப்பது போலிருந்தது. என் மனசுக்குள் தன்னை நிர்மாணித்துக் கொண்டிருக்கும் என் தாயின் கருவறையில் நானும் அவளும். அங்கே அம்மை இருந்தாள்.
அவள் பீடத்துக்குக் கோலமிட்டிருந்தேன். மஞ்சள், குங்குமம், மலர் மாலைகளாக அன்பு வார்த்தைகளையும், சக மனிதர்கள் மீதான பரிவையும், பாசத்தையும் நிறைத்திருந்தேன். திருப்பள்ளி எழுச்சி, காலசந்தி பூஜை, உச்சிக்கால பூஜை, அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை எனக் கால நேரம் தாண்டி வாழ்நாள் பூஜையாகவே நிறைத்திருந்தேன். பூஜைப் பொருட்களாக துரோகம் நினைக்காத எண்ணம், தவறு இழைக்காத செயல், குறைகாணாத அறம் எல்லாம் நிறைத்திருந்தேன். இருபத்து நாலு மணி நேரமும் ஜெகஜ்ஜோதியான ஆயிரம் சூரிய தரிசனம்தான் நித்திய பூஜைதான்.
அங்கே ‘‘தட்சனைபோடுங்கோ’’ எனக் கேட்கவில்லை. என்னையே அம்மைக்கு அர்ப்பணித்தேன். ‘‘நகரு நகரு’’ என விரட்டவில்லை. காலாகாலம் அம்மையைக் கண் கொட்டமல் தரிசித்தேன். என் வாழ்வையே அம்மையால் நிறைத்தேன். அவளின் பாத கமலத்தின் கீழே சிறுபுள்ளியாக நான் கிடந்தேன். அவளின் விஸ்வரூபத்தை அண்ணாந்து பார்த்தேன். பார்வை கிட்டப் பார்வை, எட்டப் பார்வை, துாரப் பார்வை என்பதைக் கடந்து எல்லையற்ற வெளியிலும் கடந்து கடந்து கடந்து கொண்டேயிருந்தது.
அம்மை பாதத்தில் துவங்கிய பார்வை திருமுகம் காணவும், திருவருள் பேணவும் முடிவிலியாகப் பயணித்தது. அடிவயிறு குளிர்ந்தது. என் இருப்பு உடைந்தது. என் இருப்பு நிறைந்தது. நான் அம்மையானேன். அம்மை நான் ஆனால். இரண்டறக் கலந்து பரவசமாயம். ஒளி ஒளி ஒளி என்பதான சக்தி வெளிச்சம் என்னுள் குருதியாக கவசமாகும் கலந்த பரவச மாயம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar