Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மருத்துவரின் துறவற ஆசை
 
பக்தி கதைகள்
மருத்துவரின் துறவற ஆசை

இரண்டாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக இருந்தது அந்த அறை. பின்னே வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையின் தலைவரின் அறை என்றால் சும்மாவா?
அப்பழுக்கில்லாத சரளமான ஆங்கிலத்தில் பேசினார் மருத்துவமனையின் தலைவர்.
“ஒரு பெரிய சிக்கலில் மாட்டிகொண்டிருக்கிறோம். நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்.”
நான் மருத்துவன் இல்லையே! இவ்வளவு பெரிய நிறுவனத்தின் நிர்வாகப் பிரச்னைகளைக் கையாளும் வல்லமையும் எனக்குக் கிடையாதே!
“எங்கள் மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தரைத் தெரியுமா?”
தெரியாது.
“எங்கள் மருத்துவமனையின் அஸ்திவாரக் கற்களில் ஒன்று அவர். அவரை வைத்துத்தான் எங்களுக்கு ஊரில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. கனிவாகப் பேசுவார். காசு ஆசை இல்லாதவர். நோயாளிகள் அவரைத் தெய்வமாக மதிக்கிறார்கள்.”
“அவர் திடீரென எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசியாக போவதாகச் சொல்கிறார். மூன்று மாதங்களில் தன்னை வேலையிலிருந்து விடுவிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.”
‘‘ஓஹோ! அவர் போய்விட்டால் மருத்துவமனையின் வருமானம் குறைந்துவிடுமோ?’’
“எங்கள் மருத்துவமனை பிடிக்காமல் வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்வதாக இருந்தால்கூடக் கவலைப்படமாட்டேன். இனிமேல் மருத்துவமே பார்க்கமாட்டேன், காவியைக் கட்டிக்கொண்டு காட்டுக்குப் போகிறேன் என்றால் எப்படி...ஒரு மருத்துவரை உருவாக்க இந்த அரசும், மக்களும் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது தெரியுமா? சுந்தருக்கு நாற்பது வயதுதான் ஆகிறது. இனிமேல்தான் அவர் திறமை இன்னும் நன்றாக மிளிரும். அவர் துறையில் பல உச்சங்களைத் தொடப்போகிறார் என்ற நிலையில்...”
“அவர் குடும்பம்...’’
“அஞ்சலி என்ற மனைவி. அவர் குழந்தைகள் மருத்துவர். இங்கேதான் பணிபுரிகிறார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள். “குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து வச்சிட்டேன்.  என்ன விட்ரு”  என மனைவியிடம் சொல்லிட்டாராம். அவர் மனைவி என்னிடம் வந்து அழுதார்.”
“எனக்கு அவரை யாரென்றே தெரியாதே! நான் எப்படி இவ்வளவு சிக்கலான பிரச்னையை...”
“உங்களைக் கொத்தடிமையாகக் கொண்டவள்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியும்.”
என் வாயை அடைத்துவிட்டார் தலைவர். பின் ஏதோ அழைப்புமணியை அழுத்தினார்.
ஒரு பெண் உள்ளே ஓடிவந்தாள்.
“எனக்காக நாளைக் காலை இதே நேரத்துக்கு வாருங்கள். இதோ இருக்கிறாளே பார்கவி உங்களை சுந்தரிடம் அழைத்துச் செல்வாள். எங்கள் மருத்துவமனையின்  நிர்வாக அமைப்பு சம்பந்தமாக ஆலோசனை சொல்ல வந்திருக்கிறார் என உங்களை இவள் சுந்தரிடம் அறிமுகப்படுத்துவாள்.”
“அதன் பின்?”
“உங்கள் பாடு. உங்களைக் கொத்தடிமையாகக் கொண்டவளின் பாடு.”
அறையைவிட்டு வெளியேறும்போது பார்கவியும் கூடவே வந்தாள்.
“மனதிற்குள் ஓரமாக அகங்காரம் தலைகாட்டுகிறது என்று தோன்றுகிறதே!”
பச்சைப்புடவைக்காரியை இனம் கண்டு காலில் விழுந்து வணங்கினேன்.
“ஒரு நொடி..ஒரே ஒரு நொடி..நான் அந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பேன் என பயந்தாயல்லவா, அதுவும் அகங்காரம்தான்.”
“என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் தாயே!”
“நாளை வா. நடத்தித் தருகிறேன்.”
மறுநாள் காலை லிப்ட் ஐந்தாம் மாடியில் நின்று கதவு திறந்தபோது வெளியே பார்கவி வடிவில் பச்சைப்புடவைக்காரி நின்றதைப் பார்த்தேன். கையில் இருந்த காகிதக் கட்டை அவள் காலருகே போட்டுக் குனிந்து எடுப்பதுபோல் அவள் காலைத் தொட்டு வணங்கினேன்.
“என்னுடன் வா.  இன்னும் வேகமாக...நீ அந்த மருத்துவனின் அறையில் நுழையும்போது நடக்கும் காட்சியில் இருந்தே உனக்கு எண்ணங்களும் வார்த்தைகளும் பிறக்கும்.”
சுந்தரின் அறையில் ஒரே கூச்சலாக இருந்தது. பார்கவி என்னை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டாள்.
“ஏதாவது பிரச்னையா, டாக்டர்? நான் வெளிய காத்திருக்கட்டுமா?”
“வேண்டாம், சார். எல்லாம் இந்தப் பொம்பளையோட பிடிவாதம்தான். இவ கீழ விழுந்து கால உடைச்சிக்கிட்டா. ஆப்ரேஷன் பண்ணிக் கட்டுப்போட்டிருக்கு. கட்ட இப்பவே கழட்டி எறியணும்னு ஒத்தக்கால்ல நிக்கறா.”
“கட்ட இப்ப கழட்டினா பிரச்னையா?”
“பின்ன, இல்லையா? காயம் இன்னும் சரியா ஆறல. இப்போ கழட்டினா ரத்தம் வரும். தொற்று வரும். காயம் ஆறாது.”
“சரி, கட்ட எப்போ கழட்டணும்?”
“காயம் ஆறினவுடன, அந்த இடம் காய்ஞ்சவுடனே கட்டு தானா விழுந்திரும் சார். அப்படி இல்லாட்டியும் லேசாப் பிடிச்சி இழுத்தா வந்திரும். இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ல கழட்டிடலாம். இப்பவே கழட்டணும்னா எல்லாருக்கும் பிரச்னை.”
“ஊருக்குத்தான் உபதேசமாக்கும்? உங்களுக்கு இல்லையா? இதே தப்பத்தானே நீங்களும் செய்யறீங்க?”
“என்ன சார் உளறுறீங்க?”
“உண்மையத்தான் சொல்றேன். நமக்கு சம்சாரங்கற காயம் பட்டிருக்கு. அந்தக் காயத்துக்கு பந்தம், தொழில், உலக வாழ்க்கைங்கற கட்டு போட்டிருக்கு. காயம் முழுசா ஆறாத வரைக்கும் கட்ட கழட்டினா பெரிய பிரச்னையாயிரும். காயம் ஆறாது டாக்டர்.”
சுந்தர் என்னையே வெறித்துப் பார்த்தார்.
“நீங்க ரொம்ப நல்லவர் டாக்டர். உலக வாழ்க்கைங்கற உங்க  காயம் வேகமா ஆறிக்கிட்டு வருது. ஆனா இன்னும் முழுசா ஆறல. இந்தச் சமயத்துல கட்ட கழட்டினா – இந்த வாழ்க்கை வேண்டாம்னு சந்நியாசியாப் போனீங்கன்னா – காயம்  ஆறாது.  ஆன்மிக வளர்ச்சி தடைப்படும்.
“உங்ககிட்ட அபூர்வமான மருத்துவத் திறமை இருக்கு. கூடவே அன்பான மனசும் இருக்கு.  இத வச்சிக்கிட்டு உங்களத் தேடி வர நோயாளிகளோட வேதனையையும் போக்குங்க.  காவி ஆடையக் கட்டிக்கிட்டு நீங்க காட்டுல செய்யற தவத்தை விட வெள்ளைக்கோட்ட மாட்டிக்கிட்டு இங்க ஆஸ்பத்திரில நீங்க செய்யற தவம் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததுன்னு அந்தப் பச்சைப்புடவைக்காரி சொல்லச் சொன்னா.”
“நான் கடைசி வரைக்கும் சந்நியாசி ஆக முடியாதா?”
“சந்நியாசி சோறு தண்ணிய விட்டுட்டுத் தபசு பண்றான். நீங்களும் பல நாட்கள் நேரத்துக்குச் சாப்பிடாம, துாங்காம நோயாளிங்களப் பாத்துக்கிட்டிருக்கீங்க. அதுவும் தபசுதானே! தொடர்ந்து இதையே செஞ்சிக்கிட்டேயிருங்க. ஒரு கட்டத்துல சம்சார பந்தங்கற காயம் முழுசா ஆறிடும். அப்போ உலக வாழ்வுங்க கட்டு தானா  விழுந்திரும்.”
மருத்துவர் என்னைப் புதிருடன் பார்த்தார்.
“நான் ஒண்ணும் புதுசாச் சொல்லல டாக்டர். அந்தப் பொம்பளைக்கு நீங்க சொன்னதையேதான் சொல்றேன். அப்புறம் உங்க இஷ்டம்.” சொல்லிவிட்டு புறப்பட்டேன்.
லிப்டில் என்னுடன் பார்கவி இருந்தாள். அவள் கால்களைத் தொட்டு வணங்கினேன்.
“அந்த மருத்துவனிடம் அபூர்வமான ஆற்றல் இருக்கிறது. இளம்வயது. உன்னிடம் அப்படி ஒன்றும் இல்லையே. உனக்கும் வயதாகிவிட்டது! உனக்குப் பெரிதாக ஆசைகளும் இல்லை. நீ ஏன் சந்நியாசியாகக்கூடாது? அப்படியானால் விரைவில் முக்தி  அடைவாய்.”
“பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை அவ்வளவாக இல்லை, ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பதவியாசை இருக்கிறதே! இந்த ஆசை இருக்கும்வரை என்னால் கனவில்கூடத் துறவறத்தை நினைக்கமுடியாது, தாயே!”
“பராசக்தியே முக்தி தருகிறேன் என்று சொன்னபோதும் உன்னைத் துறவு பூணவிடாமல் தடுக்கும் அந்தக் கேடுகெட்ட பதவியாசையைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்.”
“கையில் கிளிதாங்கிய கோலக்கிளிக்குக் காலமெல்லாம் கொத்தடிமையாக இருக்கும் பதவி அது. எனக்கு முக்தி நிலையும் வேண்டாம். முருங்கைக்காயும் வேண்டாம். அந்தப் பதவி மட்டும் போதும், தாயே!”
லிப்ட் கீழ்த்தளத்திற்கு வந்துவிட்டது. கதவுகள் திறந்தன. பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar