Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் இன்னும் அவதிப்பட வேண்டும்
 
பக்தி கதைகள்
அவள் இன்னும் அவதிப்பட வேண்டும்


“மூணு நாளா என்ன வறுத்தெடுத்துட்டாங்க சார். மனசு விட்டுப்போச்சு.”
சென்னையில் ஒரு உணவகத்தில் என் முன்னால் அமர்ந்திருந்த அழகிய முப்பத்தியைந்து வயதுப் பெண் புலம்பிக் கொண்டிருந்தாள்.
இதுதான் அவளது பிரச்னை...
அவள் பெயர் தேவி. ஊட்டிக்குச் சுற்றுலா சென்ற போது அங்குள்ள பழங்குடி மக்களின் துயரம் நிறைந்த வாழ்க்கையைப் பார்த்திருக்கிறாள். தன் வாழ்வையே அவர்களுக்காக அர்பணிக்க தீர்மானித்தாள். திருமணம் செய்யாமல் அங்கேயே வாழத் தொடங்கினாள். மருத்துவம், கல்வி என கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்த்திருத்தம் செய்தாள். பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என நன்கொடை திரட்டி நிலம் வாங்கினாள்.
அந்த சமயத்தில் பழங்குடியினக் குழந்தைகளை விநோத நோய் தாக்கியது. காய்ச்சல், இருமல் என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பார்வையை இழந்தனர் குழந்தைகள். கையில் இருந்த பணத்தின் மூலம் சிகிச்சை அளிக்கத் தொடங்கினாள். அந்த நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொன்னார் ஒரு மருத்துவர். அதை  தயாரிக்கும் நிறுவனத்திடம்தான் நேரடியாக வாங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.  
அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டாள் தேவி. ஐநுாறு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வாங்க பத்து லட்ச ரூபாய் ஆகும், பணத்தைக் கட்டுங்கள், ஊசிகளை அனுப்புகிறோம் என மருந்துக் கம்பெனி சொன்னது. கையில் அவ்வளவு பணம் இல்லை. திரட்டிய நன்கொடையை வைத்து நிலம் வாங்கியாகிவிட்டது என மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் கெஞ்சினாள் தேவி
‘பத்து லட்சத்திற்குப் பதிலாக பள்ளிக்கூடம் கட்ட வாங்கிய நிலத்தைத் தருகிறேன். இல்லாவிட்டால் அதை விற்றுப் பணமாக்கித் தருகிறேன். அதற்கு நான்கு மாதமாவது ஆகும். தடுப்பூசி போடுவது தாமதமானால் குழந்தைகள் பார்வை இழக்கும் அபாயம் இருக்கிறது.’ என்றாள்
அவர்கள் விபரம் கேட்டனர்.  தேவி நடத்தும் அறக்கட்டளையின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், பள்ளிக்காக வாங்கிய நிலத்தின் ஆவணங்கள், நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, பார்வை இழந்தவர்கள் பற்றிய விபரம், மருத்துவச் சான்றிதழ்கள் என அனைத்தையும் கொடுத்தாள் தேவி.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வரும்படி கூறினர். காவலுக்கு நிற்கும் செக்யூரிட்டியில் இருந்து தொடங்கி, குமாஸ்தா, உதவியாளர், அதிகாரி, உயரதிகாரி, இயக்குனர் என எல்லோரும் சகட்டு மேனிக்குக் கேள்வி கேட்டனர். இரண்டு நாள் நேர்காணல் தொடர்ந்தது.
“நிலத்தை உடனே விற்க முடியாதா?”
“கஷ்டம் சார். வேணும்னா நீங்களே எடுத்துக்கங்க. நான் எழுதிக் கொடுக்கிறேன். குழந்தைங்களுக்கு மருந்து வேணும், சார்.”
 “கொஞ்சம் வெளியே காத்திருங்க. தலைவர் நாலு மணிக்கு வருவாரு. அவரப் பாருங்க.”
“அவரப் பாத்தா மருந்து கெடைச்சிருமா?”
“தெரியாது.”
தலைவருடைய அகங்காரம் இன்னும் அதிகமாக இருந்தது. எதிர்ப்பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டபடி தேவியின் நேர்மையைச் சந்தேகிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்டார் தலைவர். தேவி பொறுமையாகப் பதில் சொன்னாள்.
“நாளை மறுநாள் வாங்க. முடிவைச் சொல்றேன்.”
“மருந்து கிடைக்குமா?”
“வந்தா வாய்ப்பு இருக்கு. வரலேன்னா நிச்சயம் கிடைக்காது.”
தேவி பெருமூச்சுடன் பேசி முடித்தாள்.
நான் கேட்டேன், “நீங்க அங்க போகப் போறீங்களா?”
“இல்ல.”
“ஐநுாறு குழந்தைங்களோட வாழ்க்கை?”
“விதிப்படி நடக்கட்டும். பச்சைப்புடவைக்காரி கல்மனசுக்காரியா இருக்காளே!”
அவளுடைய அலைபேசி ஒலித்தது. அதை எடுத்துக்கொண்டு தள்ளிப் போனாள்.
மேஜையைத் துடைக்க வந்த பெண்ணிடம் பத்து ரூபாயை நீட்டினேன்.
“எனக்கே கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாயா?”
பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன்.
“தேவிக்காக என்னிடம் வேண்டிக்கொள்ளப் போகிறாயா?”
“இல்லை, தாயே மருந்து கம்பெனியின் தலைவருக்காக. ஒரு நல்லவளை நோகடித்ததற்காக எந்த நரகத்தில் வேகப்போகிறாரோ?’’
“அதை விடு. தேவி இன்னும் கொஞ்சம் அவதிப்படவேண்டும் என்று இருக்கிறதே!”
 “ஏற்கனவே அவள் நிறைய துன்பப்பட்டுவிட்டாள், தாயே!.”
“இன்னும் படவேண்டும். நீ எப்படியாவது அவள் மனதை மாற்றி அந்த நிறுவனத்துக்கு அனுப்பி வை”
கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அன்னையின் கட்டளையை மீறக்கூடாது என தீர்மானித்தேன்.
தேவி வந்தாள்.
“அந்த மருந்து கம்பெனிகிட்ட ஒரு நிராகரிப்பு கடிதம் வாங்கிட்டு வாங்க. அதை வச்சி வேற எடத்துல பணம் ஏற்பாடு செய்ய முடியுமா பார்க்கலாம்.”
“அங்க போகணும்னு நெனச்சாலே பத்திக்கிட்டு வருது, சார்.”
“எனக்காக, தயவு செய்து...”
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தேவி விடைபெற்றாள்.
அன்று சென்னை விமான நிலையத்தில் ஒரு பெண் காவலர் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் புன்னகையே அவள் புவியேழுக்கும் அரசி என்பது தெரிந்தது. பொருட்களைக் கீழே போட்டு எடுப்பதுபோல் அவள் காலைத் தொட்டு வணங்கினேன்.
 “தேவி.’’என்று இழுத்தேன்.
“அவளை யாராலும் சமாதானப்படுத்தமுடியவில்லை. அப்படி ஒரு அழுகை.”
“மருந்து கம்பெனித் தலைவர்தானே காரணம்? “
“ஆமாம். நீயே பாரேன்.”
காட்சி விரிந்தபோது தேவி தலைவரின் அறையில் இருந்தாள். தலைவர் தேவிக்குப் பின்புறத்தைக் காட்டியபடி சுவரைப் பார்த்து நின்றிருந்தார். அவரிடமிருந்து கேள்விக்கணைகள் வந்துகொண்டேயிருந்தன.   
“ஒரு வேளை உங்களால் நிலத்தை நான்கு மாதத்திற்குள் விற்கமுடியாவிட்டால்? இல்லை நிலம் அந்த விலைக்குப் போகாவிட்டால்?”
“உங்கள் தடுப்பூசி வேலை செய்யாவிட்டால்?  ஒருவேளை நீங்களே நான்கு மாதம் கழித்து இல்லாவிட்டால்… இல்லை, உங்கள் கம்பெனி மூடப்பட்டுவிட்டால்.. “
தேவி கோபத்துடன் கத்தினாள்.  
“நாலு நாளா வறுத்தெடுத்திட்டீங்க. குழந்தைங்களுக்காகப் பொறுத்துக்கிட்டேன். இதுக்குமேல என்னால முடியாது, சாமி. ஆள விடுங்க. ”
“ஒரு நிமிஷம்...”
“முடியாது.”
“பச்சைப்புடவைக்காரிமேல ஆணை. நில்லுங்க.”
தேவி நின்றாள்.
“நாங்க செய்யறது சரியான இடத்துக்குப் போய்ச் சேருதான்னு உறுதிப்படுத்தத்தான் உங்க பொறுமையச்  சோதிக்கற மாதிரி கேள்வி கேட்டோம். இந்த நாலு நாள்ல உங்களப் பத்தி ஊர் பூரா விசாரிச்சோம். எங்க மேனேஜர் ரெண்டு நாளா ஊட்டில நீங்க வேல செய்யற கிராமத்துலதான் இருக்காரு. எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டோம். என்னுடைய முடிவச் சொல்றேன், கேட்டுக்கங்க.
தடுப்பூசி விலையான பத்து லட்ச ரூபாயக் கொடுக்க நாலு மாசம் தவணை கேட்டிருக்கீங்க. நான் சொல்றேன். நீங்க பணமே கொடுக்க வேண்டாம். நாங்க மருந்த இலவசமாகவே தரோம். அதுக்காக நீங்க நிலத்த விக்கவேண்டாம். அந்த நோயப் பத்தி நல்லாத் தெரிஞ்ச ரெண்டு டாக்டர் தலைமையில ஒரு மருத்துவக் குழுவையே கம்பெனி செலவுல அனுப்பிவைக்கறேன். அவங்களே குழந்தைங்களுக்குத் தடுப்பூசி போட்டு, பத்து நாள்கூடவே இருந்து கவனிச்சிப்பாங்க அடுத்த கட்டமா  உங்களுக்குப் பள்ளிக்கூடம் கட்டித் தரப்போறோம்.”
அப்போதுதான் தேவி சுவரில் மாட்டியிருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப்  பார்த்தாள். ‘போதுமா இன்னும் வேண்டுமா?’ என்று பச்சைப்புடவைக்காரி கேட்பதுபோல் தோன்றியது. அம்மா என்று அலறினாள் தேவி.
அலறல் கேட்டுத்  திரும்பினார் தலைவர்.  அவர் கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தார்.
“உங்க முகம் பாத்துப் பேச முடியாததுக்கு மன்னிச்சிருங்க. எனக்குக் கண்பார்வை கிடையாது.”
தேவியால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. என்னாலும்தான்.
“ஏன் இப்படி அழுகிறாய்? ஊரில் உள்ளவர்களை எல்லாம் சிரிக்க வைக்கும் சக்தியை உனக்குத் தரட்டுமா?”
“வேண்டாம், தாயே! அழ வைக்கும்சக்தியைக் கொடுங்கள். தேவியைப் போன்ற நல்லவர்களுக்கு  அவர்கள் கேட்டதைவிடப் பலமடங்கு கொடுத்து அழ வைக்கும் அன்பு மனதைக் கொடுங்கள். தனக்கு குறை இருந்தாலும் மற்றவர்கள் குறையில்லாமல் வாழ வேண்டும் என எண்ணும் அந்தத் தலைவரின் அன்பு மனதைத் தாருங்கள்.”
“அதெல்லாம் வரமாக வராது. வாழ்க்கை முறையாக வரவேண்டும்.”
“அப்படி வாழ வழிகாட்டுங்கள்... தாயே!”
காவலராய் வந்த காளி கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar