Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அதர்மத்துக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பம்!
 
பக்தி கதைகள்
அதர்மத்துக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பம்!

விஸ்வாமித்திர மகரிஷிக்கு நிம்மதி ஏற்பட்டது. எங்கே தன் பிராயசித்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற எண்ணம் இப்போது பூரணமாக நீங்கி விட்டதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
ஆமாம்...இக்ஷ்வாகு வம்சத்து அரிச்சந்திரனை கொடுமைப்படுத்தியதற்குப் பிராயசித்தமாக, அதே குலத்து இளவலின் மண வாழ்க்கையை செம்மையாக அமைத்துத் தர அவர் தீர்மானித்துக் கொண்டதில் நியாயம் இருந்தது.
ஆனால் தான் மேற்கொள்ளப்போகும் யாகத்தை சிதைக்கவென்றே காத்திருக்கும் அரக்கர்களை அடக்கி, யாகம் முழுமையடையச் செய்ய, ராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவர் கோரிக்கையை முன்வைத்த போது பளிச்சென்று அதை தசரதன் மறுத்துவிட்டானே, அப்போது விஸ்வாமித்திரர் ஏமாற்றமடைந்தார்.
  அருகே இருந்த குலகுருவான வசிஷ்டரை பரிதாபமாகப் பார்த்தார் விஸ்வாமித்திரர். தனக்கு உதவுமாறு கண்களால் வேண்டுகோள் விடுத்தார். அதைக் கண்டு முறுவலித்தார் வசிஷ்டர். தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பூவுலகில் நியாயவானான அரிச்சந்திரனைப் பொய் பேச வைப்பதாக சவால் விட்டு அதில் தோற்றுப் போன விஸ்வாமித்திரரை மன்னிப்பதோடு, நிம்மதி கொள்ள வைக்கவும் வேண்டும் என பெருந்தன்மையோடு கருதினார்.
குலகுரு அனுமதித்தால் தசரதனும் சம்மதிப்பான் என்றும், அதையடுத்து ராமனும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து தன்னுடன் புறப்படுவான் என்றும் விஸ்வாமித்திரர் எதிர்பார்த்தார்.
தசரதனைத் தனியே அழைத்துச் சென்றார் வசிஷ்டர். ‘‘குருபெருமானே அருந்தவப் புதல்வனான ராமனை எப்படி அனுப்புவேன்... அந்தக் குழந்தை ராஜபோகத்தில் வாழ்ந்ததாயிற்றே! இந்த முனிவருடன் போனால் அவனுக்கு சுவையான உணவுகள் கிடைக்காதே! காயும், கனியும் உண்ண இந்தக் குழந்தையால் முடியுமா? எத்தனை நாட்கள் ஆகுமோ இவன் திரும்புவதற்கு! எப்படி இவனைப் பிரிவேன்?’’ என கண்களில் நீர் உகுக்காத குறையாகத் நின்றார் தசரதன்.
வசிஷ்டர் ஆறுதலாக ‘‘கவலைப்படாதே தசரதா! எல்லாம் நன்மைக்கே. விஸ்வாமித்திரர் கோபமெல்லாம் அடங்கியவராக, புது மனிதராக இப்போதுதான் வலம் வருகிறார். அவரால் ராமனுக்கு எந்தத் துன்பமும் நேராது…’’
‘‘ஒரு முனிவராக தவ வலிமையால் அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய அவர் எதற்காக என் மகனின் உதவியை நாட வேண்டும்? தானே தவ வலிமையால்  அரக்கர்களை சமாளிக்க முடியாதா’’ தசரதன் ஏக்கமுடன் கேட்டார். எப்படியாவது அந்த முனிவரின் பிடியிலிருந்து ராமனை மீட்டுவிட வேண்டும் என்ற ஒரு தகப்பனின் நியாயமான பாசத்தை வெளியிட்டார்.  
வசிஷ்டர் அவனை ஆதுாரத்துடன் பார்த்தபடி ‘‘விஸ்வாமித்திரர் சிறந்த தவவலிமை உள்ளவர்தான். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவ்வாறு தாம் புரிந்த தவத்தின் பலன்களையெல்லாம் அவர் சில அற்ப காரணங்களுக்காக இழந்துவிட்டிருக்கிறார். அதனால்தான் ராமனின் உதவியை நாடுகிறார்’’ என்றார்.
‘‘தவ வலிமையை இழந்தாரா...எப்படி’’
‘‘ஆமாம். அவர் ஒவ்வொரு திசை நோக்கியும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவம் செய்தவர். அதனால் அவர் பெற்ற பராக்கிரமம் மிக அதிகம். ஆனால் தன்னுடைய பிடிவாதம், வீம்பு அல்லது பிறர் மீதான இரக்கம் காரணமாக அவர்  தவப் பயன்களை இழக்கவும் செய்தார்.’’
‘‘அட அப்படியா’’
‘‘ஆமாம். திரிசங்கு மன்னர் என்னை அணுகி உடலுடன் தன்னை வானுலகுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிய போது அவ்வாறு செய்ய இயலாது என சொர்க்க உலக நியதியை எடுத்துச் சொல்லி மறுத்தேன். ஆனால் வேறொரு முனிவரை அணுகி தன் விருப்பத்தை நிறைவேற்றப் போவதாக சூளுரைத்தார். அதன்படி அவன் விஸ்வாமித்திரரை தஞ்சம் அடைய அவரும் வேள்வி நடத்தி சொர்க்கத்துக்கு அனுப்பினார். ஆனால் தேவர்கள் திரிசங்குவை கீழே தள்ளிவிட்டனர். அதைக் கண்டு வெகுண்ட விஸ்வாமித்திரர் ‘அங்கேயே நில்’ எனக் கையை உயர்த்தினார். வானுக்கும் பூமிக்கும் நடுவே நிலைகொண்டான். இந்த சாஸ்திர மீறலுக்காக விஸ்வாமித்திரர் முந்தைய ஆயிரம் ஆண்டு தவப் பலனை இழந்தார்.’’
‘‘அட அப்படியா?’’
‘‘ஆமாம். அடுத்து மீண்டும் ஆயிரம் வருடங்கள் தவம் செய்து பெற்ற பலனை மேனகை மீது கொண்ட மோகத்தால் இழந்தார். மூன்றாவதாக சேகரித்த பலனை ரம்பை மீது காட்டிய கோபத்தால் போக்கடித்தார். இப்படி மூன்று திசைகளை நோக்கி ஆயிரக்கணக்கான வருடங்கள் இயற்றிய தவமெல்லாம் வீணானது. நான்காவது திசை அளித்த தவப் பயனையாவது தக்க வைக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்’’
‘‘சரி..அதற்காக என் ராமன்தான் கிடைத்தானா’’ தழுதழுத்தார் தசரதன்.
‘‘மன்னா... இதெல்லாம் ராமனின் பராக்கிரமத்தை உலகுக்குத் தெரிவிக்கும் உத்தி என்றே தோன்றுகிறது. அந்த உத்தி விஸ்வாமித்திரர் மூலமாக வந்திருக்கிறது. இவர் இல்லாவிட்டாலும் வேறு யார் மூலமாவது வரத்தான் போகிறது’’
‘‘ஆனாலும் என் குழந்தைக்கு இப்போது பன்னிரண்டு வயதுதானே ஆகிறது? பிற நாடுகளுடனான முறையாக போரை  சந்திக்க வேண்டுமென்றால் அதற்குப் பதினாறு வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் அரக்கர்களை அழிக்க வேண்டும் என்ற விஸ்வாமித்திரரின் கோரிக்கைதான் என்னை மிகவும் விசனப்படுத்துகிறது. இந்தக் குழந்தையால் அது முடியுமா?’’
‘‘கவலைப்படாதே தசரதா. உன் குழந்தை சாதிப்பான். இந்த வயதிலேயே வன்முறையை அவன் கையாள வேண்டியிருக்கிறதே என வருந்தாதே. இது அநீதிக்கு எதிரான வன்முறை. அநியாயத்தை வேரறுக்க இந்த முயற்சி பயன்படுத்தப்படப் போகிறது. நம் ராமன் பெரும் புகழ் பெறுவான். அதோடு அதர்மத்துக்கு எதிராக வில் துாக்க வேண்டும், அதனால் தர்மம் தழைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவனாக அவன் திகழப் போகிறான். உலகமே அவனைப் போற்றப்போகிறது. இப்போது மட்டுமல்ல இனி வரும் யுகங்களும் அவனைப் பெரிதும் கொண்டாடும்.’’
ஆறுதல் அடைந்தார் தசரதன். குலகுரு சொல்லிவிட்டால் சரிதான். அதே சமயம் பாசம் அவனை அலைக்கழித்தது. தாய் கோசலை தன் மகனை அனுப்ப சம்மதிப்பாளா?
அதுவரை அரண்மனையின் பிரதான மண்டபத்தில் நடந்த சம்பவங்களை மூன்று மனைவியரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.  ‘வேண்டாம், அனுப்ப மாட்டேன் என்று சொல்லிவிடேன்’ என கண்களால் கோசலையைப் பார்த்துக் கெஞ்சினார் தசரதர். ஆனால் அவளோ புன்முறுவலுடன் ‘ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்’ தாயாக தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.
வேறு வழியின்றி தசரதன் விஸ்வாமித்திரரின் கோரிக்கைக்கு இணங்கினார். ராமன் போகிறான் என்றால் தொட்டில் பழக்கமாக நீண்டுவிட்ட பாசப் பிணைப்பிலிருந்து விடுபட முடியாத லட்சுமணன் சும்மா இருப்பானா? அவனும் ராமனுடன் புறப்பட முனிவரின் முன்னே போய் நின்றான்.
மகிழ்ச்சி கொண்டார் விஸ்வாமித்திரர். தன் தவப்பலன் இனி வீணாகாது என்பதால் மட்டுமல்ல; அரிச்சந்திரனுக்கு இழைத்த கொடுமைக்கு மாற்றாக ராமனை வெகுவாக உயர்த்தி சத்தியம், நேர்மை, தர்மத்துக்கு இலக்கணமானவனாக உலகோருக்கு அறிமுகப்படுத்த முதல் படிக்கட்டு அமைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காகவும்தான்!
முனிவர் முன்னே செல்ல சகோதரர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் உருவம் தன் பார்வையிலிருந்து மறையும்வரை உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் தசரதன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar