Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாய் சொன்ன தீர்ப்பு
 
பக்தி கதைகள்
நாய் சொன்ன தீர்ப்பு


சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராமருக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.  என்னவென்று  அறிந்து கொள்ள காவலனை அனுப்பினார். அவனும் விரட்டி விட்டு வந்தான். சிறிது நேரத்தில் மீண்டும் குரைக்கவே காவலன் துரத்தச் சென்றான். இந்நிலை தொடரவே, ‘‘தம்பி லட்சுமணா... நீ போய் காரணத்தை அறிந்து வா’’ என்றார். லட்சுமணனும் நாயிடம் வந்து, ‘‘உன் துயரத்துக்குக் காரணம் என்ன’’ எனக் கேட்டார்.

 ஈனக் குரலில் நாய், ‘‘பிரபோ...கோயில், யாகம் செய்யும் இடம், பிருந்தாவனம், சபை, மடம், புண்ணிய தீர்த்தம், சமையல் கட்டு ஆகிய இடங்களுக்கு நாங்கள் போகக் கூடாது என்பதால் அரசவைக்கு என்னால் வரமுடியவில்லை. ராமபிரானை எனக்காக அழைத்து வாருங்கள்’’ என்றது.

 விஷயம் அறிந்த ராமரும் வரவே, ‘‘ தங்களின் வருகைக்கு நன்றி பிரபு! சன்யாசி ஒருவர் கல்லால் அடித்து என் காலை உடைத்து விட்டார். அதற்கு நியாயம் கேட்டு வந்தேன்’’ என்றது.
‘‘வருந்தாதே.  இப்போதே விசாரிக்கிறேன்’’ என்றார். சன்யாசி அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார். ‘‘எதற்காக நாயைக் கல்லால் அடித்தீர்?’’  எனக் கேட்டார் ராமர்.


‘‘பிரபு! இந்த நாய் நான் பிச்சை ஏற்ற உணவில் வாய் வைத்தது. பசியுடன் இருந்த எனக்கு கோபம் வந்தது. அதனால் கல் எறிந்தேன்’’  என்றார்.  ‘‘வேடிக்கையாக இருக்கிறது. ஐந்தறிவு ஜீவன் மீது கல்லை எறிந்தால் பாவம் அல்லவா... அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்’’ என்றார். பின்னர் நாயைப் பார்த்த ராமர், ‘‘தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்’’ என்றார்.

‘‘நன்றி பிரபு! இவரை ஒரு சிவன் கோயிலின் நிர்வாக அதிகாரியாக ஆக்குங்கள். இதுவே தண்டனை’’ என்றது. ராமரும் சம்மதித்தார்.

 தனக்குப் பதவி அளிக்கப்பட்டதால் சன்யாசியும் மகிழ்ந்தார். நாயும் நிம்மதியுடன் புறப்பட்டது. .

இதையெல்லாம் பார்த்த அயோத்திவாசிகள், பிரபுவே...இது எப்படி தண்டனையாகும்! நாய் ஏன் இப்படி கேட்டது?’’ என ஆச்சரியப்பட்டனர். அந்த நாயை அழைத்து வருமாறு ராமர் உத்தரவிட மீண்டும் நாய் அங்கு வந்தது. அதனிடம் கேட்ட போது,‘‘அயோத்திவாசிகளே...சிவன் கோயிலில் அதிகாரியாக பணிபுரிவது என்பது முள்ளின் மீது நிற்பது போல சிரமமான வேலை’’ என்றது.
‘‘சிவன் கோயில், மடம், கிராம நிர்வாகத்தில் தவறு செய்யும் அதிகாரிகள், பசு, அந்தணர், அநாதைகளின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசரிடம் இருந்து கொண்டு அவரிடம் வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள், அந்தணரின் போஜனப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறுபிறவியில் நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் ஒரு மடாதிபதியாக இருந்தேன். அப்போது செய்த தவறுக்காக இப்போது நாயாகப் பிறந்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினேன். இந்த பிறவியில் என் பாவத்தை ஏற்றுக் கொண்ட சன்யாசி, சிவன் கோயில் நிர்வாகியாக இருந்தாலும், தீவினை காரணமாக மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார்’’ என்றது.

சிவன் கோயிலில் பொறுப்பேற்ற சன்யாசி நேர்மையற்ற செயல்களால் மறுபிறவியில் நாயாகப் பிறந்தார். அவருக்கு தண்டனை அளித்த நாய்  தன் பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தபின் மறுபிறவியில் நற்கதியை அடைந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar