Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » படிவத்தை மாற்றினாள்!
 
பக்தி கதைகள்
படிவத்தை மாற்றினாள்!


“யாரோ பிரச்னையோட வராங்க. பச்சைப்புடவைக்காரி தீர்வு சொல்றா.   நடுவுல கொஞ்சம் அழுகை, கொஞ்சம் உருக்கம்.  உங்க எழுத்த பிரச்னை – தீர்வு – உணர்வுங்கற வாய்ப்பாட்டுக்குள்ள அடக்கிடலாம். மாத்தி எழுதப் பாருங்களேன்.”
இதைப் பல முறை கேட்டாகிவிட்டது. மனம் துவண்டுவிட்டது. அன்று மாலை வெறிபிடித்த மாதிரி கோயிலுக்கு நடந்தேன். சன்னதிக்குப் போக மனம் இல்லாமல் பொற்றாமரைக்குளத்தின் படிகளில் அமர்ந்தேன். ஒரு ஊழியை பெருக்கிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் எந்திரிச்சிக்கிட்டீங்கன்னா பெருக்கிக்குவேன்”
“நான் உக்காந்திருக்கற இடத்த விட்டுட்டுப் பெருக்கலாமே”
“குப்பை அங்குதானே இருக்கிறது”
“தாயே”
“எழுதுபவள் நான். நீ வெறும் பேனா. பின் ஏன் இந்த மனக்குழப்பம்?”
“ஒரே மாதிரியாக..
“பிரச்னை- தீர்வு- உணர்வு என்பது மனித வாழ்க்கையின் படிவம். அதே படிவத்தில்  அன்பைப்பற்றி நீ எழுதும்போது அது இன்னும் அழுத்தமாக வெளிப்படுகிறது”
“இருந்தாலும்...’’
“ பிரச்னையே இல்லாத ஒரு மனிதரை நீ சந்திக்கப் போகிறாய். உன் மூலம் அவருக்கு முழுமையான ஞானத்தை வழங்க விரும்புகிறேன் – முற்றிலும் மாறுபட்ட படிவத்தில்’’
இரண்டு நாட்கள் கழித்து நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
“இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு வர முடியுமா?”
“எதுக்கு”
“எந்த நேரமும், சிரிச்ச முகத்தோட நிறைவா, அமைதியா வாழ்கற பச்சைப்புடவைக்காரியின் பக்தரை நீங்க பாக்கணும்”
ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே அங்கே சென்றேன்.
 “இவர் சுந்தரேசன். தனியார் கம்பெனில ஆபீசரா இருந்து ரிட்டயராயிட்டாரு. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை”
சுந்தரேசன் கனிவாகப் பேசினார்.
“பச்சைப்புடவைக்காரியப் பத்தி நீங்க எழுதறதத் தவறாமப் படிக்கறேன். எத்தனை பேர் உங்ககிட்ட பிரச்னையச் சொல்றாங்க! ஒவ்வொண்ணுக்கும் அவ சொல்ற தீர்வு அற்புதம் சார்.”
நண்பர் சுந்தரேசனிடம் சொன்னார்.
“உங்களுக்கு ஏதாவது பிரச்னையிருந்தா  இவர்கிட்ட சொல்லுங்க.”
“அந்தப் பொம்பளைக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணே தெரியல.”
“எந்தப் பொம்பளைக்கு”
“பச்சைப்புடவைக்காரிக்கு”
“நன்றி எதுக்கு”
“அப்பாவுக்குப் புரோகிதம்தான் தொழில். ரெண்டு வேளை சாப்பிடறதே கஷ்டமா இருந்த வாழ்க்கை. எப்படியோ பி.ஏ., படிச்சிட்டேன். தனியார் கம்பெனில குமாஸ்தா வேலை. கைக்கும் வாய்க்கும் சண்டைங்கற மாதிரிதான் பொழைப்பு. படிப்படியா முன்னேறினேன். அம்பது வயசாகும்போது எம்.டியோட பி.ஏ. ஆனேன். நல்ல சம்பாத்தியம். மனசப் புரிஞ்சி நடந்துக்கற மனைவி. மணிமணியாக் குழந்தைங்க அவங்கள நல்லா படிக்கவச்சி கல்யாணம் பண்ணி வச்சேன். மொத்தமா ரெண்டு பேரன்கள், ரெண்டு பேத்திகள். எனக்கு எழுபது வயசாகுது. உடம்பு நல்லா இருக்கு.
இவ்வளவையும் கொடுத்த பச்சைப்புடவைக்காரிக்கு நான் ஒண்ணும் கொடுக்கல சார். தினமும் அவ படத்துக்கு முன்னால ரெண்டு நிமிஷம் நிப்பேன் மனசுக்குத் தோணின ஸ்தோத்திரத்த சொல்லுவேன். வாரம் தவறாம கோவிலுக்கு வந்திருவேன். மனசறிஞ்சி யாரையும் கெடுத்ததுல்ல. மத்தபடி தான தர்மம் செஞ்சது கெடையாது. இதுக்கே இவ்வளவு கொடுத்திருக்காளே! நீங்கதான் அவளப் பாத்துப் பேசறீங்களாமே! சுந்தரேசங்கற பிச்சைக்காரன் உனக்கு நன்றி சொல்லத் தெரியாம தவிக்கிறான்னு சொல்றீங்களா”
பொற்றாமரைக் குளத்தின் படிகளைக் கூட்டிக் கொண்டிருந்த ஊழியை என்னைப் பார்த்துச் சிரித்தாள். புரிந்துவிட்டது.  படிவம் மாறும் நேரம் இது எனப் புரிந்தது.  அன்னையை மானசீகமாக வணங்கிவிட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தேன்.
“அவகிட்ட நீங்க சொன்னதச் சொல்றேன். அதுக்கு முன்னால உங்ககிட்ட இருக்கற தீராத பிரச்னை ஒண்ணச் சொல்லுங்க. அதையும் தீக்கிறேன்.”
“ஒரு பிரச்னையும் இல்ல.”
“நல்லா யோசித்து பாருங்க. சின்னப் பிரச்னையா இருந்தாக்கூடப் பரவாயில்ல. அந்தப் பிரச்னையச் சொல்லிட்டு நன்றி சொன்னா  நல்லா இருக்கும்.”
என்னை விநோதமாகப் பார்த்தார் சுந்தரேசன்.
“பிரச்னை இருக்கு. என்கிட்ட ஒரு பழைய மாருதி கார் இருக்கு. அத எப்படியாவது விக்கணும்னு பாக்கறேன்.  விலை போக மாட்டேங்குது. கார் சும்மாவே  இருக்கு. அவ்வளவா பயன்படுத்தறதும் இல்ல.”
என் உடல் சிலிர்த்தது. இப்போது கர்ஜிக்கத் தொடங்கினேன்.
“உங்க பிரச்சினை தீர்ந்தது. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட ஒரு எஸ் கிளாஸ் பென்ஸ் இருக்கு. வாங்கி ஒரு மாசம்தான் ஆகுது. ஒண்ணேகால் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்காரு. அவர் அத உங்களுக்குக் கொடுத்திருவாரு. பதிலுக்கு நீங்க உங்க மாருதியக் கொடுத்துட்டாப் போதும்.”
“உங்க புத்தி குழம்பிப் போச்சா? என் காரு அறுபதினாயிரம் ரூபாய்க்குப் போனாலே ஜாஸ்தி.  பாக்கி பணத்துக்கு நான் எங்க போவேன்?”
“பாக்கிப் பணமே வேண்டாம் சார். அவருக்கு பழைய மாருதி கார்னா  ரொம்ப இஷ்டம். பென்ஸ கொடுத்துட்டு மாருதி கார எடுத்துக்குவாரு. நீங்களும் காசு தர வேண்டாம். அவரும் காசு தர மாட்டாரு.”
“எந்தப் பைத்தியக்காரன் சார் ஒரு கோடி ரூபாய் காரக் கொடுத்துட்டு அறுபதினாயிரம் ரூபாய் கார வாங்கிக்குவான்?”
“காரன் இல்ல, காரி. பச்சைப்புடவைக்காரி. தெனமும் ரெண்டு நிமிஷ முணுமுணுப்பு  வாரம் தவறாம கோவிலுக்கு வந்ததுக்கே அவ உங்களுக்கு ஒரு பிரமாதமான வாழ்க்கையக் கொடுத்திருக்காளே! நீங்க உங்களையே  அவகிட்ட கொடுத்தா. .. “
“கொடுத்தா?”
“பதிலுக்கு அவ தன்னையே உங்களுக்குத் தந்துருவா சார். அதுக்கு நான் என் உயிரப் பணயம் வச்சி உத்தரவாதம் தரேன். உங்களுடைய அடுத்த கட்ட ஆன்மிக வளர்ச்சி அதுதான். தள்ளி நின்னு அவ அன்பு மழையோட சாரல்ல நனைஞ்சிக்கிட்டிருக்கீங்க. போய் அவளுடைய அன்புக்கடல்ல குதிங்க. உங்க மனசுல இருக்கற இத்தனுண்டு அன்ப வாங்கிக்கிட்டு பதிலுக்கு பிரபஞ்சம் அளவுக்கு அன்பு தருவா. உங்கள வாங்கிக்கிட்டு தன்னையே தந்திருவா. அப்படி ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர எந்தக் கொம்பனாலயும் தர முடியாது, சார். போங்க, போய் அவ கால்ல விழுந்து கதறுங்க.”
சுந்தரேசன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதன்பின் அவர் எதுவும் பேசவில்லை. என் கையைப் பற்றியபடி பல நிமிடங்கள் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார். பின் சைகைமொழியிலேயே விடைபெற்று சென்றுவிட்டார்.
அவளுடைய கோபுரத்தைப் பார்த்தபடி நான் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தேன்.
“என்னப்பா படிவ மாற்றம் எப்படி இருந்தது? இன்று பிரச்னை இல்லை, அதன் தீர்வு இல்லை. அன்பெனும் உணர்வு மட்டுமே இருந்தது. இந்த மாற்றம் போதுமா?”
தாயே எனக் கதறியபடி அவள் கால்களில்  விழுந்து வணங்கினேன்.
“சரி ஊருக்குத்தான் உபதேசமாக்கும்! அவருகுப் பொருந்தாதா? நீ உன்னை எனக்குக் கொடுத்தால் நான் என்னை உனக்குத் தரமாட்டேன் என்றா சொல்லப்போகிறேன்?”
மீண்டும் ஒரு முறை அவள் காலில் விழுந்து வணங்கி விம்மல்களுக்கிடையே தட்டுத் தடுமாறிப் பேசினேன்.
“தாயே கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? கொத்தடிமை என்பதன் பொருள் என்ன? ஏற்கனவே என்னுடையது என்று இருக்கும் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்துவிட்டேனே! என்னையே உங்களுக்குக் கொடுத்து அடிமைச்சாசனம் எழுதித் தந்துவிட்டேனே! இனிமேல் இங்கே கொடுக்க யார் இருக்கிறார்கள்? இல்லை...கொடுக்க என்னதான் இருக்கிறது?
“பதிலுக்கு என்னையே கொடுக்கிறேன் வாங்கிக்கொள்கிறாயா?”
“வாங்கிக்கொள்ள இங்கு யார் இருக்கிறார்கள் தாயே? அங்கே இருப்பதும் நீங்கள்தான். இங்கே இருப்பதும் நீங்கள்தான். நான் உங்கள் கால் சுண்டு விரல் நகத்தில் ஒட்டியிருக்கும் மண். அதற்கு உங்களால்  என்ன கொடுக்கமுடியும்? அப்படியே கொடுத்தாலும் அது எப்படி அதை வாங்கிக்கொள்ளமுடியும்?”
சுற்றியிருந்த விளக்குகள் மிக பிரகாசமாக ஒரு கணம் எரிந்து, பின் அணைந்து மீண்டும் எரியத் தொடங்கின.
பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டிருந்தாள். நான் தனியாக அழுதுகொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar