Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவன் ஒருவனாவது எஞ்சியிருக்கட்டும்
 
பக்தி கதைகள்
அவன் ஒருவனாவது எஞ்சியிருக்கட்டும்


ராமனின் மனம் இன்னும் தெளிவடையாதிருப்பதை அவனது முகம் தெரிவித்தது. லட்சுமணன் அவனை நெருங்கி வந்து அண்ணனின் தோளைத் தொட்டான்.
‘அரக்கியே ஆனாலும் தாடகை ஒரு பெண்…’ என்று ஆரம்பித்த ராமனை ஆசுவாசப்படுத்தினான் லட்சுமணன். ‘‘நீங்கள் ஒரு பெண்ணை வதைக்கவில்லை. அவளுக்குள் குடியிருந்த கொடூர குணத்தைதான் வதைத்தீர்கள். ஆமாம்... அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் மனதுக்குள் ஏதேனும் கொடிய எண்ணம் புகுந்தால் நம் கட்டுப்பாட்டால் அதை அறவே நீக்க முடியும். ஆனால் தாடகை போன்றவர்களின் மனதிலிருந்து அரக்கத்தனத்தை வெளி மனிதரான நம்மால் எப்படி அழிக்க முடியும்? தன்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என பிடிவாதம் செய்யும் ஒருவரை மாற்றுவது எளிதல்ல என்றே தோன்றுகிறது. அறிவுறுத்தலாலோ, கண்டிப்பாலோ அவரை மாற்ற இயலவில்லை. அதே சமயம் அவரால் பாதிக்கப்படக் கூடியவர்களை காப்பாற்ற வேண்டும். எது சுலபம்? பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதா அல்லது அவர்களுக்கு கொடுமை செய்யும் ஒருவரை வதம் செய்வதா?
‘‘கொலைக் குற்றம் புரிபவருக்கு மரண தண்டனை கொடுப்பது போலதான் நீங்கள் மேற்கொண்ட செயலும். அரக்கரை வதைப்பதன் மூலம் மற்ற அரக்கர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளீர்கள். இந்த வதத்தைப் பற்றி அறியும் அவர்கள் திருந்த வேண்டும் அல்லது வதைபடத் தயாராக இருக்க வேண்டும். விஸ்வாமித்திரர் அவ்வாறு ஆணையிட்டார் என்றால் ஒரு நீதிபதியின் தீர்ப்பு போலத்தான் நாம் அதை ஏற்க வேண்டும். பிறகு வதம் எனும் செயலைச் செய்ய நாம் ஏன் தயங்க வேண்டும்’’
தம்பியின் ஆறுதல் பேச்சு ராமனை சமாதானப்படுத்தின. புன்முறுவல் பூத்தான். இப்போதுதான் லட்சுமணன் மனமும் சமாதானம் அடைந்தது.  இதை கவனித்த விஸ்வாமித்திரரும் மகிழ்ந்தார். பிறகு ராமனுக்குப் பல தெய்வப் படைக் கருவிகளை வழங்கினார். அவை அஸ்திரம் எனப்பட்டன. அதாவது ஒவ்வொரு பாணத்துக்கும் ஒரு மந்திரம் என உபதேசித்து ராமனை ஆயுதபலம் மிக்கவனாக ஆக்கினார். மந்திரத்தை உச்சரித்து ஒரு புல்லை எடுத்து ராமன் வீசினாலும் அது ராம பாணமாக விரைந்து சென்று இலக்கை அழித்து மீளும் வலிமை கொண்டது. சஸ்திரம் என்பது சாதாரண ஆயுதம். ஆனால் விஸ்வாமித்திரர் வழங்கியது போன்ற அஸ்திரம் மந்திர பூர்வமானது, பலம் வாய்ந்தது.
முனிவர் உபதேசித்த  மந்திரங்களை மனதில் வாங்கிக் கொண்டான் ராமன். அடுத்தடுத்த சாதனை கட்டத்திற்குத் தயார்படுத்திக் கொண்டான்.
விஸ்வாமித்திரர் சித்தாஸ்ரமம் எனப்படும் தன் இருப்பிடத்துக்கு சகோதரர்களை அழைத்து வந்தார். அங்கே ஓங்கி வளர்ந்த மரங்களைக் கண்டு வியந்தான் லட்சுமணன். ‘‘வானளாவிய மரங்கள் இந்தப் பகுதிக்கே தனிச் சிறப்பு சேர்க்கின்றன’’  என வியந்தான்.  
‘‘உண்மைதான்’’  என்றார் விஸ்வாமித்திரர். ‘‘இந்த வனத்திற்கு வாமனர் வந்திருக்கிறார். மகாபலியை ஆட்கொண்ட அவர் விஸ்வரூபம் எடுத்தார். அந்த சம்பவத்தை நிரூபிக்கும் விதமாக இன்றளவும் மரங்கள் வானுயர நிற்கின்றன’’ என்றார்.
லட்சுமணன் வியப்புடன் ராமரைப் பார்க்க, தன் ‘பூர்வீகம்’ உணர்ந்த ராமன் முறுவலித்தான்.
விஸ்வாமித்திரர் மேலும் தொடர்ந்தார். ‘‘இங்கே உள்ள குடிலில்தான் நான் யாகம் இயற்றுகிறேன். ஆனால் சுபாகு, மாரீசனால் இடையூறு ஏற்பட்டு யாகம் நிறைவேறாமல் போய் விடுகிறது’’ என ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
‘‘தாடகையின் புதல்வர்களான அவர்கள் யாகம் ஆரம்பிக்கும் போது வர மாட்டார்கள். அவர்கள் இங்கு இருப்பதற்கான அடையாளமே தெரியாது. நானும் நிம்மதியாக யாகம் வளர்ப்பேன். ஆனால் யாகம் நிறைவேறும் பூர்ணாஹுதியின் போது எல்லாவற்றையும் நிர்மூலமாக்கிவிட்டுச் செல்வார்கள். நான் அப்படியே இடிந்து போய் விடுவேன். ஏனெனில் மறுபடியும் நான் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே’’
அவரது தர்மசங்கடத்தைக் கண்டு இருவரும் வருத்தம் கொண்டனர்.  
தான் மிகப் பெரிய தவமுனியாக இருந்தாலும், ஏற்கனவே தவப் பலன்களை எல்லாம் அற்ப காரணங்களுக்காக வீணாக்கிய அவர், இந்த அரக்கர்களை வதைத்து மீதிப் பலனையும் இழக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் ராமனை அழைத்து வந்திருக்கிறார்.
‘‘சரி.. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கண்காணிக்கிறோம், உங்கள் யாகம் எந்தக் கட்டத்திலும் தடைபடாதபடி பாதுகாக்கிறோம்’’ என உறுதியளித்தான் ராமன். லட்சுமணன் முகமலர்ச்சியுடன் ஆமோதித்தான்.
நிம்மதியுடன் விஸ்வாமித்திரர் யாக ஏற்பாட்டைத் தொடங்கினார். ராமனும், லட்சுமணனும் பார்வையை எல்லா கோணங்களிலும் செலுத்தி வந்தனர்.  
கண்ணை இமை காப்பது போல சகோதரர்கள் ஆசிரமத்தைக் காத்தனர். அதாவது கீழ் இமை போல லட்சுமணன் ஓரிடத்தில் நிற்க, மூடித் திறக்கும் மேல் இமை போல ராமன் சுற்றி வந்து கொண்டிருந்தான். அரக்கர்களை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டியிருந்தால் தம்பியை சிரமப்படுத்த வேண்டாம் என ராமன் நினைத்தான். தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என லட்சுமணன் விரும்புவதால் தான் செல்லுமிடங்களுக்கு அவனை அழைத்துச் சென்றான் என்றாலும், தம்பியின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்தான் ராமன். அந்தவகையில் சித்தாஸ்ரமத்தில் தம்பியை ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டு, தான் சுற்றி வந்தான்.
அண்ணனின் பேரன்பை லட்சுமணன் உணர்ந்தாலும், அவனுக்கு ஆபத்து நேரக் கூடாதே, அவனுக்கு உறுதுணையாக இருக்கவே தாம் வந்திருக்கிறோம் என்ற கவலையும் லட்சுமணனுக்கு நிரம்ப இருந்தது. அதனால் அண்ணன் மீதே கண் வைத்திருந்தான். அவனது கைகள் வில்லை உறுதியாகப் பற்றியிருந்தன. எந்தக் கணமும் அண்ணனின் பாதுகாப்பிற்காக வில்லையும் அம்பையும் பயன்படுத்தத் தயாராக இருந்தான்.
யாகம் முடியும் நேரம் நெருங்கியது. பூர்ணாஹுதி செலுத்த வேண்டியதுதான் பாக்கி. அப்போது சொல்லி வைத்தாற் போல பெருங்காற்றாக வந்திறங்கினர் சுபாகுவும், மாரீசனும்.
சகோதரர் இருவரும் அரக்கர்களை கவனித்துக் கொள்வார்கள் என்ற நிம்மதியில் விஸ்வாமித்திரர் யாகத்தின் நிறைவு கட்டத்தை எட்டினார். அரக்கர்கள் திடுக்கிட்டனர். அதுவரை சித்தாஸ்ரமத்தில் சந்தித்திராத ‘பகைவர்களை’ அப்போது கண்டனர்.  வில், அம்புடன் கம்பீரமாக நின்ற ராம, லட்சுமணனை கண்டு வியந்தனர். ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே தாங்கள் கலைத்துப் போடும் யாக ஏற்பாடுகளை எதிர்ப்பு இன்றி சகித்துக் கொள்கிறார் என்றால், இப்போது தங்களைத் தடுக்கும் இந்த பாலகர்கள் யார்? என அவர்கள் யோசித்து நின்ற போதே ஒரு பாணம் வந்து சுபாகுவை வீழ்த்தியது. உடனே மரித்துவிட்ட அவனைப் பார்த்து சகோதரனான மாரீசன் அலறினான். சுபாகுவைக் கொன்ற ராமன் மீது பாய்ந்தான்.
அதைக் கண்டு பதறிய லட்சுமணன், அண்ணனருகே ஓடி வந்தான். உடனே அஸ்திரத்தை ஏவினான் ராமன். அது மாரீசன் உடலில் குத்தியது, ஆனால் துளைக்கவில்லை. அவனை தள்ளிக் கொண்டு போய் கடலில் விட்டது.
ராமனின் பராக்கிரமத்தை அறிந்த மாரீசன் தப்பித்தோம், பிழைத்தோம் என்றோடி தனக்குப் புகலிடம் அளித்திருந்த ராவணனைப் போய்ச் சேர்ந்தான்.
விஸ்வாமித்திரருக்கும் சரி, லட்சுமணனுக்கும் சரி, மாரீசனை ராமன் வதைக்காமல் விட்டது ஏன் என புரியவில்லை.
அதற்கு ராமன் விளக்கம் அளித்தான். ‘‘ஏற்கனவே இவனுடைய தாய் தாடகையை  வதைத்தேன். இதோ இப்போது இவனது சகோதரன் சுபாகுவை வதைத்தேன். இந்தக் குடும்பத்தில் இவனாவது எஞ்சியிருக்கட்டும் எனக் கருதினேன். அதனால் தான் கொல்லாமல் விட்டேன்’’
கடவுளின் செயல் எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணி அல்லது எதிர்கால அவசியம் இருக்கும் என்பதை இச்சம்பவம் தெளிவாக்கியது. இந்த மாரீசன்தானே ராவண வதத்துக்கு முக்கிய காரணமாக இருக்கப் போகிறான்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar