Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆசிரியை கற்றுக்கொண்ட பாடம்
 
பக்தி கதைகள்
ஆசிரியை கற்றுக்கொண்ட பாடம்


“நான் வத்சலா.  ஒரு பிரைவேட் ஸ்கூல்ல உதவி தலைமையாசிரியரா இருக்கேன். உங்க பச்சைப்புடவைக்காரி என்னை அம்போன்னு விட்டுட்டாஎன்ன செய்யறதுண்ணே தெரியல”
என்னதான் பிரச்னை?
“ஒரு டீச்சர்ங்கற முறையில எனக்கு நல்ல பேரு”
தெரியும். வத்சலாவை என்னிடம் அனுப்பிய நண்பர் சொல்லியிருக்கிறார். படிப்பின் மீது நாட்டமில்லாத தன் மகளுக்கு டியூஷன் எடுத்து எப்படி அவளை ஒரு சிறந்த மாணவியாக்கினார் என்று சொல்லியிருக்கிறார். டியூஷன் மூலம் நன்றாகச் சம்பாதிப்பதாகவும் சொன்னார்.
“ஆனா சொந்த வாழ்க்கையில ஏகப்பட்ட பிரச்னை. என் புருஷன் செய்யாத தப்புக்கு ஆபீஸ்ல அவர சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. எங்க ஒரே பையனுக்கு வலிப்பு நோய். அடிக்கடி டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போக வேண்டியிருக்கு. எனக்கு சர்க்கரை வியாதி. என்ன சார்... பாவம் செஞ்சேன்? வகுப்பே நடத்த தெரியாத காஞ்சனா தான் எங்க ஸ்கூல்ல ஹெட்மிஸ்ட்ரஸ். பிரச்னை ஏதும் இல்லாம சந்தோஷமா இருக்கா. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? நான் பச்சைப்புடவைக்காரிய கும்பிடறது தப்பா?”
நான் பேசத் தொடங்கும்முன் என் உதவியாளர் உள்ளே வந்தார்.
“நன்கொடை தரேன்னு சொன்னீங்களாமே... வந்திருக்காங்க”
“அப்படி யாருக்கும் சொல்லலையே”
“கொஞ்சம் வந்து பாருங்களேன்”
வெளியே ஓடினேன். நாற்பது வயதுப் பெண் இருந்தாள்.
“பத்தாயிரம் ரூபா தரேன்னு சொல்லிட்டு இப்போ இல்லேன்னு சொன்னா எப்படி?”
உதவியாளரை வெளியே அனுப்பி விட்டு, நன்கொடை கேட்டு வந்தவளின் காலில் விழுந்து வணங்கினேன்.
“நீங்கள் கொடுத்த நன்கொடையில்தான் இந்த கொத்தடிமை மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. என்னை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்?”
“கண்ணைத் துடைத்துக்கொள். உள்ளே இருப்பவள் சொல்வதைத்தான் உலகில் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உன் மூலம் பதில் சொல்ல இருக்கிறேன்”
“நான் என்ன செய்ய வேண்டும் தாயே”
“இப்போதைக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வை. வரும் வெள்ளிக்கிழமை அவளுக்கு காலையில் வகுப்பு கிடையாது. அன்று பள்ளிக்குப் போ. அதன்பின் நடக்கவேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன்”
வத்சலா விடைபெறும்வரை புலம்பிக்கொண்டுதான் இருந்தாள்.
வெள்ளிக்கிழமை. வத்சலாவை அலைபேசியில் அழைத்து “ஒரு பள்ளி ஆசிரியையைப் பற்றிக் கதை எழுதப் போகிறேன். பள்ளி நிர்வாகம், வேலை நேரம், மாணவர்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று உங்களைப் பள்ளியில் பார்க்க வரலாமா?”
“தாராளமாக. காலையில கிளாஸ் கிடையாது. அசம்ப்ளி பத்து மணிக்கு முடிஞ்சிரும். அப்போ வந்தீங்கன்னா சரியா இருக்கும்”
போனேன். வத்சலா வேலை பார்க்கும் தனியார் பள்ளி கம்பீரமாக இருந்தது.  அசம்ப்ளி முடிந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு வரிசையாகச் சென்று கொண்டிருந்தனர். மாணவர்களுக்கு பளீர் வெள்ளை மற்றும் நீல நீறத்தில் சீருடை. ஆசிரியர்களுக்கும் நீலத்திலும் வெள்ளையிலுமான சீருடை. பெரிய வளாகம். மூவாயிரம் மாணவ, மாணவியர் படிக்கிறார்களாம்.
என்னைப் பார்த்ததும் வத்சலா ஓடி வந்தாள். தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். உப்பு சப்பில்லாத பல விவரங்களைக் கேட்டேன்.  அதைக் குறிப்பெடுத்து போல் பாசாங்கு செய்தேன்.
“ஒரு நடை வகுப்புக்களைச் சுற்றிப் பார்க்கலாமா?” என்று கேட்டேன். சம்மதித்தாள்.
ஒவ்வொரு வகுப்பாகப் பார்த்துக்கொண்டே வந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு பிரிவுகள் இருப்பதாகச் சொன்னாள்.
“ஒன்பதாவதுவரை அந்தப் பிரிவுகள் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பில் பிரிவுகளின் அமைப்பு வித்தியாசமாக இருக்கும்”
எனக்குச் சிலிர்த்தது. அவள் சொல்லப்போவதை வைத்துக்கொண்டுதான் அவள் புலம்பலுக்குப் பதில் சொல்லவேண்டும்.
“ஒன்பதாம் வகுப்புவரை ஒரு மாணவி எப்படி படிக்கிறாள், தேர்வில் எப்படி மதிப்பெண்கள் பெறுகிறாள் என்பதை வைத்தே பத்தாம் வகுப்பில் அவள் எந்தப் பிரிவுக்குச் செல்கிறாள் என்பதை தீர்மானிப்போம்”
“புரியவில்லையே”
“ஒன்பதாம் வகுப்புவரை எண்பது மதிப்பெண்களுக்குமேல் வாங்கி வகுப்பில் முதல் பத்து ரேங்குகளுக்குள் இருப்பவர்களை எல்லாம் சேர்த்து பத்தாம் வகுப்பு முதல் பிரிவுக்கு அனுப்புவோம் அந்தப் பிரிவில் எல்லா மாணவர்களும் படிப்பில் படு சூட்டிகையாக இருப்பார்கள். அறுபது முதல் எண்பது மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் இரண்டாம் பிரிவுக்கு வருவார்கள். மூன்றாம் பிரிவில் வருபவர்கள் சுமார் ரகம். நான்காம் பிரிவில் மோசமாகப் படிப்பவர்கள் ரகம்”
“சபாஷ். ஆனால் எல்லாப் பிரிவுகளுக்கும் ஒரே மாதிரியாகத்தானே பாடம் நடத்துவீர்கள்?”
“பாடங்கள் ஒன்றாக இருந்தாலும் நடத்தும் முறை வேறாக இருக்கும். மோசமாகப் படிப்பவர்கள் ப்ளஸ் டூவில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அளவில் லேசாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்போம்.  நன்றாகப் படிப்பவர்கள் இருக்கும் முதல் பிரிவில் பயிற்சி கடுமையாக இருக்கும். வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் அவர்களுக்கு பயிற்சித் தேர்வுகளில் கேள்விகள் கடினமாக இருக்கும். வெளியிலிருந்து வரும் சிறப்பு ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். முதல் பிரிவில் இருக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கவேண்டும், நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.”
“இது அநியாயம் இல்லையா? ஒரே வகுப்புல படிக்கற ஒரு மாணவனுக்கு லேசான பயிற்சி, தேர்வில் எளிதான கேள்விகள். அதே வகுப்புல முதல் பிரிவுல படிக்கற மாணவிக்குக் கடும் பயிற்சி, கஷ்டமான கேள்விகள். ஏன் இந்த ஓர வஞ்சனை”
“என்ன சார் புரியாமப் பேசறீங்க?  எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாவா இருக்காங்க? அவங்க அறிவுக்கும் திறமைக்கும் தகுந்த மாதிரி பயிற்சி கொடுக்கவேண்டாமா? ஈயம் பித்தளைய லேசாத் தட்டி, முலாம் பூசி பரீட்சையில பாஸ் பண்ண வச்சிருவோம். ஆனாத் தங்கத்தை புடமிட்டு  சுத்தம் செஞ்சி மாநில அளவுல சாதிக்க வைக்கணும் சார்”
“அதையே பச்சைப்புடவைக்காரி செஞ்சா நீங்க ஏன் கத்தறீங்க?”
“அது..”
“காஞ்சனா டீச்சர் சராசரி ரகம், வகுப்போடக்  கடைசிப் பிரிவுல இருக்காங்க. அதனால அவங்களுக்கு கஷ்டமில்லாத  வாழ்க்கையக் கொடுத்திருக்கா பச்சைப்புடவைக்காரி. அவங்க வாழ்க்கை பரீட்சையில வெறும் பாஸ் மார்க் வாங்கினாப் போதும். ஆனா நீங்க முதல் பிரிவுல முதல் மாணவியா இருக்கீங்க. உங்க ஆன்மிக வளர்ச்சி உன்னதமா இருக்கணும்னு அவ நெனைக்கறா.
“அதனாலதான் உங்கள முதல் பிரிவுல சேர்த்து சிறப்புப் பயிற்சி கொடுத்துக்கிட்டிருக்கா. உங்க கணவரோட ஆபீஸ் பிரச்னை, உங்க மகனோட வலிப்பு நோய், உங்க சர்க்கரை நோய் இதெல்லாம் அவ உங்கள உச்சநிலைக்குக் கொண்டு போக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள். நீங்க எழுதற சிறப்புத் தேர்வுகள்”
வத்சலா அழுதாள்.
“நான் வரேன்.”
பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறும்போது ஒரு ஆசிரியை என்னை வழிமறித்தாள்.
“ஆசிரியைக்கே பாடம் கற்றுக்கொடுத்து விட்டாயே”
“கற்றுக்கொடுத்தது நீங்கள்.  நீங்கள் சொன்னதை அப்படியே சொன்ன கத்துக்குட்டி நான்”
“அது சரி, நீ எந்தப் பிரிவில் இருக்கிறாய் என்று அறிவாயா”
“பிரிவுகளெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் தாயே! கொத்தடிமைகளுக்கு இல்லை”
“நீ அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டாமா”
“உங்கள் கொத்தடிமை என்ற நிலையைத்தாண்டி எந்த நிலையும் இல்லை, தாயே. அப்படியே இருந்தாலும் அங்கே போக  விருப்பமில்லை தாயே!
ஆசிரியை வடிவில் நின்ற ஆதி பராசக்தியின் கால்களில் விழுந்து வணங்கினேன். நிமிர்ந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar