Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதைக்கு ஏற்ற சீலன் யார்
 
பக்தி கதைகள்
சீதைக்கு ஏற்ற சீலன் யார்


வேள்வி நடத்தும் முன்பாக யாகசாலையை அமைக்கப் போகும் நிலத்தை உழுவது என்பது அந்த நாளில் ஒரு சம்பிரதாயமாகக் கடைபிடிக்கப்பட்டது.  இந்த நியதி சாதாரண குடிமகன் முதல் முனிவர் தொடர்ந்து மன்னர் வரை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வகையில் கண்டகி, கவுசிகி ஆறுகளுக்கு இடையே அமைந்த விதேக நாட்டு மன்னர் ஜனகரும் வேள்வி ஒன்றைத் துவக்கினார். மரபுப்படி அவரே ஏர் பிடித்து நிலத்தை உழுதார். சற்று தொலைவில் ஏர் முனை, பூமிக்கடியில் புதைந்திருந்த பேழை ஒன்றில் இடித்தது. பாறை, மண் கட்டி என்றால் அவற்றைப் புரட்டிப் போட்டு உழுதலைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் தடுத்தது அழகுப்பேழை!
ஆவலுடன் அந்தப் பேழையை எடுத்து திறந்து பார்த்தார் ஜனகர். அதற்குள் மகாலட்சுமி வடிவில் அழகு குழந்தை முகம் மலரச் சிரித்தபடி இருந்தது. அதன் அழகில் மயங்கிய ஜனகர் அப்படியே  குழந்தையை உச்சி மோந்தார். பிறகு பாதுகாப்பாக அரண்மனைக்கு தாங்கிச் சென்று மனைவி சுநயனாவிடம் ஒப்படைத்தார். அவளும் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
குழந்தைக்கு ‘சீதா’ என்று பெயரிட்டனர். அதாவது ‘உழுபொருளால் கண்டெடுக்கப்பட்டவள்‘ என்பது பொருள். ஜனகரின் மகளாக உறவு பெற்றதால் அவள் ஜானகி எனப்பட்டாள்.  விதேக நாட்டு மன்னர் ஜனகரின் மகள் என்பதால் வைதேகி என்றும், மிதிலை நகரின் ராஜ புத்திரியானதால் மைதிலி என்றும் அழைக்கப்பட்டாள்.
சீதை அரண்மனைக்கு வந்து சேர்ந்த பின், ஜனகர்- சுநயனா தம்பதிக்கு ஊர்மிளை என்றொரு மகள் பிறந்தாள். சீதையும், ஊர்மிளையும் உடன் பிறந்த சகோதரி போல பாசமுடன் வளர்ந்தனர். ஜனகரின் தம்பியான குசத்துவனின் மகள்கள் மாண்டவி, சுருதகீர்த்தி இருவருடனும் கருத்து ஒருமித்த தோழிகளாக பழகினர்.  
முதலில் வந்தவள் என்பதால் சீதைக்கு முதலில் திருமணம் நிகழ்த்த ஜனகர் தீர்மானித்தார். ஆனால் சீதையின் பராக்கிரமம் கண்டு வியந்த அவர் அவளுக்கு முற்றிலும் தகுதியான ஓர் ஆண்மகன் வருவானானால் அவனுக்கே அவளை மணமுடிப்பது என உறுதி பூண்டிருந்தார்.
சீதையின் பராக்கிரமமா.. என்ன அது...
சிவதனுசு என்னும் வில் ஒன்று ஜனகரிடம் இருந்தது. அது சிவபெருமானால் பயன்படுத்தப்பட்டது.
ஒருசமயம் தாரகாட்சன், வித்யுந்மாலி, கமலாட்சன் என்னும் அரக்க சகோதரர்கள் தம் இயல்புப்படியே அராஜகம் புரிந்தனர். மூவரும் தனித்தனியே தங்கம், வெள்ளி, இரும்புக் கோட்டைகளை உருவாக்கி கொண்டு அதில் அமர்ந்தபடி பயணிப்பார்கள். ஆமாம், அவை பறக்கும் திறன் கொண்டிருந்தவை. யார் கண்ணிற்கும் படாமல் அந்தக் கோட்டைகளுடன் விண்ணில் மறையும் அவர்கள் திடீர் திடீரென பூமியில் இறங்கி ஊர்களையும், மக்களையும் அழித்து கோர தாண்டவம் ஆடினர்.
இவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று விரும்பிய தேவர்கள் சிவபெருமானை அணுகினர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்ற சிவன், உடனே அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முன்வந்தார். பூமியையே தேராக ஆக்கிக் கொண்டார். சூரியன், சந்திரனை தேர்ச் சக்கரங்களாக மாற்றினார். நான்கு வேதங்களை குதிரைகளாக உருமாற்றி தேரில் பூட்டிக் கொண்டார். பிரம்மனைத் தேரோட்டியாக நியமித்தார். மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், மகாவிஷ்ணுவை அம்பாகவும் கொண்டு அரக்கர்கள் மீது தாக்குதல் புரிந்தார்.
மூன்று கோட்டைகளும் துாள் துாளாக அசுரர்கள் வதைபட்டு வீழ்ந்தார்கள். வெற்றி வாகை சூடி தங்கள் நலனையும் காத்த கயிலைநாதனுக்கு தேவர்கள், முனிவர்கள், பூலோக மக்கள் அனைவரும் நன்றி செலுத்தினார்கள்.
சிவபெருமான் கையாண்ட படைக் கலங்களில் ஒன்றான வில்லே சிவதனுசு என்று அழைக்கப்பட்டது. அதனை ஜனகரின் மூதாதையர் ஒருவருக்கு சிவன் பரிசாக அளித்தார். அது வம்சாவழியாக இப்போது ஜனகரின் அரண்மனையில் இடம் பெற்றிருந்தது.
மிக பிரமாண்டமான அந்த வில், அதைவிடப் பெரியதான ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. யாராலும் துாக்க முடியாத அளவுக்கு அது மிகவும் கனமாக இருந்ததாலும், அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லாததாலும், அதை அப்படியே ஒரு பெரிய அறைக்குள் வைத்திருந்தார்கள்.
சீதை தன் சகோதரிகளான ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தியுடன் அரண்மனை நந்தவனத்தில் விளையாடி மகிழ்வாள். சகோதரிகள் மூவரும் சீதையுடன் விளையாடுவதைத் தங்களுடைய தினசரி வழக்கமாகவே கொண்டார்கள். நந்தவனம் மட்டும் என்றில்லாமல் அரண்மனைக்குள்ளும் குழந்தைகள் என்ற உரிமையில் பல பகுதிகளில் ஓடிப் பிடித்து விளையாடி மகிழ்ந்தார்கள். இந்த வகையில் சிவதனுசு பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறையில் அவர்கள் அம்மானை ஆடி இனிதாகப் பொழுது போக்கி குதுாகலிப்பார்கள்.
அப்படி ஒருநாள் அம்மானை ஆடும் போதுதான் சீதையின் பராக்கிரமம் தெரியவந்தது. தரையில் கட்டம் போட்டு, ஆளுக்கொரு காய் என்று வைத்துக் கொண்டும், கையில் சில காய்களை மேலே துாக்கிப் போட்டும், விழுவதைப் பிடித்தும் அம்மானையின் விதிப்படி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது துாக்கிப்போட்டுப் பிடிக்கப்பட வேண்டிய காய்களில் ஒன்று வெளியே விழுந்து உருண்டோடியது. அதைப் பிடிக்கப் பின் தொடர்ந்த சீதை அது சிவதனுசு பெட்டிக்கடியில் போய் ஒளிந்து கொண்டதைக் கண்டாள். அந்தக் காய் இருந்தால்தான் அடுத்தவர் ஆட முடியும். தான் துாக்கிப் போட்டுப் பிடித்த காய்களில் ஒன்று இப்படி உருண்டோடியதால், அதை மீட்க வேண்டியதும் தன் பொறுப்புதான் என்பதை உணர்ந்த சீதை அந்தப் பெட்டியின் அருகே சென்றாள். அதனடியில் குனிந்து பார்த்தாள். உள்ளே பெட்டி பரப்பில் பாதிக்குப் போய், ‘என்னைப் பிடி’  என சவால் விடுவதுபோல கிடந்தது அந்தக் காய்.
உடனே நிமிர்ந்தாள் சீதை. இடது கையால் பெட்டியைத் துாக்கினாள். சற்று இழுத்து நகர்த்தி வைத்தாள். காய் அகப்பட்டுக் கொண்டது. அதை எடுத்துக் கொண்டு சகோதரிகளுடன் விளையாட்டைத் தொடர்ந்தாள். பிற மூன்று பெண்களும் சீதையை வியப்புடன் பார்த்தார்கள். அந்த பிரமாண்ட பெட்டி அத்தனை கனம் கொண்டது. அதை இவளால் எப்படி அநாயசமாகத் துாக்கி, ஒதுக்கிவைக்க முடிந்தது?
மறுநாள் தன் அரண்மனைப் பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த ஜனகர், சிவதனுசு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அந்தப் பெட்டி நகர்த்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்தார். பாரம் மிகுந்தது என்பதால் ஒரே இடத்தில், ஒரே கோணத்தில் அதுவரை நிலை கொண்டிருந்த அந்தப் பெட்டி இப்போது நகர்ந்து இடம் பெயர்ந்திருக்கிறது. யார் செய்திருப்பார்கள் இதை... சிவதனுசைப் பராமரிக்கும்வகையில், அதைத் துாய்மைப்படுத்த சமீப நாட்களில் தான் உத்தரவிடவில்லையே எனக் குழம்பினார் ஜனகர்.
அதுபற்றி விசாரிக்க முனைந்தபோது, அவருக்குக் கிடைத்த பதில் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. சீதை எளிதாக அந்தப் பெட்டியை நகர்த்திய சம்பவம் தெரிய வந்தது. அப்படியே பிரமித்துப் போனார் ஜனகர். ‘இத்தனை பராக்கிரமமா’
கூடவே அவருக்கு கவலையும் தோன்றியது. ‘இத்தகையவளுக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவனை கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அப்போதுதான் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். சிவதனுசு வைக்கப்பட்டிருந்த பெட்டியை இலகுவாகத் துாக்கி நகர்த்திய சீதைக்கு அந்த வில்லைத் துாக்கி எடுத்து நாண் பூட்டக் கூடியவன்தான் சரியான கணவனாக அமைவான் என்று கருதினார். அத்தகையவன் உடலளவில் வெறும் பலசாலியாக இருந்தால் மட்டும் போதாது, தனுசை லாவகமாகக் கையாளும் புத்திசாலித்தனம் நிறைந்தவனாகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில் தர்மவானாகவும், ஒழுக்கம் நிறைந்தவனாகவும், மனதில் விகாரம் இல்லாதவனாக, பக்தி நிறைந்தவனாக விளங்கும் ஒருவனால்தான்  சிவதனுசைத் துாக்கவே முடியும்!  
அதனால்தான் சீதையை மணக்க விருப்பம் தெரிவித்தவர்களிடமெல்லாம் சிவதனுசில் நாணேற்றும் திறனை சோதித்துப் பார்த்தார். யாரும் இதுவரை அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. இதுவே ஜனகருக்குக் கூடுதல் கவலையைத் தந்தது, ‘சீதைக்கேற்ற சீலனை எப்போது காண்போமோ’  என கலக்கம் கொண்டார்.
இச்சமயத்தில்தான் விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணரை மிதிலை நகருக்குள் அழைத்து வந்து கொண்டிருந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar