Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நான் தேர்ந்தெடுத்த வழி!
 
பக்தி கதைகள்
நான் தேர்ந்தெடுத்த வழி!


என் முன்னால் இருந்த மரகதத்திற்கு ஐம்பது வயதிருக்கும். ‘நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்புய்யா. இல்லேன்னா தற்கொலை பண்ணிக்குவா’ என்று என் நண்பர் சொல்லியிருந்தார்.
“எனக்கு 20 வயசுல கல்யாணம். 22 வயசுல பையன் பிறந்தான். 23 வயசுல என் புருஷன் செத்துட்டாரு நான்தான் என் மகனைப் படிக்கவச்சி ஆளாக்கினேன். நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சேன். என் பேத்திக்கு மூணு வயசு’’
“திடீர்னு என் பையனுக்கு ரெண்டு கிட்னியும் வேல பாக்கலங்க. வைத்தியம் பாத்துக்கிட்டிருக்கோம். செலவ விடுங்க. பையனுக்கு என்னாகும்னே தெரியலங்க. பிரச்னைக்குப் பயந்து என் மருமக குழந்தையையும் விட்டுட்டு பொறந்த வீட்டுக்கு ஓடிட்டா.  நான் ஒத்த ஆளா என் பையன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய் என் பேத்தியவும் பாத்துக்கிட்டு  நாலு வீட்டுல சமையல் வேல செஞ்சி சம்பாதிச்சி... முடியலங்கய்யா. பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கங்க”
மரகதம் சொன்னதையே நினைத்தபடி அமர்ந்திருந்தேன்.
“சார் போஸ்ட்” என குரல் கேட்டு வாசலுக்கு ஓடினேன்.
அந்த அழகான தபால்காரி ஒரே ஒரு புன்னகையில் தான் புவியேழுக்குக்கும் அரசி என்பதைக் காட்டிவிட்டாள். அவள் காலில் விழுந்து வணங்கினேன்.
“இப்படியே அடுத்தவர் கர்மக்கணக்கில் மூக்கை நுழைத்துக்கொண்டேயிருந்தால் உன் கர்மக்கணக்கு சிக்கலாகிவிடும், சொல்லிவிட்டேன்”
“இன்று இந்தக் கொத்தடிமையுடன் சொல்லாட வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றிவிட்டதாக்கும்? உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்? அன்பு என்னும் ஒளியைக் கொண்டு கர்மக்கணக்கு என்னும் இருளை அகற்றமுடியுமா என்று நான் பார்க்கிறேன். இருள் அகன்றாலும் அகலாவிட்டாலும் ஒளிக்கு எந்த தீங்கும் நேராதே’’
“சபாஷ்... மரகதத்தின் கர்மக்கணக்கில் நீ தான் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்”
“புரியவில்லையே”
“மரகதம் அல்லல்படவேண்டும் என்பது விதி.  உனக்காக அவளுடைய துன்பங்களை உடனே போக்குகிறேன். ஆனால் மரகதம் இதே வேதனையை இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவியிலோ பட்டுத்தான் ஆகவேண்டும்”
“இரண்டாவது வழி”
“நீ மரகதத்திடம் பேசி அவளுக்கு உற்சாகமூட்டு. மனவலிமையுடன் சூழ்நிலையை எதிர்த்துப் போராடச் சொல். அவள் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது. இந்த முறை துன்பம் அனுபவித்துவிட்டால் பின் எப்போதும் அவள் இது போன்ற துன்பத்தை அனுபவிக்க வேண்டாம்.”
 “முதல் வழியைத் தேர்ந்தெடுத்தால் மரகதம் உன்னைத் தெய்வமாக வழிபடுவாள். இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தால் உன்னை அடியோடு மறந்துவிடுவாள்”
“என்னை ஏன் வழிபடவேண்டும், தாயே? வழிபாடு எல்லாம் உங்களுக்கு மட்டும்தான். எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் மரகதம் என்னை மறந்துவிடும் வரத்தை முதலில் தாருங்கள்”
அன்னை அழகாகச் சிரித்தாள்.
மறுநாள் மரகதத்திடம் பேசினேன்.
“நீதாம்மா எதிர்த்துப் போராடணும்.”
“நீங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட பிரார்த்தனை பண்ணலையா”
“பண்ணேன். நான் கேட்டதக் கொடுத்துட்டா”
“என்னய்யா கேட்டீங்க”
“மரகதம் தனியாளா போராடவேண்டிய நேரம் இது. அதுக்கான வலிமை, தைரியத்தை நீங்கதான் தரணும்னு வேண்டிக்கிட்டேன்.”
“அப்புறம்”
“அவ போராடட்டும். அவளுக்காக நானும் போராடறேன்னு சொன்னா. நம்பிக்கையோட போராடினா மரகதம் நிச்சயம் ஜெயிப்பான்னும் சொன்னா”
மரகதம் எழுந்து நின்றாள்.
“எங்கம்மா அதுக்குள்ள கிளம்பிட்டீங்க”
“சண்டைக்கு சங்கு ஊதிட்டாங்க.  எங்காத்தா எனக்காகச் சண்டை போடறேன்னு சொன்னப்பறம் சும்மா உக்காந்துக்கிட்டிருக்கறது பாவம்யா. எங்க ஆத்தாவுக்காக நான் கடைசி மூச்சுவரைப் போராடுவேன்யா..”
நான் பொய் சொல்லவில்லை. அதே சமயம் நான் சொன்னது உண்மையும் இல்லை. முதல் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ... மரகதத்திற்கு உடனடி நிவாரணம் கிடைத்திருக்குமே. நான் ஏன் அவளைக் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்க வைத்தேன்?
காலம் உருண்டோடியது. மரகதம் ஒரு மெல்லிய வலியாக என் மனதில் உறைந்து போனாள்.
அன்று சொக்கநாதர் கோயில் வாசலில் செருப்பைப் போட்டபோது அங்கே இருந்த பெண் கரிசனத்துடன் கேட்டாள்.
“உங்களுக்கு என்னய்யா கவலை”
“அதெல்லாம் உங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாதும்மா.”
“நீ சொல்லவில்லையென்றால் எனக்குத் தெரியாதோ? மரகதம் என்ன ஆனாள் என்று தானே கவலைப்படுகிறாய்”
பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்தேன்.
 “அங்கே நடப்பதைப் பார்”
ஒரு மருத்துவமனையின் தலைவரின் அறை வாசலில்  மரகதம் ஒரு நாள் காலையிலிருந்து காத்திருந்தாள்.  அவளுடைய மன உறுதியைக் கண்ட தலைவர் மனம் இரங்கி அவளை சந்தித்த போது மாலை மணி ஆறு.
அவர் காலில் விழுந்து கதறினாள் மரகதம். மரகதத்தின் மகனை பரிசோதித்தார்கள். மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டும், ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
“என் சிறுநீரகத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்” என்று மரகதம் மருத்துவரிடம் கெஞ்சினாள்.
“அது பொருந்தவேண்டும். நீங்கள் வாழ்க்கை முழுவதும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றணும் முடியுமா?”
“என் மகன் வாழ உயிரையே கொடுக்கறேன்யா.”
மரகதம் உண்ணா நோன்பிருந்து மனமுருகப் பிரார்த்தித்தாள்.  
அவளுடைய சிறுநீரகம் மகனுக்குப் பொருந்தியது. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தாயையும் மகனையும் வார்டுக்கு மாற்றினார்கள்.
தனக்காக உழைத்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எப்படி நன்றி தெரிவிப்பது? மரகதத்திற்கு தெரிந்ததெல்லாம் சமையல் தான். கையில் காசும் இல்லை. மருத்துவமனையின் உணவகத்தில் தன்னை ஒரு நாள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் மனு செய்தாள். அவர்கள் சம்மதித்தார்கள்.
சூடாக பஜ்ஜி, சமோசா,  இனிப்பு வகைகளைச் செய்து அனைவருக்கும் கொடுத்தாள் மரகதம். ரசித்துச் சாப்பிட்டார்கள்.
வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். தலைமை மருத்துவரின் அறையில் இருந்தாள் அவள்.
“எவ்வளவு குறைச்சிப் போட்டும் இதுக்கு மேல குறைக்க முடியலம்மா” என்றபடி முழநீள பில்லை நீட்டினார் அவர்.
“பத்தே  முக்கால் லட்சம்”
சுவரில் மாட்டியிருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்து மரகதம் அழ ஆரம்பித்தாள்.  மருத்துவர் ஒரு புன்னகையுடன் தொடர்ந்தார்.
“ஆனா நீ ஒரு பைசா கட்டவேணாம்மா. எங்க அறக்கட்டளையிலிருந்து மொத்தப் பணத்தையும் நான் கட்டிட்டேன்.”
“ஐயா….”
“அதுமட்டுமில்லம்மா. இனிமே இந்த ஆஸ்பத்திரி கேண்டீன உன் பொறுப்புல விடப்போறேன். உன் கைப்பக்குவம் எல்லாருக்கும் பிடிச்சிப் போச்சு. நீயுன் உன் பையனும் சேர்த்து பாத்துக்கங்க. மாசம் குறைஞ்சது உங்களுக்கு அறுபதாயிரம் ரூபாயாவது லாபம் வரும்.”
மரகதத்தால் அழக்கூட முடியவில்லை.
“தாயே நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள்.”
“என்னடா உளறுகிறாய்?”
“அவள் தனியாகத்தான் போராட வேண்டும் என்று சொன்னது பொய் அவளுக்காக நீங்கள்தானே போராடினீர்கள்? அந்த மருத்துவமனையின் தலைவரின் மனதில் அமர்ந்து அவளை வாழ வைத்தீர்கள்”
அன்னை சிரித்தாள்.
“அந்த தலைமை மருத்துவரின் மகள் நோயால் அவதிப்பட வேண்டும் என்பது அவர் கர்மக்கணக்கு. மரகதத்தின் மீது அவர் பொழிந்த அன்பின் காரணமாக அதிலிருந்து தப்பி விட்டார்”
நான் கண்ணீர்மல்கக் கைகூப்பினேன்.
 “உனக்கு என்ன வேண்டும்? உன்னிடம் வருபவர்களின் துன்பத்தைத் துடைக்கும் சக்தியை தரட்டுமா? கர்மக்கணக்கை மாற்றி எழுதும் ஆற்றலை தரட்டுமா?”
“அதெல்லாம் வேண்டாம் தாயே! கடைசிவரை அடுத்தவர்களுக்காக உங்களிடம் கையேந்தும் பிச்சைக்காரனாக இருந்துவிடுகிறேன் எனக்கு வேறொரு வரம் வேண்டும்”
“என்ன வேண்டும்”
“என்னிடம் யாராவது தங்கள் துன்பத்தைச் சொல்லியழுதால் அதையே உங்களை நோக்கிச் செய்யும் பிரார்த்தனையாகக் கொள்ள வேண்டும்.”
 “உன்னிடமென்று இல்லை, யார் யாரிடம் தன் துன்பத்தைச் சொன்னாலும் அதை என்னிடம் செய்யும் பிரார்த்தனையாகவே கருதுவேன். அப்படிச் சொல்வதை ஒருவன் அன்புடன் கவனித்துக் கேட்டால் அவனும் அந்தப் பிரார்த்தனையில் கலந்துகொள்கிறான். அந்தச்  சூழலில் இருக்கும் அன்பே துன்பங்களை அழிக்கும் வல்லமை பெற்றுவிடுகிறது.”
அன்னை சிரித்தபடி மறைந்தாள். நான் அழுதபடி அங்கேயே நின்றிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar