Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கர்ணனாகிய நான்...
 
பக்தி கதைகள்
கர்ணனாகிய நான்...


மகாபாரதத்தில் முக்கிய பாத்திரங்களில் நானும் ஒருவன். கவுரவர் தரப்பில் பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டவன். ஆனால் பாண்டவர்களின் மூத்த சகோதரன் நான்! இப்படி என் வாழ்க்கையே புதிர்களால் சூழப்பட்டதாகி விட்டது.
ஒரு விதத்தில் என் வாழ்க்கைக்குப் பிள்ளையார்சுழி இட்டது துார்வாச மகரிஷி என்றே சொல்ல வேண்டும்.  யாதவ குலத்தைச் சேர்ந்த சூரசேனர் என்பவரின் மகள் பிரீதா.  இவரது பெயர் பின்னர் குந்தி என்று பிரபலமடைந்தது.  இளவரசி குந்தி தனக்குச் செய்த பணிவிடைகளால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர் குந்திக்கு ஒரு வரத்தை அருளினார். தனக்கு வேண்டிய தெய்வத்தை அழைத்து அவர் மூலம் குழந்தை பெறலாம் என்பதுதான் அது.  அறியாப் பருவம். இந்த வரம் உண்மையாகுமா என்று அதைப் பரீட்சித்துப் பார்க்க துாண்டியது.  சூரிய தேவனை மனதில் நினைத்தார்.  அவர் அருளால் குத்தி தேவிக்கு நான் மகனாகப் பிறந்தேன்.  
எனக்கு ராதேயன் என்றும் ஒரு பெயர் உண்டு.  இந்தப் பெயர் வரக் காரணம் பிறந்த உடனேயே நடந்த சில தொடர் சம்பவங்கள்தான். திருமணம் ஆகாமலேயே தனக்கு குழந்தை பிறந்ததை எப்படி ஏற்க முடியும்? பழி பாவத்துக்கு பயந்த என் தாய் என்னை ஒரு பெட்டியில் வைத்து தன் அரண்மனைக்கருகே இருந்த அஸ்வ நதியில் மிதக்கச் செய்தாள்.  அது பின்னர் யமுனை நதியை அடைந்தது. அரச குடும்பத்தின் தேரோட்டியான அதிரதன் கையில் நான் கிடைத்தேன். அவரும் அவர் மனைவி ராதாவும் என்னைப் பாசத்துடன் வளர்த்தனர்.  வளர்த்த தாயின் பெயரால் நான் ராதேயன் என அழைக்கப்பட்டேன்.
வளர்ந்தேன். வில் வித்தையில் தேர்ந்தேன். என்றாலும் அரச குமாரர்களுடன் போட்டியிட முடியாமல் எனது குலம் என்னைத் தடுத்தது. உலகுக்கு நான் தேரோட்டி மகன்தானே? அப்போதுதான் அறிமுகமான துரியோதனன் என்னை அங்க தேசத்திற்கு (தற்போதைய பீஹார்)மன்னர் ஆக்கினான். அர்ஜுனனுக்கு எதிராக நான் போட்டியிட்டேன் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் எனக்கு ஒரு கவுரவம் ஏற்படுத்தித் தந்த துரியோதனனை ஒருபோதும் கைவிடக் கூடாது என்றும் எப்போதும் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் என்னை உறுதி கொள்ள வைத்தது அந்தச் செயல்.
    ஆயுதப் பயிற்சியில் அர்ஜுனனுக்கு நிகரானவன் அல்லது மேம்பட்டவன் என்று பெயர் பெற்றாலும் போர்களில் எனக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தது என்பதே உண்மை.  இதில் மிகக் கசப்பான ஒரு நிகழ்வும் உண்டு.  பாண்டவர்கள் வனவாசம் சென்றிருந்தபோது துரியோதனன் புரிந்த சில தவறான செயல்களைக் கண்டு எங்களுடன் போரிட்ட சித்ரசேனன் என்ற காந்தர்வ மன்னன்  துரியோதனனை சிறை பிடித்தான். போர்க்களத்திலிருந்து நான் ஓடினேன். என்னையும்  சிறை பிடித்தான். இதை அறிந்ததும் யுதிஷ்டிரன் ‘என்ன இருந்தாலும் ஹஸ்தினாபுரத்தின் மேன்மை சிதையக் கூடாது. அர்ஜுனா, நீ சென்று அவர்களை விடுவித்து வா’ என்று கட்டளையிட்டான்.  அர்ஜுனன் வந்து சித்ரசேனனைப் போரில் வென்று எங்களை விடுவித்தான்.
பாரதப்போர் நடப்பதற்கு முன் அன்னை குந்தி என்னை அணுகி உண்மையைக் கூறிய போதும் துரியோதனின் நட்பை விட்டு தர முடியவில்லை.  தர்மம் தெரிந்திருந்தாலும் நட்பை உதற முடியவில்லை. எனவே ‘நீ என்னுடன் வந்துவிடு.  போரில் கவுரவர்களை வென்றபின் நீயே ஹஸ்தினாபுரத்தில சக்ரவர்த்தி ஆவாய். உனக்கு தர்மர் சாமரம் வீசுவான்.  பீமன் குடை படிப்பான்’ என்றெல்லாம் கூறிய போதும் அதை ஏற்கவில்லை.
பீஷ்மருக்கு எப்போதும் என்மீது நல்ல கருத்து கிடையாது. என் வீரத்தை அவர் இகழ்ந்து பேச, அவர் உயிரோடு இருக்கும் வரை நான் போர்க்களம் செல்ல மாட்டேன் என்று தீர்மானித்தேன்.அவர் சரிந்த பிறகே நான் குருக்ஷேத்ரததில் நுழைந்தேன்.
    போர்க்களத்தில் பலவித காரணங்களினால் என்னால் என் முழு சக்தியையும் பயன் படுத்த முடியாமல் போனது. பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்ல மாட்டேன் என்று என் தாய் குந்திக்கு வேறு உறுதிமொழி அளித்து விட்டேன்.
மகாபாரதப்போரில் என் தேரின் சாரதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் சால்யன். இவர் நகுலன் மற்றும் சகாதேவன் தாயான மாத்ரியின் சகோதரர். கவுரவர்கள் செய்த சூழ்ச்சியின் காரணமாக இவர் அவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. இந்தக் கோபம் அவர் மனதில் தொடர்ந்து இருந்ததால் என்னை அவ்வப்போது இகழ்ந்து கொண்டே இருந்தார். அவர் ஆலோசனையை மீறி போர்க்களத்தில் நான் செயல்பட்டதால் என் ரதம் மண்ணில் புதைந்தபோது எனக்கு உதவாமல் சென்று விட்டார்.
பரசுராமரிடம் நான் கற்ற வித்தை அவரது சாபத்தால் உரிய சமயத்தில் எனக்கு பயனற்றுப் போனது.  என் தேரை மண்ணிலிருந்து எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது முதியவர் வேடத்தில் வந்த கண்ணன் என்னிடமிருந்து தர்மத்தின் பலனை தானமாக பெற்றுச் சென்றார். ஆக பல கோணங்களில் விதி என் வாழ்க்கையில் விளையாடியது. என் முடிவையும் தீர்மானித்தது. அர்ஜுனன் கரத்தால் மரணமுற்றேன்.
‘தாயை விட்டு தனியே வளர்ந்தேன். தேரோட்டி மகன் என்றே அறியப்பட்டேன். கூடப் பிறந்தவனால் கொல்லப்பட்டேன்’. இப்படி என் மீது பரிதாபப்பட பல விஷயங்கள் இருந்தாலும் ஒன்றை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.  தன் மாமன் சகுனியை விட நண்பனான என்மீது துரியோதனன் அதிக நம்பிக்கை வைத்திருந்தான்.‘எனக்கு உன் நாட்டின் ஒரு பகுதியை அளித்தாயே.  இதற்கு பதிலாக உனக்கு நான் என்ன அளிக்க முடியும்?’என்று கேட்டபோது ‘உன் வற்றாத நட்பைக் கொடு’ என்றவன் அவன். ஆனால் அவனை நான் சரியாக வழி நடத்தவில்லை. பாண்டவர்களுக்கு எதிராக துரியோதனனும், சகுனியும் தீட்டிய பல சதித் திட்டங்களில் எனக்கும் பங்கு உண்டு. பாஞ்சாலியை சபைக்கு இழுத்து வருமாறு துச்சாதனனை துரியோதனன் பணித்தபோது அவர்களது சொந்த சகோதரன் விகர்ணன் கூட இதை எதிர்த்தான். ஆனால் நான் உதிர்த்த வார்த்தைகள் கவுரவமானவை அல்ல. ‘ஒரு பெண் என்றால் அவளுக்கு ஒரே ஒரு கணவன்தான் இருக்க வேண்டும். எப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை அடைய பாஞ்சாலி சம்மதித்தாளோ அப்போதே அவள் வேசிக்கு ஒப்பானவள்தான். ஒற்றைத் துணியோடு மட்டுமல்ல, ஆடைகளற்ற நிலையில் கூட அவளை சபைக்கு இழுத்து வரலாம்’ என்றேன்.  வாரி வழங்கிய வள்ளல் தன்மையின் காரணமாக நான் காவிய நாயகனாகப் போற்றப்பட்டதால் தீமைக்குப் பல விதங்களில் துணை நின்ற என் இழிவு மறக்கடிக்கப்பட்டது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar