Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவளே செய்த சிகிச்சை
 
பக்தி கதைகள்
அவளே செய்த சிகிச்சை


“எனக்கு மனசே சரியில்ல அங்கிள்”
என் முன்னால் அமர்ந்திருந்த நண்பரின் மகள் பிரியாவிற்கு 27 வயது. திருமணம் நிச்சயமாகி விட்டது.
“ஒரு வருஷத்துக்கு முன்னால எங்க வீட்டு வாசல்ல ஒரு தெரு நாய் அடிபட்டுக் கிடந்துச்சி. அதுக்கு சிகிச்சை செஞ்சி சரியாக்கிட்டேன். அது என்னவிட்டுப் போகவேயில்ல. ராஜான்னு பேரு வச்சேன். தினமும் சாப்பாடு வைப்பேன். என்னப் பாத்தா ஓடி வரும். ஆனா வீட்டுக்குள்ள வராது.
“நேத்துலருந்து ராஜாவ காணோம். அதப் பாக்காம ரொம்ப வெறுமையா இருக்கு அங்கிள்”
“அதுக்கு நாம என்னம்மா செய்ய முடியும்?
“எனக்கு இதுனால மன அழுத்தம் வந்திரும் போலருக்கே. இந்த மனநிலையோட நான் கல்யாணம் செஞ்சிக்கமுடியாது”
நான் மவுனம் சாதித்தேன்
“தெருநாய்க்கா அழுவாங்கன்னு கேலி பண்றாங்க. என் வலி யாருக்கும் புரியல. எனக்காக பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டுங்க”  
ஒரு வாரம் கழித்து பிரியாவிடமிருந்து அழைப்பு.
“பச்சைப்புடவைக்காரி ஏன் என்னை குறி வச்சித் தாக்கிட்டு இருக்கா? என் உயிர்த்தோழி நித்யா நடந்து போன போது ஒரு பைக்காரன் இடிச்சிட்டான். கால் எலும்பு முறிஞ்சிடுச்சு. வலியால துடிச்சிக்கிட்டிருக்கா.”
ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் பெண்ணுக்கு இப்படி வேறு நடந்ததென்றால்...திருமணத்தில் சிக்கல் வந்து விடுமோ?
அன்று மனம் போன போக்கில் காரில் சென்ற போது இரண்டு போலீஸ்காரர்கள் வழிமறித்தனர்.
 “மேலதிகாரியைப் பார்த்துட்டுப் போங்க” என்றனர்.
“ நான் என்ன தப்பு செஞ்சேன்? கணக்கில காட்டாத பணம் வச்சிருந்தேனா? இல்ல கஞ்சாவத்தான் வச்சிருந்தேனா? அதெல்லாம் பாக்கமுடியாது. வேணும்னா உங்க மேலதிகாரிய வந்து என்னப் பாக்கச் சொல்லுங்க.”
காவல் உடையில் கம்பீரத்துடன் பெண் அதிகாரி என்னை நோக்கி வந்தாள்.
“தப்பு செய்தால்தான் தாயைப் பார்க்க வர வேண்டுமா”
அவள் காலில் விழுந்து வணங்கினேன்.
“நித்யாவின் கால் உடைந்ததே என கவலைப்படுகிறாயா”
“அதன் காரணமாக பிரியாவின் மனம் உடைந்ததேன்னு கவலைப்படுகிறேன்”
“இந்த பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கும் சக்தியை உனக்கு தருகிறேன்.”
“அதைத் தீர்த்து வைக்கும் சக்தி”
“அது அந்த பெண்களின் கையில் உள்ளது. நித்யா இருக்கும் மருத்துவமனைக்குப் போ. ஆனால் பிரியாவிடம் மட்டும் பேசு”
 “என்ன பேசுவது”
“அன்பு நிறைந்த மனதுடன் பிரியாவின் எதிரில் அமர்ந்துகொள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
“நான் செத்துட்டேனான்னு பார்க்கச் சொன்னாளா பச்சைப்புடவைக்காரி?”
கோபத்தில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர மனதில் அன்பு குறையாமல் பார்த்துக்கொள்வது கடினமாக இருந்தது. பிரியாவின் தலையில் கை வைத்து அவளுக்காகப் பிரார்த்தித்தேன். நித்யா இருந்த மருத்துவமனையில் நாங்கள் இருந்தோம். பார்வையாளர் நேரம் முடிந்ததால் தாழ்வாரத்தில் யாரும் இல்லை.
பிரியா கண்ணீருடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
என் உடல் சிலிர்த்தது. பிரச்னையும் புரிந்தது. அதை தீர்க்கும் வழியும் தென்பட்டது.
“உன் நாய் செத்துப்போச்சு பிரியா. அதை ஒருத்தன் கார் ஏத்தி கொன்னுட்டான். அவன என்ன செய்யலாம்?”
“அவன் கால உடைச்சி படுக்கையில போடணும். அப்போதான் புத்தி வரும்”
“அதையே பச்சைப்புடவைக்காரி செஞ்சிருக்கா”
“என்ன உளறுறீங்க அங்கிள்”
“உன் நாயக் கொன்னது உன் தோழி நித்யாதான். நடந்தது என்னமோ விபத்துதான். ஆனா அவ கொஞ்சம் ஜாக்ரதையா இருந்தா தவிர்த்திருக்கலாம். உங்க வீட்டுப் பக்கத்துல வரும்போது செல்போன் பாத்துக்கிட்டே வண்டி ஓட்டியிருக்கா. நேரப் போயிக்கிட்டிருந்த வண்டி வலது ஓரமாப் போய் அங்க போன நாய அடிச்சிருச்சி. அங்க கார்ப்பரேஷன் ஆளுங்க இருந்தாங்க. அவங்களுக்குக் காசக் கொடுத்து நாய எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லியிருக்கா.
“அவளுக்கு அது உன் நாய்ன்னு தெரியும்.  நடந்ததச் சொல்லி உங்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும். அதச் செய்யல.  நாயக் காணமேன்னு நீ அழும்போது கூட உண்மையைச் சொல்லல. அதான் அவளுக்கு இப்படியாச்சு”
“நிஜமாவா சொல்றீங்க? இப்பவே போய் அவகிட்ட ஏண்டி அப்படி செஞ்சேன்னு கேக்கறேன்”
“தாராளமா கேளு. ஆனா அதுக்கப்பறம் நித்யாவோட கால் சரியாகவே ஆகாது. கடைசி வரைக்கும் அவளால சரியா நடக்க முடியாம போயிரும்”
“ஏன் அங்கிள் என்ன சித்திரவதை பண்றீங்க? நான் இப்போ என்னதான் செய்யறது”
“நித்யா செஞ்சது தப்புதான். ஆனா அவ தப்பான பொண்ணு இல்ல. அவளுக்கு நீதான் எல்லாம். நாயை கொன்னது அவதான்னு உனக்குத் தெரிஞ்சா நீ அவள விட்டு விலகிடுவன்னுதான் மறைச்சிட்டா. சொல்லப்போனா நாய் செத்ததுக்கு உன்னவிட அவதான் அதிகமா கவலைப்படுறா. அதே நினைப்பில நடந்து போனப்ப தான் நேர வந்த பைக்கப் பாக்காம விழுந்துட்டா. அவ வாழறதும் வாழாததும் உன் கையிலதான் இருக்கு. நீ அவள மனப்பூர்வமா மன்னிச்சிட்டா கால் சரியாயிரும். அப்புறம் உன் இஷ்டம்”
“மன்னிக்கறதா..  நாக்கப் பிடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்காம விட மாட்டேன். உன் சங்காத்தமே வேண்டாம்னு சொல்லிட்டு வரேன். எனக்காக காத்திருங்க. போகும்போது என்ன வீட்டுல ட்ராப் பண்ணிருங்க.”
பிரச்னை தீரும் என்று பார்த்தால் இன்னும் பூதாகாரமாகும் போலிருக்கிறதே!  நித்யாவின் அறையை நோக்கி பிரியா ஓடினாள். நான் பின்னால் ஓடினேன். அறையை நெருங்கியதும் பேச்சு சத்தம் கேட்டது. கதவு லேசாக திறந்திருந்தது. நித்யா நர்சிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“நாளைக்கு ஆப்ரேஷன்மா. கொஞ்சம் சிக்கல்தான். என்ன வேணும்னாலும் நடக்கலாம். யாரயாவது பாக்கணும், ஏதாவது சொல்லணும்னா இன்னிக்கே முடிச்சிரும்மா. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது”
“ என் உயிர்த்தோழிக்குத் துரோகம் பண்ணிட்டேன் சிஸ்டர். ஆப்பரேஷன்ல செத்தாலும் சரி, இல்ல கடைசி வரைக்கும் நான் நொண்டியா வாழவேண்டிய நிலைமை வந்தாலும் கவலையில்ல. ஆப்ரேஷனுக்கு முன்னால பிரியாகிட்ட நடந்ததச் சொல்லி மன்னிப்பு கேக்கணும். அதுக்கு ஏற்பாடு செய்யுங்க போதும்”
பிரியாவின் கண்களில் கண்ணீர். உள்ளே ஓடினாள். நான் விலகிச் சென்றேன். என்னை யாரோ அழைப்பது போலிருந்தது.
“பிரியாவின் மனதில் அன்பை ஊட்டி அதன் மூலம் அவள் தோழியை வாழ வைத்துவிட்டாயே! பலே ஆளப்பா நீ”
“யாரிடம் கதை விடுகிறீர்கள் தாயே. சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன. பிரியா தன் நட்பை முறிக்கும் எண்ணத்துடன் இங்கே வரும்முன் நர்சாக உள்ளே சென்று பிரியா காதுபட நித்யாவை அப்படி பேச வைத்தீர்கள். அதனால் பிரியாவும் மனம் மாறினாள். தோழியை முழுமனதுடன் மன்னித்தாள். இருவரையும் வாழ வைத்து விட்டீர்கள்”
“நான் சும்மா உள்ளே போனேன். என்னைப் பார்த்ததும் அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்.  மனதில் உள்ளதைப் பேசினாள். இதில் என் பங்கு எதுவும் இல்லையப்பா”
“அன்பே வடிவான உங்களை அருகில் பார்த்ததும் நித்யாவின் மனம் அன்பால் நிரம்பியது. அந்த அன்பின் நெருப்பில்  இருவரின் கர்மக்கணக்கும் எரிந்துபோனது. இதுதானே நடந்தது”
அன்னை சிரித்தாள்.
“சரி...உனக்கு என்ன வேண்டும் சொல்”
“தாயே! நீங்கள் இப்படி என்னைக் கேட்கும் போதெல்லாம். உங்களிடம் அன்பைத் தவிர வேறு எதையும் வேண்டாத மனதை தாருங்கள்”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar