Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சேர்த்து வைப்பாயா சிவதனுசே
 
பக்தி கதைகள்
சேர்த்து வைப்பாயா சிவதனுசே


சேவகப் பெண்கள் சொன்ன தகவல் சீதையைப் பரபரப்புக்குள்ளாக்கியது.
ஒரு முனிவரும் அவர் அழைத்து வந்திருந்த இரு வாலிபர்களும், மன்னர் ஜனகரின் சிறப்பு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அந்தச் செய்தி, ஏனோ சீதைக்கு வெட்கத்தைத் தந்தது.
தன்னை நோக்கியவன் யார் என அறியும் ஆவலில் இரவெல்லாம் துாங்காமல் தவித்த அவளுக்கு அவன் அருகிலேயே தங்கியிருக்கிறான் என்ற செய்தி நிம்மதியைத் தந்தது.
பார்வை பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக நேரடி சந்திப்பிற்கு வழி கிடைத்தால் நன்றாக இருக்கும்; அந்த சந்திப்பும் மனக் கலப்பிற்கும், பிறகு மண மாலைக்கும் பாதை அமைத்தால் இன்னும் சந்தோஷமாகத்தான் இருக்கும். ஹும்…
திருமண பந்தம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு  நிபந்தனை இருக்கிறதே! சிவதனுசை வளைத்து இவன் நாணேற்ற வேண்டுமே!
 சீதையின் மனப்போக்கை சகோதரி ஊர்மிளை படித்தாள். ஏற்கனவே அண்ணல் நோக்கியதையும், இவள் எதிர்நோக்கியதையும் கவனித்திருந்தவள்தானே ஊர்மிளை!  அது மட்டுமா, பார்வைக் கணை வீசியவனை நினைத்து இரவில் உறங்காமல் சீதை தவித்ததையும் உடனிருந்து பார்த்தவள்தானே! ஒரு பெண் என்ற இயல்பில், அதைவிட சகோதரி என்ற உறவில் சீதையின் மனதைப் படிப்பது அவளுக்கு ஒன்றும் கடினமான செயலாக இல்லை.
ஆனால் சீதையின் மன ஆறுதலுக்குத் தன்னால் எந்த வகையில் உதவ முடியும்? அவளது ஏக்கத்தை எவ்வாறு தீர்க்க முடியும்? நேரடியாக தந்தையாரிடமே விஷயத்தைச் சொல்லி விடலாமா? ஒருவேளை மூத்தவளானாலும், தான் காதல் வயப்பட்டிருப்பதை பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது என்று சீதை நாணம் கொண்டிருக்கலாம். அதேசமயம் சகோதரியின் மனநிலை இது என்று ஒரு தங்கையாக உரிமையுடன் தன்னால் சொல்ல இயலுமே!
உடனே முன் வைத்த காலைப் பின்வாங்கினாள் ஊர்மிளை. ஆமாம், அவளைத் தடுத்தது சிவதனுசு நிபந்தனைதான். பெற்றோர் சீதையின் காதலை அங்கீகரித்தாலும், சிவதனுசை வளைப்பதாகிய சவாலை ஏற்று வெற்றி காண்பவனாகவும் அவன் இருக்க வேண்டுமே!
ஒரு சலுகையாக அந்த நிபந்தனை தேவையில்லை என அறிவிக்கப்படுமானால், அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்புமே! ஆமாம் சீதையை மணக்க விரும்பி வந்த பல மன்னர்களும், பராக்கிரமசாலிகளும் சிவதனுசைத் துாக்கக்கூட முடியாத தங்கள் பலவீனத்தால் அவளை அடைய முடியாததில் ஏமாற்றமும், அவமானமும், ஆக்ரோஷமும் கொண்டிருக்கிறார்களே! அவர்களும், ‘நம்மால் முடியாத இந்த சாதனையை எவனால் முறியடிக்க முடிகிறது என்று பார்க்கலாம்’  என்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்களே! அவர்கள் சும்மா இருப்பார்களா?
சீதையின் காதலனுக்காக இப்படி ஒரு சலுகையை ஜனகர் அறிவித்தார் என்றால் அடுத்த கணமே அத்தனை பேரும் கூட்டணி அமைத்துக் கொண்டு மிதிலை மீது போர் தொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
முதலில் ‘அவன்’ இந்தப் பந்தயத்துக்குத் தயாரா என்பது தெரிய வேண்டும். அதைவிட அவன் மிதிலைக்கு வந்தது சீதையைக் கரம் பிடிக்கும் நோக்கத்திற்காகத்தானா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டுமே!
ஜனகரின் அரசவைக்கு விஸ்வாமித்திரர், ராமன் – லட்சுமணனுடன் வந்தார். அவர்களைக் கண்ட அனைவரும் முக மலர்ச்சியுடன் வரவேற்றார்கள் – குறிப்பாக சூரியனாகப் பிரகாசித்த ராமனைக் கண்டு சந்தோஷமாக வியந்தார்கள். அவர்களை முறைப்படி வரவேற்ற ஜனகர் தகுந்த இருக்கைகளை அளித்து சிறப்பித்தார்.
விஸ்வாமித்திரர், ‘‘ஜனகரே, உங்களுக்கு எல்லா நலன்களும் விளங்கட்டும். நான் ஏற்கனவே தங்களிடம் தெரிவித்தபடி இதோ இந்த ராமன், அயோத்திப் பேரரசர் தசரதனின் மூத்த குமாரன்; இந்த லட்சுமணன் இவனுடைய இளவல்’’ என்று ஜனகருக்கும், அரசவை உறுப்பினர்களுக்கும் அறிமுப்படுத்தி வைத்தார்.
அவர்கள் திருமண வயதை அடைந்து விட்டதால், குறிப்பாக இப்போது ராமனுக்கு மணமுடிக்க தான் விரும்புவதாகவும் சூசகமாக விஸ்வாமித்திரர் தெரிவித்தார்.
அதாவது ராமன் சிவதனுசில் நாணேற்றும் பராக்கிரமத்தை நிகழ்த்தத் தயார் என சொல்லாமல் சொன்னார்.
இந்த தகவல்கள் எல்லாம் சேவகப் பெண்கள் மூலம் சீதையை அடைந்தன. முனிவருக்குப் பின்னே நடை பயின்ற அந்த இரு காளைகளையும் அவள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். குறிப்பாக ‘அவன்’ – முனிவருக்குப் பின்னால் கம்பீரமாக ஆனால் பணிவுடன் நடந்து சென்றவன், என்ன ஈர்ப்பாலோ அவளை அண்ணாந்து நோகியவன் – அவன் மட்டுமே அவளது மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தான்.
இவன் அவனாக இருக்க வேண்டுமே என மனம் பதைத்தாள். சேடியரிடம் வெட்கத்துடனும், தவிப்புடனும், வந்திருக்கும் விருந்தினர்கள் பற்றி சொல்லுமாறு கேட்டாள். அவர்களும் சீதையின் மனநிலையறிந்து தாம் பார்த்ததை விவரித்தார்கள்.
சீதைக்குப் புரிந்து விட்டது. இவன், அவன்தான். ஆனால் விடலைப் பருவத்தில் இருக்கும் இவனால் சிவதனுசைத் துாக்கி நிறுத்த முடியுமா?  நிறுத்தினாலும் நாணேற்ற முடியுமா? கேள்விக் கணைகளால் உள்ளத்தைத் துளைத்தாள்.   
பளிச்சென சீதைக்கு ஒரு யோசனை தோன்றியது. நேராக சிவதனுசு வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றாள்.
பிரமாண்டமான பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருந்தது சிவதனுசு. பரமசிவன் பயன்படுத்திய ஆயுதம் அது. விஸ்வகர்மா உருவாக்கித் தன்னிடம் அளித்த தனுசை, அவர் இந்திரனிடம் கொடுத்து வைத்திருந்தார். பின்னர் தட்சன் தன்னையும், பார்வதி தேவியையும் அழைக்காமல் யாகம் நடத்தியதால் கோபம் கொண்டு, இந்திரனிடமிருந்து தனுசைப் பெற்று வந்து அதில் அம்புகளைத் தொடுத்து தட்சன் உள்பட அவமானப்படுத்திய அனைவரையும் மாய்த்தார். பிறகு அந்த தனுசை ஜனகரின் முன்னோரான தேவராதனிடம் கொடுத்து, ‘இந்த வில்லை வளைப்பவன் பராக்கிரமசாலியாக இருப்பான், அவன் அதர்மத்தை அழித்து சத்ய தர்மத்தை நிலைநாட்டுவான்‘  என்று குறிப்பிட்டார்.  
ஒவ்வொரு முறையும் அந்த சிவதனுசு அரச மண்டபத்துக்குப் போன போது, சீதை கொஞ்சம்கூட ஆர்வம் காட்டியதில்லை. வந்தவர்கள் ஒருவரால்கூட சிவதனுசில் நாணேற்ற முடியாது என அவளால் அனுமானிக்க முடிந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் அவள் தன் மனதை திருமணத்திற்குத் தயார் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது அவளால் அப்படி இருக்க முடியவில்லை. மனம் படபடத்தது. இந்த முறை இவனால் சிவதனுசு நாணேற்றப்பட வேண்டுமே என்று பெரிதும் ஏங்கினாள்.
ஆனால் அது சாத்தியமா? சாத்தியமாக வேண்டும். நேராகப் பெட்டியருகே போனாள். மெல்ல அதன் மேல் மூடியை நடுங்கும் கைகளால் தொட்டாள். பெட்டி லேசாக சிலிர்த்துக் கொண்டது போல தெரிந்தது.
‘‘சிவதனுசே... உன்னை நமஸ்கரிக்கிறேன் உன் வலிமையை நான் அறிவேன். ஈசன் திரிபுரத்தை எரித்த பிறகு உனக்கு வேலையின்றி போனது. என் தந்தையின் பாதுகாப்பில் உள்ள நீ, உன் சுய பலத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி கொள்ள வேண்டியதாகி விட்டது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் உன்னிடம் தன் வீரத்தைக் காட்ட வந்த ஒவ்வொருவரையும் உன் பலத்தால்  தோற்கச் செய்தாய் போலிருக்கிறது.
‘‘சிவதனுசே உன்னை வளைத்து நாணேற்றுபவரை நான் கணவராக பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், எனக்குப் பொருத்தமானவராக ஒருவர் அமைவதற்காகத்தான் நீ இத்தனை காலம் உன்னையும் காத்துக் கொண்டு, என்னையும் காத்து வருகிறாயோ? எனக்காக இந்த முறை மனம் இறங்க வேண்டும். ஆமாம் என் கண்ணில் கலந்தவர் உன்னைத் துாக்கும்போது சற்று நெளிந்து, குழைந்துவிடு. அவர் நாணேற்றும்போது ஏற்றுக் கொள். உனக்குப் புரிகிறதா என் ஏக்கம்? உன்னைக் கரம் பற்றும் அவர், என்னையும் கரம் பற்ற வேண்டும். எங்களை சேர்த்து வைப்பாயா சிவதனுசே’’
நெகிழ்ந்த உள்ளம், அவளது கண்களில் கண்ணீராக வெளியேறி இரண்டொரு சொட்டுகள் பெட்டியின் மீது விழுந்தன. இப்போது மீண்டும் அந்த பெட்டி சிலிர்த்துக் கொண்டது.
அரண்மனை வீரர்கள் அந்த பெட்டியை இழுத்துச் செல்ல வந்தனர். .
(தொடரும்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar