Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் கொடுத்த பணி
 
பக்தி கதைகள்
அவள் கொடுத்த பணி


அன்று மீனாட்சி சன்னதிக்குள் நுழையும்போது ஒரு வடநாட்டுப்பெண்ணைப் பார்த்தேன். அழகாக இருந்தவளை அதிக நேரம் பார்த்துவிட்டேன் போலும். திடீரென்று அவள் என்னை நோக்கி கோபமுடன் வந்தாள்.
“என்னுடன் கொஞ்சம் வர முடியுமா?” அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில் கேட்டாள். பிரகாரத்தில் ஆள் இல்லாத இடத்திற்குச் சென்றவுடன் அவளைப் பார்த்துக் கைகூப்பியபடி மன்னிப்பு கேட்டேன்.
“பயந்து விட்டாயா? ஒவ்வொரு முறையும் நீ தான் என்னிடம் கோரிக்கையுடன் வருவாய். இந்த முறை நானே உனக்கு ஒரு வேலை தரலாம் என்றிருக்கிறேன்”
“காத்திருக்கிறேன் தாயே”
“என் பக்தன் லோகநாதனிடம் லேசாக அகந்தை தலைதுாக்கிக் கொண்டிருக்கிறது. அவன் காயப்படாமல் நீ அவனை  நல்வழிப்படுத்த வேண்டும்”
விபரங்களைச் சொல்லி ஆசி கூறி அனுப்பி வைத்தாள் அன்னை.
 “உங்கள் பக்தியைப் பற்றி கேள்விப்பட்டேன். அதுதான் பார்த்துவிட்டுப் போகலாம் என்று...’’
“நீங்கள்...’’
பரஸ்பர அறிமுகம் நடந்தது.
லோகநாதன் வாரம் தவறாமல் கோயிலுக்குச் செல்வார். நாள் தவறாமல் பச்சைப்புடவைக்காரிக்கு பூஜை செய்வார். தினமும் அபிராமி அந்தாதியின் நுாறு பாடல்களையும் சொல்லி விடுவார். மாலையில் லலிதா சகஸ்ர நாமம் சொல்லத் தவறுவதேயில்லை. இது போக அவ்வப்போது பச்சைப்புடவைக்காரி மீது கவிதை எழுதுவார். சில கவிதைகளைக் காண்பித்தார். நன்றாகவே இருந்தன.
“என்னைப் போல் யாராவது செய்ய முடியுமா? நாள் தவறாமல் பூஜை, வாரம் தவறாமல் கோயில், காலை மாலை அவள் மனதுக்குப் பிடித்த பாடல்கள். இது போக அம்மன் மனதிற்குப் பிடித்த கவிதை. என்னால் அவள் மகிழ்ச்சியடைகிறாள் என்று நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது”
பச்சைப்புடவைக்காரி என்னை ஏன் இங்கே அனுப்பி வைத்தாள் என்று புரிந்தது. பேச்சைத் திசை திருப்பினேன். மீண்டும் சந்திப்போம் என்று சொல்லித் திரும்பி வந்துவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து சென்றபோது லோகநாதன் தன் பேத்தியுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
 “இன்னிக்கு என் பேத்திதான் எனக்கு சாப்பாடு போடப்போறா”
“மீனாட்சி.. மீனுக்கண்ணு...தாத்தாவுக்கு சாம்பார் ஊத்தும்மா”
அந்தக் குட்டி தேவதை சொப்பு போல் இருந்த ஒரு சிறிய பாத்திரத்திலிருந்து ஊற்றுவது போல் அபிநயம் பிடித்தது. லோகநாதன் அதை ரசித்துச் சாப்பிடுவது போல் பாவனை செய்தார்.
“என் பேத்தி சாம்பார் மாதிரி இந்த உலகத்திலேயே கிடையாது. கண்ணு, இந்த அங்க்கிளுக்கும் கொஞ்சம் சாம்பார் ஊத்து”
குழந்தை தன் பெரிய கண்களால் என்னை ஒரு நொடி உற்றுப் பார்த்தது. பின் போனால் போகிறதென்று எனக்கும் சாம்பார் ஊற்றுவது போல் பாவனை செய்தது.
“பிரமாதம் கண்ணு” நானும் அவர்களுடன் சேர்ந்து பாவனை செய்தேன்.
நான் இருக்கும் அரைமணி நேரத்தில் தன் பேத்தியின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார் லோகநாதன்.
“மீனாட்சி...மீனுக்கண்ணு... தாத்தாவுக்குக் கால் வலிக்குது. கொஞ்சம் பிடிச்சிவிடும்மா”
“தாத்தா கால்ல உவ்வா...” என்று என்னைப் பார்த்துச் சொன்னபடி தன் தளிர்க்கரங்களால் அவரது கால்களை லேசாகத் தொட்டுக் கொடுத்தது. லோகநாதன் சிலிர்த்துப் போனார்.
 ‘அம்மா இங்கே வா வா’ பாட்டு சொல்லு”
 மழலை மொழியில் அந்தப் பாடலின் சில வரிகளைச் சொன்னது.
“பிரமாதம். பிரமாதம். பாத்தியாய்யா என் பேத்தி கவிதை சொல்றத”
லோகநாதனின் மகள் அங்கே வந்தாள். எனக்கு வணக்கம் சொல்லி விட்டு குழந்தையைத் துாக்கிக்கொண்டு சென்றாள். நான் என்ன பேச வேண்டும் என்று பச்சைப்புடவைக்காரி உணர்த்திவிட்டாள்.
“என்ன லோகநாதன் சாப்பாடு முடிச்சாச்சு. அடுத்து என்ன துாக்கமா”
“சாப்பாடு எல்லாம் இனிமேதான். வெண்டைக்காய் சாம்பார், கத்திரிக்காய் வதக்கல். பருப்பு ரசம். எனக்குப் பிடிச்சது”
“இப்போ பேத்தி கையால சாம்பார் வாங்கிச் சாப்ட்டீங்களே”
“என்ன கிண்டலா? அது என்ன நிஜச் சாப்பாடா?”
“தெரியுதுல்ல...உங்க பேத்தி ஏதோ சொப்பு வச்சி விளையாடிக்கிட்டு இருந்தா. அதிலிருந்து சாம்பார் ஊத்தினமாதிரி ஒரு சைகை காமிச்சா. நீங்களும் சாப்பிடறமாதிரி சைகை காமிச்சீங்க. ஏன்? உங்களுக்கு பேத்தி மீது இருக்கற அன்பு. அந்த அன்பினால, இல்லாத சாம்பார இருக்கறதாக் கற்பனை பண்ணிக்கிட்டு ரசிச்சி சாப்பிட்டீங்க. கற்பனை சாம்பார்ல பசியாற முடியுமா என்ன”
“என்ன உளறுறீங்க”
“ நீங்க எப்படி பேத்திகிட்ட அன்பா இருக்கீங்களோ அதே மாதிரி பச்சைப்புடவைக்காரி நம்மகிட்ட அன்பா இருக்கா. நீங்க காலையில அவ முன்னால பூவையும், பழத்தையும், பூவையும் காட்டும்போது ‘நன்றாக இருக்கிறதே’ ன்னு பாவனை காட்டுறா.
நீங்க பூவும் பழமும் கொடுக்கலேன்னா அந்த அன்னபூரணி பட்டினி கிடப்பான்னு நெனச்சீங்களா?
உங்க பூஜை சாமான் உங்க பேத்தி விளையாடற சொப்பு மாதிரி.
பச்சைப்புடவைக்காரி அதைப் பாத்து சந்தோஷப்படறான்னா அதுக்குக் காரணம் அவ நம்ம மீது வச்சிருக்கற அன்புதான். புரிஞ்சிதா? காலையிலே பூஜை பண்ணிட்டு வெள்ளிக்கிழமையானா கோயிலுக்குப் போயிட்டு என்னாலதான் அம்மன் சந்தோஷமா இருக்கான்னு நினைக்கறது எப்படி இருக்கும் தெரியுமா
உங்க பேத்தி வெளியே போய் ‘எங்க தாத்தாவுக்கு இன்னிக்கு நான்தான் சாம்பார் கொடுத்தேன். நான் மட்டும் சாம்பார் கொடுக்கலேன்னா இன்னிக்கு எங்க தாத்தா பட்டினிதான்’னு சொல்றமாதிரி இருக்கும். நீங்க சொல்ற அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ர நாமம் எல்லாமே உங்க பேத்தி உங்ககிட்ட சொன்ன ‘அம்மா இங்கே வா வா’ பாட்டு பாடுவது போலத் தான். பச்சைப்புடவைக்காரி மகாபூரணி, அன்னபூரணி. சதாபூரணி. அவளுக்கு நாம என்ன கொடுத்தாலும் நிரம்பாது. என்ன செஞ்சாலும் நிரம்பாது. இந்த உலகமே வியந்து பாராட்டுகிற ஒரு உன்னத காவியம்கூட அவளைப் பொறுத்த மட்டுல ஒரு குழந்தையின் கிறுக்கல்தான்.
அண்டா அண்டாவாப் பால் பாயசம் பண்ணி அவளுக்கு நைவேத்யம் பண்றது உன் பேத்தி விளையாடிக்கிட்டிருந்த சொப்புலருந்து உனக்குக் கொடுத்த கற்பனை சாம்பார் மாதிரிதான்.
நீங்க ரொம்ப நல்லவர். இத மட்டும் தெரிஞ்சிக்கங்க. அவ சந்தோஷப்படறது நீங்க அவள் மீது துாக்கிப் போடற பூவுக்கோ, அவ முன்னால காமிக்கற தீபத்துக்கோ, கட்டைக் குரல்ல பாடற அபிராமி அந்தாதி பாட்டுக்கோ இல்லை. உங்களுக்கு அவள் மீது இருக்கிற அன்பு இந்த செய்கைல வெளிப்படறதுதான் அவளுக்குச் சந்தோஷம். அந்த அன்பு நீங்க பாக்கிற மனுஷங்ககிட்டெல்லாம் வெளிப்படணும்யா. அதுதான் அவளுக்குப் பிடிச்ச பூஜை.
அவளப் பத்திக் கவிதை எழுதறுனால நீங்க பெரிய ஆளாயிட முடியாது. மேல் மரத்துல உக்காந்துக்கிட்டு அடிமரத்த வெட்டற முட்டாளக்கூட அவ நெனைச்சா பெரிய கவிஞனாக்கிறலாம். மகாகவி காளிதாஸ் கதை உனக்குத் தெரியும்ல?
நாம யாரும் அவளுக்கு எதையும் கொடுக்க முடியாது. நம்ம உடம்பு, உசிரு, உள்ள இருக்கற ஆத்மா, நம்ம சக்தி எல்லாமே பச்சைப்புடவைக்காரி போட்ட பிச்சைய்யா. அவகிட்டருந்து வாங்கின பிச்சைய அவகிட்டயே கொடுத்து ‘பாத்தியா நான் உனக்குத் தரேன்’னு சொல்றது ஆணவம் மட்டுமில்லைய்யா அடி முட்டாள்த்தனமும் கூட. புரிஞ்சிதா?”
லோகநாதனை அழவிட்டு விட்டு நான் கிளம்பி விட்டேன்.
போகும் வழியில் அதே வடநாட்டுப்பெண் வடிவில் பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள்.
“இட்ட பணியை நன்றாகச் செய்து விட்டாயே! என்ன வேண்டுமோ கேள்”
“என்னுள் அகந்தை புகுந்துவிட்டது எனத் தெரிந்தவுடன் லோகநாதனை சாக்காக வைத்துக்கொண்டு எனக்குப் பாடம் கற்றுக் கொடுத்தீர்கள். அந்தப் பாடம் என் ஆன்மாவில் அழுத்தமாகப் பதியட்டும். அகந்தைப் பாம்பு என்னுள் புகுந்தால் அதை அழித்து விடுங்கள். அதைத் தனியாக அழிக்க முடியாது போனால் என்னையும் சேர்த்து அழித்து விடுங்கள், தாயே”
அன்னை கலகலவென்று சிரித்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar