Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல் தனயனாய், நல் தமையனாய்…
 
பக்தி கதைகள்
நல் தனயனாய், நல் தமையனாய்…


ஜனகர் ஆச்சரியத்துடன் ராமனைப் பார்த்தார். தந்தைக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என வற்புறுத்தும் இவன் சகோதரர்களுக்கும் தன்னைப் போலவே சம அளவில் எல்லா விஷயங்களும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறானே, இப்படி பாசம் மிக்க பிள்ளையைப் பெற தசரதனும், இப்படி ஒரு அண்ணனைப் பெற இவன் தம்பிகளும்தான் எத்தனை தவம் புரிந்திருக்க வேண்டும்!
ராமனுக்கு சீதை என்பது தீர்மானமாகி விட்டது. மற்ற மூவருக்கு? உடன் வந்திருக்கும் லட்சுமணனுக்குத் தன் மகளான ஊர்மிளையை முடிக்கலாமா பெருந்தகையாளனான ராமனின் தம்பி இவன் என்ற வகையில் ஊர்மிளைக்கோ அல்லது தன் மனைவி சுநைனாவுக்கோ இந்த சம்பந்தத்தில் மாற்றுக் கருத்து இருக்காது என அவர் நம்பினார். அதன்படி அவர்களின் விருப்பத்தைக் கேட்டபோது இருவரும் ஒப்புதல் அளித்தனர்.  ‘ஊர்மிளைக்கு சீதை இங்கே எப்படி நல்ல சகோதரியாக, தோழியாக இருந்தாளோ இதே போல புகுந்த வீட்டிலும் இருப்பதுதான் எவ்வளவு சவுகரியம்! பிறந்த வீட்டு ஏக்கம் இருவருக்கும் ஏற்படாதே!
சரி, பரதன், சத்ருக்னனுக்கு... ஜனகர் யோசித்தார்.
குசத்வஜன், ஜனகரின் தம்பி. லட்சுமி நதி பாயும் சாங்காசியம் என்னும் நகரின் அரசர். அப்போது மிதிலைக்கு வருகை புரிந்து ராம பராக்கிரமத்தைக் கண்டு வியந்த அவர் ஜனகரை அணுகினார். ‘அண்ணா, தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் என் மகள்களான மாண்டவி, சுருத கீர்த்தி இருவரையும், அயோத்தியில் இருக்கும் ராமனின் சகோதரர்களுக்கு மணமுடித்து வைக்கலாம் என்று கருதுகிறேன்’’ என்றார்.
உடனே உற்சாகமடைந்த ஜனகர் சம்மதமாக தலையாட்டினார். ஆனால் ‘உன் மகள்களும், மனைவியும் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொள்வார்களா?’ என்ற சந்தேகத்தையும் கேட்டார்.
‘அவசியம் ஒப்புக் கொள்வார்கள் அண்ணா. சீதை, ஊர்மிளையுடன் இவர்களும் சேர்ந்து விளையாடியவர்கள்தானே, ஒன்றாய் உண்டு, உறங்கி, இதயபூர்வமாக, பாசமிகு சகோதரிகளாகப் பழகியவர்கள்தானே! இங்கே இந்த நால்வரும் ஒன்றாக இருந்ததுபோல அயோத்தியிலும் தங்களின் வாழ்க்கையைத் தொடரப் போகிறார்கள். அவர்களுக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்?’ என்று குசத்வஜன் பதிலளித்தார்.
‘அதற்கில்லை. இங்கே நாம் ராமனையும், லட்சுமணனையும் நேராக சந்தித்து விட்டோம். பரதனும், சத்ருக்னனும் எத்தகையவர்கள். அவர்களுடைய தோற்றம், குணநலம் எல்லாம் எப்படி என்று எதுவும் தெரியாது…’
‘அவர்கள் ராமனுடைய சகோதரர்கள் என்ற ஒரு தகுதி போதும் அண்ணா. நிச்சயம் எல்லா வகைகளிலும் அவர்கள் நம் எதிர்பார்ப்பையும் கடந்து சிறப்பாக திகழக் கூடியவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்’
இதே கருத்தைதான் குசத்வஜனுடைய மனைவியும், இரு மகள்களும் கொண்டிருந்தார்கள் என்பதால் நான்கு திருமணங்களும் எளிதாக ஆரம்ப கட்டத்தைக் கடந்து விட்டன.
‘விதி செய்யும் ஆனந்த வேடிக்கையைப் பாருங்கள்’  ஜனகர் சொன்னார். ‘தசரத மன்னரின் அதாவது அயோத்தியின் நான்கு இளவரசர்கள், நம் மிதிலாபுரியின் நான்கு இளவரசிகளின் கரம் பற்றப் போகிறார்கள். சூரிய வம்சமும், சந்திர வம்சமும் இப்படி இணைவதுதான் எத்தனை பெரும் பாக்கியம்’
‘ஆனால் இதற்கு தசரதரும் சம்மதிக்க வேண்டுமே’
‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதோ...விஸ்வாமித்திர மகரிஷி இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சாட்சியாக இருக்கிறார். இவர் உறுதி கொடுத்தாரானால் தசரதர் மறுக்கவா போகிறார்’
உடனே தசரத மன்னனிடம் துாது போகும் குழுவினரிடம் நான்கு திருமண சம்பந்தங்கள் பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்ல உத்தரவிட்டார் ஜனகர்.
நான்கு சகோதரிகளுக்கும் ஏக சந்தோஷம். எங்கே சீதை திருமணமாகிப் போய் அவளுடைய பிரிவால் தாம் ஏக்கமுறுவோமோ என்ற கவலை போய் இப்போது நால்வரும் ஒன்றாக பாசமிகு வாழ்க்கையைத் தொடரப் போகிறார்கள்.
ஆரம்பத்தில் வியப்பால் தசரதருக்கு பேச்சு வரவில்லை. ‘நம் ராமனுக்கா கல்யாணம்’ என்ற அவரது ஆச்சரியம், அவனை பாலக கண்ணோட்டத்திலேயே அதுவரை பார்த்ததால் ஏற்பட்டது. கூடவே லட்சுமணன், பரதன், சத்ருக்னனுக்கும் கல்யாணம். என்ன விநோதம் இது! சகோதரர்களுக்கு, சகோதரிகளே மனைவியராக அமையும் விசித்திரம். இதற்கும் ராமனே காரணனாக இருந்திருக்கிறான். உத்தம புத்திரன்தான் அவன்!
உடனே நல்ல நாள் பார்த்து அயோத்தியில் இருந்து மிதிலைக்கு தசரதர் புறப்பட்டார். குரு வசிஷ்டர், தன் மனைவியர், பரதன், சத்ருக்னன், அமைச்சர்கள், பிரதானீகர்கள் என மிகப் பெரிய கூட்டமாக, எதிர் சீதனப் பொருட்கள் தாங்கிய யானை, குதிரைப் படைகள் சூழ, தேர்களிலும், பல்லக்குகளிலுமாகப் பயணித்து ஜனகாபுரியை அடைந்தார்கள்.
அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் ஜனகர். தசரதரிடம் ராமனுடைய பராக்கிரமத்தை விவரித்தார். சிவதனுசை முறித்த வேகத்தில் அவன் காட்டியது உடல் வலிமை, ஆனால் மிக மென்மையானது அவனது உள்ளம் என்று பலவாறாகப் பாராட்டினார். தந்தையின் சம்மதமின்றி சம்பந்தம் கொள்ளேன் என்ற உறுதியில் அவன் காட்டிய தனயன் பாசம், தன்னைப் போலவே சகோதரர்களுக்கும் திருமணம் செய்விக்க வேண்டும் என்று விரும்பிய தமையன் பாசம் என்று அவனது மெல்லியல்பை சிலாகித்துப் பேசினார். உடனிருந்த விஸ்வாமித்திரரும்  உவகையுடன் ஆமோதித்தார்.  
தசரதர் பெருமையுடன் மார்பை நிமிர்த்திக் கொண்டார்.  வசிஷ்டரும் தன் மாணவனின் பெருந்தன்மையை அறிந்து நெஞ்சு விம்மினார். கோசலை மட்டுமல்லாமல் கைகேயி, சுமித்திரையும் ராமன் மீதான தங்கள் பிரமிப்பையும், சந்தோஷத்தையும் மலர்ந்த முகங்களால் தெரிவித்தார்கள். சுமித்திரைக்குக் கண்களில் நீர் பெருகியது. தன் மகன்களான லட்சுமணன், சத்ருக்னனிடம் கோசலை மைந்தன் காட்டும் அன்பையும், பாசத்தையும் அறிந்து உள்ளம் உருகினாள்.
ஆனால் பொதுவாக அவர்கள் அனைவரும் ‘அடடா, சிவதனுசை முறித்த ராமனின் பராக்கிரமத்தைக் காண வாய்ப்பு கிட்டாமல் போனதே’ என்று உளமாற ஏங்கத்தான் செய்தனர்.
பங்குனி உத்திர நாளில் நான்கு திருமணங்களையும் விமரிசையாக நடத்தி வைத்தார் ஜனகர். ராமன் – சீதை, லட்சுமணன் – ஊர்மிளை, பரதன் – மாண்டவி, சத்ருக்னன் – சுருத கீர்த்தி என்று நான்கு ஜோடிகளும் அவரவர் விரல் கோத்து அக்னியை வலம் வந்த காட்சி அனைவரின் கண்களையும், மனதையும் மகிழ்ச்சியால் நிறைவித்தது.
திருமண வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்தது. பொதுவாக திருமணம் முடிந்ததும், பெண் வீட்டார் மனதுக்குள் ஆனந்தம் இருந்தாலும், இத்தனை காலம் அந்தக் கன்னியை வளர்த்து, கடைசியில் மணமகனுக்கு தாரை வார்த்து தானமாக அளித்துவிட்ட பிரிவாற்றாமையும் வருத்தும் அல்லவா... ஆனால் ஜனகர் குடும்பத்தில் அந்த ஆற்றாமை தலையெடுக்கவில்லை. ஆமாம்.. நான்கு பெண்களும் இங்கிருந்தது போலவே புகுந்த வீட்டிலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்வார்கள் அல்லவா! இவ்வாறு நல்ல துணைவர் அவர்களுக்கு அமைந்து விட்டதில் பெண்களின் பெற்றோருக்கு மகிழ்ச்சிதானே!
ஜனகரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு தசரதர் உற்றார், உறவினர், புது மணத் தம்பதியர், படைகளுடன் அயோத்திக்குத் திரும்பினார். விஸ்வாமித்திரரும் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு மீண்டும் தவமிருக்க இமயமலை நோக்கிச் சென்றார்.
மிகுந்த குதுாகலத்துடன் அயோத்தி திரும்பியவர்கள் திடீரென எதிர்ப்பட்ட சூறாவளிக் காற்றால் திகைத்தனர். காற்று உருவாக்கிய புழுதியால் வானமே மறைந்தது! இது என்ன திருஷ்டி துர்ப்பயனோ என்று கலக்கத்துடன் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அங்கே பரசுராமர் தோன்றினார்.
நீண்ட ஜடாமுடியுடன், தோளில் கோடரி ஆயுதத்தைத் தொங்க விட்டுக் கொண்டு, வலது கையால் பிரமாண்டமாகப் பளபளக்கும் ஒரு தனுசைப் பற்றிக் கொண்டு, கண்களில் கோபத்தீ பறக்க நின்றிருந்தார் அவர்.
‘சிவதனுசை முறித்தாயாமே’  என்று கேட்ட பரசுராமர், ‘இந்தா, இந்த விஷ்ணு தனுசில் அம்பு பூட்டிக் காட்டு, உன் பராக்கிரமத்தை’  என்று ராமருக்கு சவால் விட்டார்.
இந்த சவாலைக் கேட்டு பயந்து நடுங்கினாள் சீதை! சிவ தனுசு போல விஷ்ணு தனுசை வளைத்தால் இன்னொரு பெண்ணை ராமன் மணக்க வேண்டி வருமோ?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar