Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சக்தியில்லாத பராசக்தி
 
பக்தி கதைகள்
சக்தியில்லாத பராசக்தி


உதவியாளர் கையைப் பிசைந்து கொண்டு வந்து நின்றார்.
“பூசாரி மாதிரி இருக்கு. கிராமத்து ஆளு. உங்களப் பாக்கணும்னு அடம் பிடிக்கறாரு”
“வரச்சொல்லுங்க”
இடுப்பில் பழைய வேட்டி. மேலே ஒரு துண்டு. சட்டையில்லை. முகத்தை மறைக்கும் மீசை. நெற்றியை மறைக்கும் குங்குமப் பொட்டு.
எவ்வளவோ வற்புறுத்தியும் உட்கார மறுத்துவிட்டார்.
“எனக்கு பூங்குடி கிராமம். அங்க இருக்கற மாரியாத்தா கோயிலுக்கு பரம்பரை பூசாரிங்க. மனைவி காலமாயிட்டா,. எனக்கு ஒரே பொண்ணு- அமுதான்னு பேரு. கல்யாண வயசு. ஆத்தா மீது ரொம்ப பக்தியா இருக்குமுங்க. கோயில் வேலையில எனக்கு உதவியா இருக்கும்’’
‘‘பிரச்னை என்ன’’
“போன வாரம் எவனோ களவாணிப்பய கோயில் உண்டியல உடைச்சி காச எடுத்துக்கிட்டுப் போயிட்டான்யா. பத்து, பதினைந்தாயிரம் ரூபாய் போச்சு. போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம்யா.
“இதுனால என் பொண்ணோட குணமே மாறிப்போச்சுங்கய்யா. தன் உண்டியலக்கூட காப்பாத்திக்க முடியாத சாமி எப்படிப்பா நம்பளக் காப்பாத்தும்னு கேள்வி கேக்கறா. பராசக்திக்கு சக்தியில்லன்னு கேலி செய்யற. அஞ்சு தலைமுறையா ஆத்தாதான்யா எங்களுக்குச் சோறு போடறா. மாரியாத்தாவ,  இந்த உலகத்தப் படைச்சவள இவ இப்படி மட்டமாப் பேசும்போது நெஞ்சு வலிக்குதுங்கய்யா. வேற ஆளா இருந்தா ஆத்தா கையில இருக்கற அரிவாளால  ஒரு போடு போட்ருவேங்கய்யா. தாயில்லாப் பொண்ணாயிருச்சேன்னு யோசிக்கறேன். அமுதாவுக்கு நல்ல புத்தியத் தரச் சொல்லி பச்சைப்புடவைக்காரிகிட்ட கேளுங்கய்யா’’
ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்பி வைத்தேன்,.
அன்று மதியம் சற்றுத் தள்ளியிருந்த ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். ஒரு நடுத்தரவயதுப் பெண் வந்து இலை போட்டாள்.
“என் பூசாரி உன்னிடம் வந்து அழுதிருக்கிறான். அந்தப் பிரச்னையக் கவனிக்காமல் வக்கணையாய்ச் சாப்பிட இவ்வளவு துாரம் வந்திருக்கிறாயே”
பச்சைப்புடவைக்காரியை இனம் கண்டு காலில் விழுந்து வணங்கினேன்.
“பூசாரியின் பெண் புரியாமல் பேசுகிறாள் தாயே”
“புரியவைப்பது உன் கடமையடா”
“நான் என்ன செய்ய வேண்டும்”
“நாளைக் காலை பூங்குடிக்குச் செல். அந்தப் பெண்ணைப் பார். என்ன பேசுவதென்று அப்போது புரியும்’’
மறுநாள் காலை பூங்குடி மாரியம்மன் கோயிலில் இருந்தேன். பூசாரியின் புண்ணியத்தில் அருமையான தரிசனம் கிடைத்தது.
பூசாரியுடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். திண்ணையில் அமர்ந்திருந்த அமுதாவிற்கு  இருபது வயது இருக்கும். அழகாகவே இருந்தாள்.
“பச்சைப்புடவைக்காரி உங்களக் காப்பாத்துவான்னு இன்னுமா நம்பறீங்க”
முதல் கேள்வியிலேயே துவண்டுவிட்டேன்.
“அவ என்னக் காப்பாத்தினாலும் சரி, கைவிட்டாலும் சரி, இல்ல, என்னக் கொன்னு போட்டாலும் எனக்கு அவளவிட்டா வேற கதியில்லம்மா’’
சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள் அமுதா. என்ன பேசவேண்டும் என்று எனக்குப் புரிந்தது.
“தன்னுடைய உண்டியலையே காப்பாத்திக்க முடியாத மாரியாத்தா எப்படி இந்த உலகத்தக் காப்பாத்தப் போறா”
“உண்டியல உடைச்சவனவிட உங்கப்பா பெரிய திருடன்’’
“ஐயா” பூசாரியும் மகளும் ஒரே சமயத்தில் அலறினார்கள்.
“இன்னிக்குக் கோயில்ல பாத்தேன். ஆத்தாவோட தங்க நகைங்கள கழட்டி உள்ள இருக்கற அலமாரில வச்சிப் பூட்டினாரு உங்கப்பா’’
“என்னய்யா உளறுறீங்க ஆத்தா கழுத்துல இருந்தாலும் அலமாரில இருந்தாலும் நகை அவ நகைதானுங்களேய்யா. ஆத்தாக்குச் சொந்தமான இடத்துலதானே நகை இருக்கு. அப்பறம் எப்படி திருட்டாகும்”
“அதே மாதிரி பணம் உண்டியல்ல இருந்தாலும் வெளிய இருந்தாலும் ஆத்தா இடத்துலதான இருக்கு. மொத்த பிரபஞ்சமும் ஆத்தாவுக்குச் சொந்தமான இடம் தானேம்மா. அதுல எங்க இருந்தாலும் அது ஆத்தாவுக்குத்தானே சொந்தம். ஆத்தாவோட பணத்த வெளிய கொண்டு போனா திருட்டு. ஆத்தாவுக்கு வெளியன்னு ஒண்ணுமே கெடையாதே அப்புறம் எப்படி அது திருட்டாகும். அதப் பத்தி ஆத்தா ஏன் கவலைப்படணும்”
“ஆத்தா உண்டியல உடைச்சவன் உத்தமன்னு சொல்றீங்களா”
“அவன் திருடன்தாம்மா. அதுவும் கேடுகெட்ட திருடன். எத்தனையோ நல்லவங்க உண்டியல்ல போட்ட பணத்த அவன் திருடியிருக்கான். அதுக்கான தண்டனைய நிச்சயமா அனுபவிப்பான். அதுக்காக ஆத்தாவோட சக்திய சந்தேகப்படலாமா”
“அந்தத் திருடன் உடனே ரத்தம் கக்கிச் சாக வேண்டாமா அப்பறம் என்னய்யா ஆத்தாவோட சக்தி”
“நீ சமைக்க அரிசி எடுக்கும்போது ஒரு அரிசி கீழ விழுந்திருது. அத ஒரு எறும்பு எடுத்துக்கிட்டுப் போகுது. அந்த எறும்பு ரத்தம் கக்கிச் சாகணும்னு நெனப்பியா. என் ஒத்த அரிசியத் திருடின எறும்ப நசுக்கிக் கொல்லாம விடமாட்டேன்னு சபதம் போடுவியா”
அமுதா சிரித்தாள்.
“ஆயிரம் கோடி பிரபஞ்சங்களுக்குச் சொந்தக்காரியான ஆத்தாவுக்கு கோயில் உண்டியல்ல இருந்த பணம் ஒரு அரிசி மணியவிடக் குறைச்சல்ம்மா. அந்தப் பணத்துக்காக ஆத்தா  திருடனோட கண்ணப் பிடுங்கமாட்டா. ஊழித்தாண்டவம் ஆடமாட்டா. ஊர அழிக்க மாட்டா. அந்தத் திருடன எப்படிக் கடைத்தேத்தறதுன்னு கவலைப்பட்டுக்கிட்டிருப்பா. அவனுக்கு எந்த மாதிரி தண்டனை கொடுத்தா அவன் திருந்தி வாழ்வான்னு யோசிச்சி அந்த மாதிரி அவனத் தண்டிப்பா.
“உண்டியல் பணத்த திருடு போயிருச்சேங்கறதுக்காக உமா மகேஸ்வரிக்கு சக்தியில்லன்னு சொல்றது முட்டாள்தனம். அதுக்காக ஆத்தாவ நம்பாம நாத்திகம் பேசறது அதவிடப் பெரிய முட்டாள்தனம்’’
சில நொடிகள்  கண்ணீருடன் பார்த்திருந்த அமுதா சட்டென என் காலில் விழுந்தாள்.
“என் கால்ல விழாதம்மா ஆத்தா கால்ல விழு. அறிவில்லாமப் பேசிட்டேன் ஆத்தான்னு சொல்லி அழு. ஆத்தா உனக்கு நல்வழி காட்டுவா. போம்மா’’
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன்.
கிராம எல்லையில் ஒரு பெண் வண்டியை நிறுத்தினாள்.  நான் சுதாரிப்பதற்குள் சுவாதீனமாக முன் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
“சபாஷ் அமுதாவின் மனதை மாற்றிவிட்டாயே இதன் மூலம் மதில் மேல் பூனையாக இருந்த பல ஆத்திகர்களின் கடவுள் நம்பிக்கையை வலுவாக்கிவிட்டாய்’’
“செய்தது நீங்கள். பெயர் எனக்கா என் மனதில் ஒரு பயம் இருக்கிறது தாயே”
“என்ன”
“அமுதா உங்களை எப்படியெல்லாம் பழித்துப் பேசினாள் அதற்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்குமோ  அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’
“முட்டாள் இந்த உண்டியல் உடைப்பு நாடகமே அமுதாவைக் காப்பாற்றத்தான் போட்டேன்’’
“புரியவில்லையே”
“அமுதா பக்கத்து கிராமத்தில் இருக்கும் முத்து என்ற இளைஞனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டாள். இருவரும் ஒரு வருடமாக காதலிக்கிறார்கள். முத்து நல்லவன் இல்லை. அவனுக்குப் பல பெண்களோடு தொடர்பு இருக்கிறது. பல திருட்டு வழக்குகளில் சிக்கியிருக்கிறான். அனைத்தையும் அமுதாவிடம் சாமர்த்தியமாக மறைத்துவிட்டான்.  முத்துவின் கிராமத்திற்கும், பூங்குடிக்கும் பல வருடங்களாகப் பகை. முத்துவும் அமுதாவும் ஓடிப்போகத் திட்டம் போட்டிருந்தனர். ஒரு நாள் அமுதா கோயில் உண்டியலில் பணம் நிறைய இருக்கிறது என்று பெருமையாக முத்துவிடம் சொல்ல அவனுக்கு உண்டியலை உடைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பணத்தை எடுத்துக்கொண்டு பெரிய நகரத்திற்கு ஓடிவிட்டான். இன்னும் சில நாட்களில் ஒரு கொலை வழக்கில் சிக்க ஆயுளை எல்லாம் சிறையில் கழிப்பான்’’
“அமுதா.’’
:அவள் ஒரு நல்லவனைத் திருமணம் செய்து கொண்டு நலமாக வாழ்வாள். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேள்’’
“உங்களைத் தாறுமாறாகப் பழித்துப் பேசிய அமுதாவையே காப்பாற்றி நல்ல வாழ்க்கை கொடுத்துவிட்டீர்களே உங்களிடம் என்ன கேட்பேன்”
“ஏதாவது கேட்டுத்தான் ஆக வேண்டும்’’
“உங்களிடம் எதையும் கேட்காத மனம் வேண்டும். நீங்கள் எதைக் கொடுத்தாலும் - வெற்றியோ தோல்வியோ, வலியோ வேதனையோ அதை அப்படியே ஏற்கும் பக்குவம் வேண்டும்’’
அன்னை கலகலவென்று சிரித்தாள். பின் காற்றோடு கலந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar