Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கைகளுக்கு நன்றி
 
பக்தி கதைகள்
கைகளுக்கு நன்றி


சில ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது வரவேற்பு அறையில் இரண்டு கைகளின் புகைப்படம் இருந்தது. யாரோ புனிதரின் கைகளாக இருக்கும் என நினைத்து அதைப் பற்றிக் கேட்கவில்லை. அதிகாரியுடன் பயணம் செய்யும் போது காரில் அதே புகைப்படத்தை பார்த்தேன்.
யாருடைய கைகள் எனக் கேட்டேன். புகைப்படத்தை எடுத்துப் பார்க்கும்படி கூறினார். அது வயதான பெண்ணின் கைகள் என்பது தெரிந்தது. முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருந்தன. நரம்புகள் புடைத்திருந்தன. படத்தை பெருமூச்சுடன் பார்த்த அவர் ஆதங்கமான குரலில் ‘என் அம்மாவின் கைகள்’ என்றார்.
‘‘எதற்காக அம்மாவின் கைகளை புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டேன்.
‘‘அந்தக் கைகளே என்னை வளர்த்தன. அம்மாவின் முகத்தை விட அவரது கைகளைக் காணும் போதுதான் நான் நெகிழ்ந்து போகிறேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அம்மா ஓய்வு எடுத்ததில்லை. பொறுப்பற்ற,  குடிகாரரான என் அப்பா சிறுவயதிலேயே இறந்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். மருத்துவர் ஒருவரின் வீட்டில் பணியாளராகச் சேர்ந்தார். அங்கு பகலிலும், வேறு இரண்டு வீடுகளில் மாலையிலும் வேலை செய்தார். இரவு வீடு திரும்பிய பின் சமைத்து எங்களைச் சாப்பிட வைப்பார். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, யார் அம்மாவின் கைகளைப் பிடித்து நடப்பது என்பதில் எங்கள் மூவருக்குள் போட்டி நடக்கும்.  
 ஒருமுறை ஊறுகாய் ஜாடியை உடைத்து விட்டதற்காக மருத்துவரின் வீட்டில் அம்மா அடி வாங்குவதைப் பார்த்தேன்.  மருத்துவரின் மனைவி அம்மாவின் கன்னத்தில் அறைந்தார். அம்மா அழவிட்டாலும் பிள்ளைகளின் முன்னிலையில் நடப்பதை தாங்க முடியாமல் வெளியேறினார்.
வேலை...வேலை...அது மட்டுமே பிள்ளைகள் முன்னேற வழிவகுக்கும் என செயல்பட்டார். சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை உணரவே இல்லை. உணவு பிடிக்கவில்லை என துாக்கி வீசி இருக்கிறேன்.. நண்பரோடு ஊர் சுற்றவும், ஆடைகள் வாங்கவும், குடிக்கவும் பொய் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும், தங்கையும் கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அம்மா கோபம் கொண்டதில்லை. என் கல்லுாரி இறுதி ஆண்டின் போது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் எவ்வளவு அக்கறையோடு எங்களை காப்பாற்றி வந்திருக்கிறார் என்பது புரிந்தது. மனம் திருந்தினேன். ஆர்வமுடன் படித்து ராணுவத்தில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றேன்.
அப்போதும் அம்மா எதையும் என்னிடம் கேட்டதில்லை. பரிசாகத் தங்க வளையல் வாங்கித் தரலாம் என அழைத்துச் சென்றேன். கூச்சமுடன், ‘எனக்கு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக ஆசைப்பட்டேன். ஆனால் நடக்கவே இல்லை. எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு...என என்னை விரட்டியது. அலாரம் இல்லாமலே எழுந்து கொள்ளப் பழகினேன். இப்போது வயதாகி விட்டதால் என்னை அறியாமல் காலை ஆறு மணி வரை துாங்குகிறேன். இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டு விடுகிறேன். அதனால் ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?’ எனக் கேட்டார்.
நானும் வாங்கித் தந்தேன். சிறுமியைப் போல எல்லோரிடமும் காட்டினார். அதன் பிறகு எனக்கு திருமணம் நடந்து வேலைக்காக பல ஊர்களுக்குச் சென்ற காலத்தில் அம்மாவும் உடனிருந்தார். டெல்லியில் இருந்த போது அம்மாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நானும் கூட இருந்தேன்.
‘‘அம்மா...நாங்கள் சிறுவயதில் ஏமாற்றிய போது ஏன் எங்களை ஒரு வார்த்தை கூட திட்டவில்லை?’’ என்று கேட்டேன்.
‘கோபப்பட்டு இருந்தால் என்னை விட்டுப் போயிருப்பீர்களே’ என்று சொல்லி தன் கையை என்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டார். அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன்.
இந்த கை எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது என எண்ணி அதை புகைப்படம் எடுத்தேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால் இந்தக் கைகள் என்னை வழிநடத்துவதோடு, எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்’’ என்றார்.
அவை யாரோ ஒருவரின் கைகள் அல்ல. உழைத்து, ஓய்ந்த தாயின் கைகள் யாவும் ஒன்று போலவே இருக்கும். அவை அன்பு காட்ட நம்மை நோக்கி நீள்கின்றன. ஆனால் அதனை நாம் இதுவரை புறக்கணித்து வந்திருக்கிறோம்.  
நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு என்ன நன்றி செய்யப் போகிறோம்...முடிவு நம்மிடமே இருக்கிறது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar