Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தவமும் வரமும்
 
பக்தி கதைகள்
தவமும் வரமும்


முன்னால் அமர்ந்திருந்த முப்பது வயது இளைஞன் களையாக இருந்தான்.  குரலில் ஒரு கம்பீரம் தெரிந்தது.
“சார் என் பேரு நரேன். எங்கப்பாவ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன். ராஜசேகரன்”
ஏன் தெரியாமல்? ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய கோடீஸ்வரர். அறக்கட்டளைகள் பல நடத்தி வருகிறார். சிறிய கோயில்களில் உள்ள பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
“போன மாசம் எங்கப்பா ஒரு பெரிய இடத்தப் பேசி முடிச்சி பத்து கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்காரு. அஞ்சு கோடிக்கு செக். அஞ்சு கோடி ரொக்கமா. அட்வான்ஸ் வாங்கினவரு திடீர்னு இறந்துட்டாரு. இறந்தவரோட பிள்ளை நிலத்த விக்கத் தயாரா இருக்கான். செக் வாங்கினத ஒத்துக்கறான். தன்னோட அப்பா ரொக்கம் வாங்கலைன்னு சாதிச்சிட்டான்.
“கணக்குல வராத பணம்ங்கறதுனால போலீசுக்கு போக முடியாது. அப்பா பணம் கொடுத்ததுக்கு ஆதாரமும் இல்ல”
 “அப்பறம்”
“அஞ்சு கோடி போச்சேன்னு அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருச்சி.  ஆஸ்பத்திரில இருக்காரு. ட்ரீட்மெண்ட் நடக்குது. இனி பழைய மாதிரி இருக்கமுடியுமான்னு தெரியல.”
எல்லாம், சரி. இதில் நான் எங்கே வந்தேன்”
“பணம் போனாப் போகுது சார். அப்பா குணமாகி பழையபடி தொழில் செய்யணும். அதுக்கு பச்சைப்புடவைக்காரிக்கிட்ட  பரிகாரம் கேட்டுச் சொல்லுங்க.”
ஆறுதல் சொல்லி  நரேனை அனுப்பினேன். பெரிய இடத்துப் பண விவகாரங்களில் மாட்டிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.
அலுவலகம் மூடும் நேரம். உதவியாளர் போய்விட்டார்.
“நான் கல்லுாரில பேராசிரியையா இருக்கேன். பேரு மாதங்கி. எனக்கு வருமான வரில கொஞ்சம் சந்தேகம்’’
“இப்போ எனக்கு நேரமில்ல. அடுத்த வியாழக்கிழமை...”
“நேரத்தைப் படைத்தவளுக்கே நேரமில்லை என்கிறாயே, உன்  திமிரை...’’
பேச விடாமல் அவளின் காலில் விழுந்து வணங்கினேன்.
“நான் என்ன செய்ய வேண்டும் தாயே?”
“ராஜசேகரைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல். அவன் மகனைப் பார்த்துப் பேசு.”
“என்ன பேசுவது?”
“மனதை அன்பால் நிரப்பிக்கொண்டு அவன் கையை அழுத்தமாகப் பற்றிக்கொள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
பிரம்மாண்டமாக இருந்தது மருத்துவமனை. கோடீஸ்வர நோயாளிகளுக்கென பிரத்தியேகமாக கட்டியிருப்பார்களோ?
ராஜசேகர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அங்கே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் சொன்னார்கள். அவர் மகன் நரேனைப் பார்க்க வேண்டும் என்றதும் தகவல் தெரிவித்தாள் அந்த ஊழியை.
ஐந்தாவது நிமிடம் நரேன் வந்தான்.
“சொல்லியிருந்தா நானே உங்களக்கூட்டிக்கிட்டு வந்திருப்பேனே”
“திடீர்னு தோணுச்சி…”
“அப்பாவப் பார்க்கப் போலாமா?”
“இல்லப்பா. உன்கிட்டதான் பேசணும்.”
என்னை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றான் நரேன். அவன் எதிரில் அமர்ந்தபடி அவன் கையை இறுகப் பற்றினேன். அந்தக் கணத்தில் எனக்கு எல்லாம் புரிந்தது.
“என்ன பரிகாரம்னு தெரிஞ்சிருச்சி நரேன். ஆனா அதைச் செய்ய முடியுமான்னு தெரியல..”
“எதுன்னாலும் சொல்லுங்க. என் உயிரக் கொடுத்தாவது செஞ்சிடறேன்.”
“இருபது வருஷத்துக்கு முன்னால உங்கப்பாவோட நண்பர் உங்கப்பாகிட்ட ரெண்டு கோடி ரூபாய் கருப்புப்பணத்தக் கொடுத்தாரு. வீட்டுல நிலைமை சரியில்ல.  இந்தப் பணத்த பத்திரமா வச்சிரு. ஒரு மாசம் கழிச்சி வாங்கிக்கறேன்னு சொன்னார். அப்பா வாங்கி வச்சிக்கிட்டாரு.
பத்தே நாள்ல அந்த நண்பர் திடீர்னு இறந்துட்டாரு. அவரு பணம் கொடுத்த விவகாரம் யாருக்குமே தெரியாது. உங்கப்பா பணத்த அமுக்கிட்டாரு.”
“அபாண்டமாப் பழி போடாதீங்க, சார் சொல்லிட்டேன்.”
‘‘பச்சைப்புடவைக்காரி சொன்னதை சொல்லிடறேன். நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்ப்பா.”
“மேல சொல்லுங்க.”
“நண்பரோட மகன் உங்கப்பாகிட்ட பணத்தப் பத்திப் பலமுறை கேட்டுட்டான். தெரியவே தெரியாதுன்னு ஒரேயடியாச் சாதிச்சிட்டாரு உங்கப்பா. அந்தப் பாவம்தான் இப்ப தாக்குது.”
“ரெண்டு கோடியை பெரிசாச் சொல்றீங்களே? கடந்த இருபது வருஷத்துல அப்பா செஞ்ச தர்மம் மட்டும் 15 கோடி இருக்கும். அதுலருந்து ரெண்டு கோடியக் கழிச்சிக்கிட்டு பாக்கிய கர்மக்கணக்குல வரவு வைக்கச் சொல்லுங்க.”
“கர்மக் கணக்கு பேங்க் கணக்கு இல்லப்பா. அங்க ரூபாய் மதிப்பெல்லாம் கிடையாது. அன்னிக்கு அந்த ரெண்டு கோடி இல்லாததுனால இறந்தவரோட குடும்பம் ஏறக்குறைய நடுத்தெருவுக்கு வந்திருச்சி”
“இருந்தாலும் இவ்வளவு தர்மகாரியம்… அத…”
“கத்தியால நெஞ்சுல குத்திட்டு கால்ல கட்டுப்போட்டா என்னப்பா அர்த்தம்”
“நான் இப்போ என்னதான் செய்யணும்?”
“உங்கப்பாக்கு நெனவு திரும்பும்போது மெதுவாப் பேசி அவர்கிட்ட ஏமாந்த நண்பர் பத்தின வெவரங்கள வாங்கிக்கோ. அப்பா செஞ்ச பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்”
“எவ்வளவு கொடுக்கட்டும்?”
“உங்கப்பா எடுத்துக்கிட்டது ரெண்டு கோடி. இருபது வருஷத்துக்கு வட்டி போடு. ஆறு கோடிக்குக் குறையாமக் கொடுத்தாகணும்”
“கொடுத்தா பிரச்னை தீர்ந்திடுமா?”
“நான் உத்தரவாதம் கொடுக்கமுடியாது.”
“சரி, கொடுக்கலேன்னா என்னாகும்?”
“ஒண்ணும் ஆகாது. உங்கப்பா திருடின ரெண்டு கோடிதான் உங்க வளமான வாழ்க்கைக்கு அஸ்திவாரமா இருந்திருக்கு. அஸ்திவாரம் ஆடும்போது எந்தச் சுவர் யார்மேல விழும்னு தெரியாது.  அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்ததுக்கே இப்படிக் கலங்கிப்போயிட்டியே... யோசிச்சிப்பாரு நரேன் உன் குழந்தைக்கு.. ஏதாவது..’’
பேச்சை முடிக்காமல் கிளம்பிவிட்டேன்.
மருத்துவமனை வாசலில் நின்றிருந்த பேராசிரியை மாதங்கியை வணங்கினேன்.
“அசத்திவிட்டாய். ஒருவன் செய்த துரோகம் அவன் சந்ததியையும் தாக்கும் என சொன்னாய் பார், அதில் நரேன் பயந்துவிட்டான்”
“எனக்கு நம்பிக்கையில்லை தாயே!”
“எனக்கு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் நான் ராஜசேகரை குணமாக்குவேன். நரேன் தந்தையிடம் பேசுவான். அவர் செய்த நம்பிக்கை துரோகத்துக்குப் பிராயச்சித்தம் செய்யச் சொல்வான். தந்தையின் நண்பரைத் தேடிக் கண்டுபிடித்து ஆறு கோடிக்கும் அதிகமாகவே தருவான். அதன்பின் நல்ல மாற்றம் நிகழும். ராஜசேகர் நன்றாக வாழ்ந்து பல உச்சங்களைத் தொடுவான்”
“ராஜசேகரிடம் வாங்கிய ஐந்து கோடியை இல்லை என மறுத்தவன் கதி”
“அது வேறு கணக்கு. எல்லாக் கணக்கையும் உன்னை வைத்துத் தீர்ப்பேன் என எதிர்பார்த்தாயோ”
என் முகம் வாடிவிட்டதை அவள் கவனித்துவிட்டாள்.
“அந்த கணக்கு இன்னும் குழப்பமானது. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும். அதைக் கேள்”
“என்னைக் கொல்ல வருபவனைக்கூட நான் காயப்படுத்தக்கூடாது. மனமறிந்து ஈ, எறும்புக்குக்கூடத்  துரோகம் செய்யக் கூடாது. இந்த வரத்தைக் கொடுங்கள்”
“அது யோக நிலை. அதை அடையப் பல பிறவிகள் தவம் செய்ய வேண்டும். வேறு ஏதாவது கேள்.”
“எந்தக் காலத்திலும் என் மனதைவிட்டு நீங்கள் அகலாமல் இருக்கவேண்டும்.”
“தந்தேன்.”
“பார்த்தீர்களா, தவத்தால் பெறவேண்டியதை வரத்தால் பெற்றுவிட்டேன்.”
“என்ன உளறுகிறாய்?”
“அன்பே வடிவான நீங்கள் என் மனதில் இருக்கும்போது நானே நினைத்தாலும் யாரையும் காயப்ப்டுத்த முடியாதே? துரோகம் செய்யவேண்டும் என்ற எண்ணமே தோன்றாதே!”
அன்னை கலகலவென்று சிரித்துவிட்டு மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar