Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அனுமனாகிய நான்...
 
பக்தி கதைகள்
அனுமனாகிய நான்...


என் பெயரைக் கூறியவுடன் உங்களுக்கு ராமாயணம்தான் நினைவுக்கு வரும். ஆனால் மகாபாரதத்திலும் எனக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்த இரு இதிகாசங்களிலும் பங்கெடுத்துக் கொண்ட மிகச் சிலரில் நானும் ஒருவன்.  
நான் குழந்தையாக இருந்தபோது கர்ணனின் தந்தை எனக்கு எதுவாகக் காட்சியளித்தார் தெரியுமா? மாம்பழம்! ஆம் சூரிய தேவன் எனக்கு ஒரு மாங்கனி போலத்தான் தோற்றமளித்தார். அந்த கனி எதனால் அவ்வளவு துாரத்தில் இருக்கிறது என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை.  வானத்தில் மேலெழும்பத் தொடங்கினேன். நான் பறக்கிறேன் என்பதையே அப்போது என்னால் உணர முடியவில்லை. பின்னர் சூரிய தேவனை ஞானகுருவாக ஏற்றுக் கொண்டேன். அவரை வலம் வந்தேன். எனக்கு ஞானத்தை மட்டுமல்ல வேறு இரண்டு சித்திகளையும் (அதாவது சிறப்பான செயல்பாடுகளை அளிக்கும் மந்திரங்களை) அருளினார். அவற்றின் பெயர் லகிமா, கரிமா. ஒரு மந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் என்னால் மிகச் சிறிய உருவத்தை எடுத்துக் கொள்ள முடியும். மற்றொரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் என்னால் விஸ்வரூபம் எடுக்க முடியும்.
    ஒரு காலகட்டத்தில் பாரதப்போர் நிகழ்ந்தே தீரும் என்று கருதிய கண்ணன் பாண்டவர்களை அதற்காக முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். இதற்காக அவர்கள் வனம் சென்று தவத்தில் ஈடுபட்டனர்.
    ஒரு நாள் காற்றில் வந்த ஒரு இனிய நறுமணம் திரவுபதியை பரவசத்தில் ஆழ்த்தியது.  பீமனை அழைத்தாள். அற்புதமான நறுமணம் கொண்ட அந்தப் பூஞ்செடியின் ஒரு கன்றாவது தனக்கு வேண்டும் என்றாள்.
    சுகந்திகா என்ற அந்த மலரின் வாசம் வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான் பீமன். வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அதைத் தாண்டுவதில் பீமனுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் வேறொரு குறுக்கீடு ஏற்பட்டது. அது நான்தான்!
    குறுகிய பாதை ஒன்றில் பீமன் நடந்து வந்து கொண்டிருக்க, அங்கு குறுக்கில் நான் படுத்துக் கொண்டிருந்தேன். பீமன் என்னை பயமுறுத்துவதுபோல குரல் எழுப்பினான். ஆனால் நான் அசைந்து கொடுக்கவில்லை. என் கண்களை மட்டும் அரைகுறையாகத் திறந்து பீமனைப் பார்த்தேன். பெருமையாக இருந்தது. என் தம்பி எவ்வளவு திடகாத்ரமாக இருக்கிறான்! நாங்கள் இருவருமே வாயு குமாரர்கள்தானே. உரிமையுடன் அவனை சீண்டத் தொடங்கினேன்.
    ‘‘நீதானே குரல் கொடுத்தது?’’ என்று கேட்டேன். ஆமோதிப்பாக பீமன் தலையசைத்தான். என்னை நகரச் சொன்னான்.
    ‘‘நீ வாட்டசாட்டமாக இருக்கிறாய். நானோ உடல்நலம் சரியில்லாத ஒரு வானரம். எனவே என்னை அலைக்கழிக்காதே. தவிர இந்த பாதையில் நீ தொடர்ந்து சென்றால் நிறைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  எனவே திரும்பிப் போய்விடு’’ என்றேன்.
    பீமனுக்குக் கோபம் எழுந்தது. ‘‘என்னை யார் என்று நினைத்தாய்? குருவம்சத்தில் வந்தவன் நான். பலத்தில் எனக்கு ஈடு யாருமே இல்லை.  நான் வாயுதேவனின் பிள்ளை.  இதைவிட எனக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்? எனவே எந்த ஆபத்தும் எனக்கு தூசுபோல’’ என்று கர்ஜித்தான்.
    ‘‘நீ வாயு தேவனின் மகன் என்றால் நான் யாராம்?’’ என்று எண்ணிப் புன்னகைத்தேன்.
உண்மை அறியாத பீமனுக்கு கோபம் அதிகமானது.  ‘‘நகர்ந்துகொள் வானரமே’’ என்று கத்தினான்.
    ‘‘என்னால் எழுந்திருக்கவே முடியாது.  வேண்டுமானால் நீ என்னைத்தாண்டிப்போ‘‘ என்றேன்.
    ‘‘தாண்டுவதென்றால் எப்போதோ தாண்டிச் சென்றிருப்பேனே. அப்படிச் செல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுவதால்தானே நான் உன்னை நகரச் சொல்கிறேன். இல்லையென்றால் அந்த ராமபக்த அனுமன் கடலைத்தாண்டியதுபோல நானும் உன்னை எப்போதோ தாண்டியிருப்பேனே’’ என்று அலுத்துக் கொண்டான் பீமன்.
    அட, என்னைக் குறிப்பிடுகிறானே. அவனை மேலும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தீர்மானித்தேன்.  ‘‘அனுமனா? யாரவன்? அவனைப் பற்றிய கதையை சொல்லப்போகிறாயோ?’’ என்றேன்.
    ‘‘கதை சொல்ல இதுவா நேரம்? அனுமன் மிகுந்த பலசாலிதான்.  என்னைவிடக் கொஞ்சமே கொஞ்சம்தான் அவருக்கு பலம் குறைவு’’என்றான் பீமன். இருக்கக்கூடாத தலைக்கனம் அவனிடம் வெளிப்பட்டது. தம்பியைக் கொஞ்சம் தட்டி வைத்தால்தான் அவனது கர்வம் குறையும் என்று தீர்மானித்த நான்  ‘‘என் வாலை மட்டும் நகர்த்திவிட்டு, அந்த வழியாக நீ போகலாமே’’ என்றேன்.  
    ‘‘அட ஆமாம். இந்த எளிமையான வழி தனக்கு ஏன் முன்னமே தோன்றவில்லை?’’ என நினைத்தபடி தனது ஒரு விரலால் என் வாலை நகர்த்த முயற்சித்தான் பீமன்.  முடியவில்லை. ஒரு கரத்தால் என் வாலை நகர்த்த முயற்சித்தான். ஊஹும்.  என் வால் அசைந்து கொடுப்பதாக இல்லை. ராமபிரான் அருளால் ராவணனின் சபையில் நீண்டு நீண்டு வளர்ந்து எனக்கு உயரமான ஆசனத்தை அளித்த வால் அல்லவா அது! திகைப்பு பொங்க தன் இரு கைகளாலும் என் வாலை நகர்த்த முயன்றான். அப்போதும் தோல்விதான்.  
    அதிர்சியுடன் என் முகத்தைப் பார்த்தான். ‘நாம் நினைத்தது போல் இது வானரம் அல்ல. மிகவும் சக்திவாய்ந்த ஒரு மகானாகவே இருக்க வேண்டும்’ என எண்ணிய  பீமனின் கரங்கள் குவிந்தன.
    ‘‘நீங்கள் யார்?’’ என்று கேட்டான்.
    ‘‘அண்ணனைப் பார்த்து நீ யார் என்று கேட்கும் தம்பியை இப்போதுதான் பார்க்கிறேன்’’ என்றபடி எங்கள் பந்தத்தை விளக்கினேன். பீமனின் மனதில் அளவில்லாத ஆனந்தம் ததும்பியது.  இருவரும் ஒருவரையொருவர் பாசத்தோடு தழுவிக் கொண்டோம்.  பின்னர் அவன் தேடிவந்த வாசனை மலர்கள் பூக்கும் செடிகள் உள்ள இடத்தைக் காட்டினேன். கூடவே ‘‘கவலைப்படாதே பாண்டவர்களின் கவலைகள் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரும்.  இதற்காக நானும் ராமபிரானை வேண்டிக்கொள்கிறேன்’’ என்றபடி விடைபெற்றேன்.  
    அப்போது என் விஸ்வரூபத்தை கண்ணாரக் காணவேண்டும் என விருப்பப்பட்டான் பீமன். ராமபிரானை வணங்கி சூரிய தேவன் எனக்கருளிய மந்திரத்தைக் கூறி என் உருவத்தைப் பெரிதுபடுத்திக் கொண்டேன்.  எங்கள் இருவரையும் தழுவிச்சென்ற காற்று (வாயுதேவன்)  எங்களுக்கு ஆசி கூறுவதுபோல இருந்தது.
    என் தொடர்பான மற்றொரு மகாபாரத நிகழ்வும் குறிப்பிடத்தக்கதுதான். ஒருமுறை ராமாயணத்தைப் பற்றி அறிந்த அர்ஜுனன் என்னிடம் “இலங்கை செல்வதற்குப் பாலம் கட்ட அவ்வளவு சிரமப்பட்டீர்களே. நானாக இருந்தால் என் அம்புகளாலேயே பாலத்தை எளிதில் கட்டியிருப்பேன்’’ என்றான்.  அவனது தலைக்கனம் எனக்கு திகைப்பை அளித்தது. “எங்கே அப்படி ஒரு அம்புப் பாலத்தை இப்போது நீ கட்டு பார்க்கலாம்.  நாங்கள் ராமபிரானின் அருளால் அமைத்த பாலத்தில் அத்தனை வானர சேனையும் நடந்தோம். நீ அமைக்கும் பாலம் என் ஒருவனைத் தாங்குகிறதா என்று பார்ப்போம்’’ என்றேன்.   
கர்வப் புன்னகையுடன் அர்ஜுனன் அம்புப் பாலத்தை எழுப்பினான். நான் அதன்மீது ஓர் அடி வைத்தவுடனேயே அது நொறுங்கியது. அர்ஜுனன் நிலைகுலைந்தான். தன் தவறு அவனுக்குத் தெரிந்தது.  கிருஷ்ணரின் ஆதரவால்தான் தனது வில் திறமை பலனளித்தது என்பதை அவன் உணர்ந்து வருந்தினான்.  கிருஷ்ணர் அவன் மீது பரிதாபம் கொண்டார்.  “இன்னொரு முறை அம்பு பாலம் கட்டு’’ என்றார். அவரை வணங்கிவிட்டு மீண்டும் தன் அம்புகளால் பாலத்தை எழுப்பினான் அர்ஜுனன். அதன்மீது நான் நடக்க, இம்முறை அம்புப்பாலம் சிறிதும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை.  காரணம் கிருஷ்ணர் தன் முதுகை வில்லாகக் கொண்டு அந்தப் பாலத்தை தாங்கிக் கொண்டிருந்தார்.  
மகாபாரதப் போரின் இறுதிநாளில் அனைத்தும் முடிவடைந்த பிறகு அர்ஜுனனைத் தேரில் இருந்து முதலில் இறங்கச் சொன்னார் கிருஷ்ணர். அவன் இறங்கியவுடன் எனக்கு நன்றி கூறினார். அவரை வணங்கிவிட்டு நான் தேரை விட்டு இறங்கினேன். உடனே அந்த தேர் பற்றி எரிந்தது. அர்ஜுனன் இதை பார்த்து வியந்தான். ‘அர்ஜுனா, போரின்போது அனுமன்தான் தெய்வீக ஆயுதங்களின் பாதிப்புகளிலிருந்து இந்தத் தேரை காப்பாற்றிக் கொண்டிருந்தான்’ என்றார். நானா இதைச் செய்தேன். என்னுள் இருந்த ராமபிரானின் அருள் அல்லவா அது?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar