Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சாபமே வரமானது
 
பக்தி கதைகள்
சாபமே வரமானது


மந்தரை சந்தேகப்பட்டது போலவே தசரதன் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.
ஆனால் மந்தரை அவரை விட விரைவாக யோசித்தாள். ராம பட்டாபிஷேகத்தை எப்படியாவது ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்; அதோடு பரதனை சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும். தன்னை ராமன் உண்டிவில் கல்லால் தாக்கிய அவமானத்தை இந்த எண்ணத்துக்கு அஸ்திவாரமாக்கிக் கொண்ட மந்தரை, கைகேயியின் மகனான பரதன் ராஜ வம்சத்தவன், அவன் அயோத்தி மன்னனாவதுதான் பொருத்தம் என வீம்பாக பிடிவாதம் என்ற கோட்டையைக் கட்டினாள்.
இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் முதலில் கைகேயியை தயார் செய்ய வேண்டும். பரதனை எப்படியும் சமாளித்து விடலாம். அம்மா சொன்னால் தட்டவா போகிறான்?
ராமனும் பரந்த மனசுக்காரன்தான். அப்பா ஆணையிட, அதைத் தன் சொந்தத் தாயாகவே கருதும் கைகேயி எடுத்துரைக்க, அவன் என்ன மறுக்கவா போகிறான்? ‘பரதனே நாடாளட்டுமே...தேவைப்பட்டால் நான் அவனுக்கு ராஜாங்க ஆலோசனைகள் சொல்லி, என் பொறுப்பை நிறைவேற்றிக் கொள்கிறேன்’ என்ற ரீதியில்தான் அவனும் யோசிப்பான். ஆக கேகய நாட்டு வாரிசு, அயோத்திக்கு மன்னராவதில் என்ன தடை வந்துவிடப் போகிறது?
தசரதன் அத்தனை சுலபமாக மந்தரையின் கற்பனையோடு ஒத்துப் போவாரா? நாலு வயதுக் குழந்தையாக ராமன் இருக்கும் போதே பட்டத்து யானை மீது அவனை அமர்த்தி மகிழ்ந்தவர் அல்லவா அவர்! அவரை வழிக்குக் கொண்டு வருவதுதான் பெரும்பாடாக இருக்கும். ஆகவே சூழ்ச்சி செய்தாவது அவர் வாயாலேயே ‘ராமனுக்கு பட்டாபிஷேகம் இல்லை; பரதனுக்குதான்’ என்று சொல்ல வைத்து விடவேண்டும். அப்படி அவரை சொல்ல வைக்க ஒரே ஒருத்தியால்தான் முடியும். அவள்தான் கைகேயி.
மந்தரையின் சிந்தனையும், திட்டங்களும் பரந்து விரிந்தன. பரதன் அயோத்தி அரியணை ஏறுவதற்குத் தான் முயற்சிப்பது என்பது தன் எஜமானியான கைகேயிக்கு காட்டும் ராஜ விசுவாசம்தான் என்றே கருதினாள்.
இந்த எண்ணத்தை கைகேயி செயலாக்கும் போது ஒரு கோரிக்கையாக, விண்ணப்பமாக, கெஞ்சலாக அவள் காய் நகர்த்த வேண்டும். ஆனால் எந்த சாத்வீக முயற்சியும் பலிக்கவில்லை என்றால்… அழுகையாலோ, விடாப்பிடியான நிர்ப்பந்தத்தாலோ கூட தசரதன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம். அப்படியும் முடியவில்லை எனில்...
இறுதி அஸ்திரம் –  கைகேயிக்கு தசரதன் கொடுத்திருந்த இரண்டு வரங்கள். ஏதோ தீர்க்க தரிசனமாகத் தான் கைகேயி இத்தனை நாள் அந்த வரங்களைக் கோரவில்லை போலிருக்கிறது. ஏன்...அப்படி வரங்களை பெற்றததையே அவள்  மறந்து விட்டாள் என்றே சொல்லலாம்.
இப்போதைய  நெருக்கடி சூழலில் அவற்றைப் பிரயோகப்படுத்தச் சொல்லி கைகேயியைத் துாண்ட வேண்டும். வசதியாக இரண்டு வரங்கள். ஒன்றின் மூலம் ராமனின் இறக்கம், அடுத்ததன் மூலம் பரதனின் ஏற்றம்!
இப்படி கைகேயிக்கு தசரதனிடமிருந்து வரம் கிடைத்ததற்கும் இளம் வயதில் அவளது நடத்தையே ஆரம்ப காரணமாக அமைந்தது. அது என்ன?
கேகய நாட்டு மன்னன் அசுவபதியின் அரண்மனைக்கு முனிவர்களும், தவ சிரேஷ்டர்களும் வந்து விருந்துபசாரம் கிடைக்கப் பெற்று, மன்னனை வாழ்த்திவிட்டுச் செல்வர். இந்த வகையில் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். வழக்கம் போல மன்னன் அவரை உளமாற உபசரித்தான். அவனைப் பாராட்டி ஆசியளித்த முனிவர் அவன் அளித்த விருந்தினை ஏற்றார். பிறகு விடை பெறும் தருணத்தில் சிறுமியான கைகேயி அங்கு வந்தாள். அவளிடம் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த தன் கமண்டலத்தை எடுத்து தரும்படி முனிவர் கேட்டார்.
அப்போது தன் வலது கையில் விளையாட்டுப் பொருளை வைத்திருந்ததால், இடது கையால் கமண்டலத்தை எடுத்து முனிவரிடம் நீட்டினாள். திடுக்கிட்ட முனிவர் வலது கையால் கொடுக்கும் பண்பு இல்லாதவளாக இருக்கிறாளே என்று கோபித்தார். ‘உன் இந்த இடது கை வஜ்ரம் போலாகட்டும்‘ என்று சபித்து விட்டார். கைகேயிக்கு முனிவரின் கோபமோ, அவர் விடுத்த சாபமோ புரியவில்லை. குழந்தைத்தனத்துடன் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய்விட்டாள்.
இடது கை வஜ்ரமாவது என்றால் என்ன? அந்தக் கை பெண்மையின் இயல்பான மென்மையுடன்தான் தோன்றும், ஆனால் வஜ்ரத்தின் உறுதியைக் கொண்டிருக்கும். இந்த வலிமையினாலேயே அவள் வெகு எளிதாக தேர் செலுத்தப் பயின்றாள். அதில் திறமையும் கொண்டவளானாள்.
இந்த ஆற்றல்தான் பின்னாளில் அவள் தசரதனைத் திருமணம் செய்த பிறகு பேருதவியாக அமைந்தது.
இந்திரன் மீது போர் தொடுத்தான் சம்பாசுரன் என்னும் அசுரன். அப்போது இந்திரனுக்கு உதவியாக போரிட முன் வந்தார் தசரதன். போரில் தசரதனின் தேரை கைகேயி லாவகமாகச் செலுத்தினாள். கூடவே கழுகு இனத் தலைவனான ஜடாயு துணை வர தசரதன் சம்பாசுரனை எதிர்த்தார்.
ஒரு கட்டத்தில் இவர்கள் பயணித்த தேர் தடுமாறியது. போர்க்கள மேடு பள்ளங்களில் அதன் சக்கரங்கள் விழுந்து, எழுந்து முன்னேறியதில் ஒரு சக்கரம் பாதிக்கப்பட்டது. அதனால் ஒரு திருப்பத்தில் அந்த சக்கரம் கழன்று விழும் அபாயம் ஏற்பட்டது. தேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தாம் செலுத்தும் வாகனத்தில் சலனம் ஏற்பட்டால் சமயோசிதமாக செயல்பட்டு பயணம் செய்பவர்களை காக்க முற்படுவார் இல்லையா அதே உணர்வை கைகேயியும் அடைந்தாள்.
பளிச்சென்று திரும்பிய அவள் இயல்புக்கு மாறாக இங்கும், அங்குமாக சாய்ந்தபடி உருண்ட சக்கரத்திலிருந்து அச்சாணி கழன்று விட்டதை கவனித்தாள். உடனே தேரில் பூட்டியிருந்த குதிரைகளை வலது கையில் பிடித்திருந்த வார்களால் நேர் செய்தபடியே தன் வஜ்ஜிர கரத்தின் விரலை அச்சாணி துவாரத்துக்குள் நுழைத்து சக்கரத்தின் ஓட்டத்தை சீராக்கினாள். இந்த கணநேரத்துக்குள் தசரதன் அம்பெய்து சம்பாசுரனை வதைத்தார். முனிவரின் சாபம் கணவரின் வெற்றிக்கு மூலதனமாக அமைந்தது.
அரக்கனை வதம் செய்த தசரதரை தேவர்கள் பாராட்டினர். இந்த வெற்றியும், பெருமையும் கைகேயியின் சமயோசித சிந்தனையாலும், விரல் போனாலும் பரவாயில்லை என்ற தியாக உணர்வாலும் கிட்டியவை என்பதை அவர் உளமாற உணர்ந்தார். அந்த நெகிழ்ச்சியிலேயே அவளுக்கு இரண்டு வரங்களைத் தந்தார்.
தன் கணவர் வெற்றி பெற உதவியதை மனைவியின் கடமை என்ற வகையில் எடுத்துக் கொண்டாளே தவிர கைகேயி அதை தனிப்பட்ட சாதனையாகக் கருதவில்லை. கணவர் உட்பட யாரிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் ‘உனக்கு இரண்டு வரங்கள் தருகிறேன், என்ன வேண்டும் என்று கேள்’ என்று தசரதன் சொன்னபோது, பெருந்தன்மையுடன், எதையும் கோராமல் அடக்கமாக இந்தாள். மனசுக்குள் தனக்கு சாபமிட்ட முனிவரை நன்றியுடன் வணங்கினாள்.    
இந்த விவரமெல்லாம் மந்தரைக்குத் தெரியும். இந்த சமயத்தில் இது அருமையான ஒரு துருப்புச் சீட்டு. தசரதனின் நோக்கத்தை நொறுக்கித் தள்ள அற்புதமான பிடி. ஆனால் இந்த கைகேயி, ராமனைத் தலையில் துாக்கி வைத்தல்லவா கொண்டாடுகிறாள்! அவனும் சொந்த அம்மாவான கோசலையை விட இவளிடம்தானே  பாசம் கொண்டிருக்கிறான்.
இவ்வளவு ஏன்... மிதிலையில் சீதையின் கரம் பிடித்து திருமண பந்தத்தில் ஈடுபட்ட அவன், தன் மனைவியுடன் முதலில் கைகேயியின் பாதங்களில் விழுந்து முதல் ஆசீர்வாதம் பெற்றான். இதையும் கேள்விப்பட்டிருந்த மந்தரை, முதலில் கைகேயி –  ராமனிடையே ஏற்பட்டிருக்கும் பந்தத்தை எப்படி விலக்குவது, விரோதத்தை எப்படி வளர்ப்பது என சிந்திக்கத் தொடங்கினாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar