Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புற்று நோயாளியின் வேதனை
 
பக்தி கதைகள்
புற்று நோயாளியின் வேதனை


புற்று நோய் நிபுணர் குமாரின் அழைப்பை ஏற்று அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.
“பேரு கனகராஜ். வயசு 59. அரசாங்க வேலையிலருந்து ரிட்டயர் ஆனவரு. நல்ல காசு. குடல்ல கேன்சர். இறுதிக்கட்டம். வலியில துடிச்சிக்கிட்டிருக்காரு. எத்தனையோ லட்சம் செலவாயிருச்சி. பசையுள்ள குடும்பம்தான். இருந்தாலும் நிச்சயமா குணமாகாதுன்னு தெரிஞ்சப்பறம்  ஏன் பணத்த விரயம் பண்ணனும்? அவர் செத்துட்டாக்கூடத் தேவலைன்னு தோணுது. ஆனா அதுக்கும் வழியில்லாம இருக்கு. நீங்க அவரை பாக்கறீங்களா?”
நான் பார்த்து என்ன செய்யப் போகிறேன்?
“அவர் பக்கத்துல உக்காந்து அவர் கையப் பிடிச்சிக்கங்க. அவர் மனைவிகிட்ட பச்சைப்புடவைக்காரி கைவிடமாட்டாங்கற மாதிரி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க”
ஏற்றுக்கொண்டேன்.
“ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.”
குமார் வெளியேறியதும் ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள்.
“பரவாயில்லையே! பிரச்னைகளைத் தீர்க்கத் தனியாகக் கிளம்பிவிட்டாயே...வாழ்த்துக்கள்”
அவள் காலில் விழுந்தேன்
“உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் போகவில்லை தாயே”
“மனதை அன்பால் நிரப்பிக்கொண்டு அவன் அருகில் அரை மணி நேரம் இரு. சட்டென்று பரிகாரம் சொல்லும் வகை இல்லை இது. முயன்று பார்க்கலாம்”
“ஏன் இப்படி விளையாட்டாகப் பேசுகிறீர்கள் தாயே?”
“போகப் போகத் தெரிந்து கொள்வாய்”
பச்சைப்புடவைக்காரி போய்விட்டாள்.
நான் அறையில் நுழைந்தபோது கனகராஜ் வலியால் முனங்கி கொண்டிருந்தார். அவரது மனைவி கைகூப்பினாள்.
நான் கனகராஜின் கையைப் பிடித்தபடி அருகில் அமர்ந்துகொண்டேன். அருகே டாக்டர் குமார்.
திடீரென என் உடல் சிலிர்த்தது. கனகராஜின் வாழ்க்கை மனதில் திரைப்படமாக ஓடியது.
கனகராஜ் மிக செல்வாக்கான பதவியில் இருந்திருக்கிறார். போடாத ஆட்டம் இல்லை. லஞ்சம் வாங்குவதை ஒரு நுண்கலையாகவே மாற்றியிருந்தார்.
அவருடைய துறையில் பணிபுரிந்த ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவிக்குக் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க அரசு முன்வந்தது. கனகராஜ் குட்டையைக் குழப்பிவிட்டு அந்த வேலை அவளுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார். அவள் அவரிடம் வந்து அழுதபோது  வேலை வேண்டுமென்றால் உன் கற்பைக் கொடு என்று மிரட்டி நினைத்ததைச் சாதித்தார்.
லஞ்சம் என்ற பெயரில் பல குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தார்.
ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிகொண்ட போது பழியைச் சாமர்த்தியமாக இன்னொருவரின் மீது போட்டு  தப்பித்தார். அந்த மனிதர் நேர்மையானவர். கனகராஜின் சூழ்ச்சியின் காரணமாக மாட்டிக் கொண்ட அவர்  அவமானத்தைப் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
எனக்கு முதலில் கோபம் வந்தது,  பின் மனம் தெளிவானது.
கனகராஜின் கையை இறுக்கமாகப் பற்றியபடி அன்னை சொல்லிக் கொடுத்த பிரார்த்தனையை சொல்ல ஆரம்பித்தேன்.
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்.”
நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி அறைக்குள் நுழைந்தாள். நோயாளியைப் பரிசோதிப்பதுபோல் அவர் நெற்றியைத் தொட்டாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி சென்றாள்.
திடீரென கனகராஜ் அலறினார்.  
“வலி தாங்க முடியல டாக்டர். பேசாம விஷ ஊசியப் போட்டு கொன்னுடுங்க”  
கனகராஜின் மனைவி மவுனமாக அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லலாம் என்று நினைத்தேன். என் வாயிலிருந்து பேச்சு வரவில்லை.  
டாக்டர் குமார் எழுந்து நின்றார். என்னைப் பார்த்து ஜாடை காட்டினார். அறையை விட்டு வெளியேறினோம்.
“ஏன் சார் பச்சைப்புடவைக்காரி தன் கருணைக்கண்ணத் திறக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறா?”
“தெரியலையே. ஏன்னு கேள்வி கேக்க இந்தக் கொத்தடிமைக்கு உரிமை இல்லையே”
“அந்தாளு சொன்ன மாதிரி விஷ ஊசி போட்டுக் கொன்னுரலாம்னுகூடத் தோணுது. நோய் குணமாக வாய்ப்பேயில்ல சார். வாழத்தான் விடல. நிம்மதியா சாகவாவது விடலாம்ல? பச்சைபுடவைக்காரி ஏன் சார் கல்மனசுக்காரியா இருக்கணும்?”
.கனகராஜின் கடந்த காலத்தை குமாரிடம் சொல்ல எனக்கு மனம் இல்லை.
டாக்டருக்கு அழைப்பு வந்தது. ஓடினார்.
நான் அவரது அறையில் தனியாக இருந்தேன். நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி உள்ளே நுழைந்தாள்.
“என்னை கல்மனசுக்காரி என்று சொல்லிவிட்டானே உன் நண்பன்? ஆனால் இந்தச் சூழ்நிலையில் வேறு வழி தெரியவில்லை”
“அவனை நிம்மதியாகச் சாகவாவது விடலாமே தாயே?”
“விடலாம். ஆனால் அடுத்த பிறவியிலும் இதே துன்பம் தொடரும்”
“செலவும் நிறைய ஆகிறதே”
“தப்பான வழியில் பணம் செலவழிந்துவிட்டால் அவன் பாவங்கள் அவனோடு போய்விடும். இல்லாவிட்டால் அவை அவன் குடும்பத்தை தாக்கும்”
“நான் இங்கே வந்தது, அந்த மனிதனுக்காக கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டது, மருத்துவரின் அன்பு எல்லாம் வீணாகி விட்டதே தாயே!”
“அவன் மலையளவு பாவம் செய்திருக்கிறான். உங்கள் அன்பென்னும் கடப்பாறையால் அதை நெம்பித் தள்ள முடியவில்லை”
“நான் பாவி தாயே! என்னால் அவனுக்கு அமைதியைக் கொடுக்க முடியும் என நினைத்தது அகங்காரத்தின் வெளிப்பாடு. ஆனால் நீங்களே அவனைத் தொட்டீர்களே! அதன் மூலம் அருளைக் கொடுத்தீர்களே...அப்படியுமா அவனுக்கு விடுதலை கிடைக்கவில்லை?”
“இறுகிப் போயிருக்கும் அவன் மனதால் என் அன்பை உணர முடியவில்லை”
அன்னை மறைந்து விட்டாள்.
குமார் பதற்றத்துடன் ஓடிவந்தார்.
“உடனே என்கூட வாங்க”
கனகராஜின் அறைக்கு ஓடினோம்.
அங்கே  அவருடைய மனைவியும் இரண்டு மகள்களும் இருந்தார்கள்.
கனகராஜ் கத்தினார்.
“என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சத்தியமாச் சொல்றேன் டாக்டர். நான் தப்பான வழியிலதான் சம்பாதிச்சேன். எத்த்னையோ பேரை சித்திரவதை செஞ்சேன். அதுதான் இன்னிக்கு வலியால அழுதுக்கிட்டிருக்கேன். நான் சம்பாதிச்ச சொத்து எதுவும் என் குடும்பத்துக்கு வேண்டாம் டாக்டர். நீங்க புத்து நோயாளிங்களுக்கு ஒரு டிரஸ்ட் நடத்தறீங்களாமே அதுக்கு எழுதி வச்சிடறேன். வக்கீல வரச் சொல்லியிருக்கேன். உயில்ல கையெழுத்து போடறவரைக்கும் நான் உயிரோட இருக்கறதுக்கு ஏதாவது மருந்து கொடுங்க டாக்டர். என் பொண்டாட்டி ஸ்கூல் டீச்சரா இருக்கா. அவ சம்பாத்தியத்துல என் பொண்ணுங்கள நல்லபடியா கரை சேத்திருவா.
என் உடம்புல இதயம், கண்கள், கிட்னி எல்லாம் நல்லா இருக்கு. .நான் செத்தப்பறம் அத வேற யாருக்காவது கொடுத்திருங்க. எனக்கு இறுதிச் சடங்கு செய்யவும் வேண்டாம். என் உடம்ப மருத்துவக் கல்லுாரிக்குக் கொடுத்திருங்க. அவங்க வேண்டாம்னு சொன்னா என் உடம்ப நாயும் நரியும் தின்னட்டும்”
அதன்பின் காரியங்கள் வேகமாக நடந்தேறின.  அன்று மாலையே பத்திரப் பதிவாளர் மருத்துவ மனைக்கு அழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் உயிலில் கையெழுத்திட்டார் கனகராஜ். எல்லாம் முடிந்ததும் கனகராஜ் களைப்புடன் கண்களை மூடினார். அதன்பின் கண்களைத் திறக்கவேயில்லை. அவருடைய கடைசி விருப்பம் நிறைவேற்றப்படும் என்று குமார் சொன்னார்.
நான் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது இரவு பதினொரு மணி. என் காருக்கு அருகில் அந்த நர்ஸ் நின்றிருந்தாள். ஓடிச் சென்று அவள் காலில் விழுந்தேன்.
“அவனுடைய வாழ்வின் கடைசி நிமிடங்களில் காட்டிய அன்பு அவன் கர்மக்கணக்கை நேர் செய்துவிட்டது. அன்பென்னும் ஒளி பல வருடங்களாக இருந்த இருட்டை ஒரே கணத்தில் விரட்டிவிட்டது.. கனகராஜ் கடைத்தேறிவிட்டான். உனக்குப் பிறவா வரத்தைத் தரலாம் என்று இருக்கிறேன்”
“வேண்டாம் தாயே... நான் இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும். இந்த உலகின் கடைசி மனிதனின் மனதில் அன்பு நிறைந்து அவன் உங்களுடன் ஒன்றும்வரை நான் இந்தப் பூமியில் பிறந்துகொண்டேயிருக்கவேண்டும்.”
“அடுத்து என்ன பிறவி வேண்டும்?”
யோசித்தேன்.
“அடுத்த முறை பார்க்கும்போது நீ பிறவியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்”
தலையாட்டினேன். அடுத்த கணம் அவள் அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar