Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கால் மீது கால் வைத்த அம்மை
 
பக்தி கதைகள்
கால் மீது கால் வைத்த அம்மை


பெண்களுக்கென ஏராளமான சட்டதிட்டங்கள், இலக்கணங்கள் சமூகத்தில் சொல்லப்படுகின்றன. அவை எல்லாமே அவரவர் அறிவுக்கும், அறியாமைக்கும், புரிதலுக்கும், புரிதலின்மைக்கும் ஏற்ற வகையில் கற்பிதம் செய்யப்பட்டவை. அதில் முக்கியமானது பெண்கள் கால் மீது கால் போட்டு உட்காரக் கூடாது என்பது. இப்படிச் சொல்பவர்களை இந்த திருத்தலத்தில் –  கம்பீரமாகக் கால் மீது கால் வைத்து உட்கார்ந்திருக்கும் அம்மையைத் தரிசிக்கச் சொல்ல வேண்டும். பெண்மையின் கம்பீரம், ஆளுமை, நிமிர்ந்த நிலை,  இப்படியானவள் நான் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் பாவனை.. இப்படி ஒரு பேரரசி... பெண்ணரசி... அம்மை... ஆத்தா, தாய் என எப்படி அழைத்தாலும் போதாது என்பதான கருணைக் கடலாக இருக்கிறாள். கொள்ளைச் சிரிப்பும், முழுநிலவு முறுவலும், ஆளுமையும், தாய்மையும் ஒட்டு மொத்தமாகக் குடியிருப்பது அவளிடமே...
கால் மீது கால் வைத்த பாவனையில் அவளைப் பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. அடடா...எந்த திருத்தலத்திலும் இப்படியான திருக்கோலத்தில் அம்மையின் தரிசனம் வாய்க்குமா எனத் தெரியவில்லை. இந்த ஊர் மக்கள் யுகம் யுகமாக அம்மையை இப்படி தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஊர்க் காற்று, இந்த ஊர் மழைத்துளி. இந்த ஊர்த் திருக்குளங்கள், இந்த ஊர் மரம், செடி, கொடி, பசுமை, இந்த ஊரின் கோடி கோடிக் கண்கள் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கும் தாய் அவள். சக்தி – இப்படித்தான் இருக்க வேண்டும். சக்தி – இப்படித்தான் நீண்டு அமர்ந்திருக்கும் நெருப்பாக இருக்க வேண்டும். சக்தி – இப்படித்தான் நிமிர்ந்த ஆளுமையாக இருக்க வேண்டும். இன்னும் பல தத்துவங்களை அம்மை நமக்குச் சொல்கிறாள். ஊரார் சொன்னால் கேள்வி கேட்டு மறுக்கலாம். உலக நாயகி, ஜெகன்மாதா, பிரபஞ்சப் பேரழகி, பூமி அம்மை – தானே அதுவாக மாறிக் காட்சி தந்து சொல்லும் போது அதுதானே வேதம் ஆகி நிற்கிறது.
இத்தலம் திருவாரூர் தியாகராஜர் கமலாம்பிகை திருக்கோயில். ஒருநாள் முழுக்க...ஏன் வாழ்நாள் முழுக்க, ஒரு யுகம் முழுக்கச் சுற்றினாலும், அப்போதும் காணாமல், கவனிக்காமல், தரிசிக்காமல் தவற விடும் ரகசியங்களும், மாயா தத்துவங்களும் ததும்பும் பூமி அது.
அன்றைக்குப் பவுர்ணமி வானம் முழுக்க முழுநிலவு வெளிச்சம். மனம் முழுக்க கமலாம்பிகை என்னும் முழுநிலவு வெளிச்சம். கமலாலயத் தீர்த்தக் குளம், அக்ஷர சக்திப் பீடம், பரந்து விரிந்த வெளி தேவதை, குண்டலினி நெருப்பின் மூலாதாரக் கனல், காம ரூபிணி, கமல வாசினி, தாமரை தேவதை எப்படி வேண்டுமானாலும் செல்லம் கொஞ்சலாம் போல அழகு மயிலாக இருந்தாள் கமலாம்பிகை. தியாகேசரும் அழகன் தான் என்றாலும் தாய்மையை வெளிப்படுத்தும் அம்மைதானே அழகின் உச்சம்?
திருவாரூர் தேரழகு என போற்றும் வகையில் ஆழித்தேர் 30 அடி அகலம், 31 அடி நீளம், 96 அடி உயரம், 300 டன் எடை என்ற அதிசயம் கொண்ட தலம் திருவாரூர்.
அட்சர பீடம் என்னும் அம்மன் சன்னதி அமைத்து ஞான சக்தியைக் கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள்.
சிதம்பர ரகசியம் போல தியாகராஜ ரகசியம், நித்ய பிரதோஷம், மனோன்மணி உற்ஸவர்  என்றெல்லாம் கமலாம்பிகை ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமாக ஜொலிக்கிறாள்.
காலம் பின்னோக்கி இழுத்தது. முன்னோக்கித் தள்ளியது. ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நேற்றிலும் பயணித்தேன். அந்த, அன்றைய பொழுதின் இன்றிலும் பயணித்தேன். வானத்தின் மாலை இருளிலும் இருந்தேன். அம்மை அருகே கோடிச் சூரிய வெளிச்சத்தின் கதகதப்புக்குள் இருந்தேன்.
அம்மையின் அணுக்கம் என்னுள் வியாபித்தது. அவள் பாதம் பற்றி பயணிக்கும் தொலைவும் என்னுள் வியாபித்தது. மொழி இருந்தது. மொழி மறந்தது. நினைவு இருந்தது. நினைவு மறந்தது. அம்மையின் அரவணைப்பில் சிறு புள்ளியாக்கி கரைந்தேன். காற்றில் பறந்து போய் அவளின் கால் மீது கிடந்த இன்னொரு காலின், விரலின், கால் நகத்தின் நுனியில் கோடிச் துாசியில், துகளில் இன்னுமொரு இன்மையாக, இன்னுமொரு அண்மையாக, இன்னுமொரு பிச்சியாகப் பதிந்தேன்.
பட்டென எனக்குள் வெடித்தேன். அவளின் பாத நுனித் தீண்டல் என் முந்தைய ‘நான்’ இல்லாமல் போனது.
காற்றை விட லேசானேன். பிச்சியானேன். ‘தாயே.. பரவசம் உச்சம். தாங்கும் வலிமை எனக்கில்லை அம்மையே...’ கதறினேன். கமலாம்பிகை சிரித்தாள். ஆத்மா ரூபமற்றது. ஞானம் ரூபமற்றது. ஒன்றுமற்ற சிவமும் ரூபமற்றது. ரூபமற்றதன் உயிர்ச்சக்தி அம்மை. ரூபமற்றதன் ரூபச்சக்தி அம்மை. அவளின் பிரம்மாண்டத்துக்கு முன்னால் நாம் சிறு துகளின், சின்னஞ்சிறு துாசியின் மிக மிகச் சிறிய வடிவம். எனவே ஆடாதே, ஆணவம் கொள்ளாதே. என்பதைச் சொல்லத்தான் நான் மகளே...ஆசையற்ற பிரம்மாண்டமாக, காமமற்ற வெளியாக உருமாறு. சக்தி பீடங்களின் தாய் வீடாக என்னிடம் வா மகளே..’’ கமலாம்பிகை உபதேசித்தாள். கோயிலின் பிரம்மாண்டம், வெளி எல்லாமே அம்மையின் திருக்கரமாக உணர்ந்தேன். அம்மைக்குள் ஆயிரம் கோடிச் சூரியனுக்குள் அடங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar