Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சரணம் ஐயப்பா
 
பக்தி கதைகள்
சரணம் ஐயப்பா


“தேவி! பதினெட்டு கைகளும், அவற்றில் ஆயுதங்களும் ஏந்தி, ஒரு சிங்கத்தின் மீதேறி வந்து விட்டால், நீ வென்று விடலாம் என நினைக்கிறாயா? உன் கணவரான சிவனால் கூட என்னை வெல்ல முடியாது எனும் போது, நீ எம்மாத்திரம்? சிவனின் மனைவி என்ற சிறப்பைத் தவிர உன்னிடம் வேறு என்ன இருக்கிறது? இங்கிருந்து ஓடி விடு. என் கோபத்துக்கு ஆளாகி உயிரை விட்டு விடாதே. பெண் என்பதால் உனக்கு மன்னிப்பு அளிக்கிறேன். செல்” என விரட்டினான் மகிஷாசுரன்.
பார்வதிதேவிக்கு கோபம் கொப்பளித்தது. அவள் ஆங்காரத்துடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக உயர்ந்தாள். அப்போது மகிஷன் ஒரு கொசு போல கீழே நின்றான். தனது திருவடியை உயர்த்தி அவனை நசுக்கினாள். அசுரர்கள் இந்த காட்சியைக் கண்டு நடுங்கினர். தேவர்கள் தங்கள் எதிரி அன்னையின் திருவடியில் சிக்கியதை எண்ணி மகிழ்ந்தனர். ‘மகிஷாசுரமர்த்தினி வாழ்க’ என்று கோஷமிட்டனர். மகிஷனை அழித்ததால் பார்வதிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ‘மர்த்தினி’ என்றால் ‘எளிதாக வெற்றி பெறுபவள்’ என பொருள். எருமைத்தலை ஒன்றை மிதித்தபடி மகிஷாசுரமர்த்தினி காட்சி தரும் சிலைகளை பல கோயில்களில் பார்க்கலாம்.
இவளை சண்டிகாதேவி என்றும் சொல்வர். ‘சண்டி’ என்றால் ‘சேஷ்டை செய்பவள்’. இதை வைத்தே சண்டியர் என்னும் வார்த்தை உருவானது. கெட்டவர்களுக்கு கெட்டவள் என்றும் பொருள் சொல்வர்.
தனது சகோதரன் மகிஷாசுரமர்த்தினியால் அழிந்தது கேட்ட தங்கை கரம்பினி அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தாள்.
“தேவர்களால் தானே எனது சகோரதனுக்கு இந்தக் கதி ஏற்பட்டது. அவர்களை அழித்தே தீருவேன்” என சபதம் செய்தாள். பிறகு குலகுரு சுக்ராச்சாரியாரை சந்தித்து, “குருவே! நீங்களே சொல்லுங்கள். என் அண்ணன் கொல்லப்பட்டு விட்டான். எப்போதுமே தேவர்கள் தான் ஜெயிக்கின்றனர். நான் அவர்களை அடக்கியாள வேண்டும். வழிசொல்லுங்கள்” என்றாள்.
“மகளே! தவம் ஒன்றே பல அரிய வரங்களை அருளும். நம் தலைவிதியை மாற்றும் சக்தி பிரம்மாவுக்கே உண்டு. நீ அவரை எண்ணி தவம் செய். தேவர்கள் உன் கட்டுக்குள் இருக்க வரம் கேள்” என்றார். கரம்பினியும் கொடிய தவத்தில் ஈடுபட்டாள். ஒரு பெண்ணுக்குரிய சக்திக்கும் அதிகமாக கடும் முயற்சி எடுத்து பிரம்மாவை வரவழைத்து விட்டாள். அவர், “மரணம் கூடாது என்று மட்டும் வரம் கேட்காதே. வேறு என்ன கேட்டாலும் தருவேன்” என்றார்.
“நான்முகனே! தேவலோகத் தலைவன் இந்திரனை வெற்றி கொண்டு நான் அதன் தலைவியாக வேண்டும். தேவர்கள் எனக்கு அடிமையாக இருந்து சேவகம் செய்ய வேண்டும். நீர், நெருப்பு, காற்று, ஆயுதங்கள், இன்ன பிற எந்த சக்தியாலும் எனக்கு அழிவு வரக்கூடாது. ஆணுக்கும், ஆணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு 12 வயதாக வேண்டும். அந்தக் குழந்தையாலேயே நான் மரணமடைய வேண்டும். இதைத் தருவீர்களா?” என்று பணிவோடு கேட்டாள்.
“கரம்பினி! நான் வாக்கு தவற மாட்டேன். நீ கேட்ட வரத்தை தந்து விட்டேன்” என்றார்.
பிரம்மா தந்த வரத்தால் கரம்பினி தேவலோகத்துக்கு அரசியானாள். தேவலோக தலைநகர் அமராவதி அவளது ஆட்சியின் கீழ் வந்தது. தனக்கு அடங்காத தேவர்களை அவள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தாள். தேவர்களை தனது கைபொம்மையாக நடத்தினாள். உலகெங்கும் அவளது கொடுங்கோல் ஆட்சியே நடந்தது.
வதைபட்ட தேவர்கள் வழக்கம் போல் மும்மூர்த்திகளை சரணடைந்தனர். பிரம்மா கொடுத்த வரத்தால் கரம்பினி, தங்களை பாடாய்படுத்துவதை எடுத்துரைத்தனர்.
அவர்கள் தேவர்களை சமாதானம் செய்தனர்.
சிவன் அவர்களிடம்,“ஒரு பக்தன் தங்களை எண்ணி மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால், அதற்குரிய பலனைத் தருவது எங்கள் கடமை. கரம்பினி ஆயிரம் ஆண்டுகள் அக்னியின் மத்தியில் நின்று, அது சுடுவது கூட தெரியாமல், மனதை பக்குவப்படுத்தி பிரம்மாவை நினைத்து தியானித்தாள். அதற்குரிய நற்பலனை இப்போது அனுபவிக்கிறாள். அதனால் இவளை இப்போது வதம் செய்ய இயலாது. ஆனால் இவளது கவனத்தை திசை திருப்பலாம். அதற்கு எங்களிடம் வழி ஒன்று உள்ளது. நீங்கள் சில காலம் பொறுத்திருங்கள்” என்றார்.
பிறகு மும்மூர்த்திகளும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவினர். அந்த இனிய ஸ்பரிசத்தில் இருந்து, ஒரு ஆண் எருமை தோன்றியது. இந்த எருமை யார் தெரியுமா?
முற்பிறவியில் தத்தன் என்ற பெயரில் லீலாவதியின் கணவனாக வாழ்ந்தவன். லீலாவின் சிற்றின்ப வேட்கையை தணிக்க மறுத்ததால் எருமையாக மாற சபிக்கப்பட்டவன். அவனே மும்மூர்த்திகளிடம் இருந்து தோன்றினான். அந்த எருமைக்கு ‘சுந்தர மகிஷம்’ என மும்மூர்த்திகளும் பெயரிட்டனர். அழகான எருமை என்பது இதன் பொருள்.
அந்த எருமையிடம்,“நீ முற்பிறப்பில், மனிதனாக இருந்து லீலாவதி என்பவளை மணம் செய்தாய். உங்களுக்குள் எழுந்த தாம்பத்ய கருத்து வேறுபாட்டால் நீ எருமையாக மாற உன் மனைவியாலேயே சபிக்கப்பட்டாய். நீயும் அவளை பெண் எருமையாக மாறும்படி சபித்தாய். அதன் காரணமாக இப்பிறப்பிலும், அவள் எருமைத்தலையும் மானிட உடலும் கொண்டு திகழ்கிறாள். நீயும் எருமைத்தலையுடனும், மனித உடலும் கொண்டதாக மாறி விடு. உன் கழுத்தில் ஒரு மணியைக் கட்டுகிறோம். அது எழுப்பும் நாத ஒலிக்கு அவள் அடிமையாவாள். உன்னோடு காதல் கொள்வாள். இதைப் பயன்படுத்தி நீ அவளை தேவலோகத்தில் இருந்து பூலோகத்திலுள்ள வனத்திற்கு அழைத்துச் செல். அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து. பிறகு உங்கள் இருவர் சாபமும் தீரும்” என்றனர்.
சுந்தர மகிஷமும் அமராவதி நகருக்கு சென்றது. அதன் கழுத்தில் இருந்த மணி எழுப்பிய ஒலி கரம்பினியைக் கவர்ந்தது. அவள் சுந்தர மகிஷத்தை பிடித்து வந்தாள். அதன் அழகில் மயங்கினாள். சுந்தர மகிஷம் சொன்னதையெல்லாம் கேட்டாள். அது அவளை பூலோகத்திற்கு அழைத்தது. மறுக்காமல் கிளம்பினாள் கரம்பினி. இருவரும் பூலோகக் காடுகளில் இன்பமாக சுற்றித் திரிந்தனர். இதன்படி கரம்பினியின் முற்பிறப்பு ஆசையும் தீர்ந்தது. மனிதனோ, மிருகமோ...அது ஆசைப்படுவது எதையும் கடவுள் கொடுக்காமல் விடுவதில்லை. ஆனால் அதற்காக நீண்டகாலம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
கரம்பினி தேவலோகத்தை விட்டு சென்று விட்டதால், இந்திரன் தனது சிம்மாசனத்தில் மீண்டும் அமர்ந்தான். என்ன தான் தேவலோகத்தின் அரசனாக மீண்டும் பதவியேற்றாலும், கரம்பினி எப்போது திரும்பி வருவாளோ என்ற பயம் அவனை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் கெட்ட நேரம் என்பது சிலரை விடுவதே இல்லை. கரம்பினியிடமிருந்து தற்காலிக விடுதலை பெற்ற இந்திரனை நோக்கி. மற்றொரு சோதனை ஒரு முனிவரின் வடிவில் வந்து கொண்டிருந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar