Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குந்தியாகிய நான் ...
 
பக்தி கதைகள்
குந்தியாகிய நான் ...

குந்தி என்று நான் அறியப்படுகிறேன். பாண்டவர்களின் அன்னை என்றால் மேலும் பலருக்குத் தெரியும். ஆனால் இந்த இரண்டு தகவல்களுமே முழுமையான உண்மைகள் அல்ல.

என் இயற்பெயர் ப்ரீதா. குந்தி அல்ல. பஞ்சபாண்டவர்களில் தர்மன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவருக்கும்தான் நான் அன்னை. நான் சொல்லிக்கொடுத்த மந்திரத்தின் பயனாக என் கணவர் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள்தான் நகுலனும் சகாதேவனும். அனைவரையும் என் மகன்களாகத்தான் கருதினேன் என்பது வேறு விஷயம். எனவே என் மகன்கள் என்று குறிப்பிடும்போதெல்லாம் ஐவரையும்தான் குறிப்பிடுகிறேன். (இவர்களைத் தவிர கர்ணனும் எனது மகன்தான் என்பது வேறு விஷயம்).

கண்ணனுக்கு நான் அத்தை முறை. யாதவ குலத்தைச் சேர்ந்த சூரசேனன் மதுராவை ஆண்டு வந்தார். இவரது மகன் வசுதேவர். வசுதேவரின் மகன்தான் கண்ணன். சூரசேனனின் மகளாகப் பிறந்தவள் நான். எனவேதான் அத்தை என்று கண்ணன் என்னிடம் அன்பு பாராட்டினான். நான் மிகவும் அழகானவள் என்றும் பெரும் புத்திசாலி என்றும் பலரும் குறிப்பிட்டதுண்டு.

குந்திபோஜன் என்ற மன்னர் குந்தி என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்தார். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. என் தந்தை சூரசேனனுக்கு அந்த மன்னன் உறவினர். குழந்தைப் பருவத்திலேயே என் சுட்டித்தனத்தால் ஈர்க்கப்பட்ட குந்திபோஜன் என்னை மகளாக தத்து எடுத்துக் கொள்ள விரும்புவதாக என் தந்தையிடம் கோர, அவரும் ஒத்துக் கொண்டார். குந்திபோஜனின் (வளர்ப்பு) மகள் என்பதால் என்னைக் குந்தி என்றே அதற்குப் பிறகு குறிப்பிடத் தொடங்கினார்கள்.

ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த முனிவர் துர்வாசர் எனது பணிவிடைகளால் மனம் கனிந்தார். என் வருங்காலத்தை அவரால் கணிக்க முடிந்ததோ என்னவோ, எனக்கு அதர்வ வேதத்திலிருந்து சில மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். ஒவ்வொருமுறையும் இவற்றைக் கூறி நான் எந்த கடவுளை வேண்டிக் கொள்கிறேனோ அவரது அம்சமாக எனக்கு மகன் பிறப்பான் என்றார். சிறுமியாக அப்போது இருந்த எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருந்தது. அவர் கூறியதை நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஆனால் இதை வெளிப்படையாக கூறினால் துர்வாசர் பெரும் கோபம் கொள்வாரே! அவர் அரண்மனையை விட்டு நீங்கிய பிறகு நான் அந்த மந்திரங்களை கூறினேன். அரண்மனை மாடத்திலிருந்து பார்த்தபோது வெளியே தென்பட்ட சூரியனை வணங்கினேன். சூரியனின் அம்சமாக எனக்கு ஒரு குழந்தை உடனடியாகப் பிறந்துவிட்டது. திடுக்கிட்டேன், பதறினேன். திருமணமாகாமல் குழந்தையா? இதன் பின்னணியை எவ்வளவு பேர் நம்புவார்கள்? எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது புடவையை அந்த குழந்தையின் உடலில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து நதியில் மிதக்க விட்டேன். அந்தக் குழந்தைதான் பின்னர் கர்ணன் என்று புகழ் பெற்றான்.

காலப்போக்கில் மன்னர் பாண்டுவுடன் எனக்கு விவாகம் நடைபெற்றது. குரு சாம்ராஜ்யத்தின் மாபெரும் வீரர் அவர். பீஷ்மரின் தம்பி விசித்திரவீரியன் இறந்த பிறகு ஹஸ்தினாபுரத்திற்கு வாரிசு இல்லாமல் போக, வியாசரின் மூலம் (இறந்துவிட்ட விசித்திரவீரியனின் மனைவியான) அம்பாலிகைக்குப் பிறந்தவர் பாண்டு. பீஷ்மரால் அளிக்கப்பட்ட போர்ப்பயிற்சி காரணமாக என் கணவர் போர்க்கலையில் தலைசிறந்து விளங்கினார். சிந்து ராஜ்யம், அங்கம், மகதம், காசி, கலிங்கம் போன்ற பல பகுதிகளுக்குப் படையெடுத்து வென்று சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

மிகுந்த தைரியமானவள் நான். பாண்டவர்கள் அனைவரையும் மனவுறுதி கொண்டவர்களாக வளர்த்தேன். அதேசமயம் அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் போதித்தேன். துரதிஷ்டவசமாக என் மகன்களுக்கும் கௌரவர்களுக்கும் நல்லுறவு இல்லாமல் போனது. ஆனால் கௌரவர்களின் தாயான காந்தாரியுடன் நான் எப்போதுமே இணக்கமாக இருந்து வந்தேன். என் கணவரின் இரண்டாவது மனைவியான மாத்ரியையும் என் சகோதரியாகத்தான் எண்ணினேன். துரியோதனன் பாண்டவர்களுக்குக் குற்றங்களை இழைத்த போதும் அவர்களை அதை பொருட்படுத்த வேண்டாம் என்றேன். ஆனால் நிலைமை கைமீறி பல அதிர்ச்சி தரத்தக்க நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன.

கௌரவர்களுடன் பிரச்னை வேண்டாம் என்பதற்காக என் மகன்களிடம் என் வார்த்தையை ஒருபோதும் மீறக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டேன். அதுவே வேறு ஒரு பிரச்னைக்கு வழி வகுத்து விட்டது. சுயம்வரத்தில் வென்று அர்ஜுனன் திரெளபதியோடு வீட்டின் வாசலில் நின்றபடி அம்மா, ஒரு கன்னியை அழைத்து வந்திருக்கிறேன் என்றான். அதை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் கன்னி என்பதை கனி என்று எண்ணி கொண்டுவந்ததை ஐவரும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். பின்னர் உண்மையை உணர்ந்து விவாதித்தேன். என்றாலும் திரௌபதி ஐவருக்கும் மனைவியானாள்.

என் மகன்கள் ஒருபோதும் நான் சொன்னதைக் கேட்காமல் இருந்ததில்லை. ஆனால் போதாத காலம் பகடை விளையாடச் சென்றபோது மட்டும் என்னிடம் ஆலோசனை கேட்காமல் அவர்கள் சென்று விட்டார்கள். விளைவு விபரீதமானது.

சூதாட்டத்தில் தோற்று என் மகன்கள் வனவாசம் சென்றபோது எனக்கு இன்னல்கள் கூடாது என்பதற்காக என்னை உடன் அழைத்துச் செல்லவில்லை.

என் மூத்த மகன் கர்ணன் தேரோட்டியின் மகனாக வளர்ந்தது என்னை வருத்தியது. காலப்போக்கில் அவன் துரியோதனனின் நெருங்கிய நண்பன் ஆனது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை அதிகமாக்கும் வகையில் கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் போரில் கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். கர்ணனைத் தனிமையில் அணுகினேன். அவனது தாய் நான்தான் என்பதை நிரூபித்தேன். இதற்கு எனக்கு சாட்சியாக உதவியது குழந்தையாக இருந்தபோது அவனைச்சுற்றி அனுப்பிய எனது புடவை. போரில் உன் தம்பிகளுக்கு எதிராகச் செயல்படாதே. எங்கள் தரப்புக்கு வந்துவிடு. பாரதப் போரில் கௌரவர்களை வென்ற பிறகு தருமனுக்கு அல்ல, உனக்கே முடிசூட்டுவேன். நீயே ஹஸ்தினாபுரத்தை ஆளலாம் என்றேன். அவன் மறுத்து விட்டான். அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன் என்று பிறகு வாக்களித்தான். அவன் இறக்கும் வரை அவன்தான் என் மகன் என்பதை வெளிப்படுத்த மாட்டேன் என்று நானும் வாக்களித்தேன்.

குருக்ஷேத்திரப் போரில் கர்ணனை அர்ஜுனன் வீழ்த்திவிட்டான். கர்ணனை மடியில் கிடத்தியபடி மறைந்து விட்டாயா மகனே என்று கதறினேன். உண்மையை அறிந்தவுடன் தர்மன் என்னை மிகவும் கடிந்து கொண்டான். தமையனைக் கொன்றதற்காக அர்ஜுனன் வருந்தினான்.

போரில் பாண்டவர்கள் வென்றார்கள். துரியோதனன் உட்பட நூறு கௌரவர்களும் இறந்தார்கள். தர்மன் முடிசூட்டப்பட்டான். உலக வாழ்வில் எனக்கு இருந்த பற்று முழுவதுமாக நீங்கியது. சோக வயப்பட்ட என் மைத்துனர் திருதராஷ்டிரன் மற்றும் அவனது மனைவி காந்தாரியுடன் நானும் வனம் சென்றேன். தவம் புரிந்தேன். மோட்சம் பெற்றேன்.


குஜராத்தின் முந்தைய தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஜ்பிப்ளா என்ற இடம். அதிலிருந்து மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்தால் தேதியா பரா என்ற இடத்தை அடைய முடியும். வழியில் மலைப்பகுதி மேலும் கீழுமாக ஏறி இறங்க வேண்டும். அங்கு அமைந்துள்ளது குந்தி மாதா ஆலயம்.

ஆலயத்தைச் சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் வெகு சிறப்பாக உள்ளன. பாண்டவர்களுடன் வனம் வந்த குந்தி இங்கு சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறார்கள். உள்ளூர்வாசிகள் குந்தி தேவியை மனமார வழிபடுகிறார்கள். மலைவாழ் மக்கள் கோழி, ஆடு போன்றவற்றை அடிக்கடி குந்தி தேவிக்குப் படைக்கிறார்கள். குந்தி மாதா என்ற பெயரில் அவர் அவர்களின் குல தெய்வமாகவே இருக்கிறார்.

குந்தி தேவியை பார்வதி தேவியின் அம்சம் என்று கருதுபவர்கள் இவர்கள். தன் வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களை சந்தித்தாலும் தனது பொறுமையாலும் கண்ணனின் மீது கொண்ட நம்பிக்கையாலும் அவற்றைக் கடந்து வந்தவர் குந்தி. ஒரு முறை ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்’ என்று கண்ணன் குந்தியைக் கேட்க, ‘எனக்கு மேலும் மேலும் பிரச்சினைகளை கொடு. சங்கடங்களை கொடு’ என்று பதிலளித்தாராம் குந்தி. காரணம் சங்கடங்கள் நேரும்போதுதான் இறைவனை நினைப்பது மனிதனின் வழக்கம் என்பதால்தான். தெளிவான சிந்தனைக்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?

சுற்றுப்புறத்தில் சிறிய கடைகள் நிறைய உள்ளன. என்றாலும் ஆலயம் என்பது ஒரு நடுத்தர அளவிலான கூடம் மட்டுமே. அதில் வெண் உலோகத்தில் காணப்படுகிறது குந்திதேவியின் சிறிய சிலை. வெள்ளிக்கிழமைகளில் அந்த உருவத்தைச் சுற்றி சாமந்தி மலர்கள் வெள்ளமாக குவிக்கப்படுகின்றன - பக்தர்களின் உபயம். அனைவரும் குந்திமாதாவின் பாதத்தைத் தொட்டு வழிபடுகிறார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar