Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவர்கள் அளித்த தானம்
 
பக்தி கதைகள்
அவர்கள் அளித்த தானம்

அயோத்தி நகரம் அமளிப்பட்டது. ஆசையாய் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களெல்லாம் ஏமாற்றம் தாங்காமல் அரற்ற ஆரம்பித்து விட்டார்கள். கோலாகலமாகக் கொண்டாடப்படும் என்று எதிர்பார்த்த ராம பட்டாபிஷேகம் ஒத்தி வைக்ககூடப் படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, எவ்வளவு கொடுமையானது! பார்த்துப் பார்த்து செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ்பட்டுப் போகும் நிலைமையை எண்ணி, எண்ணி மக்கள் எல்லோரும் மாய்ந்து போனார்கள். தம்முடைய மன சிம்மாசனத்தில் ராமனை அமர்த்தி ஆனந்தப்பட்டவர்கள், அந்தக் காட்சியை நேரடியாக, கண் குளிரக் காணக் காத்திருந்தவர்கள் எல்லாம் சுடுநீர் விடப்பட்ட இளந்தளிராக வாடிப் போனார்கள்.
நகர மக்களின் மனப் புழுக்கம் இப்படி இருந்ததென்றால் அரண்மனைக்குள் புயல்தான் வீசிக்கொண்டிருந்தது. ‘அடுக்குமோ இந்த நியாயம்!’ என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள். ராமன் அரியணை ஏற முடியாது, வேண்டாம், சரி. ஆனால் பரதன் நாடாள்வது எப்படி சரியாகும்? பதினான்கு ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்றானானால் அவன் திரும்பி வரும் வரைக்கும் இந்த சிம்மாசனம் வெறுமனே அவனுக்காகக் காத்திருக்கக் கூடாதா?
ராமனிடம் ‘காட்டிற்குப் போ’ என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொல்லிவிட்ட தசரதன், அப்படி தன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்ட உடனேயே பலமிழந்தார். நோய் எதுவும் தாக்காமலேயே உடலின் ஒவ்வொரு அணுவும் நொந்து வலித்தது அவருக்கு. பரதன் நாட்டை ஆள்வதுகூட அவருக்குச் சம்மதம்தான். ஆனால் ராமனை காட்டிற்குச் செல்ல வேண்டிய கொடுமையைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
கைகேயி நிர்ச்சலனமாக இருந்தாள், தான் சாதித்து விட்டதால் ஏற்பட்ட கர்வத்துடன். எத்தனை உறுதியாக இருந்தாள் அவள்! தசரதன் எவ்வளவோ மன்றாடியும் சிறிதும் இறங்கி வரவில்லையே. தனக்கு அவர் அளித்த வரங்களை நிறைவேற்றிக் கொண்ட அவள் அதற்குப் பிறகு மிகவும் திடமானவளாக, எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்பவளாக மாறி விட்டாள்!
கோசலையோ மிகப் பெரிய ஞானியாகவே திகழ்ந்தாள். ராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற போது, தன் மகன் அவயத்து முந்தியிருக்கும் அந்தப் பெருமை அவள் முகத்தில் ஒளிர்ந்தது. ஆனால் அடுத்த சில மணிநேரத்திற்குள் ‘அவனுக்கு பட்டாபிஷேகம் இல்லை, அவன் கானகம் போகவேண்டும்’ என்ற தகவல் வந்தபோது, அப்போதும் அவள் முகம் ஒளிர்ந்துதான் இருந்தது. ‘எனக்கு ராமனைப் பற்றித் தெரியும். அவன் தேவைகளை கட்டுப்படுத்திக் கொண்ட சன்யாசி. ராஜபோகத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பங்களிலும் மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பவன். பலனை எதிர்பாராமல் கடமையை செவ்வனே ஆற்றும் கர்மயோகி. அவனுக்கு வேண்டியது, வேண்டாதது என்று எதுவும் கிடையாது. எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. அதனால் எந்த ஏமாற்றமும் அவனை வருத்துவதுமில்லை. அவனே அப்படி இருக்கும்போது, அவனைப் பெற்றவளாகிய நான் இன்னும் எவ்வளவு விவேகமாக இருக்க வேண்டும்?’ என்றாள் அவள்.
தசரதனின் மூன்றாவது மனைவியாகிய சுமித்ரை, பிற இருவரின் மனோநிலையைப் பற்றி சிந்தித்தாள். ‘தன் உத்தம மகன், ராஜ வாரிசாக வரவேண்டிய நியாயமான தகுதிகளைப் பெற்றவன், அவனுக்குக் கானகம் ஏக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அந்தத் தாயின் மனநிலை எப்படியிருக்கும்! அவள் என்னவெல்லாம், எப்படியெல்லாம் எதிர்பாத்திருந்திருப்பாள்! ராஜகுமாரன் ராமனின் தாய் என்ற நிலையை அடுத்து சக்கரவர்த்தியின் தாய் என்ற உயர்வில்தான் எவ்வளவு மதிப்பு பெறும்! சமுதாயத்தில் அவள் கவுரவம் உயரும். இப்போது அவளுடைய வேதனையைத்தான் அளவிட முடியுமா? ஆனாலும் முகத்தில் சிறிதுகூட ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் எத்தனை பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறாள் அவள்!’ என்றெல்லாம் உணர்ந்து விம்மினாள் சுமித்ரை.
கைகேயியை நினைத்தாலும் சுமித்ரைக்கு பாவமாகத்தான் இருந்தது. தன் மகன் நாடாள வேண்டும் என்ற அவளுடைய விருப்பமும் நியாயமானதாகத்தான் அவளுக்குத் தெரிந்தது. இயல்பிலேயே ராஜ குணமும், அதன் கம்பீரமும் ரத்தத்தில் ஊறிவிட்டதால் சில சமயங்களில் கைகேயியால் அந்த நிலையை விட்டு இறங்கி வரமுடியவில்லைதான். அவளுடைய அந்த ராஜாங்க குணாதிசயங்களை கண்டுதான், கோசலைக்கு ராமன் குழந்தையாக பிறந்தபோது அவனைத் தசரதன் கைகேயியிடம் கொடுத்தார்.
ஆனால் தனக்கென்று வரும்போது ராஜதந்திரத்தை கைகேயி பயன்படுத்தியிருக்கிறாள். ராமன் மூத்தவன் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு ராஜகுல தோன்றல்தான் அயோத்தி அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற அவளுடைய எண்ணமும் சரிதானோ? தன்னால் அரசு இயல் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன்தான் என்றாலும் அந்த ராமனை விட பரதனுக்குதானே ராஜாங்க மரபணு கூடுதலாக இருக்கிறது! ஆகவே, ராமன் - பரதன் இருவரில் பரதன்தான் நாடாளும் தகுதியை அதிகம் பெற்றிருக்கிறான். குழந்தை ராமனை தன் கரங்களில் தசரதன் தவழவிட்ட போதே, அரசியல் சதுரங்கத்தில் உரிய நேரத்தில் உரிய காயை நகர்த்தி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கைகேயி முடிவு செய்திருப்பாளோ? காலம் கனியக் காத்திருக்கிறாளோ?
ராம பட்டாபிஷேகம், அடுத்தடுத்து ஏற்பட்ட விரும்பத் தகாத நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட களேபரங்கள், தசரதன், கைகேயி மற்றும் ராமனை முன்னிலைப்படுத்தித் தத்தமது மனப்போராட்டங்களுடன் உழன்று வரும்போது சுமித்ரை தனித்து விடப்பட்டிருந்தாள். அவளது மனநிலையை படிக்க யாருக்கும் அவகாசம் இல்லை - அவளுடைய பிள்ளைகள் உட்பட. ஆமாம், லட்சுமணன், ராமனின் அடியொற்றியே இயங்கிக் கொண்டிருந்தான். சத்ருக்னன், பரதனை பின்பற்றி அவனுடைய மாமன் நாடான கைகேயத்துக்குச் சென்றிருக்கிறான். அரசப் பிரமுகர்கள் அடுத்து என்ன செய்வது என்பதிலேயே குழப்பத்துடன் ஆழ்ந்து விட்டனர். கோசலை தனியே தெய்வ வழிபாட்டில் இறங்கிவிட்டிருந்தாள். கைகேயியை அவளுடைய பால வயது சேடி மந்தரை, அவளுடைய முதுகைத் தட்டிக் கொடுத்து பாராட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்தப்புரத்திலிருந்த சுமித்ரையிடம் வந்தாள் அவளுக்காக பணிவிடை செய்யும் தலைமை சேடிப் பெண். “நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேள்விப்பட்டீர்களா அம்மா?” என தயக்கத்துடன் கேட்டாள்.
“ம்... ம்...” என்றாள் சுமித்ரை.
“ஆனால் நீங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லையே அம்மா? இப்போதே ராமனுக்கு பதிலாக பரதன் என்று அரசியல் வியூகம் சுழலத் தொடங்கிவிட்டது. அடுத்ததான உங்கள் பிள்ளைகள் லட்சுமணன், சத்ருக்னன் நிலை என்ன? இவர்களுக்கு அரசியல் அரங்கில் என்ன அந்தஸ்து? அயோத்தியின் சில பகுதிகள் இவர்களுடைய ஆளுகைக்கு உட்படுமா?..”
“நீ வம்பு வளர்ப்பதற்காகக் கேட்கிறாயோ அல்லது என் பிள்ளைகள் மீதான உண்மையான அக்கறையில் கேட்கிறாயோ,  தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவருக்காக எந்த உரிமையும் கோரப்போவதில்லை...”
“ஏன்?”
“எனக்கு தானம் அளித்தவர்களிடமே சொத்து உரிமை கோர முடியுமா என்னால்?” சுமித்ரை கேட்டாள்.
“அதுதான் ஏன்? அப்படி என்ன தானம் அவர்களிருவரும் உங்களுக்கு அளித்துவிட்டார்கள்?”
“லட்சுமணன், சத்ருக்னன் இருவருமே எனக்கு அளிக்கப்பட்ட தானம்தானே? ஆமாம். மாமன்னர் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் நிறைவேற்றியபோது, அவிர்பாகமான பாயசத்தை கோசலைக்கும், கைகேயிக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தார். ஆனால் என் மீது இரக்கம் கொண்டு கோசலையும், கைகேயியும் தத்தமது பங்கிலிருந்து தனித்தனியே எனக்கும் சிறிதளவு கொடுத்தார்கள். அது லட்சுமணனாகவும், சத்ருக்னனாகவும் பலனளித்தது. இப்படி தம் பங்கிலிருந்து எனக்கு பாகம் அளித்து, எனக்கும் மகப்பேறு வழங்கிய அந்த உத்தமிகளின் பிள்ளைகளுக்குப் போட்டியாக என் பிள்ளைகளை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதனால்தான் லட்சுமணனை ராமனுடனும், சத்ருக்னனை பரதனுடனும் ஒன்று சேர்த்து வைத்தேன். இவ்விருவரும் அவர்களை ஒரு கணமும் பிரியாமல் வாழவேண்டும் என்றும் அறிவுறுத்தினேன். நால்வரில் ராமனே மூத்தவன், அதனால் மற்ற மூவருக்கும், குறிப்பாக என் இரு மகன்களுக்கும், அவனே தலைவன். இந்த விதையை அவர்கள் மனதில் பதிய வைத்தேன். அவர்களும் அதன்படியே இன்றுவரை நடந்து கொண்டு வருகிறார்கள், இனியும் நடப்பார்கள்...”
தலைமை சேடிப்பெண் சுமித்ரையை பிரமிப்புடன் நோக்கினாள். வாய்ப்பு கிடைத்தால் அதிகாரத்தை கொத்திக் கொண்டு போய்விடத் துடிக்கும் கைகேயி ஒருபுறம். இப்படி அத்தகைய வாய்ப்பு எதுவும் வேண்டவே வேண்டாம் என்று உதறிவிட்டு சலனமுமில்லாமல் திகழும் சுமித்ரை இன்னொரு புறம். ‘உலகம் இதனால்தான் சமநிலையில் இருக்கிறது!‘ என்று தெளிந்தாள் அவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar