Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடோத்கஜனாகிய நான் ..
 
பக்தி கதைகள்
கடோத்கஜனாகிய நான் ..

நான் தோற்றத்தில் பிரம்மாண்டமானவன்.  மிகவும் வலிமையானவன்.  வாயு தேவனின் அம்சமான பீம தேவருக்கும், வனத்தில் கோலோச்சி வந்த இடும்பிக்கும் பிறந்த நான் வேறு எப்படி இருப்பேனாம்?
என் தலை பானை போல இருந்ததாம்.  பானையை கடம் என்றும் கூறுவார்கள். என் தலையில் பிறப்பிலிருந்தே ரோமங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.  உத்கசா என்றால் ரோமங்கள் இல்லாத என்று பொருள்.  ஆக என் தலையின் காரணமாக என் பெயர் கடோத்கஜன் என்று ஆனது.
கவுரவர்களின் சதி திட்டத்தால் தீ வைக்கப்பட்ட அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்கள் தப்பி வனம் வந்தபோது, அங்கு வசித்து வந்த என் மாமன் இடும்பன் பீமனுடன் போரிட்டு இறக்க, என் தாய் இடும்பி மனம் ஒப்பி பீமனைத் திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்குப் பிறந்தவன் நான்.
பின்னர் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பிவிட என் அன்னையும் நானும் வனத்திலே தங்கி விட்டோம்.  வனத்திலிருந்து கிளம்பும்போது என் பாட்டி குந்தி தேவி நான் எப்போதும் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.  அதைக் கடைசிவரை நிரூபித்துக் காட்டினேன்.  எப்போது அவர்களுக்கு தேவை என்றாலும் என் உதவியை நாடலாம் என்று உறுதிமொழி அளித்தேன்.
என் தொடர்பான சிறுவயது சம்பவம் ஒன்று உண்டு.  அரக்கர்களுக்கு மாயசக்தி உண்டு.  இடும்பியின் மகனான எனக்கும் அந்த சக்தி இருந்தது. சிறுவயதில் எல்லாவற்றிற்கும் என் மாய சக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை காட்டில் ஒரு சிறுவன் மாமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தான். அந்த மரத்தில் நிறைய கனிந்த மாங்கனிகள் இருந்தன. அவற்றில் ஒன்றையாவது பறித்துவிட வேண்டும் என்று அந்தச் சிறுவன் முயற்சி செய்தான்.  முடியவில்லை.
இதைப் பார்த்ததும் ‘நான் உனக்கு உதவுகிறேன்’ என்றேன்.  மாங்கனிகள் கீழே விழ வேண்டும் என மாயாதேவியை வேண்டியபடி ஒரு மந்திரத்தைச் சொன்னேன்.  ஆனால் ஒரு மாம்பழம் கூட கீழே விழவில்லை.  ஒருவேளை அந்த மந்திரத்தை நான் தெளிவாகச் சொல்லவில்லையோ?  மீண்டும் கூறினேன். மாவிலைகள் மட்டுமே விழுந்தன.  மீண்டும் மந்திரத்தைக்  கூறியபோது சில மாங்காய்கள் மட்டுமே விழுந்தன.
எதனால் என் மாய மந்திரங்கள் பலிக்கவில்லை?  யோசித்தேன்.  உண்மை புரிந்தது.  வந்தவன் யாரோ ஒரு சிறுவன் அல்ல, கிருஷ்ணர்.  அவரை வணங்கினேன். அப்போது கிருஷ்ணர் எனக்கு மிக முக்கியமான ஒரு உபதேசத்தைச் செய்தார்.  ‘அற்ப விஷயங்களுக்கெல்லாம் உன் மாய சக்தியைப் பயன்படுத்தாதே.  அதற்கான காலம் போர்க்களத்தில் வரும்’  என்றார்.  அவர் கூறியதன் பொருள் பின்னர் புரிந்தது.
காட்டுப் பகுதியில் மன்னனாக ஆட்சி செய்தேன்.  முக்கியமாக இரு சம்பவங்களில் நான் என் தந்தைக்கு பேருதவியாக இருந்தேன்.
வனவாசத்தின்போது ஒரு கட்டத்தில் பாண்டவர்கள் மிகவும் களைப்படைந்து விட்டனர்.  பாண்டவர்களின் மனைவியும் எனக்குத் தாய் போன்றவருமான திரவுபதி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாத அளவுக்குக் களைப்படைந்து விட்டார்.  என் தந்தை என்னை நினைக்க உடனடியாக அங்கு சென்றேன்.  திரவுபதி தேவியை நான் துாக்கிக் கொள்ள நான் அழைத்துச் சென்ற ஐந்து அரக்க நண்பர்கள் பாண்டவர்களை துாக்கிக் கொண்டனர். அவர்களை சுமந்தபடி பத்ரிகாஸ்ரமத்துக்கு சென்று  இறக்கிவிட்டோம்.  பின்னர் அவர்களிடம் விடைபெற்றேன்.
என் தந்தையைப் போலவே நானும் கதையை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் மிகவும் வல்லவன். காலப்போக்கில் நாககன்னிகையான அகிலாவதி என்ற பெண்ணை மணந்தேன்.  எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்களின் பெயர்கள் பார்பாரிகன், அஞ்சன பர்வன், மேக வண்ணன்.
என் சித்தப்பா அர்ஜுனன். அவரது மகன் அபிமன்யு. அவனும் நானும் சிநேகிதமாக இருந்தேன். பாரதப் போரில் அபிமன்யு இறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் ஜெயத்ரதன். இதன் காரணமாக அதற்கடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் தான் ஜெயத்ரதனைக் கொல்லப் போவதாகவும், அப்படிக் கொல்ல முடியாவிட்டால் தீயில் இறங்கி இறந்து விடுவதாகவும் அர்ஜுனன் சபதம் செய்தார்.  எனவே துரியோதனன் ஜெயத்ரதனை அடுத்த நாள் போரில் ஈடுபடச் செய்யாமல் மறைத்து வைத்தார். சூரியன் மறையும் நேரம் நெருங்கியும் அவனைப் பாண்டவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.  அப்போது கிருஷ்ணர் தனது சக்கரத்தால் சூரியனை தற்காலிகமாக மறைக்க, அர்ஜுனன் இறப்பதை கண்ணால் காண வேண்டுமென்ற எண்ணத்தில் ஜெயத்ரதன் வெளிப்பட்டான். கிருஷ்ணர் சக்கரத்தை விலக்கிக் கொள்ள சூரியன் மறைய இன்னும் சிறிது நேரம் இருக்கிறது என்பது தெரிய வந்தது. அர்ஜுனன் ஜயத்ரதனை கொன்றார். பிறகு சூரியன் அன்று அஸ்தமித்தான்.
யுத்த தர்மத்தின்படி சூரியன் மறைந்த பிறகு அன்று போரை நிறுத்தி விடவேண்டும். ஆனால் ஜெயத்ரதன் இறந்ததால் வெறிகொண்ட கவுரவர்கள் அன்று சூரியன் மறைந்த பிறகும் போரில் ஈடுபட்டார்கள். முட்டாள்கள். இருள் வேளையில்தான் எனக்கு மிக அதிக சக்தி என்பதை அறியாதவர்கள். அன்று கவுரவ சேனைக்கு பெரும் சேதத்தை விளைவித்தேன்.  
எனக்கு உதவ என்னுடன் ஒரு ராட்சதக் கூட்டமே வந்தது.  என் மகன் அஞ்சனபர்வனும் வீரமாகப் போரிட்டான்.  துரோணரின் மகன் அஸ்வத்தாமனும் என் மகனும் மிக ஆக்ரோஷமாக யுத்தத்தில் இறங்கினார்கள். என் மகன் ஒரு குறுவாளை அஸ்வத்தாமனை நோக்கி வீசினான். அதை அஸ்வத்தாமன் பொடிப்பொடி ஆக்கினான்.  கோபமடைந்த என் மகன் ஒரு கதையை அவனை நோக்கி வீசினான்.  அதையும் இரண்டு துண்டுகளாக்கினான் அசுவத்தாமன்.  என் மகன் மாயா சக்தியைப் பயன்படுத்தி மேலெழும்பி அஸ்வத்தாமன் மீது பல மரங்களை எறிந்தான். அஸ்வத்தாமன் பெரும் சினத்துடன் தொடர்ந்து அம்புகளை வீசி என் மகனைக் கொன்றான்.
மகனை இழந்தவுடன் பெரும் சோகமும் கடும் கோபமும் கொண்டேன். மேலும் ஆக்ரோஷமாக போரிடத் தொடங்கினேன்.  கர்ணனை என் உடல் வலிமை, மாயா சக்தி, ஆயுதங்கள் ஆகிய அனைத்து கோணங்களிலும் தாக்கத் தொடங்கினேன். அவனும் எனக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தான்.
முன்பொருமுறை என் தந்தை பீமனால் கொல்லப்பட்டவன் பகாசுரன் என்ற அரக்கன். அவனது தம்பியான அலயுதன் என்பவன் துரியோதனனை நாடி பீமனைக் கொல்ல தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டான். பின்னர் என் தந்தை பீமனுடன் அவன் போரிடத் தொடங்கினான். அவனும் ஒரு அரக்கன் என்பதால் அவனிடமும் மாயா சக்தி இருந்தது. இதன்மூலம் அவன் என் தந்தையின் குதிரைகளைக் கொன்றான். என் தந்தை அமர்ந்திருந்த தேரைப் பொடியாக்கினான். என் தந்தைக்கு உதவ கர்ணனைத் தாக்குவதை நிறுத்திக்கொண்டு, தந்தையின் புறமாகச் சென்றேன்.  அம்புகள், வாள்கள், கதைகள் என்று பல ஆயுதங்களைக் கொண்டு நானும் அந்த அரக்கனும் போரிட்டோம். அது ஒரு சமமான போராகவே இருந்தது.  ஒரு கட்டத்தில் நான் அவனை துாக்கி தரையில் அடித்துக் கொன்றேன். அவன் தலையைக் கொய்தேன்.  அந்த தலையுடன் துரியோதனனை அடைந்து ‘மன்னனை பார்க்கும்போது வெறும் கையோடு வரக்கூடாது என்பார்கள்.  அதனால் தான்....’ என்றபடி அந்த தலையை துரியோதனனுக்கு அளித்தேன்.  உரத்துச் சிரித்தேன்.  துரியோதனனும் அவனது சேனையும் அஞ்சி நடுங்கினார்கள்.
பல விதங்களில் முயற்சித்தும் கர்ணனால் என்னைக் கொல்ல முடியவில்லை.  தன் படை முழுவதையுமே நான் அழித்து விடுவேனோ என்று அஞ்சிய துரியோதனன் கர்ணனிடம் மீண்டும் மீண்டும் எப்படியாவது என்னை அழிக்கச் சொன்னான்.  
கர்ணனிடம் சக்தி ஆயுதம் என்ற தெய்வீக அஸ்திரம் இருந்தது.  இந்திரனால் அவனுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம் அது.  அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.  போரில் அர்ஜுனனை அழிப்பதற்காக அதைப் பாதுகாத்து வைத்திருந்தான் கர்ணன். என்றாலும் துரியோதனனின் தொடர் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் கர்ணன் என்னை நோக்கி சக்தி ஆயுதத்தை எய்தான்.  அது என் உயிரைப் பறித்தது.  என் உடல் கீழே விழும்போது மாய சக்தியால் என் உடலைப் பல மடங்கு அதிகரித்துக் கொண்டு மண்ணில் விழுந்தேன். கவுரவ சேனையைச் சேர்ந்த பல வீரர்கள் என் உடலின் கீழ் அகப்பட்டு நசுங்கி இறந்தனர்.
ஆக என் தந்தையின் தரப்புக்கு நான் பேருதவியாக இருந்தேன் என்பதுடன் என் சித்தப்பா அர்ஜுனனுக்கு எதிரான ஒரு முக்கிய ஆயுதத்தை எனக்கெதிராக எய்த வைத்து அவரது உயிர் இழப்பை தவிர்க்கக் காரணியாகவும் இருந்தேன் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar