Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நகுலனாகிய நான்...
 
பக்தி கதைகள்
நகுலனாகிய நான்...

பஞ்சபாண்டவர்களில் நான் நான்காமவன்.  நானும் சகாதேவனும் இரட்டையர்கள்.  துர்வாசர் மூலம் அருளப்பட்ட மந்திரத்தை என் பெரிய தாயார் குந்தி தேவி என் தாய் மாத்ரியிடம் பகிர்ந்து கொண்டார்.  என் தாய் அஸ்வினி குமாரர்களை துதித்தபடி அந்த மந்திரத்தை கூற நானும் சகாதேவனும் பிறந்தோம்.
அஸ்வினியின் குமாரர்கள் என அழைக்கப்பட்ட அவர்களின் பெயர்கள் நாசத்யா மற்றும் தஸ்ரா. இருவரும் தேவர்களுக்கான மருத்துவர்கள்.  ரிக் வேதத்தில் இவர்கள் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். இளமை பொங்கும் இவர்கள் எப்போதும் களைப்படையாத குதிரைகளில் சென்று நல்லவர்களைக் காப்பாற்றுவதாகக் கூறுவதுண்டு.
பாண்டவர்களில் என்னைப் பேரழகன் என்று குறிப்பிடுவார்கள். ஆயுர்வேதத்தில் நான் மிகச் சிறந்து விளங்குபவன்.  குதிரைகளின் மொழி எனக்குத் தெரியும்.
நாங்கள் பிறந்த உடனேயே எங்கள் தந்தை பாண்டு இறந்து விட்டார். அவர் இறந்தவுடன் எங்கள் தாய் மாத்ரி தேவி தானும் உடன்கட்டை ஏறி விட்டார்.  ஆனால் பெரிய தாய் குந்திதேவி என்னையும் சகாதேவனையும் தன் மகன்கள் போலவே கருதி வளர்த்தார். யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரும் கூட எங்களைத் தங்கள் சொந்த சகோதரர்களாகவே எண்ணினார்கள். அனைவரும் சேர்ந்தேதான் ஹஸ்தினாபுரத்தில் துரோணரிடம் பயின்றோம்.  அந்தக் காலகட்டத்தில் கத்தி, வாள் வீச்சில் பெரும் திறமை கொண்டு விளங்கினேன். ஆயுதப்பயிற்சியை துரோணரோடு கிருபாச்சாரியாரும் எங்களுக்கு அளித்தார்.
எதிர்பாராத சூழலில் திரவுபதி எங்கள் ஐவருக்கும் மனைவியானாள். அவளைத் தவிர கரேனுமதி என்பவளும் என் மனைவிதான்.  இவள் சேடி நாட்டு மன்னன் சிசுபாலனின் மகள்.
தொடக்கத்தில் எங்கள் பெரியப்பா திருதராஷ்டிரர் எங்களுக்கு இந்திரப்பிரஸ்தம் என்னும் பகுதியை அளித்தார்.  அதற்கு அண்ணன் யுதிஷ்டிரன் எனப்படும் தர்மர் சக்ரவர்த்தி ஆனார். ராஜசூய யாகம் நடத்திய  அவர் தன் நாட்டுடன் பல்வேறு நாடுகளை இணைக்கும் முயற்சியில் நானும் இறங்கினேன். ரோஹிதகா என்ற மலைப் பகுதியை வென்றேன். பின்னர் போரில் வென்று சைரிஸகா, மஹேட்டா ஆகிய பகுதிகளையும் இந்திரபிரஸ்தத்துடன் இணைத்தேன்.
பகடை ஆட்டத்தில் அண்ணன் யுதிஷ்டிரர் எங்கள் அனைவரையும் பணயமாக வைத்து விளையாடித் தோற்றார். இதன் காரணமாக நாங்கள் ஐந்து சகோதரர்களும் திரவுபதியோடு பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிட்டது.  
வனவாசத்தின் போது ஒருமுறை எங்களுக்குக் கடும்தாகம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரைத் தேடி நான் சென்றேன்.  அங்கிருந்த ஒரு குளத்தில் இருந்த நீரைக் குடிப்பதற்காக நான் முயன்ற போது ஒரு குரல் கேட்டது. ‘என் கேள்விகளுக்கு பதில் கூறிய பிறகு நீ தண்ணீரை குடிக்கலாம்’ என்றது அந்தக் குரல். தாக மிகுதியால் அதை அலட்சியப்படுத்தி விட்டு நீரைக் குடித்தேன். மயங்கி விழுந்தேன். இறந்து விட்டேன். பிறகு நடந்ததைக் கேள்விப்பட்டேன். என்னைப் போலவே அடுத்தடுத்து செயல்பட்ட சகாதேவன், அர்ஜுனன், பீமன் ஆகியோரும் இறந்தனர். இறுதியாக அங்கு வந்து சேர்ந்த யுதிஷ்டிரர் தண்ணீரைக் குடிக்க முயன்ற போது அதே குரல் அதே கட்டளையை இட்டது. ‘கேள்விகளைக் கேட்கலாம்’ என்றார் யுதிஷ்டிரர். பதில்களை அளிக்கத் தொடங்கினார்.
மனிதனின் மிகச் சிறந்த நண்பன் யார்?  பொறுமை.  காற்றை விட வேகமாக செல்லக்கூடியது எது? எண்ணங்கள்.  மனிதனின் பெரும் எதிரி யார்? கோபம்.  மனித வாழ்க்கையின் மிகப் பெரிய வியப்பு எது?  இன்று இறந்தவனை பார்த்து நாளை இறக்க இருப்பவன் அழுவது.  
இப்படி யட்சனின்  கேள்விகளுக்கு அண்ணன் யுதிஷ்டிரர் மின்னல் வேகத்தில் சரியாக பதிலளித்தார்.  
பிறகு அங்கு கிடந்த எங்கள் நால்வரின் உடல்களைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் சிந்தினார்.  அப்போது கேள்விகளைக் கேட்ட யட்சன் அவர் முன்னால் தோன்றினார்.  இழந்த நால்வரில் ஒரே ஒருவரை மட்டும் உயிர்ப்பிப்பதாகக் கூறினார்.  
உடனே என் அண்ணன் யுதிஷ்டிரர் தயங்காமல் நான் தான் உயிர் பெற வேண்டும் என்று கூறினார்.  எனக்கு யட்சன் உயிர் அளித்தான். அப்போது அந்த யட்சன் யுதிஷ்டிரரைப் பார்த்து ‘மாபெரும் பலசாலியான பீமன் மற்றும் வில்வித்தையில் நிகரற்ற அர்ஜுனன் ஆகியோரை உயிர்ப்பிக்கக் கோராமல் நகுலனை ஏன் தேர்வு செய்தீர்கள்?  பீமனும் அர்ஜுனனும் மகாபாரதப் போர் நடக்கும் போது உங்களுக்குப் பேருதவியாக இருந்திருப்பார்களே’ என்று வியப்பாகக் கேட்டான்.  இந்தக் கேள்வி என் மனதிலும் எழுந்திருந்தது.
அதற்கு என் அண்ணன் யுதிஷ்டிரர் கூறிய பதிலை என்னால் என்றுமே மறக்க முடியாது. ‘குந்தி தேவியின் மகனாக நான் உயிரோடு இருக்கிறேன். அதே போல மாத்ரி தேவியின் மகன்களில் மூத்தவனான நகுலனும் உயிர்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் நகுலனைத் தேர்வு செய்தேன்’ என்றார். இந்த பதிலால் மகிழ்ந்த யட்சன் எங்கள் மீதி சகோதரர்களுக்கும் உயிர் கொடுத்தார்.
வனவாசத்தின் முடிவில் ஒரு வருடம் பிறர் அறியாமல் அஞ்ஞாத வாசம் இருந்தாக வேண்டும்.  அப்போது குதிரைகளை மிகச் சிறப்பாக கையாளும் என் திறமை எனக்குக் கை கொடுத்தது.  என் பெயரை கிரந்திகன் என்று மாற்றிக் கொண்டேன்.  விராட மன்னனிடம் குதிரைப் பயிற்சியாளனாக சேர்ந்தேன்.  குதிரைகளின் நோய்களைத் தீர்க்கவும் எனக்கு தெரியும். அதுதான் ஆயுர்வேதத்தில் எனக்கு அபாரதிறமை என்று குறிப்பிட்டேனே!
மகாபாரதப் போரின் தொடக்கத்தில் யாரை எங்கள் தரப்பின் தளபதியாக நியமிக்கலாம் என்று கலந்து ஆலோசித்தோம்.  நான் மன்னன் துருபதனை தளபதி ஆகலாம் என்றேன்.  இப்படி ஆளுக்கொருவரைக்  கூறினோம்.  பின்னர் அர்ஜுனனின் தேர்வான திருஷ்டத்யும்னனை தளபதி ஆக்கலாம் என்று கண்ணன் கூற அதை அனைவரும் ஏற்றுக் கொண்டோம்.
தங்க நிறப் பின்னணியில் சிகப்பு வண்ண மான் - இதுதான் எனது தேரின் கொடியில் உள்ள உருவம்.
மகாபாரதப் போரில் பல வீரர்களை நான் கொன்றேன்.  அவர்களில் வஞ்சக சகுனியின் மகன் உலுாகனும் அடக்கம். திரவுபதியின் மூலம் எனக்கு பிறந்த சதானிகன் என்ற மகனை துரோணரின் மகன் அஸ்வத்தாமன் கொன்றான்.  போரின் முதல் நாளே துச்சாதனனை தோற்கடித்தேன். ஆனால் அவனைக் கொல்லவில்லை. அவனைக் கொல்வதாக அண்ணன் பீமன் அல்லவா சபதம் எடுத்திருந்தார்! கர்ணனின் மூன்று மகன்களை நான் கொன்றேன்.
போர் தொடங்கிய பதினோராம் நாள் மன்னர் சால்யனை தோற்கடித்த போது என் மனதில் ஒரு வருத்தம் படர்ந்தது உண்மைதான். அவர் என் மாமன். அதாவது என் தாய் மாத்ரியின் அண்ணன்.  என் அம்மா இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் என்னையும், சகாதேவனையும் தனது நாட்டுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் அன்புடன் தங்க வைத்துக் கொள்வார்.  அவர் எங்கள் தரப்பில் சேர்ந்து கொள்வதற்காக வந்த போது துரியோதனனும் சகுனியும் மிகவும் வஞ்சகமாக நடந்து கொண்டார்கள்.  அவரையும் அவரது சைனியத்தையும் வரவேற்று விருந்து அளித்தார்கள்.  அவர்கள் நேரடியாக இந்த விருந்தோம்பலைச் செய்யாமல் தங்கள் பிரதிநிதிகள் மூலம் இதை செய்ய வைத்தார்கள்.  பாண்டவர்களாகிய நாங்கள்தான் இப்படி வரவேற்பதாக மாமா சால்யன் எண்ணினார். ‘மிக அற்புதமாக விருந்தளித்தீர்கள். நீங்கள் எது கேட்டாலும் செய்கிறேன்’ என்று கூற, கவுரவர்கள் தரப்பில் அவர் போரிட வேண்டும் என்று கூறினார்கள்.  அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை என் மாமா உணர்ந்து கொண்டார்.  என்றாலும் அவர் வாக்குத் தவற விரும்பவில்லை. இதன் காரணமாக துரியோதனன் தரப்பில் அவர் போரிட நேர்ந்தது. அதனால்தான் பின்னர் அவரைப் போரில் தோற்கடித்த போது என் மனதில் குற்ற உணர்ச்சி இருந்தது.
மகாபாரதப் போருக்குப் பிறகு, மன்னர் சால்யனின் சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  அதன் வடபகுதிக்கு என்னையும், தென்பகுதிக்கு சகாதேவனையும் மன்னர்களாக முடி சூட்டினார் எங்கள் அண்ணன் யுதிஷ்டிரர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar