Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நீயல்லால் மன்னனில்லை!
 
பக்தி கதைகள்
நீயல்லால் மன்னனில்லை!


சுமந்திரன் தேரை செலுத்திக் கொண்டு மாளிகை வாசலுக்கு வந்தார். அவர் முகத்தில் வேதனை அப்பியிருந்தது. தேரை இழுத்து வந்த இரண்டு குதிரைகளும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருத்தம் தெரிவித்தன. ராமனையும், பிறரையும் உற்சாகமாக சுமந்து, ராஜநடை பயின்றோ, புயல் வேகமாகவோ இதுவரை பணிபுரிந்த தாங்கள் இப்போது ஒரு சோக சம்பவமாக, உறவுப் பிரிவுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டியிருக்கிறதே என்று அவற்றுக்கும் மனம் கனத்துக் கிடந்தது.
இதற்குள் விஷயம் வெகு வேகமாக அயோத்தி முழுவதும் பரவிவிடவே, மாளிகை முன் பெருங்கூட்டம் கூடிவிட்டது. குடிமக்களின் நோக்கம், ஒன்று ராமனைப் போக விடாமல் தடுப்பது அல்லது தாம் அவனுடன் செல்வது என்பதுதான். முதலாவது நடக்காது என்பது புரிந்ததால், தாங்கள் ராமன் வாழப்போகும் ஆரண்யத்தையே தமக்கான அயோத்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்றும் தீர்மானித்திருந்தார்கள்.
இதில் வியப்பு என்னவென்றால், குடிமக்கள் ஒவ்வொருவருமே, ஒருவருக்கொருவர் சொல்லி வைத்துக் கொள்ளாமல் தாமாகவே, தமக்குள்ளாகவே எடுத்துக் கொண்ட முடிவு இது என்பதுதான்!
மாளிகைக்குள் விடைபெறும் சங்கேதமாக இரு கரம் கூப்பி பெரியவர்களை வணங்கினான் ராமன். உடனிருந்த சீதையும், லட்சுமணனும் அவ்வாறே செய்தார்கள்.
தசரதனால் இந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதுவும், மரவுரி அலங்காரத்தில் ராஜாராமனைக் கண்ட அவருக்கு கண்களிலிருந்து நீர் பெருகி ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. எழுந்திருக்க முயன்றவர் பலவீனத்தால் சரிந்து விழுந்தார்.
அவருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து தேற்ற முனைந்தார்கள். சீதையும், லட்சுமணனும் கூட அவரை நோக்கி அடி எடுத்து வைக்க முற்பட்டார்கள். ஆனால் ராமன் தான் நின்றிருந்த இடத்திலிருந்து அசையாமல் இருந்தான். முகத்தில் புன்னகை தவழ்ந்தது என்றாலும், அதில் ஒரு தீர்மானமும் படர்ந்திருந்தது. ‘தந்தையாரை நெருங்க வேண்டாம்’ என்று சொல்வது போல இருந்தது. அவனைப் பார்த்து சீதையும், லட்சுமணனும் தயங்கியபடி அவனுக்குப் பின்னால் நின்றிருந்தனர்.  
வழக்கமான கம்பீர நடையில் வாயிலை நோக்கிச் சென்றான் ராமன். அங்கே பெருங்கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து வியந்தான். தன்னை அவர்கள் வழியனுப்ப வந்திருக்கிறார்கள் என்றே நினைத்தான் ராமன்.  ‘நீங்கள் போய் வாருங்கள், நாங்கள் இங்கே உங்களுடைய தம்பி பரதனின் ஆட்சியில் நிம்மதியாக வாழ்வோம்’ என்று சொல்லி தன்னை ஆறுதல்படுத்தி விடை கொடுக்கவே கூடியிருக்கிறார்கள் எனக் கருதினான்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக, ‘நாங்களும் உன்னுடன் கானகத்திற்கு வருகிறோம்’ என்று பெருங்குரலெடுத்துத் தெரிவித்தபோது திடுக்கிடத்தான் செய்தான்.
இது பெரிய தவறாயிற்றே! விரைவில் அயோத்திக்குத் திரும்பி அரியணை ஏறும் பரதன், நாட்டில் பாதிபேருக்கு மேல் இல்லாத சூன்யத்தைக் கண்டானானால் மனம் கொதிக்க மாட்டானா? அவனுக்கு இழிவு உண்டாக்க வேண்டும் என்பதற்காக நானே மக்களை உடன் அழைத்துச் சென்றுவிட்டதாக எண்ண மாட்டானா? அதாவது தன் ஆட்சியை விரும்பாததால்தான் குடிமக்கள் என் பின்னாலேயே வந்து விட்டார்களோ என்று கருத மாட்டானா? இது தந்தையாரின் வாக்குக்கு ஏற்பட்ட அவமானமும்தானே! நான் காடேகினால், இங்கிருக்கும் மக்களை பரதன் முறையாக வழிநடத்துவான் என்ற எதிர்பார்ப்புதானே அவருடைய வாக்கின் உள்ளர்த்தமாக இருக்க முடியும்? அன்னையார் கைகேயியும் அப்படித்தானே எதிர்பார்ப்பார்! மக்களே இல்லாத நாட்டில் தன் மகன் அரசாள்வது எத்தகைய அவமானம்!  அவர்களும் இதனால் மிகுந்த துன்பம் அடைவார்களே! தான் போராடி நிறைவேற்றிக் கொண்ட வரங்களுக்கு அர்த்தமே இருக்காதே!
ராமன் தன் இரு கரங்களையும் உயர்த்தி, ஆரவாரித்துக் கொண்டிருந்த மக்களை அமைதி படுத்தினான். அதுவரை தசரதனையும், கைகேயியையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த மக்கள் ராமனின் கையசைவில் அப்படியே தணிந்து போனார்கள்.
அனைவரையும், முழுமையாக ஒருமுறை பார்த்தான் ராமன். ‘‘நீங்கள் அனாவசியமாக உணர்ச்சிவசப் படுகிறீர்கள். என்மீது நீங்கள் செலுத்தும் அன்பு புரிகிறது. ஆனால் அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நானும் சரி, பரதனும் சரி, இருவருமே தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்கள். பிறப்பு வரிசையில் நான் முதலாவதாக இருக்கலாம், தம்பி பரதன் இரண்டாவதாக இருக்கலாம். ஆனால் இருவருமே தசரத பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
‘‘இந்த நாட்டில் அரசபதவி என்பது வம்சாவளியாக வரும் ஒரு தகுதிதான்.  இதில் மூத்தவன், இளையவன் என்ற பாகுபாட்டுக்கு அவசியமே இல்லை. அதுமட்டுமல்லாமல், அதுவரை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசருக்கு தன் ராஜாங்க வாரிசாக யாரை நியமிப்பது என்று தீர்மானிக்க உரிமை இருக்கிறது. இதில் பிற யாரும் எந்தவகை காழ்ப்புணர்ச்சிக்கும் ஆட்பட வேண்டிய அவசியமே இல்லை.
‘‘ஆகவே என் அன்புக்குரியவர்களே, என் தந்தையின் வாக்கை நிறைவேற்ற எனக்கு அனுமதி தாருங்கள். நீங்கள் அனைவரும் என்னுடன் வருவதால் அந்த பொறுப்பை  நிறைவேற்ற இயலாமலேயே போய்விடும். எனக்கு அத்தகைய அவப்பெயரை உண்டாக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆகவே எனக்கு விடை கொடுங்கள்’’
அவனுடைய ஆணித்தரமான பேச்சுக்கு மதிப்பளித்துப் சிலர் பின்வாங்கினாலும், அநேகம் பேர் அவனுடைய அன்பில் கட்டுண்டு அவனைப் பின்தொடர விரும்பினார்கள். அதனால் ராமன் எதிர்பார்த்தபடி அனைத்து மக்களும் விலகிச் செல்லவில்லை.
இதனால் காலம் கடந்து செல்கிறதே என்று கவலைப்பட்ட ராமன் சுமந்திரனைப் பார்த்தான். அவனுடைய முகக் குறிப்பை உணர்ந்த சுமந்திரன், தேரோட்டி ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டு, குதிரைகளின் கடிவாள வார்களைப் பிடித்துக் கொண்டார். நாம் தேரேறி பயணத்தை ஆரம்பித்தால் மக்கள் தொடர்ந்து வரமாட்டார்கள் என்று குறிப்பால் உணர்த்துவது போல இருந்தது அவர் செய்கை.  குதிரைகள் மட்டும் தொங்கப் போட்ட தலையை நிமிர்த்தவில்லை!
சீதை, லட்சுமணன் இருவரையும் பார்த்தான் ராமன். அவர்களுடைய கண்கள் கலங்கியிருந்தன. ‘எத்தகைய பண்பாளன் இந்த ராமன். இத்தனை மக்களின் இதயங்களிலும் கோலோச்சுகிறானே! இவனை தற்காலிகமாகத்தான் என்றாலும் இழக்க யாருக்குதான் மனம் வரும்? மக்களின் அன்பு என்ற பலவீனத்தை அவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவன் அல்ல. ஆகவே மீண்டும் அரண்மனைப் படியேறி உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை’ என்றெல்லாம் யோசித்தார்கள்.
ராமன் தேரை நோக்கிக் கைநீட்டி சீதையை முதலில் ஏறிக் கொள்ளுமாறு பணித்தான். அவளுக்கு அடுத்து தான் தேரினுள் சென்று அமர, லட்சுமணன் பின் தொடர்ந்தான்.
திடீரென்று, ‘ராமா…‘ என்ற பெருங்குரல் ஒலித்தது. ராமன் தன்னை விட்டு நீங்குகிறான் என்ற உண்மையில், அதைத் தடுக்கும் இறுதி முயற்சியாக தசரதன் மாளிகையை விட்டு, படிகளில் தட்டுத் தடுமாறி இறங்கி, தேரை நோக்கி ஓடோடி வந்தார். கவுசல்யாவும், சுமித்திரையும் அவர் தடுக்கி விழுந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்தில் அவருடன் ஓடி வந்தார்கள்.
ராமன் கண்களில் பளபளப்பு தெரிந்தது. தந்தையாரின் பாசத்தால் அவன் நெகிழ்ந்துதான் போனான். ஆனால் இந்த கட்டத்திலும் தான் மனம் மாறக்கூடாது என்று உறுதியாக இருந்தான். அது மிக மோசமான, பலவகையான பின்விளைவுகளை உருவாக்கும் என்று ஊகித்தான். ஆகவே சுமந்திரரிடம், ‘‘சுமந்திரரே, தயவு செய்து தேரினை விரைவாக செலுத்துங்கள். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தந்தையார் மற்றும் மக்களிடையே நாம் அனாவசிய சலனங்களை உருவாக்குகிறோம் என்றே  கருதுகிறேன். கானகம் செல்வது என்று தீர்மானித்து இந்த அளவுக்கு வந்திருக்கிறோம். இனியும் தயக்கம் காட்டுவதில் அர்த்தமே இல்லை. குதிரைகளை வேகமாக செலுத்துங்கள், உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றான்.
ராமனின் மனநிலையை சுமந்திரன் புரிந்து கொண்டார். புரவிகளும்! தேர் சற்றே வேகம் எடுக்க ஆரம்பித்தது.
மிகவும் சோர்வடைந்துவிட்ட தசரதன் பின் தங்கிவிட, அவரைக் கைத்தாங்கலாக அரண்மனை மாளிகைக்குள் அழைத்துச் சென்றார்கள் மற்றவர்கள். கவுசல்யாவும், சுமித்திரையும் கண்களில் நீர் மல்க பின்னே சென்றார்கள்.
ஆனால் மக்கள் கூட்டம் தேரைவிட்டுப் பிரிய மறுத்து பின் தொடர்ந்தது. தேர்ச் சக்கரங்கள் விசிறியடித்தப் புழுதி தங்கள் மீது படர்வதையும், அதனால் கண்கள் எரிச்சலடைவதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஒன்று, ராமன் திரும்ப வேண்டும் அல்லது தாங்கள் அவனுடன் சென்று வசிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள் அவர்கள்.
அவர்களுடைய உணர்வோட்டத்தை எப்படி மடைமாற்றம் செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் ராமன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar